Monday, October 9, 2017

பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்கர் எழுதிய ஒரு கடிதத்தின் தமிழாக்கம்

Muralidharan Kasi Viswanathan
Via Facebook
2017-10-09

தனது நடவடிக்கைகளுக்காக 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 1911ல் அந்தமானில் உள்ள செல்லுலார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார் வி.டி. சாவர்கர். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென உடனே அரசுக்கு மனு செய்தார்.  பிறகு 1913ல் பல முறை கடிதம் எழுதினார். முடிவாக 1921ல் இந்தியச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர், 1924ல் விடுதலை செய்யப்பட்டார். இனிமேல் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடமாட்டேன்; ஆங்கில அரசுக்கு விசுவாசமாக இருப்பேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை கிடைத்தது. அதன்படியே கடைசிவரை நடந்துகொண்டார்.

இந்த மனிதரை ஆதர்ஷ புருஷராக கொண்டாடுபவர்கள், பெரியாரைத் தூற்றுகிறார்கள்.  பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்கர் எழுதிய ஒரு கடிதத்தின் தமிழாக்கம் கீழே. கடைசி சில பத்திகள் மிக முக்கியமானவை.

To: The Home Member of the Government of India

தங்களது அன்புகூர்ந்த பரிசீலனைக்காக பின்வரும் இரு தகவல்களை முன்வைக்க அனுமதிக்க இறைஞ்சுகிறேன்:

(1) 1911 ஜூனில் நான் இங்கே வந்தபோது, நானும் என் கட்சியைச் சேர்ந்த தண்டனைக் கைதிகளும் தலைமை ஆணையரின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  அங்கே நான் “D” வகை கைதியாக, அதாவது அபாயகரமான கைதியாக வைக்பபடுத்தப்பட்டேன்.  அதன் பிறகு, அடுத்த ஆறு மாதங்கள் தனியறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.  மற்ற தண்டனைக் கைதிகள் இந்த தண்டனைக்கு உள்ளாகவில்லை.  அங்கே எனக்கு கயிறு திரிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. இதில் என் கைகள் எல்லாம் புண்ணாகி, ரத்தம் வடிந்தது.  பிறகு, சிறையிலேயே மிகக் கடுமையான தண்டனையான செக்கிழுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.  இந்த காலகட்டம் நெடுக, இந்த ஆறு மாதம் முடியும்வரையும் என் நடத்தை மிகச் சிறப்பானதாகவே இருந்தது. இருந்தபோதும் நான் சிறையிலிருந்து அனுப்பப்படவில்லை. என்னுடன் வந்தவர்கள் அனுப்பப்பட்டுவிட்டனர்.   அப்போதிலிருந்து இன்றுவரை, என் நடத்தையை எவ்வளவு நல்லபடியாக வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு நல்லபடியாக வைத்திருக்க முயற்சித்துவருகிறேன்.

(2) நான் தகுதி உயர்வுக்காக விண்ணப்பித்தபோது, நான் சிறப்பு நிலைக் கைதி என்பதால் என் தகுதி உயர்த்தப்பட மாட்டாது எனக் கூறப்பட்டது.  எங்களில் யாராவது நல்ல உணவோ, சிறப்புச் சலுகையோ கேட்டால் "நீங்கள் சாதாரண தண்டனைக் கைதிகள். மற்றவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ, அதைத்தான் சாப்பிட வேண்டும்" என்று சொல்லப்படும். ஆகவே, எங்களை மோசமாக நடத்துவதற்காக மட்டுமே சிறப்பு நிலை கைதியாக வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை யுவர் ஆனர், நீங்கள் பார்க்க முடியும்.

(3) இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியில் அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், என்னையும் விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகிறேன். நான் இதுவரை இரண்டு தடவையோ, மூன்று தடவையோ வழக்குக்குள்ளாகியிருந்தும் விடுவிக்கப்படவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் வழக்குக்குள்ளானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  என்னை விடுதலை செய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டபோது, வெளியில் இருந்த அரசியல் கைதிகள் பிரச்சனை செய்து, உள்ளே வந்தபோது நான் அவர்களுடன் சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டேன்.

(4) நான் இந்தியச் சிறைகளில் இருந்திருந்தால், எனக்கு நல்ல தண்டனைக் குறைப்பு கிடைத்திருக்கும். வீட்டிற்கு இன்னும் அதிக கடிதங்களை எழுதியிருப்பேன். என்னைப் பார்க்கவும் ஆட்கள் வந்திருப்பார்கள்.  சாதாரணமான வகையில், இங்கு நாடு கடத்தப்பட்டிருந்தால் இந்நேரம் இந்தச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பேன்.  ஆனால், இந்தியச் சிறைகளில் இருப்பதால் கிடைக்கும் வசதிகளும் கிடைக்கவில்லை; இங்கே கொண்டுவரப்படுவதால் கிடைக்கும் சலுகைகளும் இல்லை. ஆனால், இரு இடங்களில் உள்ள சிரமங்களையும் நான் அனுபவிக்கிறேன்.

