Wednesday, August 8, 2018

பெரியார் இறந்தபோது நடந்தது என்னவென அறிய திராவிடக் கழகப் பொதுசெயலாளர் கி வீரமணியிடம் கேட்டோம்

பெரியார் இறந்தபோது நடந்தது என்னவென அறிய திராவிடக் கழகப் பொதுசெயலாளர் கி வீரமணியிடம் கேட்டோம் இது குறித்து, அப்போது நம்மிடம் பேசிய அவர்:

"அரசு தவறான, பொய்யான திசைத் திருப்பக் கூடிய வாதங்களை அரசு முன்வைத்துள்ளது. பெரியார் அவர்கள் வேலூரில் மரணமடைந்ததும் அன்னை மணியம்மையும் இயக்கத் தோழர்களும் தானும் முடிவு செய்து அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பேசினோம்.

அப்போதே நாங்கள் கேட்டது பெரியார் திடலில்தான் அவரை அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அவரை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்ற பேச்சு எழுந்தபோதே நீடித்து, நிலைத்து நிற்கவேண்டியது பெரியாரின் கொள்கைகள்தான் என்று கூறினோம்.

அரசு சார்பில் ஒரு பொது இடத்தில் வைத்தால் இப்போது இருக்கின்ற அரசு போய் வேறு அரசு வரும், பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாத அரசாக கூட அது அமையலாம் அப்போது தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும். ஆகவே மெரீனா வேண்டாம் என தெளிவாக கூறினோம்.

ஆகவே பெரியார் திடலில் அவரை நல்லடக்கம் செய்ய மாநகராட்சியிடம் இருந்து உரிய அனுமதியை பெற்றுக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். ஆகவே மெரினாவை நாங்கள் கேட்கவே இல்லாதபோது அரசு அந்த இடத்தை தர மறுத்தது என்று கூறுவது பொருத்தமற்றது" - என்று கூறினார் கி. வீரமணி.

"இது இப்படி என்றால் காமராஜர் மறைந்த போதும் நானும் அருகில் இருந்தேன். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் "காமராஜர் காந்தியின் தொண்டர், ஆகவே அவருக்கு காந்தி மண்டபத்தின் அருகே இறுதி சடங்கு செய்யவேண்டும்" - என கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில் கருணாநிதி நேரடியாக காந்தி மண்டபம் இருந்த இடத்திற்கு எங்களையும் அழைத்து சென்றார் அப்போது இருட்டாக இருந்ததால் அவரே டார்ச் லைட் அடித்து காமராஜர் நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தை தேர்வு செய்தார்.

இது முழுக்க முழுக்க காங்கிரஸ் தலைவர்களின் விருப்பப்படி கருணாநிதி செய்த செயல். ஆகவே காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்டார்கள் என்ற பிரச்சனை எழவே இல்லை.

அடுத்ததாக தமிழக அரசு இப்போது நீதிமன்றத்தில் ராஜாஜியை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ராஜாஜி வைஷ்ணவ சம்பிரதாயம், அய்யங்கார் வகுப்பை சேர்ந்தவர். அவர்களுக்கு புதைப்பதில் நம்பிக்கையில்லை. எரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அப்படி அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றபோது அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

அந்த இடத்தில் குடியரசுத் தலைவர் கிரி, பெரியார், கருணாநிதியோடு தானும் அந்த இடத்தில் இருந்ததாக நினைவு கூர்ந்தார் கி. வீரமணி. அதன் பின்னர் ராஜாஜியின் அஸ்தியை எடுத்து பல நதிகளில் கரைத்தார்கள் என்றும கூறினார் கி.வீரமணி.

ஆகவே இவர்கள் மெரினாவில் இடம் கேட்டார்கள் என்று கூறுவது விஷயம் தெரியாதவர்களின் உளறல் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வேண்டுமென்றே திரித்துக் கூறக்கூடிய புரட்டு வாதம். இதில் உண்மையில்லை என்று ஆணித்தரமாக எடுத்துக் கூறினார் கி வீரமணி.

இப்படிக் கூறியவரிடம் "பெரியார் தனது இறுதிச் சடங்கு இந்த இடத்தில் நடக்க வேண்டும் என ஏதாவது தெரிவித்திருந்தாரா?" - என்று கேட்டபோது பெரியாரைப் பொருத்தமட்டில் அவர் அப்படி எதுவும் விரும்பவில்லை அவர் ஒரு மெட்டீரியலிஸ்ட். அவர் இறக்கப் போகிறார் என்ற உணர்வே அவருக்கு இல்லை என்று கூறினார் அவர்.

ஆக நடக்காத சம்பவங்களை நீதிமன்றத்தில் கூறியும் இப்போது வெற்றி என்னவோ கருணாநிதியின் பக்கமே இருந்துள்ளது. வாழ்வு முழுவதும் போராடியவர் தனது இறுதிச் சடங்கிற்கும் போராடி வெற்றி பெற வேண்டிய ஒரு சூழலை உருவாகிவிட்டார்கள்.

இருந்தால் என்ன போராளிக்கு கணங்கள் தோறும் போராட்டம்தான், போராட்டங்கள் தோறும் வெற்றிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறார் கருணாநிதி

https://m.facebook.com/story.php?story_fbid=1052420698251194&id=100004498213107

No comments:

Post a Comment