Thursday, May 4, 2017

கலைஞரிடம் ஐம்பது கேள்விகள்

கலைஞரிடம் ஐம்பது கேள்விகள் என்ற தலைப்பில் எனது சட்டமன்ற பொன்விழாவின் போது ராணி வார இதழில் வெளியான கேள்வி – பதில்கள்.

1.கேள்வி : சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?

கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.

2.கேள்வி : பேசிய முதல் பேச்சு?

கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.

3.கேள்வி : அதிக நேரம் பேசிய நாள்?

கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.

4.கேள்வி : உங்களுக்கு பிடித்த சட்டமன்றப் பேச்சு?

கலைஞர் : அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்: எதிர்கட்சித் தலைவராக நானிருந்த போது, “பூம்புகார்” நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த “பல்கேரியா பால்டிகா” என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு.

5.கேள்வி : உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?

கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்.

6.கேள்வி : பிடித்த சபாநாயகர்?

கலைஞர் : ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-அண்மைக் காலத்தில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

7.கேள்வி : உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில்?

கலைஞர் : 24.03.1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்சர்மா அவர்களால் “தபால் தலைகளுக்கு என்று வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா?” என்று நான் கேட்டதற்கு பெரியவர் மாண்புமிகு பக்தவத்சலனார் அவர்கள் எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்” என்று கூறிய பதில் தான் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில் என்று சொல்வேன். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றையக் குடியரசுத் தலைவர் மேதகு ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என்று தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்று!

8. கேள்வி : நீங்கள் சொன்ன மறக்க முடியாத பதில்?

கலைஞர் : திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்ற கொலைக்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது குறித்தும், திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் களவாடப்பட்டதைக் கண்டித்தும் நான் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது திருச்செந்தூர் நடைபயணம் சென்றேன். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே நான் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்று நான் கூறியதும் அவை சிரிப்பிலே ஆழ்ந்தது. நான் சொன்ன மறக்க முடியாத பதில்களில் இதுவும் ஒன்று.

9.கேள்வி : சட்டமன்றத்தில் சிறப்பான முதல்வர் யார்?

கலைஞர் : பெருந்தலைவர் காமராஜர், அவையிலே பேசாமலேயே அமர்ந்திருந்து, ஆனால் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தியவர்.

10.கேள்வி:சட்டமன்றப் பேச்சுக்கும்- பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?

கலைஞர் : மனக்கணக்குக்கும்-வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.

11. கேள்வி : 1957இல் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது மனைவி, குழந்தைகளைச் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றதுண்டா?

கலைஞர் : அழைத்துச் சென்றதில்லை. அவர்களாகவே வந்து நான் உரையாற்றும் நாட்களில் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கண்டதுண்டு.

12. கேள்வி : சட்ட மன்றத்தில் உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு யாரால்?

கலைஞர் : எனது முதல் கன்னிப் பேச்சில், எனது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, “கையேரு வாரம், மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினை குறித்து நான் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதிச் செயலாளர் மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். சட்டமன்றத்தில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அது தான்.

13. கேள்வி : மறக்கமுடியாத சம்பவம்?

கலைஞர் : தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்களே, “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டுமென்று கூறிவிட்டு அவ்வாறே முழக்கமிட்ட அந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாத சம்பவமாகும்.

14. கேள்வி : வருத்தப்பட வைத்த சம்பவம்?

கலைஞர் : 1976ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் பின்னர் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து, மீண்டும் 1989இல் பதவிப் பொறுப்புக்கு வந்து முதல் நிதிநிலை அறிக்கையை நான் படிக்க முனைந்தபோது, ஏற்கனவே அவர்கள் வீட்டிலே நடத்திய ஒத்திகைப்படி என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க முயற்சித்து, முகத்திலும் கட்சிக்காரர்களை விட்டுக் குத்துமாறு ஏவிவிட்டு, அதன் பின்னர், தன்னை ஆளுங்கட்சிக்காரர்கள் தாக்கிவிட்டதாகத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, செய்தியாளர்கள் முன் வதந்திகளைப் பரப்பிய நிகழ்ச்சிதான் என்னை வருத்தமடையச் செய்த சம்பவமாகும்.

