Thursday, May 11, 2017

NEET, percentage & percentile

தத்துவ சொல்லாடலில் Occam's razor என்றொரு பதம் இருக்கிறது. ஒரு வினை/ சம்பவம் குறித்து நமக்கு நான்கைந்து பார்வைகள்/அனுமானங்கள் இருக்கலாம். ஆனால் உண்மைக்கு மிக நெருக்கமான ஓர் அனுமானத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை மழித்து தள்ளிவிடுவதுதான் Occam's razor.

இதனை இப்படி புரிந்துகொள்ளலாம். தெருவிளக்கு இல்லாத சாலையில் நீங்கள் டூவீலரில் மிதவேகத்தில் போய்க் கொண்டிருக்கும் இரவில், ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் குலுங்கிக்கொண்டிருக்கிறது. எந்த விஷயத்திற்கு அதிக சாத்தியம் இருக்கிறது என்று யோசிக்கிறீர்கள். ஓர் ஆணும் பெண்ணும் உங்கள் மனதில் தோன்றுகிறார்கள். உங்கள் நண்பர் உடனே, அந்த பத்துக்கு பத்து அடி நிலத்தளவில்மட்டும் பூகம்பம் வந்துவிட்டதாக சொல்கிறான். ஈவு இரக்கமே பார்க்காமல் அவனை மழித்துப்போட்டுவிடுங்கள்.

கடந்த பத்து நாட்களாய்... ஆம் மூன்றாண்டு கால பிரச்சனையை கடந்த பத்து நாட்களாகதான் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம். ஜனவரி வந்தால் ஜல்லிக்கட்டு என்பது போல, நமக்கு ஏப்ரல் வந்தால்தான் நீட் பிரச்சனை நினைவிற்கு வருகிறது. தமிழக ஊரக பள்ளி மாணவர்கள்/தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் தரம் இருக்கிறதா இல்லையா, சட்டையை கிழித்ததும் உள்ளாடையை அகற்றசொன்னதும் எத்தனை பெரிய மனித உரிமை மீறல், தமிழக கேரள மாணவர்களை குறிவைத்த உளவியல் ரீதியிலான சர்ஜிகல் ஸ்ட்ரைக், சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட திணிப்பு, ஹிந்தி திணிப்பு, வட இந்தியாவில் வினாத்தாள் கசிவு இத்யாதி இத்யாதி என அத்தனை விவாதங்கள், காட்சி/அச்சு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் இது ரொம்பவே தாமதம், இந்த வருடத்திற்கான ரயிலை கிட்டத்தட்ட விட்டேவிட்டோம். தேர்வு நடந்தே முடிந்துவிட்டது. மற்ற விஷயங்களை விட்டுவிடுவோம். நீட் குறித்த பார்வைகளில் முக்கியமானது, தமிழகத்தில் மற்ற மாநிலத்தவரின் நுழைவு அதிகமாகும் என்பது. இது கட்டாயம் நடக்கும் என்று ஓர் அனுமானம். இல்லை, 85+15 என்ற விகித அடிப்படையில்தான் சேர்க்கை நடபெறும் என்று வாயில் வெற்றிலை பாக்கை குதக்கி வைத்துக்கொண்டு ஸ்ப்ரே அடிக்கும் பார்வை மற்றொன்று. இந்த விஷயத்திற்கான Occam's razor'ஐ பிரயோகிப்பதற்கு முன் அதற்கான தர்க்கங்களை விளக்கிவிடுகிறேன்.

முதலில் 85+15 என்ற விகிதம் காலங்காலமாக பின்பற்றப்பட்டுவருவதுதான். இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். அதாவது அவரவர் மாநிலத்தில் உள்ள மருத்துக்கல்லூரி சீட்களில் 85% அவரவர்களே பொதுத்தேர்வு/ நுழைவுத்தேர்வு வைத்து நிரப்பிக்கொள்ளவேண்டும். எஞ்சிய 15%க்கு தேசிய அளவில் நடத்தப்படும் PreMedical-PreDental தேர்வு வாயிலாக வரும் மாணவர்கள் சேரலாம். 15%ல் எந்தவொரு மாநில பேதமும் கிடையாது. தமிழக மாணவர்கள் அந்த தேர்வை எழுதி தேர்ச்சி கண்டால் அவர்களே அந்த 15% இடத்தையும் தரவரிசை அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம். அப்படியாக இதுவரை அந்த 15% வாயிலாக தமிழக மாணவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் சீட் எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

