Tuesday, October 10, 2017

நவீன அறிவியல் மருத்துவத்தின் மருந்தையோ, சிகிச்சை முறையையோ யாரும் விமர்சிக்கக் கூடாதா?

Bala arun
Via Facebook
2017-10-10

கேள்வி: நவீன அறிவியல் மருத்துவத்தின் மருந்தையோ, சிகிச்சை முறையையோ யாரும் விமர்சிக்கக் கூடாதா? ஒரு வேளை விகடன், ஹீலர்கள் சொல்வதில் உண்மை இருந்தால்?

பதில்: மருந்தையோ, சிகிச்சை முறையையோ தொடர்ந்து விமர்சித்து மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்வதே நவீன அறிவியல் மருத்துவம். அப்படி இல்லை என்றால் என்றோ அது மூட நம்பிக்கையாகி அழிந்திருக்கும்.

மேற்கொண்டு சொல்வதற்கு முன், ஒரு சின்ன STD வரலாறு..

ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் ஒரு மனிதரை அவர் மனைவி உட்பட பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி மனநலக் காப்பகத்தில் அடைக்கிறார்கள். காப்பகக் காவலாளிகள் அவரை அடித்த அடியில் சில‌ நாட்கள் கழித்துச் சீழ்ப்பிடித்தே கேட்பாரற்றுச் சாகிறார் அவர். உண்மையில், இன்று வெற்றிகரமாக பிள்ளைப் பேறு காணும் ஒவ்வொரு பெண்ணும் கும்பிட வேண்டிய தெய்வம் அவர் தான்; மில்லியன் கணக்கில் உயிரகளைக் காப்பாற்றியவர். இன்று அவர் பெயரில் மருத்துவமனைகளும் கல்லூரிகளும் சிலைகளும் உலகெங்கும் - ஏன் மேற்குலகை எதிர்க்கும் இரானில் கூட - இருக்கின்றன.

அவர் பெயர் இக்னாஸ் செம்மெல்வெய்ஸ்.

ஆண்டு 1846. பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் கூட கண்டுபிடிக்கப் படாத நேரம்.
வியன்னாவில் உதவி மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்குகிறார் செம்மெல்வெய்ஸ். அந்த காலத்தில்  பிள்ளைபேறின் போது பத்தில் ஒரு பெண், பிள்ளைக்கட்டில் காய்ச்சல் என்றழைக்கப்பட்ட‌ பேர்பரல் காய்ச்சலால் இறப்பது வழக்கமாக இருந்தது. மருத்துவமனைகளைப் பொறுத்து இந்த எண்ணிக்கையில் பெருத்த வேறுபாடும் இருந்தது. மற்ற உதவி மருத்துவர்களைப் போல் தம் வேலையை மட்டுமே பார்க்காமல் சொந்த முயற்சியில் ஆராயத் தொடங்கினார். எதனால் இந்த காய்ச்சல் வருகிறது என்று தெரியாத நிலையில், தட்பவெட்பம், ஆண்டின் மாதம், நோயாளிகளின் எண்ணிக்கை, வயது, எத்தனையாவது பிள்ளைபேறு என்று பல டசன் காரணிகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்தார். மாதக் கணக்கில் ஆயிரக் கணக்கான தரவுகளைத் திரட்டி, புள்ளியல் அடிப்படையில் ஒவ்வொரு காரணியாக நிராகரித்து ஆண்டுகள் கழித்து அவர் கண்டு பிடித்த காரணி பிரசவ‌த்திற்கு முன் மருத்துவர்களும் பணியாளர்களும் கைகளைச் சுத்தமாக வைக்காததே. அவர் வகுத்தபடி குளோரின் கலந்த நீரில் மருத்துவர்கள், பணியாளர்கள் கை கழுவ ஆரம்பித்தவுடன் அவர் மருத்துவமனையில் பிள்ளைக் கட்டில் காய்ச்சல் இறப்புகள் அறவே குறைந்தன. ஆனால் நுண்ணியிர்களால் வரும் தொற்று நோய்கள் பற்றி அறியாத அன்றைய மருத்துவ உலகம், ஆட்டோ கண்ணாடியை மாற்றினால் எப்படி ஸ்டார்ட் ஆகும் என்கிற ரீதியில் இதை நம்ப மறுத்தது. இதற்கிடையில் மருத்துவமனை உள்ளரசியலால் அவருக்கு வேலை போனது. செல்வச் செழிப்புள்ள வியன்னாவை விட்டு  கொஞ்சம் ஏழ்மையான புதாபெஸ்ட் சென்று, சம்பளம் வாங்காமலேயே ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து ஆராய்ச்சியைத் தொடங்கினார். தன் ஆராய்ச்சி புள்ளி விவரங்களை ஐரோப்பா முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு அவர் விடாமல் எழுத, மருத்துவ உலகம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. அதற்குள் அவர் துரதிருஷ்ட வசமாக இறந்து விட, இரண்டு வருடங்களில் லூயி பாஸ்டர் நுண்ணியிர்களைக் கண்டுபிடிக்க, உலகம்  செம்மெல்வெய்ஸ் கண்டுபிடிப்பை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு அவர் வழிமுறைகளை உலக மருத்துவமனைகளில் எல்லாம் பின்பற்றத் தொடங்கியது; இறப்புகள் வெகுவாகக் குறைந்தன‌. அவர் கண்டுபிடிப்பு தெரிந்ததும் இது முன்னரே தெரியாமல் பல இறப்புகளுக்குக் காரணமாகி விட்டேனே என ஒரு புகழ்பெற்ற மருத்துவர் தற்கொலை செய்து கொண்டாராம். இன்று மருத்துவ உலகத்தின் நுண்ணியிர்அழிப்பியலின் தந்தை எனக் கருதப் படுகிறார் செம்மெல்வெய்ஸ்.

