ஒவ்வொரு சமுதாயமும் இருண்ட காலங்களை சந்தித்தேவந்துள்ளன. முஸ்லிம் சமுதாயமும் இதற்கு விதி விலக்கல்ல.
ஆம்! பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை சுமார் 400 ஆண்டுகள் முஸ்லிம்களுக்கு இருண்ட காலம்தான்.
தற்போதைய இருபத்தியோராவது நூற்றாண்டு தான் உலகமுற்றத்தில் முஸ்லிம்களை அறிமுகப்படுத்தியுள்ளது,அடையாளப்படுத்தியுள்ளது முழுமையாக சொல்ல வேண்டுமானால்முஸ்லிம்களுக்கு தங்களின் உண்மையான முகவரியை நினைவுபடுத்தி இருக்கிறது.
அதன் விளைவாக தற்போது முஸ்லிம் சமூகம்கல்வியறிவில் மேம்படும் ஆர்வத்தில் இருக்கிறது.
ஆனால், முஸ்லிம் சமூகம் கல்வியைப் பார்க்கும் விதத்தில்வேறுபட்டு நிற்கிறது. கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில்மாறுபட்டு நிற்கிறது.
கல்வியறிவைப் பெற வேண்டும் என்பதில் இருக்கிறமுனைப்பு எப்படியான கல்வியறிவைப் பெற வேண்டும் என்பதில்சறுக்குதலை சந்தித்துள்ளது.
கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதில் காட்டும்அக்கறை எப்படியான கல்வியாளர்களை உருவாக்க வேண்டும்என்பதில் முற்றிலும் சிதைவைச் சந்தித்துள்ளது.
மொத்தத்தில் உயர்கல்வியை நோக்கிய பயணத்தில்முஸ்லிம் சமூகம் தவறான சிந்தனையையும்,அணுகுமுறையையும் கொண்டிருக்கிறது.
இன்றைய முஸ்லிம் சமூகம் உயர்கல்வியை காசு, பணத்தைஅடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கிறது.
அதனடிப்படையிலேயே கல்வியாளர்களையும் உருவாக்கிவருகிறது. இதனால், முஸ்லிம் சமூகத்தில் எந்த ஒருமாற்றத்தையும், முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.
உருவாக்கம் என்பது…..
உருவாக்கம் என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாதஒன்றாகும். அதிலும் குறிப்பாக நாம் எப்படி உருவாக வேண்டும்,எப்படியானவர்களை உருவாக்க வேண்டும் என்பது மிகவும்அவசியமான ஒன்றாகும்.
ஒரு முஸ்லிம் எப்படி உருவாக வேண்டும்? எப்படிஉருவாக்க வேண்டும் என்று அல்லாஹ் தன் திருமறையில்வழிகாட்டும் போது படைப்பில் மிகச் சிறிய உருவ அமைப்பைக்கொண்ட எறும்பின் மூலம் பாடம் நடத்துகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், ஸுலைமானுக்காகஜின்கள், மனிதர்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் படைகள்திரட்டப்பட்டிருந்தன. மேலும், அவை முறையான – முழுமையானகட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு முறை ஸுலைமான் {அலை} அப்படைகளுடன் சென்றுகொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் எறும்புகளின்பள்ளத்தாக்கிற்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது, ஓர்எறும்பு கூறியது: “ஓ எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில்(வீடுகளில்) நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடையபடையினரும் தெரியாமல் உங்களை மிதித்து விடக்கூடாது”. (அல்குர்ஆன்: 27: 17,18 )
இங்கே, தன் சமூகத்தை பாதுகாக்க பதறித்துடித்துக் கொண்டுஅறை கூவல் விடுகிற எறும்பைப்போல ஒரு முஸ்லிம் -இறைநம்பிக்கையாளன் உருவாகவும், உருவாக்கப்படவும் வேண்டும்என்று அல்லாஹ் மறைமுகமாக உணர்த்துகின்றான்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். உருவாக்கம் என்பதுஇரண்டு வகை. 1. Market Requirement 2. Social Requirement.
முதலாவது பணத்தை அடிப்படையாகக் கொண்டுஉருவாக்குதல். இரண்டாவது சமூகத்தை, சமுதாயத்தைஅடிப்படையாகக் கொண்டு உருவாக்குதல்.
