Thursday, October 19, 2017

அக்ரகார பிகேவியர்

சுப. உதயகுமாரன்
Via Facebook
2017-07-12

அக்ரகார பிகேவியர்
(நன்றி: புதிய விடியல்)

பார்ப்பனீயம் என்பது ஒரு சித்தாந்தம். சமூகத்தில் ஒரு சிறுபான்மைக் குழுமத்தை உயர்ந்தவர்கள், புனிதமானவர்கள், சிறப்பானவர்கள் என்று தனிமைப்படுத்தி, பெரும்பான்மையோரை தாழ்ந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள், கேடானவர்கள் என்று தள்ளிவைக்கும் ஓர் ஆதிக்க மனப்பான்மை, அடக்கியாளும் கட்டுப்படுத்தல், அதிகாரத் திமிர் கலந்த வாழ்வியல்.

மனப்பான்மை, செயல்பாடுகள், விழுமியம், சித்தாந்தம், வாழ்வியல்  எல்லாம் வானிலிருந்து எதேச்சையாக வந்து விழுவன அல்ல. ஒரு கூட்டம் மக்கள் முழு ஈடுபாட்டுடன் கவனமாக வார்த்து, வளர்த்து, எங்கும் எதிலும் பரப்பி, பேணிக் காத்து, பயன்படுத்துபவை.

பார்ப்பனீயம் ஓர் அஃறிணைப் பொருளல்ல. தங்களின் தன்னலத்துக்காகவும், பிறரின் அடிமைப்படுத்தலுக்கும் பார்ப்பனர்களால் அன்றாடம் வாழப்படும் உயிர்ப்பொருள். இந்த அநியாயத்தை எதிர்ப்பது விடுதலை அரசியலே அன்றி வெறுப்பு அரசியல் அல்ல. நாம் எதிர்ப்பது ஒரு குறிப்பிட்ட சாதியினரையோ, தனி நபர்களையோ அல்ல, ஒரு தவறான ஏற்பாட்டை. அசோக் சிங்கால்கள், பிரவீன் தொகாடியாக்கள், கிரிராஜ் கிஷோர்கள், சுப்பிரமணிய சாமிகள், குருஜிக்கள், ஆச்சார்யாக்கள், தர்மாச்சார்யாக்கள், ஜகத்குருக்கள் போன்றோரை நினைவில் நிறுத்தித் தொடர்க.

தந்தை பெரியார் சொல்கிறார்: இந்நாட்டுப் பார்ப்பனர்கள் “மேல் நாட்டில் இருந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும்கூட ஆரிய ஜாதி முறைகளையும் அதற்கான ஆணவத்தையும் கொண்டு, நாட்டுக்குரிய நம்மை கீழ்ஜாதிகளாக, அடிமைகளாக மதித்து நடத்துவதும், அதற்கேற்ப நம் நாட்டு மன்னர்களை ஏமாற்றி, ஜாதி, மதம், கடவுள், புராணம், இதிகாசங்களின் பேரால் தங்களுக்குத் தனிச் சலுகைகளும் பெற்று, பாடுபட்டு உழைக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வில் வறுமையும் தொல்லையுமிருக்க, பாடுபட்டு உழைக்காத ஒரு கூட்டத்துக்கு வாழ்க்கையிலே மிதமிஞ்சிய ஆதிக்கமும் இருந்து வருகிறது.”

பார்ப்பனர்கள் கையாளும் பார்ப்பனீயத் தந்திரங்களை ஓர் எழுத்தாளர் நேர்த்தியாக வகைப்படுத்துகிறார். பார்ப்பனர்களின் தன்மைகளாக கீழ்காண்பவற்றைக் குறிப்பிடுகிறார் அவர்: அதிகார வர்க்கத்தை அண்டிப் பிழைத்தல், காரியம் சாதிக்க கபடநாடகம் ஆடுதல், தங்களுக்குச் சாதகமாக சட்டங்களை அமைத்தல், சிறுபான்மையை பெரும்பான்மையாகக் காட்டல் போன்றவை.

