Saturday, May 27, 2017

ஆட்சிக்கட்டிலை பிடிக்க நாங்கள் கடந்து வந்த பாதை

முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் திடீர் போராளிகள் இதை படியுங்கள்...
ஆட்சிக்கட்டிலை பிடிக்க நாங்கள் கடந்து வந்த பாதை 👇👇👇

கட்சி ஆரம்பித்ததுமே இங்கே பலருக்கு முதலமைச்சர் கனவு வந்துவிடுகிறது. இன்றும் சிலருக்கு முதலமைச்சர் கனவு வந்த பிறகுதான் கட்சியே தொடங்க படுகிறது. மக்களை படித்தோம், மக்களுக்காக போராடினோம், மக்களுக்காக வாதாடினோம் என்பதே இல்லாமல் போய்விட்டது இன்று. ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதற்கும் ஆட்சியை பிடித்ததற்கும் இடைப்பட்ட 18 ஆண்டுகள் என்பது ஒவ்வொரு அரசியல்வாதியும் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். 18 ஆண்டு காலமும் பாரத யுத்தம் போல் நடத்தியதால் தான் அரியணையில் அண்ணாவால் உட்கார முடிந்தது.

➡️ 1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பபட்டது. அதற்கு மறுநாள் திருச்சி நீதிமன்றத்தில் அண்ணாவுக்கு ஆறுமாதம் சிறை என்று தீர்ப்பு வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அவரால் எழுதப்பட்டு 15 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகிவிட்ட #ஆரிய_மாயை என்ற புகழ் பெற்ற புத்தகம் வகுப்பு வேறுபாட்டை விதைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டது. புத்தகத்தை எழுதிய அண்ணாவுக்கும் அதனை வெளியிட்ட திருச்சி திராவிட பண்ணை #கண்ணப்பனுக்கும் 500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை கட்ட இவர்கள் இருவரும் மறுத்ததால் நான்கு மாதம் சிறை தணடனையை ஏற்றார்கள்.

➡️ இதை தொடர்ந்து திமுக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது, நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைகளை பற்றி கவலைப்படாமல் கூட்டங்கள் நடத்துங்கள் என்று திமுக தலைமை அறிவித்தது.

➡️ குன்றத்தூரில் ஒரு கூட்டம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும் மீறி பேசுவதற்கு சென்றார் என்.வி.நடராசன்.
குன்றத்தூருகுள் அவர் வருவதற்கு முன்னால் கைது செய்யப்பட்டார். கூட்டம் கேட்க காத்திருந்தவர்களை கலைத்தது காவல்துறை. கலையவில்லை அவர்கள், துப்பாக்கியை எடுத்து ஏழு ரவுண்ட் சுட்டார்கள், இரண்டு பேர் படுகாயம் அடைந்தார்கள். திமுக தொடக்கத்திற்கான முதல் இரத்தம் குன்றத்தூரில் தான் சிந்தப்பட்டது.

➡️ அண்ணா எழுதிய "இலட்சிய வரலாறு" ஆசைதம்பி தீட்டிய "காந்தியார் சாந்தியடைய" புலவர் செல்வராஜ் எழுதிய "கருஞ்சட்டை ஒழியவேண்டுமா? " உள்ளிட்ட புத்தகங்கள் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. இந்த தடையை கண்டித்து மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவருக்கும் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

➡️ பிரிவினை கேட்டவர்களை நான்சென்ஸ்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும், தனி நாடு கேட்கும் ஈ.வே.ரா நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பிரதமர் #நேரு சொன்னதை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது திமுக.

➡️டால்மியாபுரம் என்று மாற்றப்பட்ட ஊரின் பெயரை பழைய கல்லக்குடி என்றே மாற்ற வேண்டும் என்று திமுக கேட்டது.

➡️ ராஜாஜி கொண்டு வந்த "குலக்கல்வி" திட்டத்தையும் எதிர்த்தது. இந்த மூன்று போராட்டங்கள் தான் திராவிட முன்னேற்ற கழகத்தை மக்கள் முன் கொண்டு சேர்த்தது. இதை மும்முனை போராட்டம் என்றார் அண்ணா.

➡️ திமுக வின் அன்றைய தலைமை நிலையமான அறிவகத்துக்கே வந்து அண்ணா, நெடுஞ்செழியன், ஈவேகி சம்பத், மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து அழைத்து போனார் அன்றைய சென்னையின் துணை கமிஷனர் அருள். அது ராஜாஜியின் ஆட்சி.

