Thursday, January 29, 2015

உமாசங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை

நேற்று (28) ஆனந்த விகடனிலிருந்து உமாசங்கர் IAS மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கருத்து கேட்டனர். நான் சொன்னது:

1. அவர் ஒரு அரசு உயர் அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் உண்டு. அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவின்படி எந்த ஒரு குடிமகன் அலலது குடிமகளுக்கும் தான் விரும்பும் மதத்தை 1.கடைபிடிக்க 2.வெளிப்படுத்த 3. பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு.

2. கிறிஸ்தவம், இஸ்லாம், பவுத்தம் முதலான மதங்கள் proseletising religions. இந்த் மதங்களைச் சேர்ந்தோர் தமக்குக் கிடைத்த "நற்செய்தியை"ப் பிறருக்கும் அறிவிப்பது தம் மதக் கடமைகளில் ஒன்று என நம்புகின்றனர். அந்த வகையில் உமாசங்கர் அவரது நம்பிக்கையைக் கடைபிடிக்கிறார்.

3. உமாசங்கரின் மதப்பிரச்சாரம் அ. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வரைக்கும் ஆ. அவரது அரசதிகாரத்தைத் தன் மதப்பிரச்சார நடவடிக்கைகட்குப் பயன்படுத்தாத வரைக்கும், அவர் அலுவலக நேரம் அல்லாத தருணங்களில் மதப் பிரச்சாரம் செய்வதைத் தடுக்க இயலாது.

ஆனந்த விகடன் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட அடுத்த கேள்வி: 
"உமாசங்கர் தான் தனது நற்செய்திக் கூட்டங்களின் ஊடாக நோய்களைக் குணப்படுத்துவதாகச் சொல்கிறாரே அது மூட நம்பிக்கை இல்லையா?"

நான் சொன்னது: 
அது மூட நம்பிக்கை என்பதுதான் என் கருத்து. இதுமட்டுமல்ல இந்தத் "தொடு சிகிச்சை" முதலியவற்றையும் கூடத்தான் நான் மூட நம்பிக்கை எனக் கருதுகிறேன். ஆனால் இந்த மூட நம்பிக்கைகளை எதிர்கொள்வதற்கான வழி பகுத்தறிவுப் பிரச்சாரந்தானே ஒழிய இப்படி selective ஆகப் பழி வாங்குவதுஅல்ல.

9000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாட்டில் ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என ஒரு பிரதமர் உளறுவது, டெஸ்ட் டியூப் பேபி தொழில் நுட்பம் இருந்தது எனப் பாட நூல்களில் எழுதுவது இதையெல்லாம் விடவா உமாசங்கர் சொல்வது அபத்தமானது?

Marx Anthonisamy
--------------------------------------------------------------------------------------------------------------

உமா சங்கர் விவகாரத்தில் உமா சங்கருக்கு மதப்ப்பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்று வாதாடுவதற்க்குப் பதில் அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, எம்.எல்.ஏ, எம்பிக்கள், அமைச்சர்கள், பிரதமர் என யாரும் தங்கள் மதச்சார்புக்ளை வெளிப்படையாக பேசக் கூடாது என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்த வேண்டும்.

மோடி அமெரிக்க சென்றபோது பகவத் கீதையை ஒபாமாவுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.அதே போல சபர்மதி ஆசிரமத்திற்கு வந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு நரேந்திர மோடி, சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசளித்தார். ஒரு மத சார்பற்ற நாட்டின் அரசியல் சாசனத்தின் பேரால் உறுதிமொழியேற்ற ஒரு பிரதமர் மதப் பிரதியான கீதையை பிற நாட்டு அதிபர்களுக்கு பரிசாக கொடுக்கிறார் என்றால் அது பச்சையான மதப் பிரச்சாரம் இல்லாமல் வேறு என்ன? 

அதே போல பகவத் கீதை தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். பா.ஜ.க அமைச்சர்களும் எம்.பிக்களும் நாள்தோறும் பேசி வரும் மதவெறிப் பேச்சுகளுக்கு எல்லையே இல்லை. மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி “ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்யவேண்டும்” என்று பகிரங்கமாக பேசினார்.

