Thursday, December 28, 2017

நஞ்சுகொடி( placenta)  என்பது என்ன?

இப்படி ஒரு படத்தை அனுப்பி
இதை பற்றிய கருத்தென்ன என்று நட்பொருவர் கேட்டிருந்தார்

எனது கருத்து பின்வருமாறு

Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

மருட்டி வகை சுகப்பிரசவம் என்று வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம்
இதில் குழந்தையின் நஞ்சு கொடியை உடனே அப்புறப்படுத்தாமல் அது காய்ந்து சருகாகும் வரை விட்டு விடுவது நல்லது என்பது போல சிலர் 
  தகவல்களை பரப்பி வருவதை காண்கிறேன்.

இதற்கான அறிவியல் பூர்வமான பதிலை அளிக்கிறேன் . சற்று பொறுமையாக படிக்கவும் 

நஞ்சுகொடி( placenta)  என்பது என்ன?

பல கோடி விந்தணுவில் போட்டியில் முந்தும் ஒற்றை விந்தணு தாயின் கருமுட்டையுடன் இணைந்து ஒரு முட்டையாக உருமாறி தாயின் கர்ப்பபை எனும் கழனியில் விதையாக இடப்பட்டு முளைக்கும்

அது தனது 40 வார கருப்பை பயணத்தை ஆரம்பிக்கும் . அந்த 40 வாரமும் அதற்கு தேவையான ஊட்டச்சத்து தாயிடம் இருந்து பெறுவது இந்த நஞ்சுக்கொடியின் மூலம் தான்.

ஆக, குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் இந்த நாற்பது வாரமும் நஞ்சுக்கொடியின் தேவை மிக மிக இன்றியைமயாதது.

இந்த நஞ்சுக்கொடியானது குழந்தைக்கு ஊட்டம் அளித்து தானும் அளவில் வளர்ந்து 36 முதல் 40 வாரங்களில் முதிர்ச்சி அடைகிறது

இப்படி முதிர்ச்சி அடைவதை கொண்டே உள்ளே உள்ள குழந்தையின் வாரத்தை கணிக்க முடியும்.

40 வார இறுதியில் ஒரு நன்னாளின் நற்பொழுதில் குழந்தை பிறக்கிறது.

பிறந்த குழந்தையுடன் இந்த நஞ்சுக்கொடியுடன் கூடிய நஞ்சுப்பையும் வெளியேறுகிறது.

நவீன மருத்துவத்திலும் சரி இதற்கு முன்பு வீட்டில் பார்க்கப் பட்டு வந்த பிரசவ முறையிலும் சரி நஞ்சுக்கொடி குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு நஞ்சுப்பை அப்புறப்படுத்தப்படும்.

நவீன மருத்துவத்தில் , குழந்தை பிறந்தவுடன் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளிக்கு பிறகு நஞ்சுக்கொடி சுத்தமான கத்திரிகோலால் நறுக்கப்பட்டு குழந்தை தனியாக பிரிக்கப்படுகிறது

நஞ்சுக்கொடியை நறுக்கும் முன் குழந்தையை நோக்கி அந்த கொடி பிதுக்கப்படும். தாயிடம் இருந்து கிடைக்கும் அந்த 10 முதல் 15 மில்லி ரத்தமும் குழந்தைக்கு கிடைப்பதற்காக இந்த ஏற்பாடு.

பிறகு தாய்க்கு கர்ப்பைபையின் மேல் மெதுவாக தடவிக்கொடுக்கப்படும். நஞ்சுப்பை மெதுவாக கர்ப்பைபையை விட்டு பிரிந்து வெளியே வரும்

அந்த நஞ்சுப்பை முழுமையாக வந்துவிட்டதா? என்று நோக்கப்படும். மீண்டும் ஒரு முறை கர்ப்பபையினுள் வேறு நஞ்சுப்பையின் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருக்கனவா என்று பார்க்கப்படும்.

இந்த நஞ்சுப்பையை என்ன செய்கிறோம்?

மருத்துவமனைகளின் பின்னே நன்றாக ஆழமாக குழி தோண்டி புதைக்கிறோம் . இதை Deep burial என்கிறோம்.