➡️ தியாகராய நகரில் பசுல்லா சாலையில் இருத்த முதலமைச்சர் ராஜாஜி வீட்டின் முன்னால் தினமும் 30-40 திமுக தொண்டர்கள் மறியல் செய்து கைதானார்கள். இப்படி மறியல் செய்வதற்காகவே வெளியூரில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்தார்கள்.

➡️ டால்மியாபுரம் ரயில் தண்டவாளத்தில் கலைஞர் கருணாநிதி, முல்லை சக்தி, கஸ்தூரி, குமரவேல், குழந்தைவேல், ஆகிய ஐந்து பேர் தலைவைத்து படுத்தார்கள். காவலர்களின் சமாதானத்தை கருணாநிதி ஏற்கவில்லை. உங்கள் முடிவுதான் என்ன என்று கேட்ட காவலர்களிடம் "முடிவைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்று கலைஞர் சொல்ல இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

➡️இவர்கள் கைதானதும் காரைக்குடி இராமசுப்பையா தலைமையில் ஒரு அணியும், அவர்கள் கைதான் பிறகு கவிஞர் கண்ணதாசன் தலைமையில் இன்னொரு அணியும் மறியல் செய்தது. ஆத்திரம் கொண்ட போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த 10 பேர் குண்டுக்காயம் பட்டு இரண்டு பேர் இறந்தார்கள். தொடர்ந்து தூத்துக்குடியிலும் துப்பாக்கி சூடு, நாடு முழுக்கவே திமுகவினர் ரயிலை மறித்தார்கள். திமுகவுக்கு இனி அறிமுகம் தேவையில்லை என்று அந்த ரயில் மறியல் போராட்டங்கள் தான் உணர்த்தியது.

➡️ அண்ணாவோடு கைதான 5 பேருக்கும் 500 ருபாய் அபராதம் விதித்த சென்னை மாஜிஸ்டிரேட் M .A வெங்கட்ரமண நாயுடு, எதிரிகளுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை, பொதுமக்களில் பெரும் பகுதியினர் அவர்களிடம் பெருமதிப்பு கொண்டுள்ளனர் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கட்சி தொடங்கிய 4 வது ஆண்டிலேயே நீதிமன்ற தீர்ப்பில் செல்வாக்கான கட்சி என்று திமுக பெயரெடுக்க அவர்கள் நடத்திய போராட்டமே காரணமானது.

➡️1957 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் 16லட்சம் பேரின் நம்பிக்கையை பெற்றது திமுக.
➡️ அண்ணா , கருனாநிதி,அன்பழகன், சத்தியவானி முத்து, ஏ.வி.பி ஆசைத்தம்பி, கடம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இருசப்பன் , ஏ.கோவிந்த சாமி, பஉ சண்முகம், பி எஸ் சந்தானம், எம்.பி.சாரதி, எம் பி சுப்ரமணியம், எம்.செல்வராஜ், ஜி.நடராஜன் ஆகிய 15 பேர் சட்டமன்றத்திற்குள் போனார்கள்.

➡️ தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் திமுக முதன் முதலாக உள்ளே சென்று உட்கார்ந்த நாள் 1957 ஏப்ரல் 29. நாங்கள் இந்த சபைக்கு வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்கு நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம் என்று 1957 ஜூலை 4 ம் நாள் நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்தில் அண்ணா பேசினார்.!

➡️ சென்னை வரும் பிரதமர் நேருவிற்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று அறிவித்த அண்ணா அவர் வருவதற்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டார். கருனாநிதியும் கைதானார்.

➡️ ஆனால் சென்னை விமான நிலையத்திற்கு பிரதமர் வந்து இறங்கிய போது கருப்பு கொடி காட்டப்பட்டது.
சி.பி.சிற்றரசுவும் நாஞ்சில் மனோகரனும், நாகூர் ஹனீபாவும் தென்னரசுவும் இதனை சாதித்தார்கள்.

➡️ சென்னையில் பல்வேறு இடங்களில் போலீஸ் தடியடி நடத்தியது.
சிந்தாதிரி பேட்டையில் நடந்த துப்பாக்கி சூட்டில் தி மொய்தீன் பிச்சை , கோவிந்த ராவ் ஆகிய இருவர் கொல்லப்பட்டார்கள்.

