Sunday, May 28, 2017

பிறையை ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தே தீர்மானிக்க வேண்டும

சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் ஆனால் சவூதி பிறைக்கும் நமது பிறைக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசம் வருகின்றதே அது எப்படி? உதாரணமாக சவூதியில் 8ந் தேதி பெருநாள் என்றால் நமக்கு 9 அல்லது 10ந் தேதியில் தான் பெருநாள் வருகிறது. அது எப்படி?

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் என்பது சூரியனுடைய கணக்கின் அடிப்படையில் ஏற்படுவதாகும். சூரியனின் உதயம் அஸ்தமனம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நேரத்தைத் தீர்மானிக்கிறோம். அதாவது சென்னையில் சூரியன் மறைந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கழித்து சவூதியில் சூரியன் மறையும். இது சூரியக் கணக்கு இதை பிறை தென்படுவதற்கு அளவு கோலாக எடுக்க முடியாது.

உதாரணமாக சவூதியில் 8ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் பிறை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் இரவு 9.00 மணி. அதாவது சவூதியில் பிறை பார்த்த நேரத்தை விட இரண்டரை மணி நேரத்தைக் கடந்திருப்போம். தலைப்பிறையை ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்க முடியாது. சவூதியில் பார்த்த பிறையை நாம் பார்க்க வேண்டுமானால் நமது நாட்டில் மறுநாள் (9ந் தேதி) மாலை 6.30 அல்லது ஏழு மணிக்குத் தான் பார்க்க முடியும்.

சூரிய உதயத்தை நாம் சவூதியை விட இரண்டரை மணி நேரம் முன்னதாக அடைகிறோம். அதே சமயத்தில் சந்திரன் தென்படும் நிலையை அவர்களை விட சுமார் 21.30 மணி நேரம் பிந்தி அடைகிறோம். இதனால் நமது நாட்டில் பிறை தென்படும் நாளில் சவூதியில் பிறை 2 ஆக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. (ஒரே நாளிலும் தெரியலாம்) எனவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது.

சவூதிக்கும் நமக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுவது இயற்கையானது தான். அல்லாஹ்வும் அதனால் தான் அம்மாதத்தை யார் அடைகிறாரோ என்று கூறுகின்றான். இதை ஏற்கனவே கூறியுள்ளோம்

இரண்டு நான் வித்தியாசம் வருகின்றதே இது எப்படி?

எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட சாத்தியமில்லை என்பது உண்மை தான். இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுவதற்கு ஒரு தரப்பில் ஏற்படும் தவறுகள் தான் காரணம்.

பொதுவாக அமாவாசை முடிந்து 20 மணி நேரம் ஆவதற்கு முன்னால் உலகில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படுவதற்கு வாய்ப்பில்லை. 20 மணி நேரத்திற்குப் பின் ஏதேனும் ஒரு நாட்டில் பிறை தெரிய ஆரம்பித்து எல்லா நாட்டிற்கும் தெரிவதற்கு சுமார் 20 மணி நேரம் ஆகும். அதாவது அமாவாசை முடிந்த பின்னர் பிறை தென்படுவதற்கு சுமார் 20 மணி நேரத்திலிருந்து நாற்பது மணி நேரம் வரை ஆகும். இந்த காலவரையறைக்கு முன்னதாக யாராவது பிறை பார்த்ததாகக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை இது வரை பிறை பார்த்ததாக அறிவித்த பல ஆண்டுகளில் பிறை தென்படுவதற்கே வாய்ப்பில்லாத நேரத்தில் பிறை பார்க்கப்பட்டதாகத் தான் அறிவித்துள்ளார்கள். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. லண்டனிலிருந்து வெளியாகும் என்ற ஈழ்ங்ள்ஸ்ரீங்ய்ற் என்ற பத்திரிகையும் மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய தேதி கவுன்சில் என்ற அமைப்பும் மற்றும் நமது நாட்டிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

சவூதி எந்த அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கின்றது என்பது நமக்குத் தெரியவில்லை

சந்திர சுழற்சியின் அடிப்படையில் சவூதிக்கும் நமக்கும் இடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. சவூதியின் தவறான நிலைபாட்டினாலும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதனால் தான் சவூதி அரசாங்கம் பிறை பார்த்ததாக அறிவித்த நாளுக்கும் நாம் பிறை பார்க்கும் நாளுக்கும் இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படுகின்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறை பார்த்து அல்லது குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து தகவல் வந்தால் அதை ஏற்று மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்குமிடையில் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம் இருந்து வந்தது.

புதிதாக சவூதியிலிருந்து நோன்பு, பொருநாள் ஆகியவற்றை இறக்குமதி செய்ததால் தான் தமிழ்நாட்டிற்குள்ளேயே இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்பட ஆரம்பித்தது.

உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்டது தான் சவூதி பெருநாள் கொள்கை. இதன் மூலம் இரண்டு நாட்களில் பெருநாளைச் சந்தித்துக் கொண்டிருந்த தமிழகத்தில் மூன்று நாட்கள் பெருநாள் ஏற்படுவதற்கு வழி வகுத்ததைத் தவிர வேறு எந்தச் சாதனையையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக உண்மையாகும்.

பிறையை ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தே தீர்மானிக்க வேண்டும். பிறை தென்படாத பகுதிகள் முந்தைய மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் கூறியுள்ளோம்.

மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்த இந்த எளிமையான நடைமுறையை ஒவ்வொரு பகுதியினரும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டால் உலகம் முழுவதும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று நம்புவோம். இன்ஷாஅல்லாஹ்.

#பிறை_ஆய்வு #நூலிலிருந்து

No comments:

Post a Comment