Thursday, October 19, 2017

ஆரியத்துவாவின் தலித் பாசம்

சுப. உதயகுமாரன்
Via Facebook
2017-07-16

ஆரியத்துவாவின் தலித் பாசம்

இந்தியாவில் மட்டும்தான் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என பல நூல்களை தாங்களே எழுதிவைத்துக்கொண்டு, அவையனைத்தும் தங்களை உயர்ந்தவர்கள், மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என நிறுவுகின்றன என்றெல்லாம் கதை சொல்லி, சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தை தங்கள் கைகளில் தக்கவைத்துக்கொள்ளும் சூழ்ச்சி நடந்தது. பார்ப்பனர்கள் கொண்டிருந்தது, இன்னும் கொண்டிருப்பது, ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கு ஆணையிடும், ஆலோசனைகள் சொல்லும் திரை மறைவு அதிகாரம்; தங்கள் செயல்களுக்கு எந்தவித நேரடிப் பொறுப்பும் ஏற்கவேண்டியத் தேவையற்ற, ஏற்கத் தவறுகிற, பொறுப்பில்லா அதிகாரம்; சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமான இரட்டைவேட அதிகாரம். ஆரியத்துவ அமைப்புக்களின், ஆளுமைகளின் தீண்டாமை பற்றிய நிலைப்பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் துவங்கப்பட்ட காலத்தில் கோல்ஹாபூர் அருகேயுள்ள ககல் எனும் சிற்றூரில் நடந்த பயிற்சியில் (ஷாகா) கலந்துகொண்டு இயக்கக் கொடியை தொண்டர்களுக்கு வழங்குவதற்காக நிறுவனர் கேசவ் பாலிராம் ஹெட்கேவார் சென்றிருந்தார். நிகழ்ச்சி நடக்கவிருந்த கோவிலின் அருகே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் திரண்டவுடன், தீண்டத்தகாத சாதிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் கோவிலுக்குள்ளே வரக்கூடாது என்று பார்ப்பன பூசாரிகள் தடுத்தனர். இது ஹெட்கேவார் கவனத்துக்குப் போயிற்று. “எல்லா இந்துக்களும் ஒருவரே என்பதுதான் எனது செயல்பாட்டின் அடிப்படை” என்று சொல்லியவாறே கோவிலுக்குள் நுழையாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். அவர் தீண்டாமையை தட்டிக் கேட்கவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான கோவில் தடையை மீற முற்சிக்கவில்லை. பழமைவாதத்தை எதிர்த்து நிற்கவில்லை. நயவஞ்சகத்துடன் நடையைக் கட்டிவிட்டார் (ஆர்கனைசர், ஏப்ரல் 2, 1962).

இந்து மகாசபாவின் தலைவர் வி. டி. சவர்க்கர் ஆர்யத்துவ சக்திகளின் எண்ணவோட்டத்தை இன்னும் ஆழமாக விவரிக்கிறார்:
“தீண்டத்தகும் இந்துக்களைப் போலவே, தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களும் தீண்டாமை எனும் பாவச்செயலுக்குப் பொறுப்பானவர்கள் என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தப் பாவம் நம் எல்லோருக்கும் பொதுவானது; எனவே நாம் அனைவரும் கரம்கோர்த்து இந்த சாபத்தைக் களைவதற்கு பெரு முயற்சிகள் எடுக்க உறுதியேற்போம். இதற்கிடையே நமது சனாதன சகோதரர்கள் ஒன்றை உறுதியாக நம்பலாம்: அதாவது பொது வாழ்க்கையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் தவிர்த்து, இந்து மதத்தில் எந்தப் பிரிவுக்குள்ளும் இந்து மகாசபா தீண்டாமை உள்ளிட்ட மத சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக சட்டரீதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.” “தீண்டாமையை விலக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் அவ்வப்போது தெளிவு படுத்தப்படும்” என்றார் சவர்க்கர் (1939-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்து மகாசபாவின் 21-வது மாநாட்டில் ஆற்றிய தலைமை உரை).

ஹெட்கேவார் இறந்ததும் 1940-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற மாதவ் சதாசிவ் கோல்வால்கர் என்பவரும் இதே மாதிரிதான் சிந்தித்தார், செயல்பட்டார். அவர் சொன்னார்:
“இந்தப் புண்ணிய பூமியில் ஆகக்கூடுதலான பொருள் செறிவோடும், தூய்மையான ஆன்மிகச் சிறப்போடும் வாழ்ந்து நாங்கள் மாபெரும் தர்மத்தை கட்டமைத்தோம். இந்தக் கூடுகையில் மாபெரும் பேரரசுகளை நிறுவ முயற்சித்தோம், நன்கு வரையறுக்கப்பட்ட சமூகத்தில் மக்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு தனி நபரையும் மகிழ்வுறச் செய்ய, தேவைகளின்றி வாழச் செய்ய, ஒவ்வொருவர் அறிவுக்கும், விருப்பத்துக்கும், நம்பிக்கைக்கும் ஏற்றவாறு உயர்ந்த தத்துவார்த்த, ஆன்மீக அமைதியைப் பெறும் வாய்ப்புக்களை உருவாக்கினோம். இந்த நடவடிக்கையில் தனிநபர் தூய்மை, புனிதம், அன்பு, சேவை, தியாகம், சுயநலமின்மை, பக்தி, அர்ப்பணிப்பு போன்ற உயர் லட்சியங்களை வகுத்தோம்” (நவம்பர் 2, 1948 தேதியிட்ட அறிக்கை).