அரசியல்வாதிகள் இப்படி என்றால் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செயல்பட வேண்டி இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி வெங்கடாசலபதி, காளகஸ்தி கோயில்களில் வழிபாடு செய்தனர். உமா சங்கர் 'அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜைகொண்டாடலாம் என்றால் நான் ஏன் கிறிஸ்துவ பிரச்சாரம் பண்ணக் கூடாது?' - என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறது.

பிரச்சினை மிகவும் எளியையானது. இந்துமதம் சார்ந்த அத்தனையும் மதம் சார்ந்த ஒன்றாக அல்லாமல் அனைவருக்குமான பொதுவான இந்தியப் பண்பாடாகவும் இயல்பான உரிமைகளாகவும் இங்கு கருதப்படுகின்றன. இந்துக்கள் அல்லாதவர்களுடைய நம்பிகைகள் அனைத்தும் மதம் சார்ந்த்தாக, அன்னியமானதாக ஆபத்தானதாக மாற்றப்படுகின்றன. இந்த உளவியல் பெரும்பான்மைவாத பண்பாட்டு பாசிசத்திற்கே இட்டுச் செல்லும்.


அர்சியல்வாதிகள் – அரசு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோன்புக் கஞ்சி குடிக்கவும் வேண்டாம், சங்கராச்சாரியார் காலில் விழவும் வேண்டாம், ஜெபக் கூட்டங்களில் பங்கெடுக்கவும் வேண்டாம். மதசார்பற்ற,பாரபட்சமற்ற அரசியல் அதிகாரத்தையும் நிர்வாக அதிகாரத்தையும் சந்தேகத்திற்கிடமில்லாதவகையில் முன்னெடுக்க வேண்டுமென்றால் அரசு அமைப்புகளும் அதன் பிரதிநிதிகளும் எல்லாவிதமான மத அடையாளங்களிலிருந்தும் விலகியிருக்கவேண்டும். அதுவே சட்டப்படியும் தார்மீகரீதியாகவும் சரியாக இருக்கும்.

Manushya Puthiran

--------------------------------------------------------------------------------------------------------------

நல்ல பதில். எல்லாருக்கும் உள்ள மதத்தை பரப்பும் உரிமை அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்பது தவறு.

மூடநம்பிக்கை என்ற விஷயத்தில் தீவிர பகுத்தறிவுவாதம் மட்டும்தான் 'எல்லாமே மூட நம்பிக்கை' என தெளிவாக பேசுகிறது. அதன்படி பார்த்தால் மதங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டி வரலாம்.

ஆனால், மதத்தை நம்பிக்கை என சொல்லி ஏற்றபின் 'சாதா நம்பிக்கை' மற்றும் 'மூட நம்பிக்கை' இடையேயான கோடு தெளிவற்றதாக உள்ளது.

அரசு சார்ந்த அறநிலையத்துறை கூட 'சனிபெயர்ச்சி அன்று லட்சார்சனையில் பங்கு பெற்று சனீஸ்வர பகவான் அருளை பெறுங்கள்" என விளம்பரம் வெளியிடுகிறது. இது மூடநம்பிக்கை பரப்பும் செயல் என கூற முடியும்.

நீங்கள் சொன்னபடி, இவற்றை எல்லாம் தனிநபர் விருப்பம் என்ற வகையில் விட்டுவிட்டு, பகுத்தறிவு பிரச்சாரம் மூலம் எதிர்கொள்வதே சரி.

இங்கே வேறொரு கோணமும் முக்கியம். ஒரு செயல் மூடநம்பிக்கை என உணர்ந்தும், அது பிடித்திருக்கிறது என்பதால் செய்ய முடியும். சனிக்கிழமைகளில் சனீச்வரன் சன்னதியில் விளக்கு ஏற்றுவதால் பயனில்லை என அறிவு சொன்னாலும், காலாற நடந்து போய் விளக்கேற்றுவது பிடித்திருக்கிறது.

பத்து ரூபாய் செலவு. மற்றபடி என்ன நஷ்டம்?

Venkatesan Chakaravarthy 

No comments:

Post a Comment