Vijay baskervijay
Via Facebook
2017-09-01
2003 ஆம் வருடம்
முருகேசனும் கண்ணகியும் ரகசியமாக திருமணம் செய்து ஜாதி வெறியர்களுக்கு பயந்து ஊரை விட்டு போய்விடுகிறார்கள்.
காரணம்
முருகேசன் ஒரு தலித்
கண்ணகி வன்னியர்
முருகேசன் வயது 25. அவர் ஒரு Engineer ஆக வேலை பார்த்திருக்கிறார்.
கண்ணகி பி.காம் படித்திருக்கிறார்.
அவர்கள் ஊரை விட்டுச் சென்றதும் கண்ணகியின் உறவினர்கள் ஊரெல்லாம் அவர்களை தேடியிருக்கிறார்கள்.
கண்ணகியின் அண்ணன் முருகேசனின் மாமாவை மிரட்டி , முருகேசன் இருக்குமிடம் அறிந்து முருகேசனை தூக்கி வந்திருக்கின்றனர். வந்ததும் முருகேசனை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர்.
வலி தாங்க முடியாமல் முருகேசன் தன் மனைவியான கண்ணகி இருக்குமிடத்தை சொல்கிறார்.
உடனே 12 பேர் அராஜகமாக கண்ணகியை தூக்கி வந்திருக்கின்றனர். வந்து இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்திருக்கின்றனர்.
முருகேசனுக்கும் கண்ணகிக்கும் பலவந்தமாக விஷம் கொடுத்திருக்கின்றனர்.
விஷம் கொடுப்பட்ட முருகேசனும் கண்ணகியும் பிணமாகிப் போய்விட அவர்கள் உடலை தனிதனியாக ஊருக்குள்ளே எரித்திருக்கின்றனர்.
விடிவதற்கும் இதையெல்லாம் செய்து முடித்துவிட்டார்கள். இத்தனையும் நடக்கும் போது முருகேசனின் உறவினர்கள் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று முருகேசனையும் கண்ணகியையும் காப்பாற்றுமாறு கெஞ்சி இருக்கின்றனர்.
போலீஸ் கண்டுகொள்ளவில்லை.
அதன் பிறகு விடுதலைச் சிறுத்தை கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகு போலீஸ் கேஸ் ஃபைல் செய்திருக்கிறது.
அதுவும் எப்படி நான்கு வன்னியர்கள், நான்கு தலித்கள் என்று சரிக்கு சமமாக அரஸ்ட் செய்திருகிறது.
வன்னியரான கண்ணகிக்கு அவர் சொந்தங்கள் விஷம் கொடுத்ததாகவும்.
தலித்தான முருகேசனுக்கு அவருடைய அப்பாவும் மாமாவுமே விஷம் கொடுத்ததாக போலிஸ் கேஸ் ஃபைல் செய்திருக்கிறது.
இதை எதிர்த்து முருகேசனின் மாமாவும் அப்பாவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்ல, சி.பி.ஐ விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
1.முருகேசன் ஒரு Engineer கண்ணகி பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டிருந்தால் இப்போது வீடு வசதி என்றிருந்து அவர்கள் குழந்தை பத்தாம்வகுப்பு தேர்வு எழுதி முடித்திருக்கும். இங்கே முருகேசன் பொருளாதாரத்தில் உயர்வாக இருந்தாலும் ஜாதி வெறியால் அவரை கண்ணகி வீட்டாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைவரையும் வசதிப்படுத்திவிட்டால், பொருளாதார சமநிலை அடைய வைத்தால் ஜாதிவெறி அகன்று விடும் என்ற கூற்று மிகத்தவறான ஒன்று என்பதை இங்கே கண்டுகொள்ளலாம்.