(5) ஆகவே, யுவர் ஆனர், என்னை இந்தியச் சிறைக்கு அனுப்புவதன் மூலமோ, அல்லது நாடு கடத்தப்பட்ட கைதியாக நடத்துவதன் மூலமோ இந்த மாறுபட்ட நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.  உலகின் சுதந்திரமான நாடுகளில் உள்ள நாகரீகமான அரசாங்கங்களில் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்ற சிறப்புச் சலுகை எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.  ஆனால், மிக மோசமான கைதிகளுக்கும் குற்றம் செய்வதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கும் வழங்கப்படுவதைப் போன்ற சலுகையாவது வழங்கக்கூடாதா? இந்தச் சிறையில் என்னை நிரந்தரமாக அடைத்துவைப்பது, வாழ்க்கை குறித்தும் நம்பிக்கை குறித்தும் நிராசையை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு சிறையில் அடைக்கப்படுபவர்களின் விஷயம் வேறு. ஆனால் சார், நான் 50 ஆண்டு கால சிறை தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறேன். சிறை வாழ்க்கையை எளிதாக்க மிக மோசமான தண்டனைக் கைதிகளுக்குக்கூட கிடைக்கும் சலுகைகள்கூட  எனக்கு மறுக்கப்படும் நிலையில், இம்மாதிரியான தனிமைச் சிறையில் நாட்களை நகர்த்த எனக்கு எப்படி ஆன்ம சக்தி கிடைக்கும்? ஒன்று, என்னை இந்தியச் சிறைக்கு அனுப்பிவிடுங்கள். அங்கு எனக்கு தண்டனைக் குறைப்பும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பார்வையாளர்களைச் சந்திக்கும் வசதியும் கிடைக்கும். துரதிர்ஷ்டவசமாக இம்மாதிரி சிறைப்பட்டவர்களுக்கு அவ்வப்போது அன்புக்குரியவர்களைப் பார்ப்பதென்பது எவ்வளவு பெரிய வரம்? எல்லாவற்றுக்கும் மேலாக, 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படும் தார்மீக ரீதியான உரிமை - சட்ட ரீதியான உரிமை இல்லை என்றாலும் - கிடைக்கும்.  மேலும், கூடுதலாகக் கடிதங்களைப் பெற முடியும். வேறு சில சலுகைகளும் கிடைக்கும். 
அப்படியில்லாவிட்டால், இங்கிருக்கும் பிற தண்டனைக் கைதிகளைப் போல,  ஐந்தாண்டுக்கு ஒரு முறை சிறை விடுப்பு அளித்து என் குடும்பத்தினரை இங்கு வரவழைத்து சந்திக்க அனுமதிக்க வேண்டும்.  இவை வழங்கப்பட்டால், எனக்கு ஒரே ஒரு குறை மட்டுமே இருக்கும். அதாவது, என் தவறுகளுக்கு மட்டுமே என்னைப் பொறுப்பாக்க வேண்டும். மற்றவர்களின் தவறுகளுக்கு அல்ல. ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையான இதனை நான் கேட்டு வாங்க வேண்டியிருப்பது பரிதாபம்தான்.
முடிவாக, 1911ல் நான் மன்னிப்புக் கேட்டு எழுதிய மனுவைப் பரிசீலித்து, அதனை இந்திய அரசுக்கு அனுப்பிவைக்க முடியுமா யுவர் ஆனர்?

இந்திய அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,  அரசின் இணக்கமாகச் செல்லும் கொள்கை ஆகியவை அரசியல் சாஸனப் பாதையை மீண்டும் திறந்திருக்கின்றன.
தற்போது, இந்தியாவின் நலனையும் மனிதத் தன்மையை மனதில் கொண்டிருப்பவன் எவனும் குருட்டுத்தனமாக முள் நிரம்பிய பாதையில் இறங்க மாட்டோம். 1906-07ல் நிலவிய நிராதரவான சூழல் எங்களை அமைதியும் வளர்ச்சியும் கூடிய பாதையிலிருந்து வழிமாறச் செய்துவிட்டது.
ஆகவே இந்த அரசானது, அதற்குப் பலவிதத்திலும் நன்மை பயக்கக்கூடியது என்பதை மனதில் கொண்டு, என் மீது கருணை கொண்டு விடுதலை செய்தால், நான் அரசியல்சாஸன ரீதியான வளர்ச்சியை மட்டுமே ஆதரிப்பவனாக இருப்பேன். அம்மாதிரியான வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆங்கில அரசுக்கு விசுவாசியாக இருப்பேன்.

நாங்கள் சிறையில் இருக்கும்பட்சத்தில், இந்தியாவில் உள்ள மாட்சிமை தாங்கிய அரசரின் ஆயிரக்கணக்கான விசுவாசமிக்க பிரஜைகளின் இல்லங்களில் நிஜமான மகிழ்ச்சி இருக்காது.  தண்ணீரைவிட ரத்தம் அடர்த்தியானதுதானே. ஆனால், நாங்கள் விடுதலை செய்யப்பட்டால் மக்கள் உடனே அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சந்தோஷத்திலும் கூச்சலிடுவார்கள். இந்த அரசு, ஒருவரை பழிவாங்கி, முடக்குவது என்பதைவிட மன்னிக்கவும் நல்வழிப்படுத்தவும் தெரிந்த அரசு.

மேலும், நான் அரசியல்சாஸன பாதைக்கு மாறுவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஒரு கட்டத்தில் என்னை வழிகாட்டியாகப் பார்த்த தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களை சரியான பாதைக்கு திருப்பும்.  அரசிற்காக, அது விரும்பும் எந்த  ஒரு பணியிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். என்னை விடுதலை செய்தால் கிடைக்கக்கூடிய பலன்களோடு ஒப்பிட்டால், என்னை சிறையில் வைத்திருப்பதன் மூலம் கிடைப்பது எதுவுமேயில்லை.

பலம் வாய்ந்தவனே கருணையுள்ளவனாக இருக்க முடியும்.  ஆகவே, பாதைமாறிப் போன மகன், அரசு என்ற பெற்றோரின் கதவைத் தட்டாமல் வேறு எங்கு செல்ல முடியும்?

யுவர் ஆனர், இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

வி.டி. சாவர்கர்.
(From R.C. Majumdar, Penal Settlements in the Andamans, Publications Division, 1975)

No comments:

Post a Comment