➡️ 1960 களின் தொடக்கத்தில் இந்திதிணிப்பு எதிர்ப்பு போரை கையில் எடுத்தது திமுக.
ஈ.வி.கே.சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட போராட்டக்குழுவில் கருனாநிதி , அன்பழகன், மதியழகன், மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், எஸ்.ஏ.ராஜ மாணிக்கம், ஏ கோவிந்தசாமி, ப.உ சண்முகம், கண்ணதாசன் ஆகியோர் இடம் பெற்றார்கள்.

➡️ இந்தியை ஆட்சி மொழி ஆக்க வழி வகை செய்யும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 17 வது பிரிவை கொளுத்தும் போராட்டத்தை திமுக நடத்தியது.

➡️இதை தொடர்ந்து நடந்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம் திமுக வை தவிர்க்க இயலாத சக்தியாக மாற்றியது. அன்றைய காங்கிரஸ் அரசு போலீஸை வைத்து மிக கடுமையாக ஒடுக்கியது. அமைதியாக மறியல் செய்தவர்களையும் அடித்து நொறுக்கி விரட்டினார்கள்.
வலுக்கட்டாயமாக திமுக கொடிகள் பறிக்கப்பட்டன.கூட்டம் கூட்டமாக கைது செய்து கொண்டு போய் அடைத்தார்கள்.

➡️ 2000 பேர் மட்டுமே இருக்க முடிந்த சென்னை மத்திய சிறையில் இரு மடங்கி்ற்கு அதிகமானவர்கள் அடைக்கப்பட்டனர்.
சிறைகளுக்குள் அடி விழுந்தது..! தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டத்தில் மட்டும் 18 ஆயிரம் திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள்..
நாடு முழுக்க எல்லா நீதி மன்றங்களிலும் இந்த வழக்கு நடந்தது.

➡️ சிறையில் சென்னையை சேர்ந்த கோசு மணியும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொற்செழியனும் இறந்து போனார்கள்.

➡️ மீண்டும் இந்தி எதிர்ப்பு போர் தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னசாமியும் கோடம் பாக்கம் சிவ லிங்கமும் சத்திய மங்கலம் முத்துவும் திமுகவினர்தான். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் பெரம்பாலானவர்கள் திமுக மாணவர்கள்தான்.

➡️ போராட்டத்தை தூண்டியதாக கலைஞர் கருனாநிதியை முதலமைச்சர் பக்தவக்சலம் கைது செய்தார். மேலும் பாதுகாப்பு சட்டப்படி தமிழகத்தில் கைதான முதலாமவரும் கருனாநிதிதான்.

அன்றைய மாணவர்கள் அரசியல் தலைவர்களாக பரிணாமம் பெற ஆரம்பித்தார்கள்.

➡️திமுக.வே காங்கிரசுக்கு மாற்றுசக்தி என மக்களே நினைக்க தொடங்கிய போது,
காங்கிரஸ் திருந்தவே திருந்தாது என்று மக்கள் வெறுக்க துவங்கிய போது 1967 தேர்தல் வந்தது.

➡️ புதர் மண்டிக்கிடந்த அந்த விருகம் பாக்கத்தில் திமுக.வின் தேர்தல் மாநாட்டு இடத்தை பார்க்க வந்த கருணாநிதி பதினைந்தே நாளில் அதனை அரங்கமாக  மாற்றினார்.

➡️ காடாக இருந்த இந்த இடத்தை கருநாகங்கள் மலிந்த இந்த இடத்தை ,தொட்டால் கொட்டும் கருந்தேள்கள் குடியிருந்த இந்த இடத்தை இப்படிப்பட்ட எழில் மிக்க பூமியாக மாற்றினோம்..
காடாக இருக்கும் இந்த நாட்டை நாடாக மாற்றியமைக்க மாட்டோமா .? என்று கேட்டார் கருணாநிதி..

அண்ணா அயராத உழைப்பு அவரது நம்பிக்கை 10 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. திமுக ஆட்சி பொருப்பேற்றது. அப்படி நிறைவேற காரணம் அவர் நடத்திய போராட்டங்கள் மட்டுமே.

இது தான் திமுக... போராடுவது எங்களின் இரத்தத்தில் கலந்தது.. மண்டியிடுவதை விட மாண்டுவிடுவதே மேல் என்று நினைப்பவன் தான் திமுக..

No comments:

Post a Comment