Sunday, August 19, 2018

மான்சாண்டோவின் அபராத பின்னணி

RS Prabu
2018-08-19

மான்செஸ்டரிலுள்ள ஆலைகளுக்கு தரமான பஞ்சு கிடைப்பதற்காக 1880-களில் ஆங்கிலேயர்களால் ஐதராபாத்தில் கரன்ஜியா பருத்திச் சந்தை உண்டாக்கப்பட்டது. அதன்பின் பல சட்டங்கள் பருத்தி வியாபாரத்தை ஒழுங்குபடுத்த ஐதராபாத்திலும், பம்பாய் மாகாணத்திலும் இயற்றப்பட்டு வர்த்தகம் கண்காணிக்கப்பட்டு வந்தது. உலகளவில் பருத்தி, சர்க்கரை, புகையிலை, சணல், ஓப்பியம் மட்டுமே பல தொழிற்சாலைகளும், வணிகமும், பல போர்களும் உருவாகக்  காரணமாக இருந்த தொழிற்புரட்சிக்கான முதலாளித்துவ சரக்குகள்.

அதன் வியாபார பின்னணியில் உற்பத்தியை உயர்த்த பல வீரிய இரகங்கள், பூச்சிகொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டு சந்தையில் இறக்கிவிடப்பட்டன. அண்மையில் மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பம் பூச்சி,  களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் என பல்வேறு முகங்களோடு வளர்ந்து வருகிறது.

உலகளாவிய ஆடை இழைச் சந்தையில் பருத்தி, செல்லுலோஸ், லினன், பட்டு என இயற்கையாக கிடைக்கும் எல்லா apparel fibre-உம் மொத்தமாகச் சேர்த்து சுமார் 35% மட்டுமே பங்களிப்பு செய்கின்றன. மீதம் 65% சந்தை பாலியெஸ்டர், பாலிஅமைட் போன்ற செயற்கை இழைகளால் (synthetic fibre) ஆளப்பட்டு வருகிறது. அவற்றிற்கான மூலப்பொருள் பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஆலைகளின் பின்னணியில் இருந்து வருகிறது. சுமார் பத்து சதவீதம் இயற்கை இழைகளின் பங்கு உயர்ந்தால் சின்தெடிக் ஃபைபர் சந்தை எப்படி எதிர்விளைவு ஆற்றும் என்பதை உலக சந்தையின் போக்கை கவனிப்பவர்கள் அறிவார்கள்.

இயற்கை இழைகளை உற்பத்தி செய்ய, தரம் பிரிக்க, நூற்க என பலகட்ட வேலைகள் இருப்பதால் இலாபமும் பலகட்டமாக பிரித்துக்கொள்ளப்படுவது இயல்பு. ஆனால் சின்தெடிக் ஃபைபர் இரண்டு மூன்று ஆலைகளுக்குள்ளேயே முடிந்துவிடுவதால் அதன் இலாப விழுக்காடுகளையும், அதைக் கட்டுப்படுத்தும் சக்திகளையும் அரசாங்கங்களால் அவ்வளவு எளிதாக அடக்கி ஆள முடியாது.

மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு எதிராக இயங்கும் காரணிகளில் முதலில் வருவது கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட சின்தெடிக் ஃபைபர் சந்தையைக் கையில் வைத்திருக்கும் சக்திகள். இதுகுறித்து உலக இலுமினாட்டிகள், ஈயம் பித்தளைச் சட்டிகள், யானையணிகளை ஆராயும் குழுக்கள் உட்பட இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் இயற்கை இழை ஆர்வலர்கள் உட்பட யாரும் பேசுவதே இல்லை. அவர்களது நன்கொடைகளின் ஆதரவுடன் பி.டி. பருத்திக்கு எதிராக செயல்படும் NGO-க்கள் மறந்தும் செயற்கை இழைகளைக் குறித்து பேசா.

அடுத்து வருவது பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையைக் கையில் வைத்திருக்கும் இரசாயன நிறுவனங்கள். பூச்சிகொல்லி விற்பனைக்கு பருத்தி மிக முக்கியமான பயிர். அதை இழப்பதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாது. அவர்களது offshore companies மூலமாக வரும் நன்கொடைகளையும் எந்த ஒரு சமூக சேவை அமைப்பும் வெளியிடாது.