கல்விக்கும் இது பொருந்தும். ஒன்று பொருளாதாரத்தைஅடிப்படையாகக் கொண்ட கல்வியை மட்டுமே தேர்ந்தெடுப்பது.
இரண்டு சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் பயன் தருகிறகல்வியைத் தேர்ந்தெடுப்பது.
இன்றைய முஸ்லிம் சமூகம் பொருளாதாரத்தைஅடிப்படையாகக் கொண்ட கல்வியை தேர்வு செய்துஅப்படியானவர்களை மட்டுமே உருவாக்குவதில் ஆர்வம்காட்டுகின்றது.
சமூகத்தை மேம்படுத்துகிற, சமுதாயத்தைக் கட்டமைக்கிறபயன் தருகிற கல்வியை தேர்வு செய்து அப்படியானவர்களைஉருவாக்குவதில் அக்கறையும், ஆர்வமும் காட்டுவதில்லை.
இந்த குறுகிய அணுகுமுறையும் சிதறிய சிந்தனையும்முஸ்லிம் சமூகத்தை இஸ்லாம் கூறும் கல்வி முறையிலிருந்தேதூரமாக்கி விட்டிருக்கின்றது.
வாருங்கள்! உயர்கல்வி விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தின்தவறான சிந்தனையையும், அணுகுமுறையையும் எவ்வாறு சரிசெய்யலாம் என்று பார்த்து விட்டு வருவோம்.
உயர் கல்விக்கான தேடல் சமூக வளர்ச்சிக்கா?.. செல்வ வளத்திற்கா? …
இன்றைய முஸ்லிம் சமூகமும், இளைஞர்களும் உயர்கல்வி எனும் போது அதிகம் தேர்ந்தெடுப்பது தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), பொறியியல் (எஞ்சீனியரிங்) துறை சார்ந்த பாடப்பிரிவுகளைத் தான். ஏனெனில், அந்தப் படிப்பை படித்தால் ஏராளமான சம்பளம் கிடைக்கும். வீடு, கார், சொத்து என சுக போகமாக வாழலாம் எனக் கருதுகின்றனர்.
ஆனால், உண்மை என்னவென்றால் கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில் கல்வி அமைச்சர் சொன்னது: “தமிழகத்தில் 635 இஞ்சீனியரிங் - பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 3 ½ லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியாகின்றனர். இதில் 6000 பேருக்குத் தான் படித்த படிப்புக்கான வேலை கிடைக்கிறது”. என்று.
மீதி பேர் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இறுதியில், வெளிநாட்டு பயணம், சொல்லெனாத் துயரங்களுக்கு மத்தியில் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணமாக இருப்பதுஇளைஞர்கள் மட்டுமல்ல, பெற்றோர் மற்றும் சமூகம் என்று அனைவருக்கும் இதில் பங்குண்டு.
அல்லாஹ் கூறுகின்றான்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?” . ( அல் குர்’ஆன் 39: 9 )
வெறுமனே கல்வியைப் பொருளாதார தேவையைப் பூர்த்திசெய்வதற்காக கற்பவனும், உலகம் அனைத்திலும் உள்ள மக்களுக்கு பயன் தர வேண்டும் எனும் நோக்கில் கற்பவனும் சமமாவார்களா?
இது தான் இங்கு அல்லாஹ் எழுப்புகிற யதார்த்தமான கேள்வி இதை இந்த உம்மத் சரியாக விளங்கவில்லை என்பதே பேருண்மையாகும்.
தான் கற்கும் கல்வியின் மூலம் தனக்கும், சமூகத்திற்கும் பயன் தர வேண்டும். மேலும், அந்த கல்வியின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும் ஒரு முஸ்லிம் பெற வேண்டும் இது தான் இஸ்லாம் கல்விக்கு கூறும் இலக்கணம் ஆகும்.
இதை இன்றைய எந்தக் கல்வியின் மூலமும் ஒரு முஸ்லிம் பெற முடியும். ஆனால், முஸ்லிம் சமூகம் தான் அதை அடைவதற்கு தயாராக இல்லை.
உயர் கல்வியை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது?...
அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆனும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தை, மற்றும் வாழ்க்கையான ஸுன்னாவும் உலக முடிவு நாள் வரையிலான அனைத்து காலத்திலும் செயல்படுத்துவதற்கான தெளிவான வாழ்க்கை வழிகாட்டியாகும்.