15. கேள்வி : மகிழ்ச்சிக்குரிய சம்பவம்?

கலைஞர் : நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?

16.கேள்வி : கோபப்படவைத்த சம்பவம்?

கலைஞர்:எதிர்க்கட்சித் தலைவராக நான் இருந்தபோது, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் என்னைப் பற்றி ஒரு குற்றச்சாட்டினைக் கூறினார். தேனியில் நான் இடைத் தேர்தலுக்காகச் சென்ற போது, முத்துத்தேவன்பட்டி என்ற ஊரில் தங்கியிருந்த இடத்தை என் மகன் மு.க.அழகிரி விலைக்கு வாங்கியதாகக் கூறி, அதனை மறுக்கத் தயாரா என்று சவால் விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அமைச்சராக இருந்த துரைமுருகன் எழுந்து அதை மறுத்துக் கூறினார். எனினும் அந்த அமைச்சர் எழுந்து பிடிவாதமாக அந்தக் குற்றச்சாட்டை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அமைதியாக இருப்பதிலிருந்தே குற்றச்சாட்டு உண்மையாகிறது என்று கூறிய போது தான் நான் எழுந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். இல்லாவிட்டால் அவர் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமென்று கூறினேன். அதற்குப் பிறகும் மறுநாள் அவர் போலியாக ஒரு பத்திரமே தயாரித்து, அதிலே போலியாக மு.க. அழகிரியின் iகாயழுத்தையும் போட்டு, பேரவைத் தலைவரிடம் அதைக் கொண்டு வந்து நிரூபிக்க முயன்றபோது, நான் உண்மையில் கோபப்பட்டேன். பேரவைத் தலைவராக இருந்த திரு.கே.ராஜாராம் அவையிலேயே வந்து அந்த அமைச்சர் செய்தது பெருந்தவறு என்பதை அறிவித்தார். ஆனால், அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்தப் பிரச்சினையை நீட்டிக்காமல் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டேன்.

17.கேள்வி:என்னுடைய வளர்ச்சிக்குச் சட்ட மன்றத்தில் இந்த உறுப்பினர் உதவியாக இருந்தார் என்று யாரையாவது சொல்வீர்களா?

கலைஞர்:குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.

18. கேள்வி:உங்களைத் தொடர்ந்து பாராட்டும் உறுப்பினர் யார்?

கலைஞர்:ஒருவரல்ல, பலர்.

19. கேள்வி:உங்களை கிண்டல் செய்யும் உறுப்பினர் யார்?

கலைஞர்:என்னை யாரும் கிண்டல் செய்தது கிடையாது, முடியாது.

20. கேள்வி:இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?

கலைஞர்:”சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்”என்ற குறள் வழி நடக்கின்ற எனக்கு இந்த நிலை ஏற்பட்டதில்லை.

21. கேள்வி: ‘இந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய்விட்டோமே!’ என்று நினைத்த சம்பவம் உண்டா?

கலைஞர்:தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருக்கின்ற நேரத்தில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நான் இல்லாத நேரத்தில் ஏதாவது பிரச் சினைகள் ஏற்பட்டுவிட்டதாகப் பின்னர் அறியும்போது, அந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய் விட்டோமே என்று நான் நினைத்த சம்பவங்கள் ஒன்றிரண்டு உண்டு.

22. கேள்வி: “இந்த நேரத்தில் இல்லாமல் இருந் திருக்கலாமே!” என்று நினைக்கும் சம்பவம்?

கலைஞர் : அளவுக்கு மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னைப் புகழ்ந்து பேசும்போது நானே ஒருமுறை சபாநாயகர் பழனிவேல்ராஜன் அவர்களிடம், “இந்தப் புகழுரைகளை நிறுத்தச் சொல்கிறீர்களா? அல்லது நான் வெளியே போகட்டுமா?” என்று கோரியதுதான் என் நினைவுக்கு வருகிறது.

23. கேள்வி: சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது என்ன நினைப்பீர்கள்?

கலைஞர் : கற்றுக்கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.

24. கேள்வி : முதன்முதலாகச் சென்றபோது உட்கார்ந்த இருக்கை எண் நினைவிருக்கிறதா?

