Ravishankar ayyakkannu
Via Facebook
2017-10-09
*கேள்வி*
நிலவேம்பு/பப்பாளி ஆறுதல் மருந்து தான், அதில் மருத்துவ குணங்கள் இல்லை என்கிறீர்கள். ஆனால், அதை நானே குடித்தேன். எனக்கு #டெங்கு சரியானது. மருத்துவமனையில் மருத்துவர்களே நிலவேம்பு/பப்பாளி சாறு குடிக்கச் சொல்கிறார்கள். இதனை எப்படி புரிந்து கொள்வது?
*பதில்*
டெங்கு முதலிய பல்வேறு வைரசு மூலமான காய்ச்சல் நோய்கள் பெரும்பாலானோருக்குத் தானாகவே குணமாகக் கூடியது தான். உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் என்று மருத்துவரிடம் போனால், இது வைரசு காய்ச்சல், ஒரு வாரத்தில் தானாகவே குணமாகும், அதற்குப் பிறகும் நீடித்தால் வாருங்கள் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். காய்ச்சலால் வரும் உடல்வலிக்கு மட்டும் paracetamol மருந்து தருவார்கள்.
ஆறுதல் மருந்து தருவதும் நவீன அறிவியல் மருத்துவத்தின் ஒரு பகுதி தான். எனவே, தானாகவே நோய் குணமாகும் நேரத்தில் நீங்கள் நிலவேம்பு/பப்பாளி சாறு குடித்தால், அதன் காரணமாகத் தான் நோய் குணமாகியது என்று உறுதியாகச் சொல்வதற்கு இடம் இல்லை. அவ்வாறு இது நோயைக் குணப்படுத்தும் என்றை நிறுவுவதற்கு முறையான அறிவியல் ஆய்வுகள் தேவை. முதலில் ஆய்வகத்தில் சோதனைத் தட்டுகளில் நிறுவி, பிறகு எலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளில் சோதனை செய்து, அதன் பிறகு பல்வேறு கட்ட மனிதச் சோதனைகளைக் கடந்து தான் மருந்து என்று பரிந்துரைக்கும் நிலைக்கு வர முடியும். இது குறைந்தது 10 முதல் 20 ஆண்டுகள் எடுக்கக் கூடிய ஒரு சோதனை முறை.
நில வேம்பின் அறிவியல் பெயர் Andrographis paniculata.
இதன் டெங்கு ஒழிப்பு குணங்கள் குறித்த ஆய்வுகளை Google Scholar தளத்தில் தேடிப் பாருங்கள்
https://scholar.google.co.in/scholar?hl=en&as_sdt=0%2C5&q=Andrographis+paniculata+dengue&btnG=
ஒரு சில முதற்கட்ட ஆய்வுகள் நிலவேம்புக்கு டெங்கு ஒழிப்பு குணங்கள் இருக்கலாம், மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனவே ஒழிய இதனையே மருந்தாகப் பரிந்துரைக்கும் நிலை இன்னும் வரவில்லை.
ஒரு செடியில் மருத்துவக் குணம் இருக்கிறது என்பது வேறு. அதுவே மருந்து என்பது வேறு. எடுத்துக்காட்டுக்கு, எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று வகுப்பறையில் பாடம் நடத்தலாம். ஆனால், car batteryஐக் கழற்றி வைத்து விட்டு எலுமிச்சம் பழ மூட்டையை வைத்து வண்டி ஓட்ட முடியாது.
செடி இயற்கையானது. அதைக் குடித்தால் எந்தப் பக்க விளைவும் வராது என்று எண்ணுவது தவறு. ஒருவருக்கு மருந்தாகும் ஒரு மூலக்கூறு அனைவருக்கும் ஒத்து வரும் என்றும் சொல்ல முடியாது. மேயோ மருத்துவமனை வெளியிட்டுள்ள நூற்குறிப்பு மாசமாக உள்ள பெண்கள் நிலவேம்பு அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், அது கருவைக் கலைக்கும் என்கிறது.
According to the Mayo Clinic Book of Alternative Medicine, "A specific product (andrographis combined with Eleutherococcus senticosus) may shorten the duration and lessen the symptoms of common cold." It also says, "Pregnant women shouldn't use andrographis because it could terminate pregnancy. https://en.wikipedia.org/wiki/Andrographis_paniculata#Medical_use
வெளிநாட்டுக் கம்பெனிக்காரன் நம்மைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துகிறான் என்று அலறும் ஆட்கள், எந்த வித ஆய்வும் இன்றி கண்ட கசாயத்தைக் குடிக்கச் சொல்வது ஏற்புடையதா?
ஆகவே, நிலவேம்பு, பப்பாளி முதலியன டெங்குவைத் தடுக்கும் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக, அது ஒரு சிலருக்கு நோயை இன்னும் தீவிரப்படுத்தி விடும் ஆபத்தும் இருக்கலாம். போலியோ வைரசுக் காய்ச்சலுக்கே இன்னும் எந்த மருந்தும் இல்லை. தடுப்பூசி தான் உள்ளது. அதாவது, தடுப்பூசி போட்டால் தப்பலாம். ஆனால், போலியோ வந்த பிறகு குணப்படுத்த மருந்து இல்லை.
எனவே, காய்ச்சல் வந்தால் படித்த மருத்துவர்களை நாடுங்கள். அவர்கள் தரும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். அவர்கள் பிழையான மருத்துவம் பார்த்தால் சட்டத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை உண்டு. ஏமாற்று மருத்துவ ஆட்களிடம் இந்தப் பாதுகாப்பு இல்லை.
No comments:
Post a Comment