Wednesday, August 8, 2018

காமராஜரை மெரினாவில் ஏன் புதைக்கவில்லை

Prince Ennares Periyar
2018-08-07

1975 - காமராசரைக் கைது செய் என்றது நெருக்கடி கால மத்திய அரசு.

”ஒரு போதும் கைது செய்ய மாட்டேன்” உறுதியாக நின்றார் அன்றைய முதல்வர் கலைஞர்.

நெருக்கடி நிலையில், நெருப்பின் மீது ஆட்சி நடத்தக்கூடியவராகக் கலைஞர். காமராசரைக் கைது செய்ய மறுத்து, எமர்ஜென்சியை எதிர்க்கும் கலைஞரின் துணிச்சலை மனந்திறந்து பாராட்டினார் காமராசர்.

இந்நிலையில், அக்டோபர் 2, 1975 - பெருந்தலைவர் காமராசர் மறைந்தார். முதல்வர் பொறுப்பைவிட்டு இறங்கி 13 ஆண்டுகள் ஆன பிறகு மறைகிறார் காமராசர்.

மறைந்த காமராசரை மெரினாவில் புதைக்கச் சொல்லி எந்தக் குரலும் அன்றைக்கு எழவில்லை என்பதை இன்றைய அரைகுறைகள், வதந்தி கிளப்புவோருக்கு செவிட்டில் அறைந்து சொல்லுங்கள். மாறாக, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எரியூட்டத் தான் அன்றைய காங்கிரஸ் சார்பில் ஏற்பாடாகியிருந்தது.

ஆனால், அதை மாற்றி, அரசு இடத்தை ஒதுக்கி, அதுவும் அக்டோபர் 2 காந்தியார் பிறந்தநாளில் மறைந்த காமராசருக்கு மரியாதை தரும் வகையில் காந்தி மண்டபத்துக்கு அருகில் நினைவிடம் அமைக்க ஏற்பாடு செய்தவர் தலைவர் கலைஞர்.

மத்திய அரசின் எதிர்ப்பை மீறித் தான் எல்லாம் நடந்தது. கொட்டும் மழையில், தலையில் முண்டாசைக் கட்டிக் கொண்டு, தானும் களத்தில் நின்று அந்த இடத்தை சுத்தம் செய்து தயார் செய்தார். அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சியை நடத்தினார்.

மத்திய ஆட்சியில் சர்வாதிகாரியாகவே மாறி இந்திரா காந்தி ஆண்டு கொண்டிருந்த காலத்தில், இந்திரா காங்கிரசின் சின்னம் காளை மாடு. காமராசரின் ஸ்தாபனக் காங்கிரசின் சின்னம் இராட்டை.

மத்திய அரசை எதிர்த்து, ஸ்தாபனக் காங்கிரசின் சின்னமான இராட்டையை, காமராஜர் நினைவிடத்தின் உச்சியில் பொறித்தவர் கலைஞர்.

இதெல்லாமும் சேர்த்துத் தான் 1976-இல் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட காரணம். பதவியைக் குறித்து கவலைப்படாமல் தன் மூத்தவர்களை மதித்தவர் கலைஞர்.

காமராஜ் என்றே அழைக்கப்பட்டுவந்தனை அர் விகுதி சேர்த்து காமராஜர் என்று மரியாதை செய்தவரும் அவரே!

2010-ஆம் ஆண்டு காமராஜர் நினைவிடத்தில் அணையா ஜோதியை ஏற்றியவரும் அவரே!

இன்றும் காமராஜரை நினைவூட்டி, மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துக் கொண்டாடச் செய்தவரும் அவரே!

கலைஞர் முதல்வராக வேண்டும், திமுக தலைவராக வேண்டும் என்று பெரிதும் விரும்பித் துணை நின்ற, வழிகாட்டிய தலைவர் பெரியாருக்கும் மெரினாவில் இடம் ஒதுக்கவில்லையே கலைஞர். காரணம் அதே தான். கோரிக்கை எழவில்லை... செய்யவில்லை. அதே தான் காமராஜர்  விசயத்திலும்!

காமராஜரைக் காட்டி கலைஞரைக் குறைத்து மதிப்பிடச் செய்யும் குழப்பவாதிகளுக்கு வரலாற்றின் அடித்தளத்தில் நின்று அடித்துச் சொல்வோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=10157433656224625&id=597879624

No comments:

Post a Comment