JNU நேரடி ரிப்போர்ட் 8:
http://www.vinavu.com/2016/04/01/jnu-ground-report-8/
ஜே.என்.யு வளாகத்தில் வினவு குழுவினர் பார்த்த மாணவர் விடுதி அறைகளிலேயே அந்த அறை வித்தியாசமாக இருந்தது. அங்கே புத்தகங்கள் கலைந்து கிடக்கவில்லை. படுக்கை வாரிச்சுருட்டி போடப்பட்டிருக்கவில்லை. மேசையின் மீது பேனாக்கள் சிதறிக் கிடக்கவில்லை. தரை சுத்தமாக பெருக்கித் துடைக்கப்பட்டிருந்தது. பயன்பாட்டுக்கு அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே அந்த அறையில் இருந்தன. அந்த அறை மிக நேர்த்தியாகவும் எளிமையாகவும் இருந்தது. அந்த அறையில் குடியிருந்தவர் பெயர் ஷிங்லாய். மணிப்பூர் மாநிலத்தின் நாகா இன மக்கள் பிரிவைச் சேர்ந்தவர் அவர்.
வட இந்தியர்கள் உங்களிடம் எப்படிப் பழகுகிறார்கள்?
எங்களை வினோதமாக பார்ப்பார்கள். சிலர் தங்களுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். ’சிங்க்கிஸ்’ என்று கேலியாக அழைப்பார்கள். எல்லாரும் அப்படித் தான் என்று சொல்லி விடமுடியாது. ஆனால், அநேகமானோர் அப்படித் தான். முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது. ஒரு கட்டத்தில் சண்டைக்குப் போகலாமா என்று கூட யோசித்திருக்கிறேன். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல ஒன்றை புரிந்து கொண்டேன்.
இவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது ஒரு முனையில் பஞ்சாபில் துவங்கி பெங்காலில் முடிகிறது.. இன்னொரு முனையில் உ.பி-யில் துவங்கி மஹாராஷ்டிராவில் எங்கோ முடிந்து விடுகிறது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லைக் கோடு. இதற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் இந்தியர்களாகவே கருதிக் கொள்வதில்லை. ஒரு கட்டத்தில், எனது தேசியத்தன்மை குறித்து நானே நீண்ட விளக்கங்கள் கொடுத்து புரியவைக்க வேண்டிய அவசியத்தை “சிங்க்கீஸ்” ரத்து செய்து விட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். இப்போதெல்லாம் அப்படிக் கூப்பிடுபவர்களை நோக்கி என்னால் புன்னகைக்க முடிகிறது. நீங்கள் கூட ஒரு ’மட்ராஸீ’ தானே?
இங்கே எழுப்பப்பட்ட கோஷங்கள் குறித்த உங்கள் கருத்து எதுவாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது. அதே போல் தான் இந்தியா என்கிற இந்த ஏற்பாட்டைக் குறித்து உங்கள் கருத்தையும் அனுமானிக்க முடிகிறது. எனினும், நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?
இந்தியா என்பது ஒரு கேலிக்கூத்தான நகைச்சுவை (Farce). இந்தியா என்பது சாவர்கருடையது. சங்பரிவாரங்களுடையது. எங்களுடையது அல்ல. நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார்கள் அல்லவா? இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றல்லவா பாட புத்தங்கள் நமக்குக் கற்பித்துள்ளன?