சாதியக் கட்டமைப்பையும், தீண்டாமையையும் ஆரியத்துவ அமைப்புக்களும், ஆளுமைகளும் எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதற்கு 1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் பேசியப் பேச்சு சிறந்த எடுத்துக்காட்டு. “அரிசனங்களின் மீதான கொடுமைகள் எப்போது முடிவடையும்?” என்கிற தலைப்பில் அவர் பேசினார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நத்வாரா கோவிலில் “அரிசன” மக்களை உள்ளே நுழைய விடவில்லை. வாஜ்பாய் அரிசனங்களின் மற்றும் பழங்குடி மக்களின் பாதுகாப்பு பற்றி நீட்டிமுழக்கிவிட்டு, மற்றவர்கள் போலவே கதையைத் திரித்தார்:
“ஒரு கோவில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டுமே என்று சொல்லி அதன் வாசலை அடைத்துவைக்க அனுமதிக்க முடியாது. ஆனால் மரியாதைக்காக சில வரைமுறைகள் இருந்தால், அது எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும். ஸ்ரீநாத் கோவிலுக்குள் நுழைய நூலில் கட்டப்பட்ட ருத்ராட்சம் அணிவது அவசியமென்றால், அது வேறு விடயம்.”

“நாம் எந்த வேலையைத் தேர்வு செய்கிறோமோ, அதுவே நமது வர்ணமாகிறது. நாம் தேர்ந்தெடுக்கும் வேலை அவரவர் குணநலன்கள், நடவடிக்கைகள், இயற்கையைப் பொறுத்து அமைகின்றன; இவை எல்லோருக்குள்ளும் ஒன்று போல இருப்பதில்லை” என்றும் வாஜ்பாய் விவரித்தார். உண்மையற்ற, வார்த்தை ஜாலமிக்க அந்த உரையின் இறுதியில் அவர் கேட்டார்: “இந்த விடயத்தில் அரசின் பொறுப்பு என்ன? காவல்துறையின் பொறுப்பு என்ன?” தனது கட்சியின் பொறுப்பு என்னவென்றோ, அதன் சகோதர நிறுவனங்களின் பங்கு என்னவென்றோ வாஜ்பாய் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

பார்ப்பனிய அரசியல் அதிகாரம் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு சற்றே மாறுபட்டுத் தொடர்கிறது. தங்களின் அதிகாரத்தை வெளிப்படையாகத் திமிருடன் நிறுவுகிறார்கள். அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தோழர் மதிமாறன் ஒரு கருத்தைச் சொன்னதும், அவரை வெளிப்படையாக அதட்டுகிறார்கள், மிரட்டுகிறார்கள், அருவருப்பாகத் திட்டுகிறார்கள். பார்ப்பனர்கள் மீது கிரிமினல் வழக்குகளேக் கிடையாது என்று புதிய புனித வரலாறு எழுதுகிறார் ஒரு சிரிப்பு நடிகர்.

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC) சார்பாக தோழர் மதிமாறனுக்கு ஆதரவு தெரிவிக்கவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பனர்கள் சிலரை கண்டிக்கவும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் நுழைந்த ஓர் இளம்பெண் “நானும் பாப்பாத்திதான், அதனால் என்ன?” என்று சாதிவெறியோடு கத்துகிறார்.

“உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு” என்கிற தலைப்பில் பார்ப்பனீயச் சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதி எனது கருத்துக்களை “அசட்டுத்தனம், முதிராநாஸிஸம், வெறுப்புக்கூச்சல்கள்” என்று பலவாறாகச் சாடுகிறார். திரை மறைவு அதிகாரம் திரையை மெல்ல உயர்த்திப் பார்க்கிறது. பொறுப்பில்லா அதிகாரம் பொறுப்பில்லாமல் பேச, எழுத, இயங்கத் துவங்குகிறது. இரட்டைவேட அதிகாரம் தனது உண்மையான பாசிச இயல்பை மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறது.

தலித் ஜனாதிபதி வருகிறார் பராக்!

https://m.facebook.com/story.php?story_fbid=1601578593199178&id=100000411583309

No comments:

Post a Comment