Sunday, May 21, 2017

தலைவர் ஒருவரை கொடூரமாக கொன்றுவிட்டு ஈழம் வாங்கிவிட முடியும் என நினைத்ததெல்லாம் பிரபாகரனுக்கு ஆறாவது அறிவு என ஏதாவது இருந்ததா

வீட்டின் வரவேற்பறையில் பிரபாகரன் சிறுத்தைக்குட்டியுடன் நிற்கும் சிலிர்க்க வைக்கும் பெரிய புகைப்படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்த காலம் அது.  ஆரம்பத்தில் இருந்தே டெலோ அமைப்புக்கு ஆதரவாக இருந்த திமுக, பிற எல்லா அமைப்புகளும் புலிகளால் அழிக்கப்பட்ட பிறகு வேறு வழியே இல்லாமல் புலிகள்தான் அப்போதைக்கு பலம் மிகுந்த ஈழப்போராட்ட இயக்கம் என்பதை ஏற்றுக்கொண்டு முழுமையாக pro-ltteஆக செயலாற்றத் துவங்கிய காலமும் அதுதான்.  அதாவது எம்.ஜி.ஆர் நோயுற்றப் பிறகு (ப்ரூக்ளினில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் ராஜீவ்வுக்கு ஆதரவாக, புலிகளைத் திட்டி இந்தியன் எக்ஸ்பிரஸில் பேட்டி கொடுத்ததெல்லாம் தனிக்கதை. இப்போது வேண்டாம்.)  இந்து, தினமணி உள்ளிட்ட ஏடுகள் எல்லாம் மத்திய அரசின் மார்பில் பாயவிட கலைஞர் வளர்க்கும் புலிக்குட்டி தான் பிரபாகரன் என சித்திரங்கள் வரைந்து கொண்டிருந்தன.  ஈழம் அடைந்தபிறகு அதே சூட்டில் தனித்தமிழகம் அடைவதுதான் கலைஞரின் நோக்கம் என்ற அளவுக்கு அகில இந்திய ஊடகங்கள் எழுதிக்குவித்துக் கொண்டிருந்ததும் அப்போதுதான்.  இலங்கையில் அட்டூழியங்கள் செய்து வந்த அமைதிப்படையை முதல்வர் கலைஞர் வரவேற்கப் போகாததும் அப்போதுதான். இந்தியாவின் வேறெந்த முதல்வரும் செய்யாத விஷயம் இது. தேசதுரோகம் என இந்தியாவே திட்டித் தீர்த்தது.  இப்படி ஒட்டுமொத்த சூழலும் திமுகவும், புலிகளும் ஒரே அணி என்பதை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டிக் கொண்டிருந்த சூழலில் தான் கலைஞர் ஆட்சி அநியாயமாக கலைக்கப்பட்டது. 

அதன் பின்பு வந்த அந்த அதிகாலை இன்னமும் மனதில் சிகப்பாக நினைவிருக்கிறது. சிறுவனாக இருந்த என்னை எழுப்பி அப்பா செய்தித்தாள்களைக் காண்பித்தார்.  ராஜீவ் காந்தி உடல் சிதறி துண்டு துண்டாக தரையில் கிடந்தார்.  இப்போது நினைத்துப்பார்த்தால் பிராய்லர் கோழிக்கடையின் ரத்தம் தோய்ந்த தரை போல இருந்தது ராஜீவ் செத்துக்கிடந்த இடம்.  கொன்றது விடுதலைப் புலிகள்.  எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த நேரத்தில் காங்கிரஸ்-அதிமுக ரவுடிகள் நம்மை தாக்கப் போகிறார்கள் என்பது பல திமுககாரர்களுக்கு அப்போது தெரியாது.

ராஜீவ் பழி ஒட்டுமொத்தமாக திமுக மீது போடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் சிந்திய ரத்தம் திமுகவினர் தலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டது. கொடிக்கம்பங்கள் சாய்க்கப்பட்டன.  உடைமைகள் சூறையாடப்பட்டன.  பிரபாகரனின் மூலம் ராஜீவ்வைக் கொன்றது கலைஞர்தான் என்ற எண்ணம் இந்தியா முழுக்க அதிதீவிரமாக பதிவுசெய்யப்பட்டது.  கலைஞர் மேல் வன்மத்தோடு அலைந்த நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களே கூட அப்போது திமுகவுக்கு ஆதரவாக வரவில்லை.  ஜெயலலிதாவும் அதை மிகச்சரியாக அறுவடை செய்து ராஜீவ் காந்தியின் ரத்தத்தின் மீது நடந்து சுலபமாக ஆட்சிக்கு வந்தார். வந்ததும் போராடி விடுதலைப்புலிகளுக்கு தடையும் வாங்கித்தந்தார். 1996 தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஜெஜெ டிவி மீண்டும் மீண்டும் ராஜீவ் உடலைக் காட்டி வாக்கு கேட்டது இதன் நீட்சிதான்.