என்னுடைய இளநிலை வகுப்பில், அன்றைய சென்னை மருத்துவ கல்லூரி சீட் எண்ணிக்கை 165. அதில் 85% எனும் அடிப்படையில் நாங்கள் 140 பேர் இருந்தோம். எஞ்சிய 15%ல் ஒரு தமிழக மாணவர்கூட இல்லை. (அந்த 25'ல் ஒரு கேரளத்து பைங்கிளிக்குக்கூட இடமில்லாமல் 23 கிடாமாடுகள் சேர்ந்ததெல்லாம் வரலாற்று சோகம்). தமிழகத்தில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களெல்லாம் எங்கே போனார்கள். வெளிமாநிலத்திற்கெல்லாம் போகவில்லை. அதே 140 வழியாக எங்களோடு உள்ளே வந்தார்கள். அவர்களிடம் ஏன் PreMedical-PreDental தேர்வு மூலம் வரவில்லை என்றதற்கு அதற்கான பயிற்சி வகுப்புகள் தமிழகத்தில் அவ்வளவாக இல்லை என்றுதான் சொன்னார்கள். இதில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் படித்துவிட்டால் மட்டும் புளுத்திவிடலாம் என்று அளந்துவிடும் வெண்டைகள் கவனிக்க வேண்டியது, கோச்சிங் கிளாஸ் மிகமிக அவசியம் என்பது.

இப்போதும் 85+15 விகிதம்தான் பின்பற்றப்படப்போகிறது. 15% வழி தமிழகத்திற்குள் நுழையவே பயிற்சி இல்லாத காரணத்தால் சி.பி.எஸ்.சி மாணவர்கள் திணறும்போது அவர்கள் எங்கே பிற மாநில சீட்களை எடுக்கப்போகிறார்கள். மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் இந்த களத்திலேயே இல்லை. மீதி 85%க்கு வருவோம். பிற மாநிலத்தவரின் போட்டி இதில் இல்லாததால், நம் மாநிலத்தில் சி.பி.எஸ்.சி படித்தவர்கள் இதை உபயோகித்துக்கொள்வார்கள். அப்போது அவர்கள் எடுத்தது போக மீதியை, நம் பாடமுறையைப் பயின்றவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், அங்குதான் சூட்சமம் இருக்கிறது.

50 பெர்ஸெண்ட்டைலுக்கு குறைவாக எடுக்கும் மாணவர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள் என்று திட்டவட்டமாக நீட் விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. (பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு 40 பெர்ஸண்ட்டைல்)இதைப் புரிந்துகொள்ள பெர்ஸெண்ட்டைல்/பெர்ஸெண்ட்டேஜ் என்பவைப் பற்றிய சிறிய புரிதல் வேண்டும்.கணக்கில் நிபுணத்துவம் இல்லையெனினும் எனக்கு புரிந்த அளவில் இதனை விளக்குகிறேன். ஒரு பத்து பேர், 500 மதிப்பெண்களுக்கான தேர்வை எழுதுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 50 பெர்ஸெண்ட்டேஜிற்கு கம்மியாக மதிப்பெண் என்றால், 250 என்பது வரம்பு. 50 பெர்ஸென்ட்டைல் என்றால் தேர்வெழுதும் பத்து பேரில் ஆறாவது இடம் பிடிக்கும் மாணவன்தான் வரம்பு. பெர்ஸெண்ட்டைல் என்பது ஒப்பீட்டளவிலான நிலைப்பாடு.

நீட் தேர்வு முடிவுகளை இப்படி எடுத்துக்கொள்வோம். 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் பத்து மாணவர்கள் இப்படியாக மதிப்பெண் எடுக்கிறார்கள். 254, 258, 266, 274, 288, 321, 328, 365, 421, 458. இதில் 288 எடுத்தவனும் அவனுக்கு குறைவாக எடுத்தவனும் தகுதியிழப்பு செய்யப்பட்டுவிடுவார்கள். எஞ்சியவர்களுக்கு மட்டுமே கலந்தாய்வு. சி.பி.எஸ்.சி. பயின்று, கோச்சிங் வகுப்பிற்கும் போனவன் முதல் நான்கு இடங்களில் இருக்கிறான், சி.பி.எஸ்.சி பயின்று கோச்சிங் வகுப்பு போகாதவன் அடுத்த நான்கு இடங்களில் இருக்கிறான் (அதிலேயே மூன்று பேர் தகுதியிழக்கிறான்), மாநில பாடத்திட்டம் பயின்றவன் 9, 10 இடத்தில் இருக்கிறான். இவனுடைய மாநிலத்தில் இவனுக்கான சீட் இருந்தாலும், நீட் விதிகளின் படி இவன் தகுதியிழப்பு செய்யப்பட்டுவிட்டான். அப்போது 85% யாருக்கு? உன் மாநிலத்து மாணவனுக்கு தகுதியில்லை என்றால் அந்த சீட்டை தகுதியுடைய பிற மாநிலத்தவனுக்கு கொடு என்பார்கள். அவ்வளவுதான்.

