Thursday, April 7, 2016

‎மக்கள் நலக்கூட்டணியை புறக்கணிப்போம்‬ 2

கே. என். சிவராமன்
via Facebook
2016-Apr-07

இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன:

(1) ஒன்று, நிலவும் சிஸ்டமே வேண்டாம் என போராடுவது. இந்த சமூக அமைப்பு முதலாளிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்குமே சாதகமாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தால் இவர்களை மீறி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. வாக்களிப்பது என்பது கண் துடைப்புதான். அதனால் ஒரு பயனும் இல்லை. - நக்சல்பாரி தோழர்கள் இதைத்தான் முன்னிறுத்துகிறார்கள். எனவேதான் தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறார்கள்.

(2) இரண்டாவது ஆப்ஷன் தேர்தல் முறையிலான ஜனநாயகத்தை ஏற்பது. நிலவும் அரசியல் அமைப்புக்குள் இருந்தபடி களைகளை கலைவது. 
வாக்களிக்கும் உரிமையை இதற்கு பயன்படுத்துவது. 

இது போக மூன்றாவதாக எதுவுமே இல்லை.

ஆனால், இருக்கிறது என சிலர் நம்பச் சொல்கிறார்கள். அதாவது முதல் இரண்டு ஆப்ஷன்களையும் ஒன்று கலந்து காக்டெயிலாக பரிமாறலாம் என்பது இந்தத் தரப்பின் வாதம். இதைத்தான் ‘மாற்றம் - மாற்று அணி‘ என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பவர்கள் தமிழகத்தின் அறிவுஜீவிகளாகவும், முன்னாள் புரட்சியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

அதனால்தான் அடிப்படையான இரண்டு கேள்விகள் எழுகின்றன:

(1) இது எப்படி சாத்தியம்?
(2) இரண்டும் எப்படி ஒன்று கலக்கும்?

விஞ்ஞானப் பூர்வமாக விடை இல்லை. ஆனால், இருக்கிறது என அறிவுஜீவிகளும் முன்னாள் புரட்சியாளர்களும் அடித்துச் சொல்கிறார்கள். எப்படி என்று கேட்டால் - கற்பனாவாத விளக்கத்தை அளிக்கிறார்கள். தெரிந்தே இந்தப் பிழையை இவர்கள் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கூடாது.

ஏனெனில் இவர்களது சமூக செயல்பாட்டில் குற்றம் காண முடியாது. 
உளப்பூர்வமாக சமூக நீதிக்காக உழைக்கிறார்கள். போராடுகிறார்கள்.
ஆனால் - தேர்தல் சமயத்தில் மட்டும் தங்களையும் அறியாமல் கற்பனாவாதத்துக்குள் புகுந்து விடுகிறார்கள். 

இவர்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. ஒரு நிலைத்தகவலில் அனைத்தையும் பட்டியலிட்டு விளக்க முடியாது என்பதால் - இப்போது மக்கள் நலக் கூட்டணியை - மாற்று அணியாக முன் வைத்து முகநூலில் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் அறிவுஜீவிகளையும் முன்னாள் புரட்சியாளர்களையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

1980 களின் இறுதியில் இருந்தே தேர்தல் சமயத்தில் இந்த மாற்று அணி பொம்மையை வர்ணம் தீட்டி யார் கையிலாவது கொடுப்பதை இவர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் முதலில் இவர்கள் அந்த பொம்மையை டாக்டர் ராமதாசின் கையில் திணித்தார்கள். ‘பாட்டாளி மக்கள் கட்சி‘யை அவர் தொடங்கியபோது இவர்கள்தான் முதல் ஆளாக ஓடோடிச் சென்று ஆதரவு தெரிவித்தார்கள். 
சொல்லப்போனால் ‘பாட்டாளி மக்கள் கட்சி‘ என்ற பெயரை தேர்வு செய்தவர்கள் கூட இவர்கள்தான். 

அக்கட்சி சார்பாக அப்போது நடத்தப்பட்ட ‘தினக்குரல்‘ நாளிதழின் நடுப்பக்கங்களை புரட்சிகர வாசகங்களால் இவர்களே அலங்கரித்தார்கள். அனல் பறக்கும் கட்டுரைகளாக எழுதிக் குவித்தார்கள். 

அன்று செயல்பட்ட சில நக்சல்பாரி குழுக்களும் இதே காரியத்தை செய்தார்கள். தேர்தல் வழியாகவே சிஸ்டம் மாறும் என்ற நம்பிக்கையுடன்(!) டாக்டரை ஆதரித்தார்கள். 

ஒரேயொரு தேர்தல்தான். யானை சின்னம் பறிபோனதுமே தங்கள் நிலைப்பாட்டை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டார்கள்.
டாக்டர் ராமதாசை ஆதரிப்பதை உடனடியாக நிறுத்தினார்கள்.
பிறகு திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது - அவர் பின்னால் அணிவகுத்தார்கள். இதே மாற்றம் கோஷத்தை முன் வைத்தார்கள். ‘மாற்று அணி‘ பொம்மையை வைகோவிடம் கொடுத்தார்கள்.

ஏதோ ஒன்று இரண்டு தேர்தல்களில் அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் இதைத்தான் செய்கிறார்கள். அதுவும் நம்பிக்கையுடன் என்பதுதான் ஆச்சர்யம். இத்தனைக்கும் ‘டூரிங்குக்கு மறுப்பு‘ என ஏங்கெல்ஸ் எழுதிய நூலில் இடம்பெற்றிருக்கும் ‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்‘ என்ற பகுதியை மனப்பாடம் செய்தவர்கள் இவர்கள்.
ஆனாலும் நடைமுறையில் கற்பனாவாதத்தைதான் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

விஞ்ஞானப்பூர்வமாக நடக்க வாய்ப்பே இல்லாத ஒரு மாற்றத்தை -
என்றேனும் ஒரு நாள் (ஒரு தேர்தலில்) நடக்கும் என தேவதூதர்களை எதிர்பார்த்து பிராத்தனை செய்துக் கொண்டிருக்கும் மதவாதிகள் போல் நம்பிக்கையுடன் காத்திருக்கச் சொல்கிறார்கள். 