சரி. மங்கோலிய முகமும் உடலும் கொண்ட எனது தோற்றத்தை விடுங்கள். உணவுப் பழக்கம் குறித்து சொன்னேன். அதற்கும் மேலே எங்கள் சமூகத்தில் சாதி கிடையாது. எங்கள் திருமணங்களில் வரதட்சிணை கிடையாது. கணவனும், பிள்ளைகளும் தின்றது போக எஞ்சியதைத் தின்பதே ஒரு குடும்பப் பெண்ணுக்கு அழகு என்கிற பைத்தியக்காரத்தனங்கள் எங்களிடம் இல்லை. பெண்களுக்கு எங்கள் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் மிகவும் தனித்துவமானது. ஒரு குடும்பத்தின் தீர்மானங்களை எடுப்பதில் மட்டுமல்ல, எங்களது சர்ச்சுகளிலும், சமூக இயக்கங்களிலும் பெண்களின் குரலுக்கு முக்கியமான இடமுள்ளது. எங்களது பொருளாதார வாழ்வு வேறுபட்டது. எமது விவசாய முறை வேறு. இப்படிச் சொல்லத் துவங்கினால் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்களென்றால், ஒரு கோட்டைக் கிழித்து அதற்கு உள்ளே இருப்பவர்கள் அத்தனை பேரும் இந்தியர்கள் என்கிறீர்கள். இறைவனின் கருணையால் உங்கள் கோடு துணைக் கண்டத்துக்குள்ளே மட்டும் கிழிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காண்டிநேவிய காகாசியர்களும் ஆப்ரிக்க கருப்பர்களும் நல்வாய்ப்பாக தப்பித்துக் கொண்டார்கள்.
நாகாக்களின் தனித்துவம் குறித்து உங்களிடம் அதிக பெருமிதம் தெரிகிறது. நாகாக்கள் வெளிநபர்கள் குறித்த அச்சம் அல்லது வெறுப்பு கொண்டவர்கள் (Xenophobic) என்று சொல்லப்படுவது உண்மையா?
பழைய காலங்களில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நிச்சயமாக இல்லை
என்றால் நாகாக்களிடையே கலப்புத் திருமணங்கள் உள்ளதா – குறிப்பாக குக்கி இனத்தவருடன்?
நிறைய உள்ளது. நாகா குக்கி இனத்தவரிடையே மட்டுமல்ல, சிலர் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த மைத்தாய் இனத்தவரோடும் கூட திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் பழங்குடி இனத்தவர்கள். எட்ட நின்று பார்க்கும் போது கொஞ்சம் கரடு முரடாகத் தெரிவோம். பழகிப் பாருங்கள் உங்களுக்கே புரியும். நாகா மக்கள் யாரையும் எளிதாக நம்பி விடுவார்கள். ஒரு தமிழராக இருந்தாலும் எங்கள் நாகா பெண்ணை காதல் திருமணம் செய்வதை நாங்கள் தடுக்க மாட்டோம். எங்கள் பெண்ணை அவர் துன்புறுத்தாமல் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் வரை அந்தக் குடும்ப விவகாரத்தில் தலையிடவும் மாட்டோம். ஆனால், நீங்கள் திருமணம் செய்யப் போவது சுதந்திரமான சிந்தனைகள் கொண்ட நாகா பெண் என்பதை மறந்து விடாதீர்கள். அவள் ஒரு அன்பான அடிமையாக இருக்க மாட்டாள். இந்தியர்களால் எங்கள் பெண்களை சமாளிக்க முடியாது என்பதே எனது புரிதல்… சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.
ஒரு குடும்பத்தின் அங்கமாகவும் சமூகத்தின் அங்கமாகவும் நாகா பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம உரிமை குறித்து குறிப்பிட்ட ஷிங்லாய், பல்வேறு சமூக அமைப்புகள் பெண்களாலேயே முழுவதுமாக நடத்தப்படுகின்றது என்பதையும் குறிப்பிட்டார். குறிப்பாக நாகா தாய்மார்கள் சங்கத்திற்கு அவர்கள் சமூகத்தில் உள்ள செல்வாக்கைப் பற்றியும் குறிப்பிட்டார்.
வேறுபாடுகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். உங்களது விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்லுங்கள். கிரிக்கெட் பார்ப்பதுண்டா? இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் போது உங்களுக்கு அந்தப் பரபரப்பு இருக்குமா?
