Thursday, April 7, 2016

ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!

ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை! புலிகளுக்கு சம்பந்தமே இல்லை! அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர்

24 ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்! குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை.

ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இந்த நிலையில் ராஜீவ் கொலைச் சம்பவம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன.
அவை கிளப்பும் சந்தேகங்கள் மலையளவு உள்ளன. அதற்குத்தான் பதில் சொல்வார் யாரும் இல்லை! எழுதியவர் ஒரு பத்திரிகையாளர்!
இதோ டெல்லியில் இருந்து புதிய குரல். எழுப்பி இருப்பவர் ஃபெராஸ் அஹ்மத் என்ற மூத்த பத்திரிகையாளர். அவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர், 'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ [Assassination of Rajiv Gandhi AN INSIDE JOB?].

இந்தப் புத்தகத்தை முன்னாள் அவுட்-லுக் ஆசிரியர் வினோத் மேத்தா வெளியிட்டார். முன்னாள் பி.ஜே.பி தலைவர் கோவிந்தாச்சாரியார், முன்னாள் சி.பி.ஐ அதிகாரிகள் அமோத் கான், ஜனதா தளக் கட்சி பொதுச்செயலாளர் எஸ்.சி.தியாகி ஆகியோர் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கெடுத்தது அவர்களுக்கும் அந்தப் புத்தகத்துக்கும் உள்ள தொடர்பைக் காட்டின. 'ஒரு நிருபராக இருந்தவர் இப்படியொரு புத்தகம் எழுதியிருப்பது நல்ல முன்னுதாரணம்’ என்று பாராட்டினார்கள்.

''ராஜீவ் காந்தி கொலை ஒரு 'ஒப்பந்தக் கொலை’. அரசியல் ஆதாயத்துக்காக நடந்தது. இந்தக் கொலை செய்தவர்களுக்கு இது உண்மையான நோக்கம் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்படுவதன் மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள்தான் இந்தக் கொலையைத் தூண்டியவர்கள்'' என்று வாதங்களை வைக்கிறது இந்தப் புத்தகம்.
கொலை செய்யத் தூண்டியது யார்?

இந்தக் கொலைக்கான சதி திட்டம் தீட்டியது விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரன் என்றும் சி.பி.ஐ குற்றம் சுமத்தியது. இந்தக் கொலை பிரபாகரனுக்குத் தெரிந்தும் இருக்கலாம் அல்லது அவருக்குத் தெரியாமலேயேகூட நடந்திருக்கலாம். ஆனால் இந்தக் கொலையினால் விடுதலைப் புலிகள் பலனடையவில்லை. அவர்கள் ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக்கூட கருதவில்லை.
இந்தக் கொலைக்கான பின்னணிகள் வேறு...'' என்கிற சந்தேகத்தை வைக்கும் ஃபெராஸ், ''ராஜீவ் கொலையினால் பலனடைந்தவர்கள் அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா, இந்தியாவில் பிரதமராகப் பதவிஏற்க வந்த நரசிம்ம ராவ் போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு பின்னணியில் இருப்பவர்கள் தான்'' என்று அதிரடியாக ஒரு புதிய கோணத்தை காட்டுகிறார் ஃபெராஸ் அஹ்மத்.

இது என்னுடைய கற்பனை அல்ல!

ஃபெரோஸ் அஹ்மத் இந்த மாதிரியான முடிவுக்கு எப்படி வந்தார் என்பதை அறிய அவரை டெல்லியில் சந்தித்தோம். இது என்னுடைய கற்பனை அல்ல. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் காந்தி கொலையின் பின்னணிப் பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன்.

இவற்றோடு இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன், ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ், பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.
பிரபாகரனுக்கு ராஜீவ் பற்றி பயம் இல்லை!

1989-ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங்கிடம் தோல்வியுற்ற ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலையில் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்பட்ட பின்னர்தான் அனுதாப அலை ஏற்பட்டது. அப்படியும் காங்கிரஸால் 240 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்றால் அவரால் ஆட்சிக்கு நிச்சயமாக வந்திருக்க முடியாது.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ கொலைக்கான காரணமாக வைத்தது, 'ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனக்கும் தன்னுடைய எல்.டி.டி.இ இயக்கத்தையும் அழித்துவிடுவார் என்று பிரபாகரன் பயந்தார். இதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்’ என்பதுதான். ஆனால் இது எவ்வளவு மடத்தனமானது என்பதை அறியலாம். ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வரக்கூடிய சூழ்நிலையும் இல்லை. அப்படியே வந்தாலும் படைகளை இலங்கைக்கு அவரால் அனுப்பவும் முடியாது.