சிலர் கூறுவதை போல, ஒரு கோடிக்கெல்லாம் இந்த நஞ்சுக்கொடி விற்பனை ஆவதில்லை. சிரிப்பு தான் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் தற்போது மருத்துவமனைகளில் 2016 இன் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளின் படி நாங்கள் கழிவுகளை வெளியேற்ற பணத்தை கொடுத்து தான் செய்கிறோம்.

சிலர் இதற்கு ஒரு கோடி கொடுக்கிறார்கள்... அமெரிக்கா காரன் கொடுக்கிறான் என்று கதை அளந்துவிடுபவர்கள்.. தயவு செய்து தங்கள் கதைகளை அட்லியிடம்
கூறினால் அவரது அடுத்த படத்தில் அதை புகுத்தி பல புரட்சிகள் செய்வார் 

நஞ்சுக்கொடி என்பது வெளியேறிவிட்டால் அதனால் ஒரு பயனும் கிடையாது

நீங்கள் கதையில் குற்றவாளியாக உள்ளே இழுக்கும் அமெரிக்காவின் மருத்துவ கழகமே ஸ்டெம் செல்லை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறிவிட்டது.

ஸ்டெம் செல் பாதுகாப்பு
அதற்கு வருடம் 20,000 எல்லாமே புருடா மற்றும் தேவையற்ற ஆணிக்களே 

ஸ்டெம் செல்லை பாதுகாத்து வரும் பல பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த வாழ்த்துகள்.

அது போக அடுத்த கப்சா யாதெனில்.இந்த ஸ்டெம் செல் இருந்தால் உலகத்தில் குழந்தைக்கு எந்த நோயும் வராது என்று காரண்டி கொடுப்பது  கேன்சர் வராது என்று சத்தியம் சொல்வதெல்லாம் தரமான காமெடி

தொப்புள் கொடியை சரியான நேரத்தில் வெளியே எடுக்காமல் விட்டால் என்ன ஆகும் ?

பிரசவத்தின் போது மூன்று நிலைகள் இருக்கின்றன

1. கர்ப்ப பை வாய் திறக்க ஆரம்பித்தலில் இருந்து பனிக்குடம் உடையும் வரை
2. பனிக்குடம் உடைவதில் இருந்து குழந்தை பிறத்தல் வரை
3. குழந்தை பிறந்ததில் இருந்து நஞ்சுப்பையை வெளியேற்றும் வரை

இதில் தாய் மரணங்கள் அதிகமாக நிகழ்வது மூன்றாம் நிலையில் தான்.

பிரசவத்திற்கு பின்பான ரத்தப்போக்கு (post partum haemorrhage ) நிகழ்வது ,
நஞ்சுக் கொடி கர்ப்ப பையிலேயே தங்கிவிடுவது ( retained placenta)  போன்ற காரணங்களினால் உதிரப்போக்கு அதிகமாகிறது

சரியான முறையில் பிரசவத்தின் மூன்றாவது நிலையை
கவனிப்பதற்கு பெயர் AMTSL ( ACTIVE MANAGEMENT OF THIRD STAGE OF LABOUR )

நஞ்சுக்கொடி வெளியேறியவுடன் அதில் இருக்கும் ரத்தம் மணிநேரங்கள் செல்ல செல்ல கெட்டுப்போய் விடும். அது குழந்தைக்குள் செல்லுமாயின் குழந்தைக்கு நோய் தொற்று( SEPSIS)  ஏற்படும்

இந்த நோய் தொற்று குழந்தையின் இறப்புக்கு காரணமாய் அமைந்து விடும்.

ஆகவே, குழந்தை பிறந்த பின் நஞ்சுக்கொடியை விட்டு வைப்பதால் குழந்தையின் உயிருக்கு கேடு தான் விளையுமே தவிர நன்மை விளையாது

இந்த ஸ்டெம் செல் , அமெரிக்கா, இலுமினாட்டி , ஒரு கோடி விலை இவையெல்லாம் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை

😊

Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

https://m.facebook.com/story.php?story_fbid=1581640041919166&id=100002195571900

No comments:

Post a Comment