எவ்வளவு பெற்றோம் என்றுகூட சொல்ல வேண்டாம். யார் யாரிடம் நன்கொடை பெற்றோம் என்ற தகவலைக் கூட வெளியிடாத பல NGO-க்கள், லெட்டர்பேட் அமைப்புகள் பொதுவெளியில் கொக்கரிப்பதைப் பார்க்கும்போது எதில் சிரிப்பது என்று தெரியவில்லை.

பாரம்பரிய விதைத் திருவிழாக்கள் நடத்துவதன் மூலம் பல அரிய germplasm வணிக நோக்கங்களுக்காக எளிதாக கைமாறுகிறது. இதை ஒருவகையில் திருட்டு என்றுகூட சொல்லலாம். பதிவு செய்யப்படாத - விவசாய சேவை செய்யும் - லெட்டர்பேட் அமைப்புகளில் திருடர்கள் உண்டு என்று சொல்பவர்களைக்கூட கார்ப்பரேட் கைக்கூலி என்று சொல்லும் கோமாளித்தனம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்!

களைக்கொல்லி எதிரப்புத்திறன் கொண்ட பருத்தி இரகங்களை வெளியிடாமல் இராயல்ட்டி விவகாரங்களில் அரசாங்கம் உள்நோக்கத்துடன் தலையிட்டு மான்சாண்டோவைப் பின்வாங்க வைத்ததுடன் மொத்தமாக இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொல்ல வைத்தது. ஆனால் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் மரபணு கொண்ட பல இட்சம் பாக்கெட்டுகள் திருட்டுத்தனமாக சந்தையில் இந்த ஆண்டு  விற்றது. அந்த திருட்டு வியாபாரத்தில் மிகப்பெரிய இந்திய கம்பெனிகள் கூட ஈடுபட்டன. தமிழகத்திலும் விற்பனையானது. இந்த ஆண்டும் விற்பனையாவதாகத் தெரியவருகிறது.

பாக்கெட்டுக்கு மூன்று நான்கு டாலர் இராயல்ட்டி கிடைக்கவேண்டிய ஒன்றை எந்த நிறுவனமும் சும்மா சந்தையில் விட்டுவிடாது. ஆனானப்பட்ட மான்சன்டோ போன்ற கம்பெனிகளிடமே இரகங்களைத் திருடி, மறு உற்பத்தி செய்து விற்பனை செய்யக்கூடிய திறன் உடைய சந்தை சக்திகளுக்கு பாரம்பரிய விதைத் திருவிழாவில் திருடுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி! இன்னும் எப்படி விளக்கமாக சொல்ல முடியும் என்று தெரியவில்லை.

புதிய ஜீன்களை ஆராய்ச்சி செய்யும்போது பலதரப்பட்ட காரணிகளை பெரும் பொருட்செலவில் ஆராய்ச்சி செய்வார்கள். தனியார் நிறுவனங்களின் ஆராய்ச்சி முடிவுகள் 99% வெளியிடப்படாது. அதற்காக அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று பொதுவெளியில் மக்கள் நினைப்பது இயல்பு. உதாரணமாக பருத்தி காய்ப்புழுக்கள் பருத்திச் செடியை உண்டனவா அல்லது வேறு ஏதாவது செடியை உண்டு வளர்ந்தனவா என்பதை வயல்களில் பறக்கும் தாய் அந்துப்பூச்சிகளைப் பிடித்து அதன் இறக்கைகளில் உள்ள பொடியை எடுத்து அதன் gossypol அளவுகளை மிக அதிக திறன்வாய்ந்த துல்லியமான கருவிகள் மூலம் அளவிட்டு முடிவு செய்வார்கள். இந்தியாவில் உள்ள பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எதிலும் இல்லாத இயந்திரங்கள் மான்சாண்டோ போன்ற நிறுவனங்களில் உண்டு. ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏதும் வருவதில்லை என்பதற்காக பல நேரங்களில் பொதுமக்கள் குறைத்து மதிப்பிடுவது இயல்பு.