கொடுத்துவிட்டு சகல துவாரங்களையும் பொத்திக்கொண்டு இருக்கவேண்டும். இந்த பெர்ஸென்ட்டைலை தாண்டி வந்த பிறகுதான் இட ஒதுக்கீடெல்லாம். உங்களுக்கு பொங்கலே கெடையாதேடா என்று டாட்டா காட்டிவிடுவார்கள். நமது ஸ்ப்ரே ஆசாமிகள் அப்போது டிவியில் உதயமாகி, தகுதியில்லாதவா டாக்டராகி எல்லாத்தையும் கொல பண்ணிடுவா என்று பதற்றமாவார்கள். தமிழக இடங்களை அபகரிக்க இதுதான் பிரதான வழி. இதைத் தவிர, மாநிலங்களுக்கு தரப்படும் 85% கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தனிவழக்கு வேறு பதிவாகியுள்ளது. ஹிந்தியில் தேர்வெழுதியவர்களுக்கு மிக சுலபமான வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும், அதுவும் முதல் நாளே கசிந்துவிட்டதாகவும் உலா வரும் வசந்திகளையும் ஓர கண்ணால் பார்க்கவேண்டியுள்ளது. அது உண்மையாயின் இந்த பெர்செண்ட்டைல் அடிப்படையிலான தகுதியிழப்பில் தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய அடி காத்திருக்கிறது. எனவே நாம் வேண்டாம் வேண்டாம் எனும்போது நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இந்த தேர்வின் ஆகப்பெரிய நோக்கம் நம் மாநில மருத்துக்கல்லூரி சீட்கள். அப்படியெல்லாம் இல்லையென்று எவனாவது கல்வியாளன் என்று பேசவந்தால், razor எல்லாம் உதவாது, ஒரு கோடரியை எடுத்து நடுமண்டையில் போடவேண்டும்.

இந்த வருடம் நம் 85% விழுக்காடு உரிமையை எப்படி மீட்பதென்றால் அதற்கு சில வழிகள் இருக்கிறது, 
  1. பெர்ஸென்ட்டைல் அடிப்படையில் தகுதியிழப்பு செய்யக்கூடாது என்று போர்க்கொடி தூக்கவேண்டும். 
  2. அல்லது தமிழக மாணவர்களின் பட்டியலை மட்டும் தனியே பிரித்து, அதில் பெர்செண்ட்டைல் முறையை பிரயோகிக்கவேண்டும். 
  3. தேசிய அளவிலான ஒப்பீட்டில் நம் மாணவர்களை சேர்த்து தகுதியிழப்பு செய்யக்கூடாது. 
  4. தனி தரவரிசை பட்டியலை தமிழக கலந்தாய்வின் முன் உருவாக்கி முழு 85%யும் நாமே ஆக்கிரமிக்க வேண்டும். இந்த ஆண்டிற்கான தற்காலிக தீர்வு. 
  5. வரும் ஆண்டிற்கு நீட் தேர்விற்கு நிச்சயம் உடன்படக்கூடாது. 
  6. அதற்கு அடுத்த ஏப்ரல் வரை காத்திருக்காமல், வரும் ஒரு வருடம் முழுக்க அதற்கான பணிகளில் இறங்கவேண்டும். 
இதையெல்லாம் யார் முன்னின்று செய்ய வேண்டும் என்று யோசித்தால், மோடியின் சாதனை மலரை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடியார்தான் செய்யவேண்டும். தயவுசெய்து இந்த கடைசி வரிக்காக ஹஹா ரியாக்ஷனைப் போட்டுத்தொலைக்காதீர்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=1430015697042356&id=100001018175521

-------------------------

You are in a class of 1000 students and you score 90/100...
Percentage is absolute... Your percentage will be 90% (simple arithmetic which I assume you know!) Here other's performance doesn't affect your percentage.
Percentile is relative.. Here it is based on other's performance.. If you have scored 500th rank here, so basically 499 people are ahead of you and 500 people are behind you. So your percentile will be
(Number of people behind you)*100/ (Total)
= 500*100/1000 = 50 %ile
If you had topped, then your percentile will be 100, since everyone is behind you!

No comments:

Post a Comment