2. கண்ணகியின் போட்டோவைப் பார்த்தால் ரெட்டை ஜடை போட்டு மென்மையாக அழகாகத் தெரிகிறார். நிச்சயம் கண்ணகியின் அப்பாவும் அண்ணனுக்கும் கண்ணகியின் மேல் பாசமாக இருந்திருப்பார்கள். கண்ணகிக்கு பிடித்தவற்றை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு தலித்தை திருமணம் செய்து கொண்டாள் மகள் என்றதும் விஷம் கொடுக்கச் சொல்கிறது. ஜாதி வெறி என்பது பாசம் பந்தம் அனைத்தையும் கடந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
3. திருமணம் ஆகிக் கொண்டிருக்கும் போது கண்ணகி வீட்டார் பிடித்தால் இருவரையும் கொன்றிருக்க மாட்டார்கள். ஆனால் முருகேசன் கண்ணகியை திருமணம் செய்து சில நாட்கள் ஆகிவிட்டன. அவர்களுக்குள் உறவு நடந்திருக்கும் என்று கண்ணகி வீட்டார் நினைக்கிறார்கள். அந்த தூய்மை கேடலை (
அவர்களைப் பொறுத்தவரை????) அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவியவில்லை. விஷம் கொடுத்து கொன்று விடுவார்கள்.
4. அதை 300 பேர் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். எது அவர்களை அமைதியாக வேடிக்கை பார்க்க வைத்தது
- தலித் எப்படி வன்னியரை திருமணம் செய்யலாம் என்ற கருத்து அவர்கள் மனதில் படிந்தமையால்.
- அவள் கெட்டுப் போய்விட்டாள். இனி யார் அவளை திருமணம் செய்வார்கள் என்ற பிற்போக்கு எண்ணத்தால்.
- ஆமா அப்பாவும் அண்ணனும் எவ்வளவு பாசமாக வளத்தாங்க. இவ இப்படி பண்ணினா கொல்லத்தான் செய்வாங்க என்ற் எண்ணம் இருந்ததால்.
அந்த அமைதியின் பின்னால் இருக்கும் அருவருப்பான பொதுப்புத்தி மனநிலையை இங்கே காணலாம்.
5.முருகேசன் உறவினர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு சம்பவம் நடக்கும் போதே போய் கெஞ்சியிருக்கிறார்கள்.
போலீஸ் கண்டுகொள்ளவில்லை. போலீஸின் கண்டுகொள்ளாமைக்கு பின்னால் இருக்கும் மனநிலை என்ன?
- வன்னியர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால் ஊரில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களை பகைத்துக் கொள்ள முடியாது என்ற பயமாய் இருக்கலாம்.
- தலித்கள் மீதுள்ள வெறுப்பும் எரிச்சலும் காரணமாய் இருக்கலாம்.
- துறை ரீதியாக கூட யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அரசாங்கமே ஆதிக்க சாதியினர் அட்டகாசத்தை கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறார்கள்.
- தமிழ்நாட்டு மக்கள் கூட இதற்காக ஒன்று திரண்டு எந்த போராட்டத்தையும் செய்துவிட மாட்டார்கள் என்று நம்புகிறார்கள்.
6. குற்றம் சாட்டப்பட்டவர்கள் லிஸ்டில் முருகேசனுக்கு விஷம் கொடுத்ததாக முருகேசனின் அப்பாவையும் மாமாவையுமே சேர்த்திருக்கிறார்கள் பாருங்கள். இந்த இடத்தில் வாசிக்கும் நீங்கள் நின்று கொள்ளுங்கள். யோசியுங்கள். உண்மையிலேயே முருகேசனுக்கு அவர் வீட்டார் விஷம் கொடுத்திருப்பார்களா? அப்படி கொடுத்திருந்தாலும் அது ஊராரின் கொலை மிரட்டல் காரணமாகவா? அல்லது வேறு ஏதாவது மிரட்டலா?
கேட்க யாருமே இல்லை என்ற நிலை உள்ளவர்களைத்தான் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்த தோன்றும் அப்படித்தானே.
6. தலித் என்றால் போலீஸ், அரசியல்வாதிகள். ஊர்மக்கள், ஊடகங்கள் என்று அனைவரும் மிக மோசமாக நினைக்கிறார்கள் பாருங்கள்.