ஆனால், சில நபிமொழிகளை சில நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூக மக்களால் பின்பற்ற முடியாமல், அமல் செய்ய முடியாமல் போவது போல் தோற்றமளிக்கும் அவ்வாறெனில், அந்த நபி மொழிக்கு எவ்வாறு பொருள் கொள்வது?
இன்னும் சில நபிமொழிகளின் படி செயலாற்றுவது சில முஸ்லிம்களால் பல நேரங்களில் இயலாமல் போகின்றது. அந்த நபிமொழிகளின் படி அவர்களையும் அமல் செய்ய வைப்பது எப்படி?
இன்னும் சில நபிமொழிகளை இந்த முஸ்லிம் உம்மத் குறுகிய வட்டத்தில் இருந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவைகள் பரந்து விரிந்த பல அம்சங்களைக் கொண்டிருப்பதாக அமைந்திருக்கின்றது.
இம்மூன்று வடிவிலான அம்சங்களையும் முழுமையாக இந்த உம்மத் பயன் படுத்துகிற ஏதாவது ஒரு வழி இருக்கிறதா? என்று ஆய்வு செய்தால் நமக்கு கிடைக்கும் விடை இது தான்!
ஆம்! சில போது ஒரு முஸ்லிம் தன்னுடைய உயர்கல்வியின் மூலம் பெறுகிற வேலையை பயன்படுத்தி அமல் செய்ய முடியும்.
உதாரணத்திற்கு சில நபிமொழிகளைக் காண்போம்.
1. தீமையைக் கரம் கொண்டு தடுத்தல்...
அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்கவும், அடுத்து நாவால் தடுக்கவும், இவை இரண்டும் இயலா விட்டால் மனதளவில் வெறுத்து விடட்டும்”, இது ஈமானின் பலஹீனமான நிலையாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
இன்று உலகெங்கிலும் தீமைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, திருட்டு, போன்ற கொடிய குற்றங்கள் புரிவோர் பெருகி விட்டனர்.
அதிலும், குறிப்பாக இந்தியாவில் 2011 –இல் மட்டும் 34,305 கொலைக் குற்றங்கள் உட்பட 62.5 லட்சம் குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன.
ஆனால், எத்தனையோ சட்டங்கள் இருந்தும் குற்றங்களை குறைக்க முடியவில்லை. குற்றவாளிகளை தண்டிக்க முடிவதில்லை. மட்டுப்படுத்த முடியவில்லை.
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டும் என அல்லாஹ்வால் ஆணையிடப்பட்ட ஓர் சமூகம் இந்த நிலையைக் கண்டு நபிகளார் {ஸல்} அவர்கள் கூறிய மூன்றாம் நிலையிலேயே நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
தீமைகளை தடுக்கும் முதல் இரண்டு நிலைகளில் முஸ்லிம் சமூகம் இருக்குமானால் உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக குற்றங்களை குறைத்து, குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைகளை வழங்கி, குற்றங்கள் நிகழா வண்ணம் தடுக்க முடியும்.
ஆம்! கையால் தடுப்பது அல்லது நாவால் தடுப்பது இவ்விரண்டிற்கும் பொருள் தருகிற ஹதீஸ் விரிவுரையாளர்கள் இவ்வாறு விளக்கம் தருகின்றார்கள்.
அதாவது, அதற்கான முழு ஆற்றலையும் ஓர் முஸ்லிம் பெற்றவனாக இருக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்த வரை முஸ்லிம்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி, நிர்வாகம் ( காவல்துறை மற்றும் சட்டத்துறை, நீதித்துறை ) ஆகியவற்றில் இல்லாததே இந்த ஹதீஸை அமல் செய்ய முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2013 –ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி இந்திய அளவில் 16 லட்சத்து 60 ஆயிரத்து 151 பேர்கள் காவல்துறையில் பணிபுரிகின்றனர். இதில் முஸ்லிம்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேர். இது மொத்த சதவீதத்தில் 6 ஆகும். தமிழகத்தில் 0.76 சதவீத எண்ணிக்கையில் முஸ்லிம்கள் காவல்துறையில் இருக்கின்றனர்.