கிரிக்கெட்டா? அது மந்த புத்திக்காரர்களின் விளையாட்டு. அதனால் தானோ என்னவோ இந்தியர்களுக்கு அது மிகவும் பிடிக்கிறது. நாங்கள் கிரிக்கெட் பார்ப்பதும் இல்லை. விளையாடுவதும் இல்லை. அதே போல இந்தியாவின் மற்ற விளையாட்டு வெற்றிகளையும் தோல்விகளையும் உங்களைப் போல் உணர்வுப் பூர்வமாக அல்லாமல் ஒரு விளையாட்டு என்கிற அளவில் மட்டுமே பார்க்கிறோம். எங்கள் விளையாட்டுக்கள் மல்யுத்தமும் வில்வித்தையும் தான். இப்போது மேற்கத்திய கலாச்சார தாக்கத்தினால் கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. வாலிபால் மற்றும் பாஸ்கட்பால் கூட நிறைய பேரால் விளையாடப்படுகின்றது. பொதுவாக எங்கள் விளையாட்டுக்கள் உடல் வலிமையைச் சார்ந்ததாகவே இருக்கும்
ஆம்.. நாகா தற்காப்புக் கலை பற்றிய காணொளித் துண்டு ஒன்றைப் பார்த்திருக்கிறோம். கொடூரமான அசைவுகள் கொண்டதாக இருந்த நினைவு.
சரி தான். அலங்காரமான அசைவுகளும் நுணுக்கங்களும் குறைவாகவே இருக்கும்.. நேரடியாக உயிரைப் போக்கும் அசைவுகள் கொண்டதாகவும் இருக்கும். எங்களது பாரம்பரிய மல்யுத்தமும் அப்படித்தான்.. புள்ளிகள் எடுப்பதை விட எதிராளியின் எலும்பு இணைப்புகளை முறித்துப் போடுவதற்கு தான் வீரர்கள் முனைவார்கள். நண்பரே… நாங்கள் வேட்டைக்காரர்கள்… எங்களது சண்டைக் கலைகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்? ஆனால் அதெல்லாம் சில பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இப்போது நிறைய மாறியுள்ளது.. எங்களது தற்காப்புக் கலைகள் விளையாட்டின் அம்சங்களை நிறைய உள்வாங்கி இருக்கிறது.
உங்கள் பொழுது போக்கு பற்றிச் சொல்லுங்கள். பாலிவுட் சினிமாக்கள் பார்ப்பதுண்டா?
இந்தி சினிமாக்களை நாங்கள் விரும்புவதில்லை.. மொழி புரியாது என்பது ஒரு காரணம்.. அடுத்து பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும் காதல், குடும்பம் போன்ற உணர்ச்சிகள் குமட்டலை ஏற்படுத்துவதாக இருப்பது இன்னொரு காரணம். மற்றபடி ஹாலிவுட் சினிமாக்களும் இப்போது சமீபத்திய சில ஆண்டுகளாக கொரிய சினிமாக்களும் தான் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இந்தி தெரியாது என்றா சொல்கிறீர்கள்? உங்கள் மாநில கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாக அல்லவா கேள்விப்பட்டோம்?
ஆம் எட்டாம் வகுப்பு வரை இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், அது இந்தி மொழியில் ஆனா ஆவன்னா அளவுக்கு மேல் தெரிந்து கொள்ளப் பயன்படாது. எங்கள் மொழியின் கட்டுமானமே இந்திய மொழிகளுக்கு நேர் எதிரானது. எனவே எத்தனை ஆண்டுகள் படித்தாலும் அந்த மொழியே எங்கள் நாக்குக்கு விரோதமானது தான்
சரி, நாகா சமூகத்தில் உள்ள சொத்துடைமை மற்றும் விவசாய முறை பற்றி சொல்லுங்கள். உங்கள் சமூகத்தில் தனிச்சொத்துடைமை இல்லை என்று சிலர் குறிப்பிடுவது உண்மையா?
முற்றிலும் அப்படிச் சொல்ல முடியாது… எங்களிடம் நான்கு வகையான சொத்துடைமை வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு தனிநபருக்கும் தனியே சொத்து உண்டு. அது போக குடும்பத்திற்கான சொத்து, இனத்திற்கான (Clan) சொத்து மற்றும் கிராமத்திற்கான சொத்துக்களும் இருக்கின்றன.
குழப்பமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் வருமானம் எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது?
