Saturday, December 30, 2017

முத்தலாக் - சட்டத்திடம் எதிர் பார்ப்பது என்ன?

பழனிவேல் மணிக்கம்
Via facebook
2017-12-30

'முத்தலாக் சட்டம் முஸ்லீம் பெண்கள் உரிமைகளை மீட்டுத்தரும் சட்டம்; அதனை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிகைகள் தங்கள் போலி மதச்சார்பின்மையை மீண்டும் நிரூபிக்கின்றனர்.'

என்று பாஜக அபிமானிகள் பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள் எத்தனை பேர்  உண்மையிலேயே இந்த சட்ட வடிவை படித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

முத்தலாக் என்பது ஒரு கணவன் தன் மனைவியிடம் மூன்று முறை தலாக் சொல்லி உடனே விவாகரத்து ஆகி விட்டது என்று சொல்வது. அதாவது இன்ஸ்டன்ட் டிவோர்ஸ்.

இந்த இன்ஸ்டன்ட் காஃபி மேட்டர் சட்டப்படியும், மதப்படியும் கூட செல்லாது  என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டு விட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தவே ஒரு சட்டம் தேவைப்பட்டிருக்கிறது. அதாவது அந்த சட்டம் செய்ய வேண்டியது எல்லாம் 'நீ அப்படி மூன்று முறை தலாக் என்று அறிவிப்பதாலேயே உங்கள் மணம் ரத்தாகி விடாது. மண வாழ்க்கை தொடரவே செய்யும்,' என்று சொல்வதற்குத்தான் ஒரு சட்டம் தேவைப்பட்டிருக்கிறது.

ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்ட வடிவில் மனைவியிடம் மூன்று முறை தலாக் சொல்லும் கணவன் மூன்று வருடம் சிறை செல்வான்.

இந்த மாதிரி முத்தலாக் எல்லாம் வழக்கமாக குடும்ப பிரச்சனையின் விளைவாக நடப்பதுதான். நிறைய நேரம் உணர்ச்சி வசப்பட்டும் கூட நடக்கும். இது ஏறக்குறைய கணவன் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் போது திடீரென்று கோபத்தில்  'வீட்டை விட்டு வெளிய போடி!' என்று சொல்வதுதான்.

அப்போது அதற்கு என்ன செய்வீர்கள்? நண்பர்கள் உறவினர்கள் அவர்கள் இருவருக்கும் புத்திமதி சொல்ல வேண்டும். திருமண கவுன்சிலிங்-குக்கு அனுப்ப வேண்டும். அதை விட்டு விட்டு கணவனை சிறைக்கு அனுப்பினால் என்ன நியாயம்?

இதுதான் இந்த சட்டத்தால் நடக்கப் போகிறது.

இதில் இன்னொரு பிரச்னை வேறு இருக்கிறது. யாரவது ஒருத்தனை பழிவாங்க வேண்டும், பிரச்சனைக்கு உள்ளாக்க வேண்டும் என்றால் அவன் மனைவி போலீசிடம் போய் 'என்னிடம் இவன் முத்தலாக் சொன்னான்!' என்றால் முடிந்தது கதை.  இந்த சட்டத்தின் படி சம்பந்தப்பட்ட கணவன் ஜாமீன் கூட வாங்க முடியாது. (Cognizable and non-bailable)

முத்தலாக் என்கிற விஷயத்துக்கு எதிராக நான் நிறைய பதிவுகளை எழுதி இருப்பது எல்லாருக்கும் தெரியும்.  சுப்ரீம் கோர்ட்டில் அந்த வழக்கு நிலுவையில் இருந்த போது முத்தலாக்-கை செல்லாததாக ஆக்குவதை ஆதரித்து நிறைய பதிவுகள் எழுதினேன். நிறைய முஸ்லீம் நண்பர்கள் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டேன்.

ஆனால் இந்த அரசு கொண்டு வந்த முத்தலாக் சட்டம் முஸ்லீம் பெண்களுக்கு உரிமைகளை வாங்கித் தரும் சட்டம் இல்லை. முஸ்லீம் ஆண்களை பிரச்சனைக்கு உள்ளாக்கும், அவர்களை தேவையற்று தண்டிக்க உதவும் சட்டம். இது ஏறக்குறைய ஒரு கொடுங்கோல் சட்டம். தவிர நிறைய ஓட்டைகள் உள்ள சட்டமும் கூட. இஸ்லாமிய சமூகத்தை அந்நியப்படுத்த ஹிந்துத்துவ வலதுசாரிக்கு கிடைத்த சவுகரியமான ஒரு ஆயுதம் இது என்பதைத்தவிர வேறு சொல்வதற்கில்லை.

ஹிந்துத்துவம் பெண்ணுரிமை பேசுகிறது என்பதே ஒரு நகைமுரண். அதிலும் சிறுபான்மை பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருகிறது என்பது ஒரு கோர நகைச்சுவைதான்.

சிறீதர் சுப்பிரமணியன்

No comments:

Post a Comment