அதன்பிறகு நடந்ததெல்லாம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். பேரறிவாளன் என்ற இளைஞன் அநியாயமாக கைது செய்யப்பட்டார்.  இப்போது அவர் விடிவுக்கு எவ்வளவோ ஒப்பாரி வைக்கிறோம்.  ஆனால் பிரபாகரன் நினைத்திருந்தால் அவரை ஒரே ஒரு அறிக்கையின் மூலம் காப்பாற்றி இருக்க முடியும்.  அவர் அப்பாவி என்பதை உலகுக்கு சொல்லியிருக்க முடியும்.  ஆனால் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் பிரபாகரனுக்கு அந்த மனம் வரவில்லை.  ஒத்துவராத யாரையும் கொலை செய்வதுதான் தனது போராட்டத்தின் முக்கிய அம்சம் என்ற கொள்கையில் வெறியோடு இருந்த பிரபாகரனுக்கு ராஜீவ்வோடு சேர்த்து தான் புதைத்தது ஈழக்கனவையும்தான் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.  அதை அவர் பெருமையாகக் கூட அப்போது எண்ணியிருக்கக் கூடும்.  அதனால்தான் பல்லாண்டுகள் கழித்து ராஜீவ் கொலையைப் பற்றிக் கேட்டபோதுகூட 'துன்பியல் சம்பவம்' என சொல்லிவிட்டு அவரால் எளிதாக கடந்துபோக முடிந்தது.

ராஜீவ் மீது அப்போது போஃபர்ஸ் ஊழல் புகார் இருந்தது.  அடுத்த தேர்தலில் அவர் தோற்க வாய்ப்பிருந்தது.  அடுத்த ஆட்சி ஈழ ஆதரவாக கூட அமைந்திருக்கலாம். தேவையே இல்லாமல் ராஜீவைக் கொன்று தன் மீதும், தன் மக்களின் மீதும் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார் பிரபாகரன்.  இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய தலைவர் ஒருவரை கொடூரமாக கொன்றுவிட்டு ஈழம் வாங்கிவிட முடியும் என நினைத்ததெல்லாம் பிரபாகரனுக்கு ஆறாவது அறிவு என ஏதாவது இருந்ததா என்பதையே சந்தேகிக்க வைக்கிறது.  ஆண்டன் பாலசிங்கம் ஆரம்பத்தில் இருந்தே இதை எதிர்த்ததாகவும் சொல்கிறார்கள். 

எது எப்படியோ, ராஜீவ்வுடன் அன்று அப்பாவிகள் எத்தனையோ பேர் இறந்தார்கள்.  அதில் தமிழர்கள் ஏனையோர்.  ராஜீவ்வைக் கொல்லும்போது உடன் சாகும் குழந்தைகளை உள்ளடக்கிய அப்பாவிகளைப் பற்றி பிரபாகரன் கவலைப்படவில்லை.  18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாகரனைக் கொல்லும்போது உடன் சாகும் அப்பாவிகளைப் பற்றி ராஜபக்சே கவலைப்படவில்லை.  (பிரபாகரனும் கவலைப்படவில்லை என்பது ஐநா அறிக்கை)

முதல் பத்தியில் பிரபாகரனின் பெரிய புகைப்படம் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா? அதை நாங்கள் ராஜீவ் கொல்லப்பட்டபோதும், திமுகவினர் தாக்கப்பட்டபோதும், கலைஞர் அநியாயமாக 1991ல் தண்டிக்கப்பட்டபோதும், ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தபோதும் கூட தூக்கிப்போடவில்லை, கழட்டித்தான் வைத்தோம்.  ஆனால் 2009ல் பிரபாகரன் செத்த பழியையும் திமுக மீது எழுதினார்களே படுபாவிகள், அப்போதுதான் தூக்கிப்போட்டோம். 

-டான் அசோக்.
21/05/2016

No comments:

Post a Comment