யாரிடம்? தங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர்களிடம்.
அந்த வகையில் இத்தேர்தலி்ல் இவர்களது prophet - மக்கள் நலக் கூட்டணி.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் சேர்ந்த அணி. இதிலிருந்தே நம் அறிவுஜீவிகளும், முன்னாள் புரட்சியாளர்களும் எந்த அளவுக்கு கற்பனாவாதத்தில் மிதக்கிறார்கள் என்பதை உணரலாம்.

ஏனெனில் தேர்தல் பாதையில், வாக்கு அரசியலில் - அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே / அணியே ஆட்சி அமைக்க முடியும். அந்த வகையில் இந்த மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழகம் முழுக்க என்ன செல்வாக்கு இருக்கிறது? 

* வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு சில தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் மநகூவுக்கு ஓட்டு போட்டால் - அந்த வாக்கு வீணாகாதா?

* சரி. மக்கள் ஆதரவை பெற இதுவரை மநகூவினர் என்ன செய்திருக்கிறார்கள்? 

* கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்?

* எந்தெந்த இடங்களில் மக்களை அணி திரட்டி போராடியிருக்கிறார்கள்? 

*உடனே கட்சி உறுப்பினர்கள் அல்லது கட்சி அணியினர் மட்டுமே பங்கேற்ற போராட்டத்தை பட்டியல் இட வேண்டாம். கேட்பது மக்கள் பங்கேற்புடன், மக்களையே தலைமை தாங்க வைத்து நடந்த போராட்டங்கள் எவை எவை என்றுதான்.

இவை எல்லாம் தவிர மநகூவில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அனைத்துமே திமுக அல்லது அதிமுகவின் தோளில் அமர்ந்துதான் இதுவரை மாறி மாறி சவாரி செய்திருக்கின்றன. அப்படியிருக்கும்போது திடீரென்று தூக்கத்தில் இருந்து கண் விழித்து மாற்றம் மாற்றம் என குரல் கொடுத்தால்..?
மாற்றம் என்பது மக்களை திரட்டி, மக்களது பங்கேற்புடன் நடைபெறுவது. 
‘ரூம் மேட்ஸ்‘ ஆக நான்கு பேர் மட்டுமே கைகோர்த்து கனவு காண்பதல்ல. 
முக்கியமான விஷயம் - இறக்குமதி செய்ய மாற்றம் ஒன்றும் பண்டமும் அல்ல.

குறைந்தது சில ஆண்டுகளாவது தொகுதி தொகுதியாக - வீதி வீதியாக - இறங்கி மக்களிடம் பிரசாரம் செய்து, அவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு முன்னேறி இருக்க வேண்டும்.  இப்படி எந்த செயலையும் மநகூவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் செய்யவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு வரை திமுக / அதிமுக நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தன.
இதுதான் நால்வரின் டிராக் ரிக்கார்ட்.

அப்படியிருக்க எந்த அடிப்படையில் இந்த அறிவுஜீவிகளும் முன்னாள் புரட்சியாளர்களும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க சொல்கிறார்கள்?
சத்தியமாக புரியவில்லை. மற்ற காலங்களிலும் தெளிவாக இருப்பவர்கள், அர்ப்பணிப்புடன் சமூக நீதிக்காக போராடுபவர்கள் - சரியாக தேர்தலுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன் - கற்பனாவாதத்துக்குள் புகுந்து விடுகிறார்கள்.

சட்டென்று கண்ணில் படும் ஏதேனும் ஓரு கட்சியை ‘தேர்ந்தெடுத்து‘ -
அவர்கள் கையில் புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்ட ‘மாற்று அணி‘ பொம்மையை கொடுத்து - நிற்க வைக்கிறார்கள். அதுநாள் வரை தாங்கள் படித்த உலக போராட்ட வரலாறுகளை / வழிமுறைகளை எல்லாம் -
பொம்மையை கையில் ஏந்தி திருதிருவென விழித்தபடி நிற்கும் கட்சி அல்லது அணியினர் மீது திணித்து - பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். கோட்பாடுகளை புகுத்தி பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கி விடுகிறார்கள். 

தேர்தல் காலங்களில் மட்டும் கற்பனாவாதத்தில் மிதக்கும் இவர்களை பார்க்கவே பாவமாக இருக்கிறது. உங்கள் வாக்கை நீங்கள் பெரிதாக மதித்தால் - அதன் மூலம் உங்களுக்கான / நீங்கள் விரும்பும் ஆட்சி ஏற்பட வேண்டும் என்று நினைத்தால் - பெயரில் மட்டுமே மக்களை கொண்டிருக்கும் மக்கள் நலக் கூட்டணியை இந்தத் தேர்தலில் ஆதரிக்காதீர்கள். அதனால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

மட்டுமல்ல, உங்கள் வாக்கும் கடலில் கரைந்த பெருங்காயமாக மாறும். 
குறைந்தபட்ச சாத்தியம் எதுவோ அதுவே நிதர்சனம். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் - மாற்றம் - மாற்று அணி பொம்மையை யார் கையில் அறிவுஜீவிகளும், முன்னாள் புரட்சியாளர்களும் கொடுக்கப்போகிறார்கள் என்று பார்க்க ஆசையாக இருக்கிறது.

No comments:

Post a Comment