பார்ப்பனர்களின் செயல்பாடுகளை இப்படிப் பட்டியலிடுகிறார்: ஆரியர் அல்லாதார் விழிப்பு பெறுவதைத் தடுத்தல், மக்களின் அறிவை மழுங்கடித்தல், காலத்திற்கேற்ற கவர்ச்சியைக் கையாளல், ஆராயக்கூடாது என்று அச்சுறுத்தல், இருட்டடிப்பு செய்தல், இல்லாததை இருப்பதாகக் காட்டுதல், தப்பையும் ஒப்ப வைத்தல், அறிவியலைக் கொண்டே அறிவைக் கெடுத்தல், பொய் முகங்காட்டி பொல்லாங்கு செய்தல்,

பார்ப்பனர்கள் பிறரை எப்படிக் கையாள்வார்கள் என்பதை இப்படி அட்டவணைப் படுத்துகிறார்: சாதியாய்ப் பிரித்து சக்தியை சிதைத்தல், தன்னவரைத் தலைமேல் தூக்கி மாற்றாரை மட்டந் தட்டுதல், பிறர் சிறப்பைத் தனதாக்கல், முற்போக்காளராய் நடித்து முற்போக்கை முறியடித்தல், தங்கள் தவற்றை மறைத்து பிறர் தவற்றைப் பெரிதாக்கல், எதிரிகள் மோதிக்கொள்ள ரகசியமாய்த் தூண்டுதல், இல்லாததைப் பரப்பி எதிரியை வீழ்த்தல், எதிரிக்குக் கேடானதை எதிரியைவிட்டேச் செய்தல், மாறுபட்ட கொள்கையாளரை அழித்தொழித்தல் என்பன.

அறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி, பார்ப்பன ஆதிக்கம் என்றுரைக்கும்போது:
“ஜாதியிலே உயர்வு, சமயத்திலே தரகு, சமுதாயத்திலே பாடுபடாத வாழ்வு, பொருளாதாரத்திலே சுரண்டல் கொள்கை, மதத் துறையிலே மடமையை வளர்க்கும் கொடுமை, கல்வித் துறையிலே கற்றோரையும் கசடராக்கும் குரூரம், அரசியலிலே ஆங்கிலேயரை மிரட்டுவதாகக் கூறிக்கொண்டு பேரம் பேசும் போக்கு, வாழ்க்கைத் துறையிலே இகம், பரம் என்று பிரித்துப் பேசி, உலகம் மாயை என்றுரைத்து வாழ்வு அநித்தியம் என்று வேதாந்தம் போதித்து, மக்களை எருமை இயல்பு கொண்டோராக்கும் கோரம். இன்னோரன்ன பிறவற்றையே நாம் குறிப்பிடுகிறோம்.”

கலித்தொகைக் கவிதை ஒன்றை அறிஞர் அண்ணா விவரிக்கிறார்: “நாரை மீனைக் கொத்தித் தின்பதற்காக அடக்கமே உருவானதுபோல, அங்குக் காத்திருக்கிறது. அதன் தீய எண்ணம் துளியும் வெளியே தெரியாதபடி நாரை நடிக்கிற நேர்த்தியைக் கவிஞர் காணுகிறார். மீன் தேடிடும் நாரை, ஆற்று நீரிலே இறங்கி அலையக் காணோம். வட்டமிடவுமில்லை, பதைக்கவில்லை; வேறு ஏதோ காரியத்துக்காக, அல்லது வெறும் பொழுது போக்குக்காக அந்த ஆற்றோரத்தை அடைந்தது போலப் பாவனை புரிகிறது. அந்த நாரையின் நினைப்பு முழுதும், மீனின் மீது! நடிப்போ, சர்வபரித் தியாகத்துக்கும் தயாராக இருப்பதுபோல! ...கவிக்கு ஆற்றோரத்திலே நாரை நிற்கும் காட்சி, வஞ்சகத்தை மறைக்கும் நடிப்பு, மக்களிலே ஒருசாராரின் மனப்பாங்கையும் நடவடிக்கையையும் நினைவூட்டுகிறது.”

