Sunday, October 29, 2017

மெர்சல்  சிசேரியன்

Dr. Poovannan ganapathy
Via Facebook
2017-10-29

*மெர்சல்  சிசேரியன்*

  மெர்சல் திரைப்படம் பார்த்தேன்.மிகவும் வருத்தமாக இருந்தது .அடிப்படை அறிவே இல்லாமல் அடித்து விடுவதில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.சிசேரியன் ,மருத்துவ பரிசோதனைகளை  குற்றமாக .பெரும் சதியாக பார்ப்பதும் ,அதனை பெரும்பாலோர் உண்மை என்று உச்சு கொட்டுவதும் வேதனை தான்.

சிசேரியன் குற்றமா?பல லட்சம் குழந்தைகளின் ,கருவுற்ற பெண்களின்  உயிரை
காப்பாற்றிய மருத்துவ முறையை ஊரே சேர்ந்து கொண்டு தூற்றுவதை விட ஒரு அவலமான சூழல் இருக்க முடியுமா

குழந்தை பிறப்பு என்பது  இரண்டாம் உயிர்  என்று பயந்து வாழ்ந்து வந்த சமூகத்தில்,பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு என்பதே இலலாத குடும்பங்கள் அரிதாக இருந்த சூழலில் இருந்து நாம் மாறி தாய் சேய் இறப்பு இரண்டும் அரிதாக குறைய முக்கிய காரணங்களில் ஒன்று சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால் மிகையாகாது. 

முதலில் மருத்துவத்தை பற்றிய ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.மருத்துவ  துறை விமானம்,மின்சார உற்பத்தி சாதனங்கள் ,கணினி போல ஒரே தன்மை,ஒரே அடிப்படை கூறுகள்,ஒரே பாதிப்புகள்,ஒரே reaction ,ஒரே முறையில்  சரி செய்யும் துறை கிடையாது.ஒவ்வொரு தனி மனிதனும் மற்றவர்களில் இருந்து வித்தியாசமானவர் தான்.அவர்களின் உறுப்புகளும் வித்தியாசம் தான்.லட்சம் பேருக்கு ஒத்து கொள்ளும் மருந்து இவருக்கு மட்டும் ஏன் ஒத்து கொள்ளாமல் ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்ற கேள்விக்கு இன்றுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.

இத்தனை பரிசோதனைகள் செய்தும் கடைசி நேரத்தில் ஏன் சிசேரியன் என்ற கேள்விக்கான விடை மேலே உள்ளது.

தடுப்பூசிகளை புரிந்து கொண்டால் மருத்துவ துறையை புரிந்து கொள்ள முடியும்.தடுப்பூசி என்பது என்ன.ஒரு நோயின் கிருமியை அதன் வீர்யத்தை நீக்கி விட்டு உடலில் செலுத்தி ,அந்த கிருமிக்கு எதிராக  உடலில் அதனை அழிக்கும் வலுவுள்ள எதிர் அணுக்களை உருவாக்கி வீரியமான நோய் கிருமி தாக்கும் போது தயாராக உடலில் இருக்கும் எதிர்ப்பு அணுக்கள் அவற்றை அழித்து நோய் வராமல் தடுப்பது தான்.

ஒரு தடுப்பூசி,சொட்டு மருந்து  போட்டாலே நியாயமாக அனைவருக்கும் எதிர் அணுக்கள் உருவாக வேண்டும்.இது மற்ற துறைகளுக்கு பொருந்தும்.வயரை கன்னெக்ட் செய்தால் லைட் எரியும் என்பதை போல இங்கு கிடையாது.ஒரு தடுப்பூசி போட்டால் நூறில் அறுவது சதவீதம் பேருக்கு தான் தடுப்பு எதிர் அணுக்கள் உருவாகின்றன.இரு முறை போட்டால் தொன்னூறு சதவீத மக்களுக்கு எதிரணுக்கள் உருவாகிறது.மூன்று முறை போட்டால் நூறில் தொன்னூற்றி ஒன்பது சதவீத மக்களுக்கு எதிர்ப்பு அணுக்கள் உருவாகி இருப்பதை தான் ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

  யாருக்கு பயன் அளிக்கவில்லை என்பதை ரத்த பரிசோதனை செய்து கண்டுபிடித்து பின்பு எதிரணுக்கள் இல்லை என்று தெரிய வந்தால் மட்டுமே இரண்டாவது ஊசி போட வேண்டும் என்பதற்கு ஆகும் செலவு என்பது மிக மிக அதிகம்.அதனால் தான் பொதுவாக அனைவருக்கும் மூன்று ஊசிகள்,ஐந்து முறை சொட்டு மருந்து என்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

  மருத்துவத்தில் உறுதியான முடிவு என்று ஒன்று கிடையவே கிடையாது.கண்டிப்பாக சுக பிரசவம் தான் சிசேரியன் அவசியம் அல்ல ,நோய் முற்றிலும் குணமாகி விட்டது,இனி தாக்கவே தாக்காது,உங்களுக்கு நோய் வரவே வராது என்று சொல்ல கூடிய துறை மருத்துவ துறை அல்ல.

