Friday, August 11, 2017

எடுப்பு கக்கூஸ்

வினாயக முருகன்
Via Facebook
2017-08-11

நான் பிறந்தது கும்பகோணம் மாதளம்பேட்டையில். பிரிட்டிஷ் காலத்தில் தாதுபஞ்சம் வந்தபோது தெற்கே இருந்து பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் கும்பகோணத்துக்கு வரும்போது மாதளம்பேட்டையில் குடியேறினார்கள். அவர்கள் பெரும்பாலும் சாக்கு (கோணிப்பை) தைக்கும் தொழில் செய்து பிழைப்பை ஓட்டுபவர்கள். மாதளம்பேட்டை அருகே ரயிலடியும் அதையொட்டி கூட்ஸ் ஷெட்டும் இருந்தது. கூட்ஸ் ரயிலில் ஏற்றும் நெல்மூட்டைகளுக்கான சாக்கை இந்த சமூகம்தான் தயாரிக்கும். எப்போதும் சாலையில் உட்கார்ந்து சாக்கு தைக்கும் ஊசிகளை கூர்தீட்டியபடி இருப்பார்கள். அப்படி கூர்தீட்டும்போது அதிலிருந்து நெருப்புப்பொறி கிளம்பும். மாதளம்பேட்டை தாண்டி இவர்களோடு இன்னொரு சமூகமும் அங்கு குடியேறினார்கள்.

அவர்கள் மனிதர்களின் மலத்தை அள்ளும் வேலைகளை செய்பவர்கள். பெரும்பாலும் அந்த சமூகத்தில் இருக்கும் பெண்களே அந்த வேலையை செய்வார்கள். தோட்டிச்சிகள் என்று அழைப்பார்கள். அப்போதெல்லாம் அதாவது தொண்ணூறுகளின் தொடக்கம் வரை தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் எடுப்பு கக்கூஸ்கள்தான் இருந்தன. பாம்பே கக்கூஸ்கள் சொற்பமாகவே இருந்தன. இந்த பெண்களின் வேலை அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு வீடாக சென்று அங்கிருக்கும் கக்கூஸ்களில் சேர்ந்துள்ள மலத்தை அள்ளி கூடையில் சேகரித்து எடுத்து வந்து தெருமுனையில் இருக்கும் மலவண்டியில் போடுவது. இந்த பெண்கள் தெலுங்கும் தமிழும் கலந்து பேசுபவர்களாக இருப்பார்கள். பிராமணர்கள் பஞ்சக்கச்சம் கட்டுவதுபோல சேலையை தூக்கி கட்டியபடி வருவார்கள். இவர்கள் கையில் ஒரு முறமும் அதில் நிறைய சாம்பலும் இருக்கும். பீயை அள்ளும்போது அது ஈரமாக இருப்பதால் கூடையில் ஒட்டிக்கொள்ளும். பீ மீது சாம்பலை கொட்டி அதை வார்கோலால் வழித்து கூடையில் போட்டு தெருமுனையில் இருக்கும் வண்டிகளுக்கு எடுத்துச்செல்வார்கள். சிலர் அந்த சாம்பலிலேயே பல் விலக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் வந்து வாய் கொப்புளிப்பார்கள்.. அவர்கள் கையோடு கொட்டாங்குச்சி (சிரட்டை) அல்லது ஏதாவது அலுமினிய பாத்திரம் கொண்டுவருவார்கள். மலம் இருக்கும் வீட்டின் உரிமையாளர் நீராகாரத்தை அந்த சிரட்டையில் ஊற்ற அவர்கள் குடித்துவிட்டு வேலையை ஆரம்பிப்பார்கள்.
சிலர் பீயை அள்ளிவிட்டு கையை கழுவி அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து நீராகாரத்தை சாப்பிடுவார்கள். அவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் கால்ரூபாய் (அதுவும் சண்டைப்போட்டால் மட்டுமே கிடைக்கும்) தருவார்கள். தீபாவளி, பொங்கலுக்கு பலகாரம் தருவார்கள். தெருவில் இருக்கும் யாராவது பெரியமனிதர்கள் மலிவான விலையில் சேலை எடுத்து தருவார்கள்.

மலம் அள்ள வருபவர்களுக்காகவே ஒவ்வொரு வீட்டின் பக்கத்திலும் சந்துக்கள் இருக்கும். சந்து வைத்து வீடு கட்டியவர்களுக்கு ஏன் பாம்பே கக்கூஸ் கட்ட தோன்றவில்லை என்று குழப்பமாக இருக்கும். அதுபோன்ற மனிதர்கள் தவறியும் முன்வாசலில் நின்று பேசக்கூடாது. சந்து வழியாக கொல்லைப்புறத்துக்கு வந்து மலத்தை அள்ளிச்செல்ல வேண்டும். இரண்டு நாட்கள் பீயை அள்ளாமல் போனால் கக்கூஸில் புழுக்கள் சேர்ந்து நெளியும். ஆனால் அவர்கள் கொஞ்சம் கூட அவர்கள் அசூயை படாமல் மலத்தை முறத்தில் வழித்து தெருமுனையில் நிற்கும் வண்டி வரை நடந்துச் செல்வார்கள். அப்படி செல்லும்போது அவர்களை தெருநாய்களும், பன்றிகளும் துரத்தியபடி வரும். அதை எல்லாம் சமாளித்துதான் மலத்தை கொண்டு சென்று வண்டியில் கொட்ட வேண்டும். பொதுவாக வண்டியை தள்ளும் ஆட்கள் ஆண்களாக இருப்பார்கள். சிலநேரங்களில் பெண்களே அந்த வண்டியை தள்ளிக்கொண்டு போவார்கள். அவர்கள் அந்த மலத்தை எங்கு கொண்டுச்சென்று கொட்டுவார்கள் என்பது புதிராக இருக்கும்.

ஒருமுறை அந்த வண்டியை நான் பின்தொடர்ந்து செலவதை பார்த்து யாரோ என் அப்பாவிடம் சொல்ல அவர் பெல்ட்டால் என்னை விளாசி தள்ளினார். இப்போது அதை எல்லாம் நினைத்துப்பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று நினைக்க தோன்றுகிறது. அருந்ததி சமூகத்தினருக்கு திமுக ஆட்சியில்தான் எண்ணற்ற சலுகைகளை வழங்கினார்கள். மற்ற ஊர்களை பற்றி தெரியவில்லை. தஞ்சை மாவட்டம் முழுக்க ஒருகாலத்தில் மனித மலத்தை மனிதர்களே அள்ளியதை பார்த்த தலைமுறை நாங்கள். தஞ்சையில் இருந்த இந்த எடுப்பு கக்கூஸ் பற்றி சாரு ஒருசில கதைகளில் பதிவு செய்துள்ளார். நீண்டநாட்கள் கழித்து இப்போது ஒரு சிறுகதை படித்தேன். பிரபுகாளிதாஸ் எழுதிய கதை. பேசும் புதிய சக்தியில் வெளி வந்துள்ளது. இந்த எடுப்பு கக்கூஸ்களில் பணியாற்றிய மனிதர்களை பற்றி மிகநுட்பமாக பதிவு செய்துள்ளார். வாழ்த்துகள்.

No comments:

Post a Comment