Wednesday, December 6, 2017

குவாலிட்டியான வாழ்க்கை

சரவணன் சந்திரன்
பேஸ்புக்
2017-12-06

குவாலிட்டியான வாழ்க்கை சம்பந்தமாக ஏராளமான கனவுகள் எனக்கு இருக்கின்றன. குவாலிட்டி என்பது பணத்தோடு மட்டுமே சத்தியமாகச் சம்பந்தப்பட்டதல்ல. சென்னையில் என் வீட்டெதிரே ஆட்டோக்கார அண்ணன் ஒருத்தர் இருக்கிறார். அவருடைய பதினாறு வயதுப் பெண்ணிற்கு கல்லீரலில் பிரச்சினை. மாத்திரை மருந்தென மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அடுத்த வாரம் அவருக்காகவே ஒரு மருத்துவ உதவி வேண்டி கோவை செல்கிறேன்.

அவர் கஷ்டங்கள் குறித்து ஒருபோதும் புகார்கள் சொன்னதில்லை. அவருடைய ஆட்டோவில் ஏறி அமர்ந்தால் தைரியமாக தூக்கத்தை போடலாம். ஆட்டோக்காரர் என்றாலே ஒரு சித்திரம் வரும். ஆனால் அதற்கெல்லாம் நேரெதிர். ரோட் ரேஜ் எதிலும் கலந்து கொள்ளவே மாட்டார். அவருக்கு ஆயிரம் பணச் சிக்கல்கள். ஆனால் கஸ்டமர்களிடம் அடித்துப் பிடுங்க முயற்சிக்கவே மாட்டார். ஏண்ணே என்றால், "நல்லா இருக்கும்போதே இம்புட்டு கஷ்டம் வருது. இதுல அடிதடின்னா இன்னும் வரும் தம்பி" என்பார். இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்.

அவருடைய கடவுள் இளையராஜா. என்றைக்காவது மனக் கஷ்டத்தில் இருந்தால், ஒரு கட்டிங் வாங்கித் தாங்க தம்பி என்று சொல்லி விட்டு, காரில் இளையராஜா பாடல்களை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பார். அதற்கடுத்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கிளம்பி விடுவார். "போதையில வாய் தடிச்சிரும் தம்பி. எம்பாம் பெரிய ஆளையும் நிதானம் தவற வச்சு அடிச்சு சாய்ச்சுடும்"  என்பார் சிரித்துக் கொண்டே.

யாருக்கும் எந்தத் துன்பமுமில்லாமல் வாழ்வதைத்தான் குவாலிட்டி வாழ்க்கை என்கிறேன். காலை எழுந்ததுமே நாம் நாலு பேரிடம் உரண்டை இழுப்பது அல்லது நம்மிடம் நாலு பேர் உரண்டை இழுப்பது குறித்தெல்லாம் யோசிக்கவே எனக்கு அச்சமாக இருக்கிறது. காசு போட்டு நாற்காலி வாங்கி வந்து காலாட்டிக் கொண்டே அமர்ந்திருக்கும்போது யாராவது வந்து இது என்னுது என்றால், தயங்காமல் எழுந்து அவர்களிடம் கொடுத்து விடுவேன்.

திரும்பிப் பார்த்தால் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு மிக மோசமாக இருந்தேன். என்னை மாதிரி ரோட் ரேஜ் இழுக்கிற ஆள் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. தொடர்ச்சியான அடிகளின் வழியாக வாழ்க்கை தட்டித் தோதாக்கி தனக்குத் தகுந்த மாதிரி தகவமைத்துக் கொண்டு விட்டது. தைமூரில் பீட்டர் சொன்னதைத்தான் இன்னமும் வேத வாக்காய் வைத்திருக்கிறேன். அது என்ன என்பது குறித்து கடைசியில் சொல்கிறேன்.

எனக்கு இரண்டு வசனங்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டன. யானை வாழ்கிற காட்டில் எறும்பிற்கும் இடமிருக்கிறது. எழுதியவர் ஜெயமோகன் சார். மல்லிகைக்கு இடம் இருக்கிற மாதிரி காகிதப் பூக்களுக்கும் இடமிருக்கின்றன. சொன்னவர் கே.என்.சிவராமன் சார். எதையுமே தீர்மானமாக இப்போதெல்லாம் அணுகி நிறுவ முயல்வதே இல்லை. எல்லோரையும் அனுசரிப்பது என எளிமையாகப் புரிந்து கொண்டேன். இதைக் கண்கூடாக இப்போது ஒரு அனுபவத்தின் வழி கண்டேன்.

இன்னொரு உதாரணத்தின் வழி இதை வேறொரு தளத்தில் விளக்க முயல்கிறேன். உபயோகமாகக்கூட இது இருக்கக்கூடும். டைகருக்கும் ஜிம்மிக்கும் சாப்பாடு போடும் போது உணர்ந்திருக்கிறேன். சாப்பாட்டுத் தட்டை கொண்டு போகும் போது இரண்டும் போட்டி போட்டு உறுமிக் கொண்டு ஓடி வரும். யார் முதலில் வாய் வைக்கிறார்களோ அவருக்கான உணவுதான் அது. மற்றது ஒதுங்கிக் கொள்ளும்.

டைகரை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தும் போது ஜிம்மியை பக்கத்தில் வராதே என உறுமும். இழுத்த பிறகு ஜிம்மி வாய்வைத்து விட்டால் டைகர் சத்தம் காட்டாமல் ஒதுங்கிக் கொள்ளும். விலங்குகளுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஒரு புலியின் வசிப்பிடம் என்பது 45 சதுர கிலோமீட்டர். அது மரங்களில் பிறாண்டி வைத்தும் ஒண்ணுக்கடித்து வைத்தும் தன் எல்லையைப் பாதுகாக்கிறது.

அந்த எல்லைக்குள் வேறொரு புலி நுழையவே நுழையாது. அதைத்தான் பீட்டர் எனக்குச் சொன்னான். "ஒருத்தர் டெரிட்டரியில் இன்னொருத்தர் நுழையவே கூடாது" இதைத்தான் குவாலிட்டியான வாழ்க்கை என்பதாக நான் புரிந்து கொள்கிறேன். எறும்புகளும் காகித மலர்களும் புலிகளும் அதனதன் டெரிட்டரியில் உலவுவதை அனுமதிப்பதைத்தான் Road rage இல்லாத வாழ்க்கை என்பேன் நான். புலியாகக்கூட இருக்கலாம் நாம். எறும்பிற்கும் வாழ இடம் கொடுப்போம்!

https://m.facebook.com/story.php?story_fbid=1514187388689504&id=100002947732385

No comments:

Post a Comment