Monday, April 4, 2016

எச்சரிக்கை binary oppositions

Marx Anthonisamy
via Facebook
2016-Apr-04

எச்சரிக்கை binary oppositions..
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நேற்று நான் மிகவும் மதிக்கும்  மூத்த இடதுசாரித் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான ஒரு தோழர் சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் எப்படி அம்பேத்கர் அவர்களும் இடதுசாரிகளும்தொழிளாளர்கள் பிரச்சினனைகள் பலவற்றில் ஒன்றிணைந்த கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது குறித்த பல முக்கிய கருத்துக்களையெல்லாம்  பேசிக்கொண்டிருந்தவர் இறுதியில் இப்படிக் குறிப்பிட்டார்:

"காந்தி மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி விடுதலைப் போராட்டக் களத்தில் இறக்கினார், மதச்சார்பின்மை என்கிற அம்சத்தை வலியுறுத்தி உயிரைக் கொடுத்தார் என்பதில் எல்லாம் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அவர் விவசாயிகள், தொழிலாளிகள் ஆகியோரைச்  சார்ந்து இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவர்களிடத்தில் போராட்டம் போய்விடக் கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.ஆனால் பகத்சிங்தான் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை முன்னிறுத்திப் போராட வேண்டும் என்பதில் சரியாக இருந்தார்"

என்றார். இது வழக்கமாக கம்யூனிஸ்டுகள் சொல்வதுதான். "காந்தி X பகத்சிங்" என்கிற binary opposition ஐ முன்னிறுத்துவது கம்யூனிஸ்டுகளின் வழக்கம், அந்தவகையில் அவர்கள் சே, பகத்சிங் முதலான icon களை உயர்த்திப்பி பிடிப்பதும் அவர்கள் வழக்கமாகச் செய்வதுதான்.  இப்படி பகத்சிங்கையும், சே யையும் முன்நிறுத்துவதில் நமக்கு எந்த மறுப்பும் இல்லை. 

எனினும் தோழரின் மேற்கண்ட வாசகங்களை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்.

(1) மிகப்பெரிய அளவில் மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்பில் இறக்கியவர் காந்தி அடிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறார். இது இப்போது ஆய்வாளர்கள் பலரும் கூறியுள்ள ஒரு கருத்துத்தான். சென்ற நூற்றாண்டில் உலக அளவில் இப்படிச் சாதாரண மக்களை, குறிப்பாகப் பெண்களைக் களத்தில் இறக்கியவர் அவர் (எ.கா: உப்புச் சத்தியாகிரகம் முதலியன) என்பது இன்று பல ஆய்வாளர்களாலும் குறிப்பிடப்படக் கூடிய ஒரு அம்சம்.இந்தியா ஒரு விவசாய நாடு என்பது ஊரறிந்த விடயம். ஆப்படியானால் விவாசாயிகள் முதலான அடித்தள மக்களைக் களத்தில் இறக்காமல் வேறு யாரைக் களத்தில் இறக்கியிருப்பார்?

(2)  தென்னாப்ரிகாவில் 22 ஆண்டு போராட்ட அனுபவங்களுடன் இந்தியா வருகிறார் அவர். தென் ஆப்ரிகாவில் அவருடன் கம்யூன்களிலும், களத்திலும் இருந்தவர்கள் யார்?

(3)  இங்கு வந்தவுடன் உடனடியாக அவர் அரசியலிலும் இறங்கவில்லை. இரண்டாண்டுகள் நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் போராட்டங்களில் கலந்துகொண்டபி்ன்தான் நேரடியாக அரசியலில் இறங்குகிறார்.

(4)  காந்தி மட்டுமல்ல, பகத்சிங், சே யாரும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. பழைய தலைவர்கள் யாரையும் அப்படியே இன்று பின்பற்ற இயலாது. பகத்சிங்கும் தோழர்களும் எந்த வெள்ளை போலீஸ் அதிகாரியைச் சுட்டுக் கொல்லப் போனார்களோ,அவரை அவர்கள் கொல்லவில்லை. வேறொருவரை அடையாளம் தெரியாமல் கொன்றார்கள். பிறகு அறையில் வந்து சுவரொட்டியில் பெயரைத் திருத்தி ஒட்டினார்கள். சேயும் அவரது இறுதிக்கால adventures பலவும் தவறானவை. இருந்தாலும் அவர்களின் ஒப்பற்ற தியாகங்கள் . கருத்துக்கள் போற்றத்தக்கவை. இவை எல்லாவற்றையும் சீர்தூகிப் பார்த்து இன்றைய சூழலுக்கு ஏற்கத்தக்கவற்றை மட்டுந்தான் ஏற்க இயலும். இது காந்தியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

(5)  தவிரவும் பகத்சிங் ஒரு எரி நட்சத்திரம் போல இந்திய அரசியல் வானில், சென்ற நூற்றாண்டின் முற் பகுதியில் தோன்றி ஒளி வீசி எரிந்து வீழ்ந்தவர். காந்தியோ ஒரு நீண்டகாலம் நம்மோடு வாழ்ந்தவர். குறைந்தபட்சம் 33 ஆண்டு காலம் இந்தியத் துணைக் கண்ட அரசியலில் முக்கிய பங்காற்றியவர். அவரது வளர்ச்சி என்பது முற்றுப் பெறவே இல்லை. வளர்ந்து கொண்டே இருந்தவர் அவர். தினந்தோறும் அவர் கற்றுக்கொண்டும், மாறிக் கொண்டும், பரிணமித்துக் கொண்டும் இருந்தவர். யாருடனுமான ஒப்பீடுகளில் நீங்கள் எந்த காந்தியைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

கடந்த பல பத்தாண்டுகளில் நாம் உருவாக்கியுள்ள இந்த binary oppositions களை மறுபரிசீலனை செய்வது அவசியம்.

நமக்கு வேண்டியது புதிய அரசியல் மட்டுமல்ல. புதிய மொழியும் கூட.
நினைவிருக்கட்டும், இது சோவியத்துக்குப் பிந்திய காலம்.

No comments:

Post a Comment