Saturday, August 4, 2018

மரபு வழி மருத்துவமும் வீட்டுப் பிரசவமும்

Dr M RADHA MD DM

மரபு வழி மருத்துவமும் வீட்டுப் பிரசவமும்

இன்று காலை ஒரு பதிவில் தோழிகளுக்கு நடுவில் நடந்த உரையாடல் நான் வேடிக்கை பார்க்க நேர்கையில் இந்த இரண்டு வார்த்தைகளும் கண்களில் பட்டன. எனது நினைவுகளில் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தேன்.

எம் பி பி எஸ் பட்டப் படிப்பில் நான்காம் வருடம் எங்களுக்கு social and preventive medicine என்ற ஒரு பேப்பர் உண்டு. அதில் சமூகத்தில் உள்ள நோய்களை ஆராய்ந்து, கண்டறியும் முறைகளையும், டெங்கு போன்ற நோய் தொற்றுகள் சமூகத்தில் பரவாமல் தடுக்கும் முறைகளையும், புள்ளி விவரங்களை சேகரித்தல், மருத்துவத்தை மக்களின் அருகாமையில் கொண்டு சேர்த்தல், அந்த சமூகத்தில் புதிதாக என்ன நோய்கள் தோன்றுகின்றன என்பதை கண்டறிதல், அவற்றை குணப் படுத்த, கட்டுப் படுத்த நடவடிக்கைகள் எடுத்தல் என்பது போன்றவை எங்களுக்கு கற்றுத் தரப் படும். நீங்கள் இப்போது ரேடியோ டிவியில் சுகாதாரத் துறையால் விளம்பரம் செய்யும் எல்லாம் அந்தத் துறையின் பங்களிப்பு தான்.

எதற்கு இவ்வளவு பில்டப் என்று கேட்கிறீர்களா? சமூகத்தில் நடப்பது திருத்துவதில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும் என்பதும், மருந்துகள் தருவது மட்டும் இல்லை, நோய் தடுப்பு முறைகளை மக்களுக்கு சொல்லித் தருவதும் அலோபதி டாக்டர்களின் ஒரு பகுதி தான் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்வதற்காக மட்டும் தான். இந்தத் துறையின் கீழே தான் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணிகள் வருகின்றன.

ஒவ்வொரு 30000 மக்கள் தொகைக்கும் ஒவ்வொரு நிலையம் என்றும் அதில் ஒவ்வொரு 5000 மக்களுக்கு ஒரு Village health nurse என்றும் வரையறை செய்யப்பட்டு, இவர்களுக்கு அவசர நிலை சிகிச்சைப் பயிற்சி, நோய்களை கண்டறிதல், அவற்றை தடுக்கும் முறைகளை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தால், மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற பணிகளில் பயிற்சி அளித்து உள்ளனர்.

வீடு வீடாக சென்று, கர்ப்பம் ஆகி இருப்பதை கண்டறிந்து அவற்றை நோட்டில் பதிவு செய்து அவர்களை குழந்தை பிறக்கும் வரை பின் தொடருதல் இவர்களது முக்கியமான பணி. இவர்கள் பதிவு செய்த கர்ப்பினிப்பெண்ணுக்கு என்ன ஆனாலும், அரசாங்கத் தரப்பில் இருந்து இவர்களே பொறுப்பு. ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது தீங்கு நேரும் போது எந்த இடத்தில் பிரச்சனை ஆரம்பித்தது என்பதை இவர்களது ரெக்கார்டு மூலமாகவே கண்டறிய இயலும்.
நிற்க Health for all 2000AD என்ற நமது அரசாங்கத்தின் கொள்கையில் 100% hospital delivery அதாவது 100% பிரசவங்கள் மருத்துவ மனையில் நடக்க வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள்கள் நிறைவேற இவர்களே காரணம்.

ஏன் மத்திய அரசாங்கம் இந்த 100% பிரசவங்கள் மருத்துவ மனையில் நிகழ்த்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் கோட்பாடை கடைப் பிடித்தது?
வீட்டில் நடைபெறும் பிரசவங்களின் போது நடைபெறும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக, சிக்கல்களை சீக்கிரம் கண்டு பிடிப்பதற்காக, அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் இந்த கோட்பாடு முன் வைக்கப் பட்டது. தனிப்பட்ட மருத்துவர் யாரும் அவர்களுடைய நலனுக்காக இதை முன் வைக்கவில்லை.

இந்த குறிக்கோளை அடைய பத்து முதல் 30 வருடங்கள் வரை அரசாங்கம் ஏராளமான பொருட்செலவு, ஊழியர்களின் உழைப்பு இவற்றை செயல்படுத்தி உள்ளது . தற்போது வீட்டில் பிரசவம் பார்ப்போம் என்று சொல்லுவதே மூடத்தனம். 4ஜி கனெக்ஷன் போன் இருக்கும் போது டயல் போன் தான் Radiation இல்லாததது. ஆகவே வயருடன் கூடிய டயல் போன் மட்டுமே பயன் படுத்துவோம் இயற்கையை காப்போம் ன்னு கோஷம் போடுறது கேட்டா எவ்வளவு சிரிப்பு வருதோ அதே போல நவீன மருத்துவ முறையும், மருத்துவத் துறையையும் சில பேர் சேர்த்து சொல்லும் போது நினைக்க தோன்றுது.

மேல நான் சொன்னவற்றில் மேற்பார்வை பார்ப்பது மட்டுமே மருத்துவரின் வேலை. மற்றபடி அவர்களது ஊரில் ஒரு ஆளாக மக்களோடு மக்களாக நின்று உதவி செய்யும் பயிற்சி பெற்ற செவிலியர்களின் பங்கு முக்கியமானது.
இவர்களை வைத்து வீட்டில் பிரசவம் பார்த்துக் கொள்ளலாமே? என்ன பிரச்சினை என்று கேட்க தோன்றுபவர்களுக்கு, பதில் பின்வருமாறு. Trained Dais and assisted delivery எல்லாம் 1960 களில் பரிசோதிக்கப் பட்டு அதானால பயன் இல்லாததால் அரசாங்கம் கைவிடப் பட்ட நடைமுறைகள் ஆகும்.