அதைப் புரிந்து கொள்ள நீங்கள் முதலில் எங்களது விவசாய முறையைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது விவசாயம் இடம்மாறும் சாகுபடி (Shifting Cultivation) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாக, எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் பத்து மலைகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மலையை சாகுபடிக்காக எங்கள் கிராம கவுன்சில் தேர்ந்தெடுக்கும். இது பிப்ரவரி மாதம் நடக்கும். தேர்தெடுக்கப்பட்ட மலையில் உள்ள மரங்கள் மற்றும் களைகளை தீயிட்டு எரிப்போம். முதல் மரத்தை வெட்டும் உரிமை கிராமத் தலைவருக்கே உண்டு. மரங்கள் எரிந்து சாம்பல் பரவிய பின், ஜூன் மாதம் விதைப்போம் ஆகஸ்டில் ஒரு முறை களையெடுப்போம். இடையில் ஜூலை மாதம் தொடங்கி பருவ மழை பொழியத் துவங்கும். செப்டெம்பர் இறுதியிலிருந்து நவம்பருக்குள் அறுவடை முடிந்திருக்கும்..
எங்களது விவசாயத்தில் பெரும்பாலும் நெல் சாகுபடிக்கு முதன்மையான இடம் உண்டு. அது தவிர வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்வோம். அறுவடை செய்த பின் விளை பொருட்களை ஊரில் பொதுவான இடத்தில் சேமித்து வைப்போம். சிலருக்கு நிலம் இருக்கும். சிலருக்கு நிலம் இருக்காது.. நிலம் வைத்துள்ளவர்கள் தங்களது சொந்த நிலத்தில் உழைத்தது போக கிராம நிலத்திலும், இனத்திற்கான நிலத்திலும் உழைக்க வேண்டும். நிலமற்றவர்கள் நிலவுடைமையாளர்களின் நிலங்களின் வேலை செய்வதோடு பொது நிலங்களிலும் வேலை செய்வார்கள். அறுவடை முடிந்த பின் விளைச்சல் எல்லோருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நிலவுடைமையாளர்களுக்கு மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் பங்கு கிடைக்கும். எனினும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகப் பெரியளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.
இந்த முறையினால் தான் எங்கள் சமூகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டையோ, ஏழைகளையோ, பிச்சையெடுப்பவர்களையோ பசியால் வாடுபவர்களையோ நீங்கள் காண முடியாது. எங்கள் உணவு முறை தனிச்சிறப்பானது.. பரந்து விரிந்த காடு எங்களுக்கு இருக்கிறது.. அதன் ஒவ்வொரு மரத்தின் இலைகளையும், பட்டைகளையும், வேரையும், எதற்காக எப்போது தின்ன வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். பிரதான உணவான அரிசியோடு சேர்த்து நிறைய பச்சை இலைகளுக்கும், இறைச்சிக்கும் இடமுண்டு. மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் விருப்பமான அசைவ உணவுகள். வேட்டையில் காட்டுப் பன்றிகளும், எருமைகளும் நிறைய கிடைக்கும்.
நாகா சமூக அமைப்பு பற்றிச் சொல்லுங்கள்.
நாகா ஒரு இனக்குழுச் சமூகம். ஒவ்வொரு கிராமத்துக்கும் கிராமத் தலைவர் இருப்பார். அவருக்கு வழிகாட்டுவதற்காக ஒரு கிராம கவுன்சில் இருக்கும். இந்தக் கவுன்சிலின் அதிகாரம் தான் உச்சபட்சமானது. அதே போல் நாங்கள் இனத்தால் ஒன்று என்றாலும் எங்களிடையே பல்வேறு மொழிகள் உள்ளன. கிட்டத்தட்ட 40 மொழிகள் நாகா மக்களிடையே உள்ளன. எங்கள் பக்கத்து கிராமத்தவர்கள் பேசும் மொழி எனக்குப் புரியாது. என்றாலும் எங்கள் அனைவரையும் மொழியால் இணைப்பது ஆங்கிலம் தான். தொன்னூறு சதவீதம் பேர் ஆங்கிலம் எழுத பேச படிக்கத் தெரிந்தவர்கள் தான்.