நீதித்துறையைப் பொறுத்த வரையில் இந்திய அளவில் 7.8 சதவிகித அளவில் தான் முஸ்லிம்களின் பங்களிப்பு இருக்கிறது.
காவல்துறை அதிகாரி எனும் அதிகார வரம்பில் ஓர் முஸ்லிம் இருக்கும் பட்சத்தில், தைரியமாக குற்றவாளிகளை கையால் அதிகாரத்தால் தடுக்க முடியும்.
நீதித்துறையின் அதிகார வரம்பை ஓர் முஸ்லிம் அடைந்திருக்கும் பட்சத்தில் வாயால் தடுக்க முடியும். அதாவது, நீதிபதி எனும் இடத்தில் இருந்து இந்திய அரசுக்கு இஸ்லாமியச் சட்டங்களை பரிந்துரைக்க ஓர் வாய்ப்பும், வழக்கறிஞர் எனும் இடத்தில் இருந்து நேர்மையோடும், வாய்மையோடும் வாதாடி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையும் பெற்றுத்தர இயலும். மேலும், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர இயலும்.
மேலும், குர்ஆன், ஸுன்னாவைப் பின் பற்றிய பாக்கியம் கிடைப்பதோடு நிறைவான பொருளாதார வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதில், இன்னொரு நன்மையையும் தன் சமூகத்திற்கு செய்ய இயலும். அதாவது இன்று மேற்கூறிய இரு துறைகளாலும் முஸ்லிம் சமூகம் மிகப் பெரிய அளவிலான இன்னல்களைச் சந்தித்து வருகின்றது.
இந்தியாவில் மொத்தம் உள்ள சிறைச்சாலைகளின்எண்ணிக்கை 1382. மொத்த கைதிகளின் எண்ணிக்கை 3,72,296.இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21% ஆகும்.
இந்த 21 % முஸ்லிம் கைதிகள் காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்கள். நாளை நீதிமன்றங்களின் நீதிபதிகள் யாரை வேண்டுமானாலும் எந்த நிரபராதிகளை வேண்டுமானாலும் இவர்கள் சதிகாரர்கள் என்று கூறலாம். மரண தண்டனை தீர்ப்பு வழங்கலாம்.
இன்று சட்டக்கல்வி விஷயத்தில் நம் சமூகத்தின் எண்ணம் தவறாக இருக்கின்றது. பிராமணர்கள் அதிகம் பேர் சட்டக்கல்வி பயின்று பல உயர்நீதி மன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்றங்களில் நீதிபதியாக அமர்ந்து நமது இறையில்லம் தொடர்பான வழக்கில் நமக்கு எதிராக தீர்ப்புச் செய்து கொண்டிருக்கின்றனர்.
சிறைச்சாலைகளில் உள்ள 21 சதவிகித முஸ்லிம்களில்மிகுதியானோர் அப்பாவிகள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அப்பாவியான இவ்விளைஞர்களுக்காக வாதாடி உண்மையை இவ்வுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்கள் அப்பாவிகள் என்று நிருபிப்பதற்கு கூட போதிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் இல்லை.
எனவே, தற்போதைய இளைய தலைமுறையினர்க்கு சட்டம், ஒழுங்கு (காவல்துறை) மற்றும் நீதித்துறை குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தி சட்டக்கல்வி மற்றும் ஐபிஎஸ் பயில ஊக்குவித்தும்,சட்டம் பயின்றவர்கள், நீதிபதித் தேர்வுகளில் கலந்துக்கொள்ளவழிகாட்டுவதும் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் தலையாயகடமையாகும்.
2. பாதையில் இருந்து சக மனிதர்களுக்கு தொல்லை தரும் பொருட்களை அகற்றுதல்....
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரண்டு மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதும் நற்செயலே! ஒருவரை உமது வாகனத்தில் ஏற்றிக் கொள்வதும், அல்லது அவரது சுமையை ஏற்றிக் கொள்வதும் நற்செயலே! நல்ல சொல் சொல்வதும் நற்செயலே! தொழுகைக்காக நீர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நற்செயலே! சக மனிதர்களுக்கு இடையூறு தரும் முற்களையும், கற்களையும் பாதயிலிருந்து அகற்றுவதும் நற்செயலே!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
இந்த நபிமொழியில் கூறப்பட்டிருக்கிற எல்லா அம்சங்களையும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
பாதையில் இருந்து சக மனிதர்களுக்கு தொல்லை தரும் பொருட்களை அகற்றுதல் என்பது சில போது சில நாடுகளில் வாழும் முஸ்லிம்களால் செய்ய முடியாமல் போகிறது என்பதும்,
இன்னும் சில போது, இந்த நபி மொழியின் மூலம் வெறும் கற்களையும், முட்களையும் மாத்திரம் நபி {ஸல்} அவர்கள் குறிப்பிட வில்லை என்பதும் தெரிய வருகிறது.