முன்பு அவர் அமைதிப்படையை [ஐ.பி.கே.எஃப்.] அனுப்பியது இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே உடனான உடன்பாட்டின் அடிப்படையில் அனுப்பினார். பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரேமதாசா தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. ராஜீவ் காந்தி பதவியில் இருந்தவரை படைகளை திரும்பப் பெறுவதில் விரும்பம் இல்லாமல் இருந்தார்.

ஆனால், இலங்கையில் ஜனாதிபதியாக வந்த பிரேமதாசாவுக்கு இந்தியப் படைகள் இலங்கையில் இருப்பதில் மிகவும் அதிருப்தியடைந்து, திரும்ப அனுப்புவதில் மும்முரமாக இருந்தார். இதனால் ராஜீவ் பதவி விலகும் முன்பு 1989 செப்டம்பர் மாதம் பிரமேதாசாவுடன் மற்றொரு ஒப்பந்தம் போட்டு படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதே வருடம் டிசம்பர் மாதம் ராஜீவ் காந்தி அதிகாரத்தையும் இழந்தார். 1990-ம் ஆண்டு தி.மு.க ஆதரவுபெற்ற வி.பி.சிங் ஆட்சிக்கு வந்து இந்திய படைகளும் திரும்பி வந்தன.

இறையாண்மை பெற்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு, நாம் நினைத்தமாட்டில் படைகளை அனுப்ப முடியாது. இதனால் பிரபாகரனுக்கோ, எல்.டி.டி.இ அமைப்புக்கோ ராஜீவ் காந்தி மீது பயமோ அச்சமோ கிடையாது. புலிகளுக்கு அவரது கொலைக்கான தொடர்பில் சம்பந்தமே இல்லை. இந்தக் கொலையில் விடுதலைப் புலிகள் உறுதியாக ஈடுபடவே இல்லை என்று நான் சவால் விடவும் இல்லை. இந்த விவகாரங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் வழக்கை விசாரித்தவர்கள் சொல்லும் கூற்றுக்கு அர்த்தமில்லை என்பது என் கருத்து சிவராசன் ஏன் தப்பிக்கவில்லை?

1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். அதில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்தக் குழுவில் சிவராசன் ஈடுபட்டு இருப்பது பற்றி சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றனர்.

ராஜீவ் கொலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு இருந்தால் அடுத்த நிமிடமே இங்கிருந்து தப்பியிருப்பார்கள். ஏன் போகவில்லை? 1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது. கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரை சிவராசன் சென்னையில்தான் இருந்தார்.

சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் மிகப்பெரிய தூரம் கிடையாது. புலிகள் சாலையில் பறப்பதைவிட படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர் அப்படி போகவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆட்டோவில்தான் சென்னைக்கு எல்லோரும் ஒன்றாகத் திரும்பிவந்துள்ளனர் இந்த அமெச்சூர் சதிக்காரர்கள்.
மறுநாள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நளினியை சிவராசன் அவரது அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டுபோய் விட்டுள்ளார். இடையில் சுபா, நளினி, பத்மா ஆகியோருடன் சிவராசன் திருப்பதிக்கும் சென்று வந்துள்ளார். இவர்கள் என்ன பக்தி புலிகளா?

24-ம் தேதி செய்தித்தாளில் மனித வெடிகுண்டு தாணுவின் புகைப்படம் வெளிவந்து விடுகிறது. அது தடயவியல் வல்லுநர் சந்திரசேகர் லீக்-அவுட் செய்ததால் வந்தது. அதன் பிறகு சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் யாழ்ப்பாணம் தானே சென்றிருக்க வேண்டும்.

எதற்காக டெல்லி செல்ல நினைத்தார்?

ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு ஒருநாள் முன்பு சிவராசன், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த கனகசபாபதி என்பவரை டெல்லிக்கு அனுப்பி வாடகை வீடு பார்க்கச் சொல்லியிருந்தார். மற்றொரு குற்றவாளியான ஆதிரையையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார்.

இவர்கள் எதற்காக டெல்லி சென்றனர்? அப்போது இருந்த பிரதமரைக் கொல்லவா? அல்லது செங்கோட்டையைத் தகர்க்கவா? இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காரணம் இந்த விவகாரத்தில் புலிகளின் தொடர்புகள் சந்தேகத்துக்குரியவை என்பதை விளக்கத்தான்!

தாணு யார், பிரபாகரனுக்குத் தெரியுமா... இதனால் லாபம் அடைந்தவர்கள் யார்... சிவராசனை வேறு யார் பயன்படுத்திக் கொண்டது?


No comments:

Post a Comment