விவசாய முறை பற்றிச் சொன்னீர்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த விவசாய முறையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவே இல்லையா? உலகமயமாக்கத்தின் தாக்கம் எதுவுமே இல்லையா?
நிறைய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நான் குறிப்பிட்ட விவசாய முறை இப்போதும் உள்ளடங்கிய பகுதிகளில் பின்பற்றப்படுகின்றது. ஆனால், தற்போது நகரங்களின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலரும் பழங்கள், பூக்கள் போன்ற பணப்பயிர்களை விளைவிக்கின்றனர். முன்பெல்லாம் நாங்கள் அரிசிக்காக யாரையும் எதிர்பார்க்க மாட்டோம். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நாகா வாழ்க்கையில் பணம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. வசதி வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர். பல நாகா இளைஞர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்… இங்கே சீன உணவகங்களில் நீங்கள் பார்க்கிறவர்கள் எல்லாம் சீனர்கள் அல்ல, வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான். நாங்கள் மேற்கே வருவதைப் போல பீகாரிகள் கிழக்கே வருகிறார்கள். விவசாய கூலிகளாகவும், இன்னபிற வேலைகளிலும் பீகாரிகள் அதிகரித்து வருகிறார்கள்.
உலகமயமாக்கலுக்குப் பின் பணத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டீர்கள்.. அதன் பின்விளைவுகள் பற்றிச் சொல்லுங்கள்.
எங்கள் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. அங்கே திருட்டு என்பதை நாங்கள் முன்பெல்லாம் கேள்விப்பட்டதில்லை. எங்கள் வீடுகளுக்கு பூட்டுக்கள் கிடையாது. இப்போதும் கூட உள்ளொடுங்கிய கிராமங்களில் பூட்டாத வீடுகளைப் பார்ப்பீர்கள். அங்கே உள்ள கடைகளில் கடைக்காரர்கள் இருக்கமாட்டார்கள். நீங்களாகவே பணத்தை வைத்து விட்டுத் தேவையான பொருளை எடுத்துப் போகலாம். கேட்பதற்கு ஏதோ உட்டோபிய நகரத்தைப் பற்றிய வர்ணனை போல் தோன்றுகிறதல்லவா? ஆனால் இவையெல்லாம் உண்மைகள். இதோ உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே இந்த தோழர் இதையெல்லாம் நேரடியாகவே பார்த்திருக்கிறார். ஆனால்.. இப்போது நகரங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலைமை மாறி வருகிறது. திருட்டு அதிகரித்திருக்கிறது. பணம் தன்னோடு சேர்த்து பேராசையையும், களவையும் அழைத்து வந்துள்ளது.
சரி, அடுத்த கேள்வி. எங்கள் பகுதியில் இந்துத்துவர்கள் கிருத்துவ மதமாற்றத்தின் அபாயங்களைப் பற்றிச் சொல்வதற்கு வட கிழக்கு இந்தியாவையே உதாரணமாக காட்டுவார்கள்..
அப்படியா? எந்த மாதிரியான அபாயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்?
நாகா பிரிவினைவாத அமைப்புகளுக்கு துப்பாக்கி சப்ளையே சர்ச்சுகளின் மூலம் தான் நடக்கிறதாமே? கிருத்துவ மதத்திற்கு மாறி விட்டால் தேசத்தையே மதிக்காத போக்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்று விடும் என்பதற்கு நாகா பிரிவினைவாத அமைப்புகளே உதாரணம் என்கிறார்கள்
ஏசுவே.. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதி தங்களுக்குச் சொந்தமில்லாத தேசிய கற்பிதங்களை ஏன் மதிக்க வேண்டும்? இதில் மதம் எங்கே வந்தது? நாகா விடுதலை இயக்கங்கள் துப்பாக்கிகளுக்காக சர்ச்சுகளை ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சர்ச்சுகளை அவர்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தார்களென்றால் எப்போதோ வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நாங்கள் பெரும்பான்மையாக சி.என்.ஐ (தென்னிந்தியாவில் சி.எஸ்.ஐ) சர்ச்சுகளைச் சேர்ந்தவர்கள்.. கணிசமாக கத்தோலிக்கர்களும் உள்ளனர். விடுதலை இயக்கங்களின் பால் சர்ச்சுகளுக்கு அனுதாபம் உள்ளதே தவிர நேரடியாக கீழே இறங்கி ஆயுதங்களை கைமாற்றி விடுமளவிற்கு அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஏனெனில், இந்தியா முழுவதும் அவர்களுக்கு சொத்துக்களும், இன்னபிற நலன்களும் உள்ளன. எங்களை ஆதரிக்கப் போய் அவற்றையெல்லாம் இழப்பதற்கு சர்ச் என்பது முட்டாள்களின் கூடாரமா என்ன?
