Friday, April 8, 2016

நீங்கள் ஏன் “நாம் தமிழரை” ஆதரிக்கக் கூடாது?

புரட்சிப் பெரியார் முழக்கம்.
07.04.2016.

தோழர் கொளத்தூர் மணி அவர்களின் "வாசகர் கேள்வி பதில்" - லில் ஒரு கேள்வியும் பதிலும்:

பகலவன்:

நீங்கள் ஏன் “நாம் தமிழரை” ஆதரிக்கக் கூடாது?

தோழர் கொளத்தூர் மணி: 

பெரியார் ஆரியரை, பார்ப்பனரைப் பிரித்துப் பார்த்தது கூட, அவரே கூறியுள்ளதைப் போன்று இரத்தப் பரிசோதனை செய்தல்ல. அவர்களின் ஆச்சார, அனுஷ்டானங்களை, பழக்க வழக்கங்களை கொண்டதுதான். 

பெரியார் கூறியுள்ளார்: "நாங்கள் மக்களை ஒன்று சேர்க்க வந்தவர்களே தவிர, பிரிக்க வந்தவர்கள் அல்ல. நாளைப் பார்ப்பானே எங்களோடு சேர வந்தால் கூட "உனக்கு மட்டும் பூணூல் எதற்காக என்று கேட்போம்?", அதை அகற்றிவிட்டால் நமக்கென்ன தடை.  அதற்கப்புறம் கேட்போம்: "உனக்கு தமிழ் உயர்ந்ததா? சமஸ்கிருதம் உயர்ந்ததா?" என்று. "கீதை உயர்ந்ததா? குறள் உயர்ந்ததா? வேதம் உயர்ந்ததா?" என்று கேட்போம். "தமிழ்தான் உயர்ந்தது, குறள்தான் உயர்ந்தது" என்போரை அரவணைத்துக் கொள்வதில் எங்களுக்கென்ன பிரச்சனை?”

இதுதான் பெரியாரின், பெரியார் இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால், நாம் தமிழர் கட்சியோ: 

“தமிழ் உயர்ந்தது, குறள் உயர்ந்தது” என்போரை பிற மொழியாளர் என்று கூறி விலக்கி வைக்கிறது, 

அதேவேளை “சமஸ்கிருதம் உயர்ந்தது, வேதமும் கீதையுமே சிறந்தவை” என்போரை தமிழ் பேசுகிறார்கள் எனக்கூறி ஆரத்தழுவி அரவணைக்கிறது. 

மற்றொருபுறம், ஆதிக்கத் திமிரோடு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் குறித்து கள்ளமவுனம் சாதிக்கிறது. அதிலும்கூட தாக்கப்படுபவர், தாக்குகிறவர் ஆகியோர் பேசுகிற மொழி குறித்த ஆராய்ச்சியில் இருந்து விடுவார்களோ என்னவோ?

சுரண்டப்படுவர், ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்காத, தமிழை, குறளை ஏற்காதவர் பக்கம் நிற்கிற, ஒருகட்சியை - சமத்துவத்தை, சகோதரத்துவத்தை விரும்புகிற ‘தமிழர்கள்' எப்படி ஆதரிக்க முடியும்? 

இதுதான் எமது சுருக்கமான பதில். விரித்தால் பெருகும்.''

No comments:

Post a Comment