Thursday, August 2, 2018

விறகை எரித்து விமானம் ஓட்டும்  வீலர்களும் ஹீலர்களும்

Poovanan ganapathy
2018-08-02
Via facebook

விறகை எரித்து விமானம் ஓட்டும்  வீலர்களும் ஹீலர்களும்

மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பின் போது இறப்பு நிகழாதா என்று பல இயற்கை அறிவாளிகள் அற சீற்றம் கொண்டு பொங்கும் கேள்விகள் பல இடங்களில் இருந்து வருகின்றன. வீட்டில் பிரசவம் பார்க்க சொல்லி தருகிறேன் என்பதை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை கிண்டல் செய்து மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் மருத்துவமனையை மூடி விடுவீர்களா என்றும் கேள்விகள் வந்து கொட்டுகின்றன.

அறுவை சிகிச்சை நிபுணரான என் நண்பருக்கு இந்தியாவின் சிறந்த ராணுவ மருத்துவமனைகளில் ஒன்றான கொல்கத்தா ராணுவ மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஆனால் பிரசவத்தின் போது ஏற்பட்ட ஒரு உடல்நல குறைபாடு காரணமாக சுற்றிலும் பல சிறந்த, பல்லாண்டு அனுபவம் உள்ள மருத்துவர்கள் இருந்தும் தாயை காப்பாற்ற முடியவில்லை. மரணம் எங்கும் நிகழலாம். ஆனால் அதனை தடுக்க, அது போன்ற சூழல் வரக்கூடிய நிலைகளை வராமல் தடுக்க அனைத்து முயற்சி, ஆராய்ச்சி எடுப்பது தான் அறிவியல் சார்ந்த மருத்துவம்.

விமான விபத்து நடந்தால் விமான நிலையங்களை மூடி விடுவீர்களா, கப்பல் கவிழ்ந்தால் கப்பல் போக்குவரத்தை மூடி விடுவீர்களா என்றும்  இதே போல கேட்கலாம்.

விபத்துக்களை தடுக்க முடியாது. ஆனால் பறக்க சொல்லி தருகிறேன் என்று மலை உச்சிக்கு மக்களை அழைத்து சென்று குதிக்க வைக்கும் முயற்சியை, நடு கடலில் சென்று நடக்க சொல்லி தருகிறேன் என்று சொன்னால் விட்டு விட வேண்டுமா?

விமானம் ஓட்ட,தயாரிக்க ,அதனை பரிசோதிக்க ,விபத்தை தடுக்க பல்வேறு விதிகள்,முறைகள் உண்டு. இது மருத்துவமனைகளுக்கு பொருந்தும். அதனையும் மீறி விபத்துகள் நிகழும்.அதில் இருந்து பாடம் கற்று அந்த குறைகள் சரி செய்யப்படும்.இது மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்

முதல்முதலில் விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தை இப்போது ஓட்ட முயற்சித்தாலும் அப்படி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.அந்த விமானங்களில் விபத்துக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.அதனை விட ஆற்றல் வாய்ந்த ,விபத்துக்களை பெருமளவு குறைக்க கூடிய நவீன விமானங்கள் வந்து விட்டதால் அதனை பயன்படுத்துவதே குற்றம் தான்.

இது மருந்துகளுக்கும், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கும் பொருந்தும்.மயக்கவியல் துறையில் பெரும்புரட்சியை ஏற்படுத்திய  க்ளோரோபார்ம் மருந்தை இப்போது யாரும் பயன்படுத்த மாட்டார்கள். பயன்படுத்தினால் தண்டனை தான். சென்ற நூற்றாண்டில் இருந்த பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளும், மருந்துகளையும் இப்போது  பயன்படுத்துவது குற்றம்

அறிவியல் என்பதன் அடிப்படையே புரியாத கூட்டம் ஒன்று உருவாகி இருப்பது மிகவும் வேதனையான ஒன்று. விறகு எரித்து விமானத்தை ஓட்டுகிறேன் என்பதற்கும் அவரவரே அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம், பிரசவம் பார்த்து கொள்ளலாம், உணவே மருந்து, கோமியமே அருமருந்து  என்பதற்கும் வித்தியாசம் கிடையாது. ஆனால் மின்சாரம், ஆயுதம், வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள், செயற்கைகோள் என்று வரும் போது விஞ்ஞான மாற்றங்களை பயன்படுத்தி கொள்ளும் கூட்டம், அதன் துணையோடு மருத்துவ துறையை அடித்து துவம்சம் செய்வதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.

-------

கேள்வி: இன்னும் மக்கள் ஏமாற்று மருத்துவ முறைகளை நாடுவதன் உளவியல் என்ன?

பதில்: ரொம்ப சிம்பிள்.

நம்ம ஊரில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.

வீட்டில் பியூஸ் போனால் நானே போடுவேன் என்பதில் தொடங்கி தானே புது வீட்டுக்குப் பிளான் போட்டுக் கட்டுவது என்று தொடர்வது சளி, இருமலுக்கு கசாயம் குடிப்பது போல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்பதில் வந்து நிற்கிறது.

இவ்வாறு பிரசவம் பார்த்து குருட்டு அதிர்ஷ்டத்தால் பிள்ளை பெற்றவர்கள், தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் அடுத்தவர்களை மூடர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். இதில் நாலு காசு மிச்சம் என்பது இவர்களுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம் அளிக்கிறது.

இந்த உலகமே அயோக்கியர்களால் நிறைந்திருப்பதாகவும் தங்களை அதில் இருந்து காத்துக் கொண்டதாகவும் நினைக்கிறார்கள். தான் செய்கிற தொழில் செழிக்க  வேண்டும், ஆனால், ஊரில் ஒரு பயல் உழைத்து கூட முன்னேறி விடக்கூடாது. இதே பொறாமைக் குணம் தான் "பார்த்தாயா, அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள்" என்று கிளப்பி விடுபவர்களுக்கும் வசதியாக இருக்கிறது.

படிப்பறிவற்ற பாமரர்கள் கூட நவீன மருத்துவர்களை நம்புகிறார்கள். ஏன் எனில் அவர்களுக்குத் தங்களின் எல்லை தெரியும். அதே போல் வாழ்வில் நன்கு சாதித்தவர்களும் நவீன மருத்துவர்களை நம்புகிறார்கள். ஏன் எனில், அவர்களுக்கு உயிரின் அருமை தெரியும்.

எனக்கு வீடு கட்டத் தெரியாது. விமானம் ஓட்டத் தெரியாது. அது போல் மருத்துவம் பார்க்கவும் தெரியாது என்று உணர்ந்து மருத்துவர்களை நாடுவது தான் என் அறிவு. எல்லாவற்றையும் அறிந்திருப்பது அறிவு அன்று. நமக்கு என்னவெல்லாம் தெரியாது, யார் அதனைச் செயற்படுத்த சிறந்தவர்கள் என்று அறிந்து அவர்களை நாடுவதே அறிவு.

இதில் எனக்கு எந்தப் பெருமைக் குறைவும் இல்லை. ஏன் எனில், நான் படித்த படிப்பு, அதனால் பெற்ற அறிவு, வேலை வாய்ப்புகளால் என் தகுதி என்னவென்று எனக்குத் தெரியும். எனக்கு யாரும் சான்று கொடுக்கத் தேவை இல்லை.

இந்தத் தெளிவு வந்த எவரும் அனைத்துத் தொழில் வல்லுநர்களையும் மதிக்கத் தொடங்குவார்கள்.

No comments:

Post a Comment