மற்றபடி நாகா வாழ்வில் கிருஸ்தவத்தின் பங்கு என்ன?
கிருஸ்தவம் அறிமுகமாவதற்கு முன் நாங்கள் இயற்கை வழிபாட்டாளர்களாக இருந்துள்ளோம். கிருஸ்தவம் நாகா சமூகத்திற்கு அறிமுகமான போது எங்களது கலாச்சார அடிப்படைகளை பெரிதும் மாற்றாமல் பல அம்சங்களை உட்செறித்துக் கொண்டது. உதாரணமாக எங்கள் பாரம்பரிய வழக்கங்கள், விழாக்கள்.. மற்றபடி மற்ற பகுதிகளில் சர்ச்சின் செல்வாக்கு எப்படியோ அப்படித்தான். பிறப்பு முதல் இறப்பு வரை சகலமும் சர்ச்சோடு பிணைந்தே இருக்கும்.
கடந்த இருபதாண்டுகளாக எல்லா மதங்களிலும் அதிதீவிர தூய்மைவாத போக்கு தலையெடுத்து வருகின்றது.. இசுலாத்தில் வஹாபியப் போக்கு, இந்துத்துவத்தின் எழுச்சி.. கிருஸ்தவத்தில் பெந்தெகொஸ்தேவினர் உள்ளார்கள்.. வட கிழக்கில் நாகாக்கள் இடையே பெந்தெகொஸ்தேவினரின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?
பெந்தெகொஸ்தே என்று மட்டும் சொல்ல முடியாது.. பொதுவாகவே இவாஞ்சலிஸ்ட் வகைப்பட்ட கிருஸ்தவ சபைகள் மெல்ல மெல்ல செல்வாக்குப் பெற்று வருகின்றன. கத்தோலிக்கர்களிடையே கூட ப்ரெஸ்பெடீரியன் என்ற ஒரு பிரிவு செல்வாக்கு பெற்று வருகின்றது. இவர்களை கத்தோலிக்க பெந்தெகொஸ்தே என்று சொல்லலாம். இவர்கள் யாருக்கும் பதிலளிக்கவோ கணக்குக் காட்டவோ தேவையில்லை. இவர்களைப் பொறுத்தவரை தங்களை கடவுளுக்கு நிகரான ஞானிகளாகவும் எதிரே அமர்ந்திருப்போரெல்லாம் சாத்தானுக்கு நிகரான பாவிகளாகவும் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் ஆபத்தான சக்திகளாக வளர்வதற்குரிய எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது – அதே நேரம் நான் பைபிள் சொல்லும் படைப்புக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கடவுள் மனிதனுக்கு மூளையைக் கொடுத்திருப்பதே எது சரி எது தவறு என்று பகுத்தறிவதற்காகத் தான். உழைக்காமல் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு மட்டும் இருந்தால் சாப்பாட்டு மேசை நிறைந்து விடுமா என்ன?
சரி, இந்திய அரசோடு நாகா போராளி இயக்கங்கள் செய்து கொண்டுள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து சொல்லுங்கள்
அதை அமைதி ஒப்பந்தம் என்று அழைக்க முடியாது.. இப்போதைக்கு அது அமைதி ஒப்பந்தத்திற்கான ஒரு வரைவுச் சட்டகம் தான். இந்தச் சட்டகத்துக்குள் இந்திய அரசு சொருகப் போவது ஒரு நாகாவின் புகைப்படத்தையா அல்லது மோடியின் புகைப்படத்தையா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. மேலும், நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பிரதமர் அல்ல. பிரதமரின் முன்னிலையில் ஒரு அதிகாரி தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஒருவேளை மோடியே கையெழுத்திட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
நீங்கள் மோடியின் மேல் நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிகிறதே..
நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ஜே.என்.யு வளாகத்தில் மோடிக்கு இப்படி ஒரு ஆதரவா? அதுவும் ஒரு நாகா இளைஞர் மோடியை ஆதரிப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது…
பலமாகச் சிரிக்கிறார்.. மோடி ஆதரவு என்பதை அப்படியே இந்துத்துவ ஆதரவு என்று புரிந்து கொள்ளப் போகிறீர்கள். இந்துத்துவ பாசிசம் என்கிற கருத்தியலில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.. ஆனால், இதில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒரு விசயம் இருக்கிறது. இதே காங்கிரஸ் அரசாங்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் மெனக்கெட்டு நாகாக்கள் என்பவர்கள் யார் தெரியுமா? என்பதில் ஆரம்பித்து நாங்கள் தனித்துவமானவர்கள் என்பதை புரியவைக்க மொத்த கதையையும் விளக்க வேண்டும். அவர்கள் எல்லா கதைகளையும் கேட்டு விட்டு, கடைசியில்.. ‘இத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் நாமெல்லாரும் இந்தியர்கள் தானே’ என்பார்கள்.. மீண்டும் வேறு விதமாக புரியவைக்க மெனக்கெட வேண்டும்.. இந்துத்துவ சக்திகளிடம் அந்த சங்கடங்கள் இல்லை.. ‘ஏய், இதோ பார் நாங்கள் மாடு தின்போம், எங்களிடம் சாதி இல்லை’ என்று மட்டும் சொன்னால் போதும். ‘அட, இது பாரதிய கலாச்சாரம் இல்லையே’ என்று கதையின் விடுபட்ட பகுதிகளை அவனே நிரப்பிக் கொள்வான். இந்திய தேசியம் என்பதற்கு அவர்கள் சொல்லும் எந்த வரையறைக்குள்ளும் நாங்கள் இல்லாதிருக்கும் ஒரே தகுதி போதும் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு. ’நாங்கள் இந்தியர்களில்லை. கெடு வாய்ப்பாக எங்கள் நிலத்தின் மீது நீங்களே கோடு கிழித்து இந்தியாவாக்கி விட்டீர்கள். என்ன செய்யலாம் சொல்லுங்கள்’ என்று நேரடியாக விசயத்திற்குப் போய் விடலாம். சொல்லப் போனால் இந்துத்துவம் அதிகாரத்தில் இருப்பது பொதுவான நோக்கில் தீமையானது என்றாலும், பிரிவினை உரிமை கோரும் மக்களின் பணிகளை அவர்கள் சுலபமாக்குகிறார்கள்.
சரி நாகா – குக்கி மோதல்கள் குறித்து சொல்லுங்கள்?
நாகா குக்கி மோதல்கள் மட்டுமல்ல.. வடகிழக்கில் உள்ள இனக்குழுக்களுக்கு இடையே சண்டைகள் உள்ளேயே நடக்கும் மோதல்கள் மொத்தமும் இந்திய உளவுத்துறையின் ஏற்பாடு தான். சமீபத்தில் இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார். அதில், ‘நாங்கள் நாகாக்களின் நிலங்களில் திட்டமிட்ட ரீதியில் குக்கி இனத்தவரைக் குடியமர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளோம். இனி நாகாக்கள் விடுக்கும் சவாலை குக்கி இனத்தவரே எதிர்கொண்டு விடுவார்கள்’ என்றுள்ளார். ஆனால், நாகா குக்கி மோதல்கள் இப்போது பழங்கதைகள் ஆகிவிட்டன. நாங்கள் அந்த கசப்பான நினைவுகளை மறக்கத் துவங்கி விட்டோம். சமீபத்தில் கூட ஒரு குக்கி இளைஞன் இராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாகா கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள்.