கலைஞர் : 170.

25. கேள்வி : சட்டமன்றத்தில் இவர்கள் எப்படி?

கலைஞர் : 1. காமராஜர்-எளிமையானவர்.2.பக்தவச்சலம்-நிர்வாகத்தில் திறமையானவர்.3.அண்ணா-எதிர்க்கட்சியினரையும், உரையினால் ஈர்ப்பவர்.4.எம்.ஜி.ஆர்.-நாகரிகமாகப் பழகக் கூடியவர்.5.ஜெயலலிதா-பிடிவாத குணத்தினர்.

26. கேள்வி : திரு.கருத்திருமன் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நீங்களும், அவரும் அடிக்கடி அவையிலே விவாதத்தில் ஈடுபடுவதுண்டு. அதில் நினைவில் உள்ள ஒன்றைக் கூறுங்களேன்?

கலைஞர் : ஒருமுறை திரு.கருத்திருமன் அவர்கள், “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு என்றீர்கள், இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “சுடுகாட்டில் இல்லை, உங்களோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்!” என்று கூறினேன். அவையினரோடு சேர்ந்து அவரும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.

27. கேள்வி : இந்த அய்ம்பதாண்டுகளில் உங்களுக்குப் பிடித்தமான 5 சட்டமன்றப் பேச்சாளர்கள் யார்?

கலைஞர் : 1.பேராசிரியர் அன்பழகனார்2. கே.டி.கே.தங்கமணி3. குமரி அனந்தன்4. அப்துல் லத்தீப்5. திருமதி.பாப்பா உமாநாத்

28. கேள்வி : நீங்கள் திக்குமுக்காடிய சம்பவம் ஏதாவது உண்டா?

கலைஞர்: அப்படி எதுவும் இல்லை.

29. கேள்வி : எதிராளியைத் திணற வைத்த ஏதாவது ஒரு சம்பவம்?

கலைஞர் : சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே அவர்கள் தி.மு.கழக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, “இது மூன்றாம் தர சர்க்கார்” என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்திவிட்டு, “டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று குறிப்பிட்டேன்.

30. கேள்வி : மறக்க முடியாத சட்டமன்றக் கலவரக் காட்சி?

கலைஞர் : எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, “ஜெயலலிதா” அணியினரும், “ஜானகி” அணியினரும் பேரவைக்குள் மோதிக்கொண்டு காவல் துறையினரும் உள்ளே புகுந்து மன்ற உறுப்பினர்கள் ஒலிபெருக்கியைப் பிடுங்கிக்கொண்டு சண்டையிட்ட காட்சி மறக்க முடியாத ஒன்றாகும்.

31. கேள்வி : சட்ட மன்றப் பேச்சில் எது இருக்கக்கூடாது?

கலைஞர் : மீண்டும் ஒரு நாள் இருவரும் சந்திக்க நேரிடும் போது பர°பரம் பேசிக்கொள்ள முடியாத அளவிற்கு விரோதம் காட்டிக்கொள்ளும் உணர்வு இருக்கக்கூடாது.

32. கேள்வி : விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்கவேண்டும்?

கலைஞர் : விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும்.வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும்.விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

33. கேள்வி:நீங்கள் கொண்டு வந்ததில் மகிழத்தக்க சட்டம்?

கலைஞர் : பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை-குடியிருப்புமனைச் சட்டம்-நில உச்ச வரம்புச் சட்டம்-அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆணை.

34. கேள்வி : சட்டமன்றப் பதவியை 1984, 1991 இரண்டு முறை ராஜினாமா செய்தது ஏன்?

கலைஞர் : 1984ஆம் ஆண்டு நான் இலங்கைத் தமிழர்களுக்காகச் சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்தேன். 1991இல் நான் ஒருவன் மட்டுமே வெற்றிபெற்று மற்ற எல்லா இடங்களிலும் கழகம் தோற்றதால், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்.

35.கேள்வி:நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?

கலைஞர் : நினைவாற்றலுடன் கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப் பினருக்கும் முக்கியம்.