உதாரணமாக, சிங்கப்பூர் தூய்மைக்கு பேர் போன நாடு, அங்கு எங்குமே கற்களோ, முட்களோ பாதையில் கிடப்பதில்லை. ஆதலால், இந்த ஹதீஸின் படி அமல் செய்ய அங்குள்ள முஸ்லிம்களுக்கு வாய்ப்பே இல்லை.
அப்படியானால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்த வாசகத்தின் மூலம் இந்த உம்மத்திற்கு என்ன ஆணையை இடுகின்றார்கள்?
இன்று, சாலைப் போக்குவரத்து என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிப் போய் விட்டது.
ஆனால், அதே அளவிற்கு மனித சமூகத்திற்கு பெரும் இழப்புக்களை தரும் ஒன்றாகவும் மாறி இருக்கின்றது.
தரமற்ற சாலைகள், வேகமாக செல்லும் வாகனங்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் பொதுமக்கள் என இப்படியான பல செயல்களால் விபத்துக்கள் உண்டாகி ஒவ்வொரு நாளும் பெரிய அளவிலான உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
இது தவிர்த்து பெருகி விட்ட வாகனங்களால் சாலையில் பல மணி நேரங்கள் சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதும், குறிப்பிட்ட நேரத்தில் பணிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருப்பதும் தினந்தோரும் சிறு நகரங்கள் முதற்கொண்டு பெரு நகரங்கள் வரை இத்தகைய பாதிப்புக்கள் பெருகி இருப்பதைப் பார்க்க முடிகின்றது.
இன்னும், நான்கு வழிச்சாலைகளில் டோல்கேட் எனும் பெயரில் சாலையில் செல்லும் மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கு வரி எனும் பெயரால் வசூல் வேட்டை நடத்தி மக்களுக்கு பெரிய அளவிலான சிரமங்களைத் தருவதோடு அல்லாமல் நாட்டில் விலைவாசி உயர்வுக்கும் வழிகோலுகின்ற அவலத்தையும் பார்க்க முடிகின்றது.
மேலும், நீண்ட தூரம் பயணிக்கும் பொதுமக்களுக்கு சாலையோர உணவகங்கள் எனும் பெயரில் பெரும் கொள்ளையும் நடக்கிறது. சாலை ஓரங்களில் எங்குமே இலவச குடிநீர் குழாய்கள் இல்லாத அவல நிலை இருப்பதையும் உணர முடிகின்றது.
இது தவிர்த்து, நாட்டில் எத்தனையோ கிராமங்களில் இன்னும் சாலைகள் போடப்படாமலும், மக்கள் அதிகம் நடமாடும் பாதைகளில் மின்விளக்குகள் அமைக்கப்படாமலும் திருட்டு, கற்பழிப்புக் குற்றங்கள் நிகழ காரணமாக இருப்பதையும் பார்க்க முடிகின்றது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்ன “பாதையில் இருந்து சக மனிதர்களுக்கு தொல்லை தரும் பொருட்களை அகற்றுதல்” என்பது இத்துனை அம்சங்களையும் உள்ளடக்கியதாகவே அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின்சாரத்துறை என இத்துனை துறைகளிலும் ஓர் முஸ்லிம் இடம் பெற்று பொதுமக்களின் இந்த துயரங்களை களைய முன் வரவேண்டும்.
அப்பொழுது தான் இந்த நபிமொழியில் குறிப்பிடப்பட்டிருக்கிற நற்செயல் செய்ததற்கான முழு நன்மையையும் ஒரு முஸ்லிமால் அடைந்து கொள்ள முடியும்.