சரி, மெசேஜ் சொல்கிற நேரம் வந்துவிட்ட படியால்,

1) நவீன அறிவியல் மருத்துவம் செம்மெல்வெய்ஸ் போன்ற பலரின் ஆண்டுக் கணக்கான் ஆராய்ச்சிகளால் தியாகங்களால் நூற்றுக் கணக்கான வருடங்களாகச் செங்கல் செங்கலாக வைத்து, படிப் படியாக எழுப்பப்பட்ட கட்டடம். அது ஒரே நாளில் எந்த மந்திரத்தாலோ, கடவுள் அதிசயத்தாலோ, எந்த பன்னாட்டு சதி, இலுமினாட்டி சதி போன்ற குழந்தைத் தனமான கற்பனைகளாலோ வந்து விடவில்லை.

2) நவீன அறிவியல் மருத்துவம் முறையான உண்மையான ஆராய்ச்சிகளால் மாறிக் கொண்டே வந்துள்ளது; வருகிறது. புதிய மருந்துகளை, வழிமுறைகளை மருத்துவ உலகம் ஏற்க முறைப்படியான ஆராய்ச்சி, பின்னர் முறைப்படியான சோதனைகள் தேவை.

மருத்துவர்கள் மேல் உள்ள பொறாமையிலோ, குறுக்கு வழியில் பேர், பணம் புகழ் சம்பாதிக்கவோ கற்பனையாக, ஒரு மண்ணாங்கட்டி ஆராய்ச்சியும் செய்யாமல், விட்டத்தைப் பார்த்து மல்லாக்க படுத்துக் கொண்டே, டெங்கு கொசு முட்டுக்கு மேலே கடிக்காது, ஜட்டிக்கு உள்ளே கடிக்காது என்று உளறினால் அறிவுள்ள சமுதாயம், முன்னேறும் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது!

தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகமாக முன்னேறுமா? விகடன் போன்று தரம் தாழ்ந்து பொய்யையும் புரளியையும் முட்டாள் தனத்தையும் தானும் நம்பி பரப்பபவும் செய்யுமா??

No comments:

Post a Comment