7 - தலித் என்றாலே குறைந்தவர்கள் என்ற மனநிலை
- தலித்களோடு ஒன்றிணைவதே அவமானம் என்ற சமூக மனநிலை.
- தலித்களோடு சேர்வதற்கு விஷம் குடிக்க வைக்கும் சமூக மனநிலை.
- தலித் கொடுக்கும் குற்றச்சாட்டுகளை எடுக்க மறுக்கும் மனநிலை
- கம்ப்ளைட் கொடுக்க வந்தவர்கள் மேலேயே குற்றம் சாட்டும் தலித் எதிர்ப்பு, தலிர் அலெட்சிய மனநிலை
- தலித்களுக்கு என்று பொது அரசியல் கட்சிகள் களத்தில் குதிக்காத காரணத்தின் பின்னால் உள்ள மனநிலை.
- மக்கள் மனதில் இவையெல்லாம் ஒரு பாதிப்பை உண்டு பண்ணாத மனநிலை. இது பற்றியெல்லாம் யோசியுங்கள்.
8. இந்த ஆதிக்க சாதி மக்களின் ஜாதி வெறியை எப்படி மாற்றலாம் என்று யோசியுங்கள். ஒரு வன்னிய ஜாதியைச் சேர்ந்த பையன் சென்னைக்கு வந்து டாக்டர் பட்டம் பெற்றாலும் கூட ஊருக்கு கோவில் திருவிழாவுக்கு போகும் போது அவன் மனதில் ஜாதி உணர்வு ஏற்றபடுகிறது என்பது பற்றி யோசியுங்கள்.
9.ஆதிக்க ஜாதியனருக்கு எப்படி அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என்று அனைவரும் வளைந்து கொடுக்கிறார்கள் என்று கவனியுங்கள். அவர்கள் அனைவரும் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு இயற்கையான மனித நேயம் உண்டுதானே. அப்படியானால் எதனால், எது அந்த மனித நேயத்தை மீறி ஜாதி வெறியர்களாகிறார்கள் என்று யோசியுங்கள்.
10. உங்கள் வீட்டில் இந்த ஜாதி வெறி எப்படியெல்லாம் மறைமுகமாக தலை விரித்திருக்கிறது என்பது பற்றி யோசியுங்கள். கவனியுங்கள்.
தலித் அல்லாதவர்கள் தலித் Empathy அதாவது ஒரு தலித் இடத்தில் இருந்து அவர் வலியை உணர்வது மிக மிக முக்கியம்.
நீங்கள் முருகேசனாய் இருந்து பாருங்கள்.
முருகேசனின் மாமாவாய் இருந்து பாருங்கள்.
முருகேசனின் அப்பாவாய் இருந்து பாருங்கள்.
முருகேசனின் வாயருகேவும் கண்ணகியின் வாயருகேவும் விஷத்தை கொண்டு போன அந்த ஆதிக்க ஜாதி கைகளை நினைத்துப் பாருங்கள்.
அந்த கைகளின் பின்னால் உள்ள ஜாதிவெறியை உணருங்கள்.
அதே ஜாதி வெறி மிருகம் வேறு வடிவத்தில் உங்கள் மனதுக்குள்ளே இருப்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.
ஒத்துக் கொண்டு அதை எப்படி மாற்ற முடியும். ஒழிக்க முடியும் என்றெல்லாம் யோசியுங்கள்.
ஒரு தலித் அதிகாரமிக்க அரசு மட்டுமே இதை ஒழிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதன்படியே உங்கள் அரசியல் பார்வையை அமைத்துக் கொள்ளுங்கள்.
OBC மற்றும் FC யினர் ”தலித் அதிகார அரசை”
கொள்கை அளவில் முதலில் ஆதரிப்பது சமூகநீதியில் மிக மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.
இன்னமும் அது தமிழகத்தில் வரவில்லை.
வரவேண்டும். வரும்.
இன்றைய (31/08/2017) இந்தியன் எக்ஸ்பிரஸில் எடுக்கப்பட்ட செய்தி இது..