மேலும், ஸுன்னாவைப் பின் பற்றிய பாக்கியம் கிடைப்பதோடு நிறைவான பொருளாதார வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
3. ஏழை, எளியோருக்கும் கஷ்டப்படுவோருக்கும் உதவுவது…
ஒரு கிராமவாசி மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்கு பிரியமான செயல் எது?என்று வினவினார்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} “மனிதர்களில்அல்லாஹ்விற்கு மிகவும் நேசத்திற்குரியவர் சக மனிதர்களுக்குஎல்லா வகையிலும் பயன் தருகின்றவரே! செயல்களில்அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது ஒரு முஸ்லிம் தன் சகமுஸ்லிமின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியும்,சந்தோஷமும் ஆகும்.
அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய ஒரு கஷ்டத்தைநீக்குவதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய கடனைஅடைப்பதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய பசியை,வறுமையை போக்குவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும்சரியே!
மீண்டும், கேள்வி கேட்ட அந்த கிராமவாசியை நோக்கி “நீர்உம் சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்துசெல்வதென்பது ஒரு மாத காலம் பள்ளிவாசலில் இஃதிகாஃப்இருப்பதை விட எனக்கு மிகப் பிரியமானதாகும்” என்று பதில் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இன்னொரு அறிவிப்பின்படி..
”அல்லாஹ்வின் கடமைகளை சரிவர செய்கிற ஓர்அடியானின் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான செயல்தன் சக முஸ்லிமின் வாழ்வினில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும்.அந்த மகிழ்ச்சி என்பது அவன் மானத்தை மறைக்க ஆடைகொடுப்பதின் மூலமாகவோ, அல்லது அவன் பசியை நீக்குவதன்மூலமாகவோ, அவனுடைய தேவைகளை நிறைவேற்றுவதின்மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!” என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
( நூல்:தப்ரானி, ஸில்ஸிலத் அஸ் ஸஹீஹ்லில் அல்பானீ )
இது போன்று ஏழை எளியோர், கஷ்டப்படுவோர் சம்பந்தமான நபிமொழிகளை அமல் செய்கிற விஷயத்தப் பொறுத்த வரை இந்த உம்மத் குறுகிய ஓர் வட்டத்தில் இருந்து பார்க்கிறது.
நமக்குத் தெரிந்த ஏழைகளுக்கு உதவுதல், பள்ளிவாசலில் வந்து உதவி கேட்டு நிற்பவருக்கு உதவுதல், வீட்டு வாசலில் வந்து யாசிப்போருக்கு உதவுதல் என்று.
ஆனால், பரந்து விரிந்த பல பொருளைக் கொண்ட நபிமொழிகளாகும் இது போன்ற நபிமொழிகள்.
அரசுடைய நலத்திட்டங்கள், சலுகைகள் போன்றவற்றைப் பெறுவதற்காக இன்று முஸ்லிம்கள் சக சகோததர மதத்தவர்கள் என பெரும் தொகை கொண்ட வாழ்க்கையில் கீழ் நிலையில் உள்ள மக்கள் அன்றாடம் அரசு அலுவலக வாசல்களில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி காத்துக் கிடக்கின்றனர்.
அரசு அலுவலகங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தால் இந்த அவல நிலையைப் போக்கலாம்.
அரசின் அத்தனை துறைகளிலும் முஸ்லிம்கள் இடம் பெற்றால் அதன் மூலமாக ஏழை எளியோரின், கஷ்டப்படுவோரின் துயர்களை துடைத்து அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மலரச் செய்யமுடியும்.
ஆனால், உயர் கல்வியின் மீதான முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையும் அணுகுமுறையும் சுய நலத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதால் இஸ்லாம் சொல்கிற எந்தவொரு மாற்றத்தையும், மனிதவள மேம்பாட்டையும் இந்த உம்மத் அடைய முடியாமல் போய்விட்டது.
அரசுத் துறைகள், மற்றும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு,மேம்பாடு ஆகியவற்றில் முஸ்லிம்களின் இன்றைய நிலை…
இந்திய நாட்டின் மக்கள் தொகை யில் 13.4சதவிகிதமாகவுள்ள முஸ்லிம்கள் கல் வியிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர்.
