Thursday, January 22, 2015

கருத்துச் சுதந்திரமும், ஒத்துழையாமையும்!

கருத்துச் சுதந்திரமும், ஒத்துழையாமையும்!
பகுத்தறிவற்றவர்கள், பாசிச சக்திகள் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை மிரட்டியும், நமது கருத்துச் சுதந்திரத்தை விரட்டியும் அராஜகம் செய்து கொண்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கருத்துச் சுதந்திரத்தின் அருமை, பெருமைகளை ஆறு ஆண்டு காலம் எத்தியோப்பியாவில் ஒரு ஸ்டாலினிஸ்ட் இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்ந்து புரிந்து கொண்டவன் நான். கருத்துச் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை செத்த வாழ்க்கையாகவே இருக்கும்.
கருத்துச் சுதந்திரத்துக்காக இங்கே தமிழகத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கும்போது, உலக அளவில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வெளியிடும் சார்லி ஹெப்டோ பிரச்சினையும் ஓடிக் கொண்டிருக்கிறது. கோடானுகோடி முசுலீம் மக்களின் அடிப்படை மத நம்பிக்கைகளை, பழக்க வழக்கத்தை காலில் போட்டு மிதிப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.
நான் கல்லூரி மாணவனாக அமெரிக்காவுக்குச் சென்ற புதிதில் "The Last Temptation of Jesus Christ" என்று ஒரு திரைப்படம் அங்கே வெளியிடப்பட்டது. மத நம்பிக்கையுள்ள கிறித்தவர்கள் படத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். கருத்துச் சுதந்திரவாதிகள் படத்தை ஆதரித்தார்கள். ஒருநாள் நானும் சில நண்பர்களும் படம் பார்க்கச் சென்றோம். நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக நாங்கள் வரிசையில் நின்றபோது, சில கிறித்தவ நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் வந்து நின்று "இந்தப் படம் எங்கள் மத நம்பிக்கையைக் கேவலப்படுத்துகிறது; கிறித்தவர்களாகிய எங்களைப் புண்படுத்துகிறது; தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள்" என்று கேட்டுக் கொண்டனர். இந்த முதிர்ச்சியான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படம் பார்க்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு நான் விலகிச் சென்றதாக நினைவு.
இம்மாதிரியான ஓர் அற்புதமான அணுகுமுறையைத்தான் உலக முசுலீம் மக்கள் இங்கே கடைபிடிக்கிறார்கள். "சார்லி ஹெப்டோ கிறுக்குத்தனமான ஒரு கார்ட்டூன்தானே போட முடியும், போடுங்கடா" என்று சொல்லிவிட்டு, பிரச்சினையை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள். அதற்கு மேல் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நபிகள் நாயகத்தின் படத்தை "அதிகாரபூர்வமானதாக" ஆக்க விடாமல் அமைதி காக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன்; எனது கருத்துக்களோடு பிறர் கருத்துக்கள், படைப்புக்கள் மோதல் போக்கை மேற்கொள்ளும்போது, அவற்றோடு, அவர்களோடு ஒத்துழைக்க மறுக்கிறேன்.
S.p. Udayakumar

No comments:

Post a Comment