Tuesday, August 7, 2018

பிரசவம் வீட்டில் பார்ப்பது நல்லதா?

Dr.ச.தெட்சிணாமுர்த்தி, MBBS, DDVL,
அரசு மருத்துவர், அறந்தாங்கி.

*பிரசவம் வீட்டில் பார்ப்பது நல்லதா?
இல்லை மருத்துவமனையில் பார்ப்பது நல்லதா?*

அடப்பாவிகளா... தமிழ்நாடு புல்லா பட்டிமன்றமே நடந்துகிட்டு இருக்கு.

"குழந்தை தாயிடம் இருப்பது நல்லதா? அல்லது அனாதை இல்லத்தில் இருப்பது நல்லதா?" - என்று கேட்கும் கேள்வி எவ்வளவு மடத்தனமோ அதைப்போல் தான் இதுவும்.

கருவுற்ற நாளிலிருந்து, குழந்தை பூமியில் கண் விழிக்கும் நாள் வரையிலான நெடிய  பயணத்தின் ஒவ்வொரு நொடியையும், நவீன மருத்துவ கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து, தாயையும் அவர் பெற்றெடுக்கும் சேயையும் காப்பதற்கு இந்த நவீன யுகத்தில் மருத்துவமனைதான்  சிறந்தது என்று அறிவியலில் 'அ'  தெரிந்தவன் கூட தூக்கத்தில்  ஊளறுவானே!!!..

*நவீன மருத்துவர்கள் இயற்கைக்கு எதிரானவர்களா?*

"Modern scientific medicine"  அல்லது 'அலோபதி' என்று கூறப்படும் நவீன மருத்துவர்கள்/மருத்துவம் இயற்கைக்கோ மற்ற மருத்துவத்திற்கோ எதிரானவர்கள் அல்ல.

கர்ப்பிணி வருகை தரும்போது நாங்களும்  முதலில் நம்பிக்கையையும், நல்லெண்ணெத்தையும் கொடுத்துதான் மருத்துவத்தை ஆரம்பிக்கிறோம். காய்கறிகள், கீரை, பழங்கள், உடற்பயிற்சி, யோகா, என்று இயற்கை வழிகளைத்தான் கையாள அறிவுறுத்துகிறோம்.

அத்துடன் மருத்துவத்தின் கொடைகளான இரத்தபரிசோதனைகள், ஸ்கேன் போன்ற கருவிகளை தாய் மற்றும் சேயின்  நலத்தை அறிய கூடுதலாக பயன்படுத்தி ஜனனத்தை பாதுகாப்பாக மாற்றுகிறோம்..

*நவீன மருத்துவம் என்ன  சாதித்திருக்கிறது?.*
 
ஒரு தேசத்தின் வளர்ச்சி கணக்கிடப்படுவது இரண்டு  குறியீடுகளை பொறுத்துதான் MMR மற்றும் IMR ....
MMR: (கர்ப்பிணி இறப்புவீதம்) ஓராண்டில் 100000 கர்ப்பிணிகளில் பிரசவத்தின் போது இறந்துபோவோரின் எண்ணிக்கை. தமிழகத்தில் இது 66
IMR: (சிசு இறப்பு வீதம்) பிறப்பின் போது 100 சிசுக்களில் எத்தனை பேர் இறந்து போகின்றனர் என்ற கணக்கு.தமிழகத்தில் இது 17... மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சுகாதாரத்தில் 2 வது அல்லது 3 வது இடத்தில் வருடந்தோறும் வந்து விடுகிறது தமிழகம்.காரணம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரிகள் தனியார் மருத்துவமனைகளில் நவீன அறிவியல் முறையில் நடைபெறும் மருத்துவமனை பிரசவங்களே (Institutional Deliveries) காரணம். 90 சதவீதத்திற்கும் அதிகம்.
வீட்டிற்கே சென்று கர்ப்பிணிகளின் தொடர் நலன் கண்காணிக்கும் கிராம சுகாதார செவிலியரில் ஆரம்பித்து (VHN) மருத்துவமனைக்கு குறைந்தபட்சம் மாதம்  ஒரு முறை  வரும்போது செவிலியர் மற்றும் மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் உடல் மற்றும் இரத்த ,ஸ்கேன் பரிசோதனைகள்,அரசின் உதவித்தொகைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் ,சுகாதார முறையில் மேற்கொள்ளப்படும் சுகப்பிரசவங்கள் அல்லது அறிகுறிகளை தொடர் கண்காணிப்பின் மூலம் முன்னரே கண்டுகொண்டு அறுவை சிகிச்சை தேவையெனில் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்தல் போன்றஒரு தொடர் கண்காணிப்பும்,  கூட்டு முயற்சியும்,நவீன அறிவியல் முறைகளும்,மருத்துவர் தலைமையிலான குழுவின் அர்ப்பணிப்பும் ஜனனத்தை சாத்தியமாக்கி இறப்புக்களை குறைத்திருக்கின்றன.தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவங்களிலும் இத்தகைய அக்கறையே காட்டப்படுகிறது.