36. கேள்வி : சட்டமன்றத்தை அரசியல் விவாத மேடையாக்கலாமா?

கலைஞர் : விவாத மேடையாக ஆக்கலாம்-விரோத மேடையாகத்தான் ஆக்கக்கூடாது.

37. கேள்வி : 2001-2006 சட்டமன்றப் பணிகளில் உங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளாதது ஏன்?

கலைஞர் : யாரையும் மதிக்க விரும்பாத அன்றைய ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள்.

38. கேள்வி : நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று நினைத்ததே இல்லையா?

கலைஞர் : தொடக்கம் முதலே தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் என்ற அளவில் என்னை அய்க்கியப்படுத்திக்கொண்டு விட்டேன்.

39. கேள்வி : நீங்கள் கொண்டு வந்ததிலேயே விருப்பமான மக்கள் நலத்திட்டம்-முதன்மை இடத்தைப் பிடிப்பது எது?

கலைஞர் : சாதிமத பேதமின்றி ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். அதே நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சமத்துவபுரத் திட்டம்.

40. கேள்வி : சட்டமன்ற மரபு மீறப்பட்ட செயல் என்று எந்த நிகழ்வைச் சொல்வீர்கள்?

கலைஞர் : முரசொலிப் பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டிலே ஏற்றிக் கண்டனம் தெரிவித்த செயல்.

41. கேள்வி : சட்டமன்ற நிகழ்வுகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று எதைச் சொல்வீர்கள்?

கலைஞர் : சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் வரக்கூடாது என்று முயற்சிசெய்து, அது நடக்காத நேரத்தில், மேலவையையே தமிழ் நாட்டில் என் ஒருவனுக்காகக் கலைத்த செயல் எனக்கு துரோகம் செய்வதாக நினைத்துச் செய்யப்பட்ட காரியமாகும்.

42. கேள்வி : உங்களைக் கவர்ந்த பெண் சட்ட மன்ற உறுப்பினர் யார்?

கலைஞர் : திருமதி.ஜோதியம்மாள்.

43. காமெடியாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர் யார்?

கலைஞர் : ஈரோடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திரு.தெட்சணாமூர்த்திக் கவுண்டர்.

44. கேள்வி : கேள்வி கேட்பது எளிதா? பதில் சொல்வது எளிதா?

கலைஞர் : பதில் சொல்லமுடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.

45. பொன்னான நாள் என்று எதைச் சொல்வீர்கள்?

கலைஞர் : மண்டல் கமிஷன் பரிந்துரையையொட்டி, மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட நாளைப் பொன்னான நாள் என்று கூறலாம்.

46. கேள்வி : தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டிஸ்மிஸ் ஆனபோது என்ன நினைத்தீர்கள்?

கலைஞர் : பதவியைத் தோளில் போட்டுக் கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக்கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.

47. கேள்வி : உங்கள் பேச்சைக் கேட்க அஞ்சுகம் அம்மையார் சட்டமன்றம் வந்திருக்கிறாரா?

கலைஞர் : வந்ததில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் சட்டமன்றத்திற்குச் சென்று வந்தவுடன், சட்ட மன்றத்தில் அன்று நடந்ததைப் பற்றி என்னைக் கேட்கத் தவறுவதில்லை.

48. கேள்வி : அஞ்சுகத் தாய் உங்கள் சட்டமன்றப் பேச்சை பத்திரிக்கையில் படித்துவிட்டுப் பாராட்டியது உண்டா?

கலைஞர் : அவர் உயிரோடு இருந்தவரை என்னுடைய பேச்சு ஒவ்வொன்றையும் பாராட்டியிருக்கிறார்.

49.கேள்வி : அண்ணா அவர்கள் பாராட்டிய சட்ட மன்றப் பேச்சு எது?

கலைஞர் : பெரும்பாலும் சட்டமன்றத்தில் நான் பேசிய அத்தனை பேச்சுகளையுமே அண்ணா அவர்கள் பாராட்டியிருக்கிறார்.

50. கேள்வி : உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர் களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப் படுத்துங்களேன்?

கலைஞர் : மனதிலே இடம் பெற்ற பிறகு தானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.

No comments:

Post a Comment