Monday, October 9, 2017

மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதிதிராவிடர்களை இசுலாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை

தோழர்.. Palanivel Manickam
Via Facebook
2017-10-09

ஆதிதிராவிடர்களை நான் இசுலாம் மதத்தில் சேருங்கள் என்று சொல்வதற்காக அநேகம்பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை. சொல்வதைக் கிரகிக்கக்கூடிய சக்தியும் இல்லை.

மோட்சம் அடைவதற்காக என்று நான்  ஆதிதிராவிடர்களை இசுலாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை. அல்லது ஆத்மார்த்தத்திற்கோ, கடவுளை அடைவதற்கோ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதிதிராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாகிரகம் செய்வது போலவே இசுலாம் கொள்கையைத் தழுவுவது என்பது ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்வேன்.

கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னவோ, அவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதையெல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கிறது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது இசுலாம் மதமும் ஒழியும்.

நான் இசுலாம் மதக்கொள்கைகள் முழுவதையும் ஒப்புகொண்டதாகவோ, அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற நடவடிக்கைகளை இசுலாம் மதத்திலும் செய்கிறார்கள்.

சமாதி வணக்கம், பூசை, நெய்வேத்தியம் முதலியவைகள் இசுலாம் மதத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல், இசுலாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கிறது. மற்றும் நாகூர் முதலிய ஸ்தல விசேஷங்களும், சந்தனக்கூடு, தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன. இவை குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. ஆனால் இவை ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ள முடியும்.

குடிஅரசு 2.8.1931.

No comments:

Post a Comment