பார்ப்பனரின் வருணாசிரமக் கோட்டையைத் தகர்க்க ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் முயன்றார். ஆனாலும் இன்று வரை தீண்டாமை, அண்டாமை, பாராமை போன்ற சீர்கேடுகளோடு பார்ப்பனர்களின் பிடி மென்மேலும் தீவிரமடைந்தே வந்திருக்கிறது. பார்ப்பனர்களின் பாரம்பரியத்தின்படி, “நம்பூதிரிப் பிராமணனை நாயர் தொடுதல் கூடாது. தீயன், நம்பூதிரிக்கு முப்பத்தாறு அடி தூரத்தில் நிற்றல் வேண்டும்; மாலன் நாற்பது அடி தூரத்திலும், புலையன் 96 அடி தூரத்திலும் நிற்கவேண்டும். பிராமணனைப் புலையன் தீண்டினால் அவன் உடனே முழுகித் தனது உடையை மாற்றிக் கொள்ளவேண்டும்.”

மனுநீதி சொல்கிறது: “ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படுகின்றதோ அப்படியே பிராமணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவன்; மேலானவன்.” மனுநீதி இன்னும் சொல்கிறது: “வைதீகமாக இருந்தாலும், லெளகீகமாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம்.”

“ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க” வேண்டும் என்று மனுநீதி வலியுறுத்துகிறது. எனவேதான் பார்ப்பனர்கள் பெண்களை மிக மோசமாக நடத்துகிறார்கள். விதவைகள் ‘உடன்கட்டை ஏறுதல்’ என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். விதவைகள் மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. பெண் எட்டு வயது அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்தார்கள். “ஒரு படித்த வகுப்பார், தன்னுடைய அறிவுத்திறனை, தன்னுடைய நாட்டில் உள்ள கல்வியறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும் ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தை” கண்டுபிடித்ததை, அதை இழி செயல்களுக்குப் பயன்படுத்தியதை அண்ணல் அம்பேத்கர் கடுமையாகச் சாடுகிறார்.

“உண்மை பேசுதல் இல்லாமலும் தெளிந்த நல்லறிவு இல்லாமலும், எல்லோருக்கும் பொருந்தும் விஷயங்களை அறிவுகொண்டு ஆய்ந்துணரும் தன்மை இல்லாமலும், பக்தி இல்லாமலும், கடவுளைப் பற்றிய உண்மை அறியாமலும் இருக்கின்ற பித்தம் பிடித்த மூடர்கள்தாம் பிராமணர்கள் ஆவார்கள்” என்று திருமந்திரம் (231) பறைசாற்றுகிறது.

மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனார் ஆபுத்திரன் என்கிற ஒரு கதாபாத்திரத்தைப் படைத்திருக்கிறார். காசியிலுள்ள அபஞ்சிகன் எனும் வேதம் கற்பிக்கும் பார்ப்பனன் மனைவி சாலி கண்டபடி வாழ்கிறாள். தன்னுடைய பாவத்தை போக்கிக் கொள்வதற்காக கன்னியாகுமரிக்கு புனித நீராட வருகிறாள். ஒரு நாள் இரவில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து, உடனேயே தோட்டம் ஒன்றில் எறிந்துவிட்டுப் போய்விடுகிறாள். ஒரு பசு அக்குழந்தைக்கு பாலூட்டிக் காக்கிறது. பின்னர் அந்த வழியே வந்த இளம்பூதி என்ற பார்ப்பனன் அக்குழந்தைக்கு ஆபுத்திரன் என்று பெயர் சூட்டி எடுத்து வளர்க்கிறான். வேதம் பயிற்றுவிக்கிறான்.