முழுக்க முழுக்க இந்திய அரசின் சதி மட்டும் தான் காரணமா? நீங்கள் எந்த வகையிலும் பொறுப்பில்லையா?
அந்த மோதல்களுக்கு ஏற்பாடு செய்து களம் அமைத்துக் கொடுத்தது இந்திய உளவுத்துறை என்றாலும் நாங்கள் இருவருமே அந்தச் சூழலுக்குப் பலியாகிப் போனோம். இப்போது நிதானமாக வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது மிகவும் வெட்கமாக உணர்கிறேன். குறுகிய இனப் பெருமைக்காக எதிரிக்கு எதிராக பிளவுபட்டு நின்று மோதிக் கொண்டு செத்து மடிந்திருக்கிறோம் என்பது அவமானகரமானது.. ஆனாலும், வரலாறு வரலாறு தானே? இனிமேல் நடந்தவற்றைத் திருத்தி எழுதவா முடியும். கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டியது தான்.
மைத்தாய் இனத்தவரோடு உங்கள் உறவு எப்படி உள்ளது. குறிப்பாக ஐரோம் சர்மிளாவின் போராட்டம் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள். நாகா இனத்தவர்கள் ஐரோம் சர்மிளாவிற்கு பெரியளவில் ஆதரவளித்து களமிறங்கியதாக தெரியவில்லையே?
நாகா குக்கி இனத்தவர்கள் பழங்குடியினர்.. நாங்கள் மலைவாசிகள். எங்களுக்குள் சமூக அமைப்பில் இருந்து பல அம்சங்கள் ஏறத்தாழ ஒத்துப் போகும். ஆனால், மைத்தாய் சமவெளி மக்கள். இவர்கள் பெங்காலி வகைப்பட்ட இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். மைத்தாய்களிடையே சாதி உள்ளது. சரியாக சொல்லப் போனால், இத்தனை ஆண்டுகளாகியும் மைத்தாய் மக்கள் எங்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள். எங்களுக்குள் கலப்புத் திருமணங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன. குக்கிகளைப் போல் அன்றி மைத்தாய் மக்களிடம் நாங்கள் நெருங்குவதற்கான சமூக வாய்ப்புகளே குறைவு தான். ஐரோம் சர்மிளா ஒரு மைத்தாய் என்றாலும் அவரது போராட்டத்தை நாங்கள் அனுசரணையாகவே பார்க்கிறோம். இருந்தாலும், அவருக்கு இந்தியா முழுவதும் கிடைத்திருக்கும் கவனத்தை எங்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக பயன்படுத்தவில்லை என்கிற் வருத்தம் எங்களுக்கு உண்டு.
மைத்தாய் இனத்தவரோடு இணைந்து போராட்டங்கள் நடக்கின்றனவா?
இல்லை. நாங்கள் இன்னும் எமது பழைய கசப்புணர்வுகளை மறக்கவில்லை.
சற்று முன்பு தான் சொன்னீர்கள், எதிரிக்கு எதிரே இணைந்து போராடாமல் உள்ளடிச் சண்டைகளின் பாதிப்பு குறித்து. இவ்வளவு ஒற்றுமையின்மைகளை வைத்துக் கொண்டு உங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்றா கருதுகிறீர்கள்?
முடியாது என்பதே தர்க்கரீதியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் விடை. மட்டுமின்றி எங்களது வரலாற்று அனுபவங்களும் அதே விடையைத் தான் தருமின்றன. எனினும், எதார்த்தமான களநிலவரம் நாங்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு எங்களுக்குள் அடித்துக் கொள்வதாகத் தான் உள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல, வலுவான எதிரியை எதிர்த்து போராடும் ஒடுக்கப்படும் பிரிவினர் ஒவ்வொருவரும் இவ்வாறு பிரிந்தே கிடக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட அப்படித்தான் இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை இடதுசாரிகள் எழுச்சி பெற்று போராடும் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைப்பது தான் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒரு தீர்வாக நம் கண் முன்னே இருக்கிறது.. அதுவரை என்ன செய்வது?

No comments:
Post a Comment