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் பிரச்சினை எழுந்த பின்னணியும்  சுவாரசியமானது. நூடுல்சில் காரீயம் இருக்கிறது, கண்ணாடித்தூள்கள் இருக்கிறது, அஜினோமோட்டோ இருக்கிறது என்று பரபரப்பாக எழுதினார்கள். அந்நேரத்தில் பதஞ்சலி நூடுல்ஸ் வளர்ந்தது வேறு கதை. அந்த கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ஆய்வகத்துக்கு NABL அங்கீகாரம் கூட  கிடையாது, அதே முடிவுகளை அவர்களால் திரும்பத் தர இயலவில்லை.

காரீயம் இருக்கிறது என்பதை இந்தியில் சொன்னவர்கள் சீசா என்று சொல்ல அதைக் கண்ணாடி என்று எழுதிவிட்டனர். இரண்டுக்கும் இந்தியில் சீசாதான்!  மேட்டர் ஓவர். யாருக்கும் பொறுமையில்லை. ஒரு பிராண்டு அடித்து நொறுக்கப்பட்டது. நீதித்துறையில் innocent until proven guilty என்பார்கள். ஆனால் பணமதிப்பிழப்பு மூலமாக மோடி அதை guilty until proven innocent மாற்றி ரொக்கம் வைத்திருக்கும்  அத்தனைபேரையும் அயோக்கியன் என்று முத்திரை குத்தியது மாதிரிதான் நடந்தது.

தற்போது மான்சாண்டோவின் கிளைஃபோசேட் களைக்கொல்லி புற்றுநோயை உண்டாக்கிவிட்டது என்று ஒருவர் தொடர்ந்த வழக்குக்காக பல மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கின் பின்னணி சுவாரசியமானது. ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் மான்சாண்டோவைக் கையகப்படுத்திய பின்னரே இந்த பெரிய தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. என்னமோ இதுதான் கிளைஃபோசேட்டுக்கு எதிரான முதல் வழக்கு என்பது மாதிரி நீதிபதிகள் அபராதம் விதித்தனர். இது காலங்காலமாக அமெரிக்காவும் ஐரோப்பாவுக்கும் நடந்துவரும் மறைமுக வர்த்தகப் போர். இதேநேரம் பேயர் மான்சாண்டோவால் கையகப்படுத்தப்பட்டிருந்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.

நள்ளிரவில் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து திருமுருகன்காந்தியைக் கைது செய்ததற்கு சொல்லப்பட்ட காரணம் மாதிரிதான் இதுவும்.

பல வருடங்களாக கோவிலில் மணி ஆட்டிய அர்ச்சகர் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிடுகிறது. அதற்கு காரணம் கற்பூர வாசனைதான் என்று ஒரு நிறுவனம் ஆராய்ச்சி செய்து கற்பூரம் ஒரு கார்சினோஜன் என்று ஆராய்ச்சி முடிவு எழுதினால் நீதிபதிகள் கற்பூரம் தயாரிக்கும் கம்பெனிக்கு அபராதம் விதிப்பாரா? டீ மாஸ்டர் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால் சர்க்கரைதான் காரணம் என்று ஆலைகளின் மீது நீதிபதிகள் அபராதம் விதிப்பாரா?

மிகச் சிக்கலான ஆராய்ச்சி முடிவுகளுக்கு  வழக்கு தள்ளுபடி, இழப்பீடு அபராதம், தடை என நீதிபதிகள் முடிவு செய்வதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியல் முக்கியமானது.

ஆடை உற்பத்தியில் இயற்கை இழைகள், செயற்கை இழைகள் இடையிலான போட்டி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் வர்த்தக  யுத்தம் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதில் நமது மோடி அரசாங்கம் தேவையில்லாமல் சில பர்னிச்சர்களை உடைத்து வைத்திருக்கிறது. வணிக பின்னணிகளைத் தொடர்ந்து உற்றுநோக்குவோம்; சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு role எதுவும் இதில் இல்லை.

https://m.facebook.com/story.php?story_fbid=10156037851873773&id=595298772

No comments:

Post a Comment