Wednesday, August 30, 2017

கண் தானம் ஒரு மோசடிச்செயல் என்கிற புரளி

Sivasankaran Saravanan
Via Facebook
2017-08-30

*இறந்த பின் கண் தானம் பலரால் செய்யப்படுகிறது . அதனால் பலன் பெற்றவர்கள் ஒருவரையாவது நீங்கள் பார்த்ததுண்டா? *
- என கண் தானம் ஒரு மோசடிச்செயல் என்கிற ரீதியில் ஒரு அக்குபஞ்சரிஸ்ட் போஸ்ட் இட அதை நிறைய பேர் விருப்பமிட்டு மகிழ்கிறார்கள். 

ஒரு விஷயத்தை பற்றி தெரியாமல் இருப்பது தவறல்ல.  ஏனென்றால் எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.  ஆனால் தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்தது போல காட்டுவது மோசமான ஒரு குணம். 

கண் தானம் என்றால் கண்ணை எடுத்து வைப்பதல்ல.  கண்ணிலுள்ள கருவிழி எனப்படும் கார்னியா என்ற ஒரு பகுதியை மட்டும் எடுத்து வேறொருவருக்கு பொருத்துவது தான் கண் தானம்.  கார்னியா பார்ப்பதற்கு கிட்டதட்ட கான்டாக்ட் லென்ஸ் போல இருக்கும் .

இந்தியாவில் பார்வையற்றவர்கள் சுமார் 13 மில்லியன் பேர்.  அவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே கருவிழி பாதிப்பு காரணமாக பார்வை இழந்தவர்கள். அதாவது சுமார் 1.3 லட்சம் பேர். 

தானமாக பெறப்படுகிற அளவுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.  ஏனென்றால் தானமாக பெறப்படுகிற கருவிழிகளில் நிறைய பயன்படுத்த இயலாதவை.  அதை ஆய்வுக்கு பிறகே கண்டறிய முடியும்.  தானமாக அளிக்க முன்வரும் குடும்பத்தினரிடம் அதுபற்றி முன்பே சொல்லப்பட்டுவிடும் : இந்த கருவிழிகளை நிச்சயம் இன்னொருத்தருக்கு பொருத்துவோம் என எந்த உறுதியும் தரவியலாது என்று. 

தானமாக அளிக்கிற குடும்பங்களால் ஏன் தானம் பெற்றோர் பற்றிய விபரங்கள் கிடைப்பதில்லை?

ஏனென்றால் உறுப்பு மாற்று மருத்துவ சட்டப்படி அது தவறு.  தானம் அளிப்பதோடு குடும்பத்தின் கடமை முடிந்துவிடுகிறது.  அந்த கருவிழிகளை யாருக்கு பொருத்துகிறோம் அல்லது பொருத்தாமலே விடுகிறோமா என்பதை மருத்துவமனை தெரிவிக்கமாட்டார்கள்.  அதேபோல தானம் பெறுபவருக்கும் யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்படமாட்டாது.  சினிமாவில் காட்டுவது போல எல்லாம் நடக்காது. 

கருவிழி மாற்று அறுவை சிகிச்சை உண்மையிலேயே சவாலான ஒன்று.  ஒரு மில்லிமீட்டர் தடிமன் உள்ள திசுவை வேறொருவர் கண்ணில் வைத்து தைப்பது மிகுந்த சவாலுக்குரியது.  நமது கண்ணானது மிக சென்சிடிவான உறுப்பு.  உங்கள் கை விரல்களை கண்ணில் வைத்தாலே எரிச்சல் ஏற்படும்.  வேறொரு கருவிழியை கண்ணில் பொருத்தும் போது கொஞ்ச நாட்கள் கழித்து பொருத்திய கருவிழி பாதிப்படையலாம். 

இவ்வளவு ரிஸ்க் இருந்தும் ஏன் கருவிழி தானம் பெறப்பட்டு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது?

நமது கண்ணின் மொத்த பவர் (திறன்)  +60 டயாப்டர்.  அதில் கருவிழி எனப்படும் Cornea மட்டும் 43 D திறனை கொண்டது.  அந்த கார்னியா பாதிக்கப்பட்டால் அவர் அறவே பார்வையற்றவராக மாறுகிறார்.  அவருக்கு வேறொரு கருவிழியை பொருத்தி பாதியளவு பார்வை வந்தால் கூட அவரை பொருத்தவரை அது பெரிய உதவி. 

அதைவிட முக்கியமானது : அறிவியலில் நிறைய செயற்கை மாற்று உறுப்புகள் வந்துவிட்டன.  இன்றுவரை செயற்கையான கருவிழியை உருவாக்கமுடியவில்லை.  ஒரு கருவிழிக்கு மாற்று இன்னொரு மனித கருவிழி மட்டுமே ஆகும். 

கண் வங்கிப் பணியாளராக நான்  பணியாற்றி நானே சிலமுறை இறந்தவரின் இல்லத்துக்கு சென்று கண்களை தானமாக பெறுகிற பணியில் ஈடுபட்டுள்ளேன். கண் வங்கிகளில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிற பார்வையற்றவர்களை நான் நேரடியாக அறிவேன்.  தயவு செய்து கண் தானத்திற்கு எதிராக பதிவு செய்யவோ அதை பகிரவோ நினைக்காதீர்கள் . இந்த பதிவை உங்களால் படிக்க முடிகிறது.  ஆனால் உங்களைப்போன்றே உணர்வு நிரம்பிய இன்னொரு சக மனிதனால் பார்வை இல்லாமல் இதை படிக்கமுடியவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்?  தயவு செய்து இதிலெல்லாம் சமூக விரோத கருத்துகளை பதிவுசெய்ய வேண்டாம்..! தானம் தருவது தராமல் இருப்பது அவரவர் விருப்பம்.  தருபவர்களை தடுப்பது சமூக விரோத செயலே ஆகும்.

No comments:

Post a Comment