ஒரு நாள் பார்ப்பனர் சிலர் ஒரு பசுவைக் கொண்டுவந்து கொன்று வேள்வி நடத்த முனைகின்றனர். அதனைக் கண்ட ஆபுத்திரன் பசுவை இரவோடு இரவாக அவிழ்த்துக்கொண்டு போய்விடுகிறான். வேள்வி செய்வோர் பசுவைத் தேடி அலையும்போது, ஆபுத்திரன் அவிழ்த்துக்கொண்டு போனதைக் கண்டுபிடித்து விடுகின்றனர். பார்ப்பனர்கள் கூடி அவனைத் துன்புறுத்த முயல்கின்றனர். பசுவால் விளையும் நன்மைகளை விவரித்துப் பேசி ஆபுத்திரன் வாதாடும்போது, ஒரு பார்ப்பனன் “இவன் பசுவுக்குப் பிறந்தவன், எனவேதான் இந்த வேலையைச் செய்தான்” என்று கூறுகிறான்.

கோபமடைந்த ஆபுத்திரன் பார்ப்பனர்கள் கொண்டாடும் பல முனிவர்களின் இழி வரலாறுகளை எடுத்துச்சொல்லி, “இவர்களெல்லாம் உங்கள் குலத்தில் தோன்றியவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கிறீர்களே, பசுவுக்குப் பிறந்ததில் என்ன இழிவைக் கண்டீர்கள்?” என்று கேட்கிறான். கடும் சினமுற்ற பார்ப்பனர்களில் ஒருவன், “இவன் கண்டபடித் திரிந்த ஒரு பார்ப்பனத்தியின் மகன்” என்று இழித்துரைக்கிறான். குமுறி எழுந்த ஆபுத்திரன், “நீங்கள் மிகவும் கொண்டாடும் வசிட்டர், அகத்தியர் இருவரும் திலோத்தமை எனும் பரத்தைக்கும், பிரமனுக்கும் பிறந்தவர்கள்தானே? இவர்களை நீங்கள் கொண்டாடவில்லையா?” என்று எதிர்கேள்வி கேட்க, பார்ப்பனர்கள் இவனை ஊரைவிட்டே விரட்டி விடுகின்றனர்.

பார்ப்பன முன்னோர்களின் வரலாறுகளைப் போட்டுடைத்து, அவர்களின் செல்வாக்கை தவிடுபொடி ஆக்குகிறான் ஆபுத்திரன். இப்படி முறையான வாழ்க்கை பார்ப்பனர்களுக்கு இல்லை என்பதை ஆபுத்திரன் மூலம் நிறுவுகிறார் சாத்தனார். அண்மையில் அண்ணா இப்படி விவரித்தார்: “ஆரியம் ஓர் நயவஞ்சக நாசீசம். பசப்பும் பாசீசம், ஜாலம் பேசிடும் ஜார், சீலம் என்றுரைத்துத் தமிழ்ச் சீமை ஆண்டவரைச் சிதைத்த சதி, வஞ்சக வல்லரசு, இளித்தவாயரை உற்பத்தி செய்து அவர் மீதேறிச் சவாரி செய்யும் ஏகாதிபத்தியம். தாசர் கூட்டத்தை உண்டாக்கி, அதற்குத் தரகுத் தொழில் செய்யும் தந்திரயந்திரம்.”

பயன்படுத்திய நூல்கள்:
[1] அறிஞர் அண்ணா, வர்ணாஸ்ரமம். சென்னை: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, 2015.
[2] ந. சி. கந்தையா பிள்ளை, புரோகிதர் ஆட்சி. சென்னை: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, 2012.
[3] மஞ்சை வசந்தன், பார்ப்பன தந்திரங்கள். சென்னை: புரட்சிக்கனல் வெளியீடு, 2015.
[4] அறிஞர்கள் பார்வையில் பார்ப்பனர்: ஒரு தொகுப்பு. சென்னை: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, 2016.
[5] தந்தை பெரியார், மனுநீதி: ஒரு குலத்துக்கு ஒரு நீதி. சென்னை: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, 2011.

https://m.facebook.com/story.php?story_fbid=1596155080408196&id=100000411583309

No comments:

Post a Comment