Tuesday, August 21, 2018

தேவியின் மாதவிடாய்க் குருதி?

----------

உதிரமே சற்று ஓய்வெடு!
------------------------------------
பெண்ணே
உன் உதிரத்தை பாலாக்கி எமக்களித்தாய் -அங்கே
தீட்டில்லை பசிமட்டுமே
தெரிந்தது!

உன் உதிரத்தால் எமை
ஈன்றெடுத்தாய் - ஆனால்
தீட்டில்லை
தாயும் சேயும் நலம்
என்றது இச்சமூகம்!

உன் உதிரத்தால்
உருவானதுதானே இந்த
மொத்த உலகமும்!
தீட்டில்லை என்கிறார்கள்!

பாரதமாம் மாதாவாம்
நீதியாம் தேவதையாம்
அங்கேயும் தீட்டில்லை!

கற்பகிரக கடவுளர்களுக்கு
கூட விதிவிலக்கு
அவர்களுக்கும் தீட்டில்லை!

பெண்ணே
நீ அணியும் நாப்கினுக்கு மட்டும் வரி எனும் வேட்டு
ஆனால் அந்த நாளில்
நீ தொட்டால் தீட்டு!

என்ன விந்தை
என்ன விந்தை
எனை ஈன்ற என் தாயும்
நான் பெற்ற என் மகளும்
எனக்கெப்படி தீட்டாவார்கள்!

மனிதனை படைத்த கடவுளின் புனிதம்
அதே மனிதனால் தீட்டாகிறது!
இதை சந்தேகிப்பதற்கு பதிலாக
கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்
கபடவேட திருடர்கள்!

பெண்ணே
நீ தொட்டால் தீட்டாகும் கடவுள்;
உன்னைவிட எப்படி
உயர்ந்ததாகும்?
உன் உதிரத்தின் சக்தி
உலகையே உலுக்குகிறதென்றால்,
நினைத்துக்கொள்
இனிமேல் நீதான் சக்தியென்று!

உன் உதிரத்தால் வெள்ளமாம்
பேரழிவாம் பேசக்கேட்டேன்
பெருமைதானே உனக்கு
சொல்! சொல் ! சொல்!
இனி கோயிலெங்கும்
தடையின்றி செல்! செல்! செல்!

பார்த்திபன் ப
21/08/2018

---------

Venpura Saravanan
2018-08-22

தேவி பிறகு ஒருக்களித்து
படுத்துக் கொண்டாள்...
____________________________
ருதுவான நாள்முதல்
உடல் பிரளயத்திற்கு
மாதந்தோறும் தன்னை
ஒப்புக் கொடுப்பது
வரமா சாபமா எனும்
குழப்பத்திலேயே
வீட்டுக்கு விலக்காகவும்
கோயிலுக்கு தீட்டாகவும்
இரட்டை வேடம் தேவிக்கு.

அருளாசி வேண்டி
கோயிலுக்குத் தன்னை
தேடிவரும் தேவியரில்
தினமும் நூறுபேர்
வராமல் இருப்பதன்
ரகசியம் அறிந்த தேவி
கழிவறையோ தனியறையோ
இல்லாத கருவறைக்குள்
மாதந்தோறும் படும் அவஸ்தையை
யாரிடம் சொல்லியழவென
தவிக்கிறாள் ஆசிவழங்கியபடியே.

அன்றாடம் கழிக்கும்
சிறுநீருக்கும் மலத்திற்கும் அண்டாத
விலக்கோ தீட்டோ
மாதந்தோறும் கசியும் குருதிக்கு
ஏன் எப்படி வந்தது என்ற
நினைப்பிலேயே
அர்ச்சனைப் பொருட்களுடன்
நாப்கினை எதிர்பார்த்து
ஏமாந்து போகிறாள்
ஒவ்வொரு மாதமும்.

திருவிழாக் காலமொன்றில்
ஆடை ஆபரணம் அலங்காரத்துடன்
பூப்பல்லக்கேறி நகர்வலம் போன
தேவியின் கண்கள் பூஞ்சையடைய
முகம் வெளிறிப்போய் சோர்வுற்று
திருக்கோயில் வந்து சேர்ந்தபோது
நடை சாத்தப்பட்டிருந்தது குறிப்பறிந்து!

அடிவயிற்றில் இடி இடித்ததுபோல்
உயிர்போகும் வலியை மென்றபடி
பிரகாரத்தின் மூலையொன்றில்
ஒருக்களித்து படுத்துக் கொண்டாள்
அருள்பாலிக்கும் தேவி.

https://m.facebook.com/story.php?story_fbid=1683672088410554&id=100003033384569

----

சத்தியபெருமால் பாலுசாமி
2018-08-21
  
கடவுளின் ஸ்வந்த தேசம் மூழ்கிய போது
கடவுளர்களும் மூழ்கிப் போனார்கள்
மூழ்கடித்தது நீரல்ல மாதவிடாய்க் குருதியே என்றான் பூசகன்
'தேவியின் மாதவிடாய்க் குருதியா?' எனக் கேட்டான் கவிஞன்
'ஐயோ எங்கள் ஜகத் ஜனனியைக் கேவலப்படுத்திவிட்டானே' எனக் கொடுவாளைத் தூக்கினான் பூசகன்
'அட எந் தூமச் சீல' எனக் காறித் துப்பிய தேவி கேட்கிறாள்
"மாதவிடாய்க் குருதி வடிக்காமல் எப்படியடா நான் ஜகத் ஜனனி ஆனேன்?"

#standwithmanushyaputhiran

https://m.facebook.com/story.php?story_fbid=2316963908344202&id=100000918452805

-----

புலியூர் முருகேசன்
2018-08-21

தேவி இரண்டாம் முறையாகக் சூல்கொண்ட போது-
பெரும் பித்து நிலையிலிருந்தாள்.
பிய்த்தெறியப்பட்ட ஆடைகளுக்கு நெருப்பூட்டி
பசியாற்றினாள்.
குளிரின் வாதைக்கு
நைந்த புகழ்மாலைகள் இன்னும் தீராமல் இருக்கின்றன.
சூல் கலைத்த எருக்கங் குச்சியில் ஒட்டியிருந்தது
தேவியின் எச்சப் பித்துநிலை.
நள்ளிரவில் குருதிக் கட்டிகள் படுக்கையெங்கும் சிதறி நனைய-
விழிச் சூட்டு நீரில்
படுக்கை அலசி
பெருமூச்சில் உலர்த்தியவள்-
விடிகாலையில் தன் அறைக்குள் போய் கால்கடுக்க நின்றுகொண்டாள்
இவ்வுலகிற்கு அருள் பாலிக்க!

#standwithmanushyaputhiran

https://m.facebook.com/story.php?story_fbid=2092248437760203&id=100009252006214

No comments:

Post a Comment