      சிசேரியன் திட்டமிடப்படுகிறதா???? 
    தாய்  சேய்க்கு மட்டுமல்ல மருத்துவருக்கும் மறு பிறப்புதான் மகப்பேறு என்பது. ஒவ்வொரு பிரசவத்திற்கான நேரம் கடந்து ,தாய்க்கோ,சேய்க்கோ ஆபத்து ஏற்படும் என்னும் அபாயக்கட்டத்திலும்
(Emergency caesarian)  அல்லது சுகபிரசவதிற்கு வாய்ப்பு இல்லை என்று முன்னரே இருக்கும் காரணிகள் சொல்லும்போதுதான் (எ.கா. கருப்பையின் தன்மை, நஞ்சுக் கொடியின் (placenta) நிலை, குழந்தையின் நிலை,தாய் உயரம் குறைவு) அறுவைசிகிச்சைகள்(Elective LSCS)- சிசேரியன்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சுகப்பிரசவம்தான் மருத்துவருக்கும் எளிது மன அழுத்தம் குறைவு, அறுவை சிகிச்சை நிபுணர் தேவையில்லை.
பிரசவ வலியில் தாய் துடித்து,சுகப்பிரசவம் நடந்து ,குழந்தை உலகத்தை பார்த்து அழுது வீறிடும் கணத்தை பார்த்து தாய் பேரானந்தம் கொள்ளும் நிலையைப் பார்க்கத்தான் ஒவ்வொரு மகப்பேறு மருத்துவனும் தவம் கிடக்கிறார்கள். கடவுளாகும் தருணம் அல்லவா...!!!!
   ஹீலர் ஃ பெய்லர்களும்  ஊடகங்கள் மற்றும்  சமூக ஊடகவியலாளர் கடமையும்:
'ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வந்திடுவ' என்ற  ஜோசியக்காரனின் குரல் ஆனந்தமாகத்தான் இ்ருக்கும். நம்பிக்கை நல்லதுதான் .ஆனால் தவறான நம்பிக்கைகள் தான் முளையிலேயே கிள்ளி யேறியப்படவேண்டியவை.ஏனெனில்  பேரழிவுக்கு இட்டுச்செல்லும் முறையற்ற கல்வியால் வளர்ந்தவர்களால் கொடுக்கப்படும் தவறான பயிற்சிகள், நம்பிக்கைகள்  , நீண்ட நாட்கள் கண்ட கனவு தாயின் உயிராகவோ, அல்லது சேயின் உயிராகவோ இழக்கும் போதுதான் அதன் மொத்த வலியையும் உணர முடியும்.
     ஒரு சாதாரண விவசாயியின் மகளுக்கும், ஒரு கூலித்தொழிலாளியின் மகளுக்கும், அவர் வசிக்கும் கிராமத்திலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 மாத தொடர் கண்காணிப்பின் மூலம் நவீன அறிவியல் முறையில் பிரசவம் நடத்தப்பட்டு அவர்கள் செலவுக்கும் 13000 ரூபாய் தொகையும் அரசால் வழங்கப்படுகிறது.. என்ற செய்தியையும்  நம்பிக்கையையும்தான் சமூக அக்கறை கொண்ட ஊடகங்களும், பல புரட்சிகளையே  Face book,Twitter, Whatsapp  போன்ற சமூக ஊடகங்கள் மூலம் படைத்துக்காட்டிட்ட சமூக ஊடகவியலாளர்களும் எளிய மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் ..மாறாக ஹுலர்   ஃபெய்லர்களை அல்ல!!!.
     தொடர்ந்து வளர்ந்து வரும் நவீன மருத்துவம் !!!
       நவீன மருத்துவம் அனைத்தும் தெரிந்த ஆண்டவன் அல்ல.ஆனால் நவீன மருத்துவம் தொடர்ந்து தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்து கொண்டே வருகிறது ..அத்தனையும் பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும்  பரிசோதனைகளுக்கு பிறகே . பெரியம்மை, மலேரியா, போலியோ, யானைக்கால் போன்ற
கொடிய நோய்களை தடுத்து தாய் சேய் நலத்தை பாதுகாத்து மனித குலத்தின் ஆயுளை நீட்டிக்கும் முயற்சியில் நவீன அறிவியல் மருத்துவம் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது..
  வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறது...
    சமூகமும், ஊடகங்களும், அரசும் நவீன மருத்துவத்தோடு கைகோர்க்கும் பட்சத்தில் இன்னும் அது வேகமெடுக்கும்..
நம்பிக்கையோடு..👍
Dr.ச.தெட்சிணாமூர்த்தி, MBBS.,DDVL.,
அரசு மருத்துவர்,
அறந்தாங்கி .
9159969415.

No comments:

Post a Comment