மத்திய அரசுத் துறைகளில் முஸ்லிம்கள் வெறும் 4.9சதவிகிதம் மட்டுமே உள்ளனர். அரசின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே யில் முஸ்லிம்களின் எண்ணிக்கை4.2 சதவிகிதம் மட்டுமே என்பதும், அவர்க ளிலும் 98.7 சதவிகிதம் முஸ்லிம்கள் கடைநிலை பணிகளிலேயே உள்ளனர்.
இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,ஐ.எப்.எஸ் போன்ற உயர் பதவிகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 3.2 சதவிகிதம் மட்டுமே. நீதித்துறையில் கூட 7.8சதவிகிதம் மட்டுமே முஸ்லிம்கள்.
தேசிய அளவில் கல்வியில் கூட முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருந்தனர். பட்டப்படிப்பு முடித்தவர்3.4 சதவிகிதம், முதுகலைப் பட்டம் பெற்றவர் 1.2 சதவிகிதம் மட்டுமே.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவுப்படி தமிழகத்தின் சில மாவட்டங்களில் முஸ்லிம்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
திண்டுக்கல் பேகம்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் 200குடும்பங்களில் 82 பேர் ஆரம்பக் கல்வி கூட பெறாதவர்கள்என்பதும், ஆரம்பக் கல்வி பெற்றவர்கள் 96 பேர் என்பதும், உயர்நிலை கல்வி பெற்றவர்கள் 16 பேர் என்பதும், பட்டதாரிகள்வெறும் 6 பேர் தான் என்பதும், 22 பேருக்கு மாத வருமானம் ரூ.1000 க்கும் குறைவாகவே உள்ளது என்பதும், மாத வருமானம் ரூ.5000க்கும் குறைவாக உள்ளவர்கள் 171 பேர் என்பதும், ரூ. 5000மேல் வருமானம் உள்ளவர்கள் வெறும் 14 பேர்தான் என் பதும் தெரிய வந்தது.
200 குடும்பங்களில் வங்கிக் கடன் கிடைத்தவர்கள் 3 பேர் மட்டுமே. நிலம் உள்ளவர்கள் 2 பேர். சொந்த வீடு உள்ளவர்கள் 2பேர் தான்.
தமிழகத்திலேயே அதிக கல்வி அறிவு படைத்தவர்கள் உள்ள குமரி மாவட் டத்தில் 599 குடும்பங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில்,ஆரம்பக் கல்வி பெறாத வர்கள் 56 பேர். ஆரம்ப கல்வி மட்டும்பெற்றவர்கள் 184 பேர், உயர்நிலை கல்வி பெற்றோர் 226 பேர்,மேல் நிலை கல்வி பெற்றோர் 66 பேர், பட்டதாரிகள் 45 பேர்,முதுகலை பட்டம் பெற்றோர் 22 பேர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடத் தப்பட்ட 1700குடும்பங்கள் குறித்த ஆய் வில், கூலி வேலை செய்பவர்கள் 366பேர், சுயவேலை 74 பேர், வியாபாரிகள் 62 பேர், ரூ.1000க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் 91 பேர், ரூ.5000 வரை வரு மானம் உள்ளவர்கள் 514 பேர், ரூ.5000 க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 21 பேர் மட்டுமே என்று கண்டறியப்பட்டது.
அங்கு ஆரம்ப கல்வி இல்லாதோர் 60, ஆரம்ப கல்வி மட்டும் பெற்றோர் 231, உயர்நிலை கல்வி 185, மேல்நிலை கல்வி38, பட்டதாரி 10 பேர், முதுகலை பட்டதாரி ஒருவர் மட்டுமே.
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறுவதற்குத்தேவையான எல்லா வழிகாட்டுதலையும் பெற்றிருக்கிற ஓர்ஒப்பற்ற சமூகமான நாம் இன்றைய நம்முடைய தேவையான உயர்கல்வி விஷயத்தில் இஸ்லாத்தின் ஆழமான பார்வைகளோடு உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்போம்!
நாளைய தலைமுறையை இவ்வுலகெங்கும் அறிவுச்சுடர் பரப்பிடும் ஒளிக்கீற்றுகளாய் மாற்றுவோம்!
மீள் திட்டங்களை வகுத்து, வாழ்வை மேம்படுத்திடும்காரியங்களில் ஈடுபட்டு, மீண்டும் வரலாற்றுப் பக்கங்களில்முஸ்லிம் சமூகத்தின் மாண்புகளை பதிவு செய்வோம்!!!
அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!