Friday, August 3, 2018

ஹீலர் பாஸ்கர், இலுமினாட்டி இத்யாதிகளின் அரசியல் என்ன?

Rajasangeethan John
2018-08-03

ஹீலர் பாஸ்கர், இலுமினாட்டி இத்யாதிகளின் அரசியல் என்ன?

இயற்கை மருத்துவத்தில் உள்ள சிக்கல், அது உங்களை பகுத்து ஆராய அனுமதிக்காது. அதாவது கற்பூரவல்லி இலை சளியை சரியாக்கும் என தெரியும். ஆனால் அதிலுள்ள எந்த உட்பொருள் சளியை குணமாக்குகிறது என தெரியாது. அலோபதியில் தலைவலி மாத்திரை கேட்டு வாங்கினாலும் அதில் உட்பொருள் என்ன இருக்கிறது என விலாவரியாக எழுதி இருப்பார்கள். அந்த ரசாயனங்கள் உண்மையிலேயே தலைவலியை குணமாக்கவல்லதா என நீங்களே ஆராய்ந்து கொள்ளலாம். இயற்கை மருத்துவத்தில் அது சாத்தியம் இல்லை.

குறைந்தபட்சம் எல்லா மருத்துவர்களும் அந்த பகுப்பு ஆராய்ச்சிக்கு எல்லாம் செல்வதே இல்லை. அவர்களை பொறுத்தவரை அவர்கள்தான் கடவுள். அவர்கள் கொடுப்பதை நீங்கள் நம்பி சாப்பிட வேண்டும். அதன் உட்பொருள் என்ன என நீங்கள் கேட்கவும் முடியாது. சொன்னாலும் நீங்கள் ஆராய்ந்து பார்க்க முடியாது. அதுதான் அவர்களுக்கு தேவை. அந்த obscurityதான் அதிக சந்தேகத்தையும் கொடுக்கிறது.

இயற்கை மருத்துவத்தில் சரியான விஷயங்களே இல்லையா?

இருக்கலாம். சில இயற்கை மருத்துவர்கள் சரியாகவும் இருக்கிறார்கள். முடியாதபட்சத்தில் முடியாதென சொல்லும் நேர்மை பெற்றிருக்கிறார்கள். முடியுமென சொல்லும் நோய்களை குணமாக்கியும் காட்டுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர் வறட்டு பிடிவாதத்துடன் இயற்கையை பிடித்து தொங்குகிறார்கள். கொஞ்சம் அவர்களை பின்தொடர்ந்து சென்றால் காவிகளை போலவே மாட்டை கும்பிடவும் சொல்வார்கள். சித்தம், ஆயுர்வேதம் என்றெல்லாம் மருந்துகள் எடுத்து குணமானவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள். மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் ஏன் அவற்றை அறிவியலாக மாற்ற எவரும் முன் வருவதே இல்லை?

உண்மை அரசியல் என்ன தெரியுமா?

இயற்கை மருத்துவர்கள் மக்களிடம் எளிமையாக சென்று சேர்வதே அலபதி மருத்துவம் வணிகமாகிவிட்டது என்ற பிரச்சாரத்தை கொண்டுதான். ஆங்கில மருத்துவம் வணிகம் ஆகிவிட்டதா என்றால், ஆம் நிச்சயமாக ஆகிவிட்டது. அதற்கு நிவாரணம் ஆங்கில மருத்துவம் சந்தையாக்கப்பட்டு லாபவெறி ஊட்டப்படுவதை எதிர்ப்பதே ஆகும்.  அறிவியலுக்கு புறம்பான அல்லது அறிவியல் எழுதப்படாத மருத்துவத்தை ஏற்றுக்கொள்வது அல்ல.

அலபதி மருத்துவம் வணிகம் ஆகிவிட்டதென சொல்லி இவர்கள் செய்வதெல்லாம் இயற்கை மருத்துவத்தை வணிகம் ஆக்கும் வேலைகளை மட்டுமே.

கொல்வதிலும் சரி பணம் சம்பாதிப்பதிலும் சரி ஆங்கில மருத்துவமும் இயற்கை மருத்துவமும் சரி ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. இயற்கை மருத்துவம் என்றாலும் அரசின் மேற்பார்வையில் accountability கொண்ட அண்ணா சித்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஆங்கில மருத்துவம் என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இரண்டு மருத்துவங்களுக்கும் அரசை விடுத்து accountability கொடுக்காத இடங்களை தேடி செல்வதுதான் நமக்கான உண்மையான நோய்.

ஆங்கில மருத்துவத்தில் வணிகத்தை பெருக்குவதாக இவர்கள் சொல்லும் இலுமினாட்டிகள் வேறு யாருமல்ல, முதலாளிகள்! முதலாளிகளையும் லாபவெறியையும் எதிர்ப்பதற்கு பெயர்தான் கம்யூனிசம். ஆனால் கம்யூனிசம் என சொன்னால் குட்டு வெளிப்பட்டு விடுமே, பின் இவர்கள் எப்படி பணம் பார்ப்பது? அதற்குதான் இலுமினாட்டி லொட்டு லொசுக்கு எல்லாம்.

மருத்துவத்துறையில் இருந்து கைகழுவும் முனைப்பில் இருக்கும் அரசை கேள்வி கேட்க வேண்டும்.  மருத்துவம் சந்தையாக்கப்படக் கூடாது. மக்களுக்கு மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும்.    மருத்துவம் வணிகம் ஆகாமல் அரசு ஏற்கையில்தான் அதில் உண்மை இருக்கும்.

இல்லையெனில் இலுமினாட்டி என்னும் முதலாளிகள் புகுந்து மக்களுக்கான கம்யூனிச மருத்துவத்தை பிடுங்கி எறிவார்கள். இயற்கை மருத்துவர்கள் தோன்றி பிரசவத்துக்கு பயிற்சி கொடுக்க அழைப்பார்கள்.

-
https://m.facebook.com/story.php?story_fbid=1902761276488247&id=100002631784989

No comments:

Post a Comment