ஏன் மருத்துவ மனையில் பிரசவம் பார்க்க வேண்டும்?

1.சுகாதாரம் - முன்பு வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும் போது, சாணி தரையில் வைக்கோல் பரப்பி அதன் மீது சாக்கு விரித்து பெண்களை படுக்க வைத்து டெலிவரி பார்ப்பது வழக்கம். குழந்தை பிறந்த உடனேயே ப்ளேடால் அறுத்து விட்டு அந்த இடத்தில் சாணியை சேர்த்து வைத்து முடிந்து வைப்பது வழக்கமாம். சாணி கிருமி நாசினி என்று சண்டைக்கு வராதீர்கள்.இந்த சாணித் தூசியில் டெட்டனஸ் tetanus spores உயிரோட இருக்கும். இது பிறந்த குழந்தையையும், தாயையும் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். நிறைய பேர்கால மரணங்கள் இந்த நோயால் சம்பவித்தது தொடர்ந்து இது கண்டறியப் பட்டு வீட்டுப் பிரசவங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உறுதி கொள்ளப் பட்டது. தற்போது நாங்க டைல்ஸ் தரையில் படுக்க வைத்துக் கொள்கிறோம் என்று வராதீர்கள். டெட்டனஸ்க்கு ஆவது தடுப்பூசி கண்டு பிடித்து 5 ந்தாம் மாதம் போடப் படுகிறது. தற்போது உள்ள டெங்கு நோய்களுக்கு எல்லாம் மருந்தே இல்லை என்பதை மனதில் கொள்ளவும்.

2. பேறுகால நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள், அதிக இரத்தப் போக்கு, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனைகள் என்ற எல்லாவற்றையும் மருத்துவமனையில் வைத்து தான் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று எல்லாருக்கும் தெரிந்த காரணமாக அதைப் பற்றி விளக்கம் சொல்லாமல் கடந்து போகிறேன்.

3.குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும். அழாவிட்டால் என்ன செய்வது? அழாத குழந்தையை வீட்டில் வைத்து எப்படி உயிர்பிப்பது? பிறந்த குழந்தையின் மூக்கில் சளி அடைத்து கொண்டு இருக்கும். குழந்தை பிறந்த உடன் suction apparatus வைத்து நாசியை சுத்தம் செய்த பிறகு தான் குழந்தை அழவே ஆரம்பிக்கும். அதுவும் குழந்தையின் அழுகை வீறு கொண்டு எழுந்த பிறகு தான் நுரையீரல் விரிவடைந்து காற்றை நிரப்ப தொடங்கும். அந்த காற்றில் உள்ள ஆக்சிஜன் குழந்தையின் இரத்தத்தில் கலந்து நார்மல் ஆகும் வரை ஆக்சிஜன் சப்போர்ட் செய்ய வேண்டும். இவை எல்லாம் தாமதமாக நடக்கும் பட்சத்தில், மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து Hypoxic ischaemic encephalopathy என்ற பிரச்சனையில் சிக்கி மூளைப் பாதிப்பு அடைவதுடன் இறக்கவும் நேரிடும்.

4.குழந்தை நன்றாக மூச்சு எடுத்து ஆக்சிஜன் லெவல் நார்மல் காட்டிய பிறகு தான் அம்மா பக்கத்திலேயே வருவார்கள். இப்போது தான் நஞ்சுக் கொடி பிரிய ஆரம்பித்து இருக்கும். அவை முழுவதும் பிரிந்து விடாமல் இருக்கும் மாதிரி வெளியே இழுக்க வேண்டும். வந்ததும் அவை மொத்தம் வந்து விட்டதா என்பதை ஆராய வேண்டும். ஒரு சின்ன பிட் உள்ளே இருந்தால் கூட இரத்தப் போக்கு நிற்காது. ஒரு 500 மில்லி அளவுக்கு இரத்தம் வெளியேறினாலே, இரத்த அழுத்தம் குறையும். மயக்கம் வந்து உயிருக்கு ஆபத்து நேரிடலாம். இரத்தம் அளவுக்கு அதிகமாக போவதாக தோன்றினால் உடனே இரத்தம் ஏற்றுவது மட்டும் தான் சிறந்த மாற்று மருந்து. அது எல்லாம் வீட்டில் வைத்து சாத்தியமே இல்லை.

இப்படி தற்காலத்தில் சாத்தியமே இல்லாத ஒன்றை, மருத்துவ மனையில் பிரசவம் பார்க்க வேண்டும் என்ற கருத்தை படித்தவர்கள் - ஆம் செல் போனில் படித்தவர்கள் எல்லாம் கூறும் போது தற்கால தலைமுறையினரை நினைத்து வேதனை ஏற்படுகிறது.

இயற்கை முறையில் பிரசவம் - நார்மல் டெலிவரி தான் மருத்துவமனையில் செய்யப் படுகின்றது. அதை தவிர்த்து சிசேரியன் செய்ய மருத்துவ ரீதியாக ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அதை விடுத்து சிசேரியன் தவிர்க்க மரபு வழி மருத்துவம் வீட்டில் பிரசவம் என்ற சொற்றொடரே முற்றிலும் தவறானது என்று ஆணித் தரமாக பதிவு செய்து கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் இதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எவரையும் மறுத்து பேச உங்களுக்கு உரிமை உண்டு.

No comments:

Post a Comment