அமெரிக்காவில் இருந்தாலும் இந்தியாவில் இருந்தாலும் கணினியும் விமானமும் ஒன்று தான்.ஆனால் அங்கு கர்ப்பிணி பெண்களில் சக்கரை  நோய் பத்து சதவீதம் சிசேரியன் எட்டு சதவீதம்  இங்கு ஏன் இருவது சதவீதம் என்ற கேள்வி மருத்துவத்துக்கு பொருந்தாது.ஆப்ரிக்காவில் மிக அதிகமாக இருந்த பல லட்சம் உயிர்களை குடித்த மலேரியா நோய் காரணமாக மலேரியா நோய் வராமல் தடுக்க குறிப்பிட்ட  மரபணு குறைபாடு உள்ள மக்கள் பலர் பிறந்திருக்கிறார்கள்.

குழந்தையின் எடை,தாய்க்கு இருக்கும் ரத்த சோகை ,அதிக சக்கரை,குறைந்த உயரம் , இடுப்பளவு என பல்வேறு காரணங்கள்  சிசேரியன் முடிவு எடுக்க காரணமாக இருக்கின்றன.அதிகரிக்கும் பெண்களின் எடை,அதிக கலோரி உணவு பழக்கம்,உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை,precious பேபி போன்றவை குறிப்பிட்ட வர்க்கத்தில் சிசேரியன் அதிகரிக்க மிக முக்கிய காரணங்கள் என்றால் மிகை ஆகாது.

  அடுத்ததாக சிசேரியன் ஏன் இவ்வளவு பெரிய குற்றமாக செய்யய கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற காரணமும் விளங்கவில்லை.ஒரு ஆண்டு இருசக்கர வாகனம் ஓட்டுவதால் நம் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை விட சிசேரியன் மூலம் ஏற்படும் பாதிப்பு வெகு வெகு குறைவு தான். தன் குழந்தைகளுக்கு ஏ சி இருக்கும் பள்ளிக்கூடத்தை தேடும் கூட்டம் இங்கு குதிப்பது விந்தை தான்.வீட்டில் ஏசி,காரில் ஏ சி ,பள்ளியில் ஏ சி,பணி இடத்தில ஏ சி என்று வாழ்வதால் வரும் பாதிப்பை விட சிசேரியன் சிகிச்சையினால் வரும் பாதிப்பு பல நூறு மடங்கு குறைவு தான்.

  முன்பு உலகெங்கும் எலும்பு முறிவுகளுக்கு மாவுக்கட்டு சிகிச்சை தான் மருத்துவமாக இருந்து வந்தது.இன்று பெரும்பாலான எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை தான் மருத்துவமாக மாறி இருக்கிறது. மாவு கட்டு சிகிச்சையில் எலும்பு கூடாத நிலை,தவறாக எலும்பு கூடுதல்,தசை wasting என இருக்கும் பல குறைபாடுகளை அறுவை சிகிச்சை இல்லாமல் செய்வதால் அறுவை சிகிச்சை பல லட்சம் எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சரியான மருத்துவமாக பரிந்துரைக்கப்படுகிறது.

  இதே தான் சிசேரியனில் நடக்கிறது.எடை அதிகமான ,உயரம் குறைவான ,உடற் பயிற்சி இல்லாத ,முப்பதை நெருங்கிய வயதில் முதல் பிரசவம் ,குழந்தை எடை ,ரத்த சோகை என பல காரணங்களினால் சிசேரியன் அதிகரிக்கிறது.பிரசவ வலி பற்றிய பயமும் ஒரு முக்கிய காரணமாக மாறி வருகிறது.வலியில்லாமல் நார்மல் பிரசவம் நடக்க மயக்க மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்து விட்டன.தண்ணீரில் பிரசவம் போன்ற முறைகளும் முயற்சிக்கப்படுகின்றன

   எவ்வளவு செலவானாலும் OK,ஒரு சிறு பாதிப்பு கூட வர கூடாது என்று தான் தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் தான் மிக மிக அதிகம்.நார்மல் பிரசவம் என்று பல மணி நேரம் காத்திருந்தால் குழந்தைக்கு குறிப்பிட்ட பாதிப்பு ஏற்பட ஆயிரத்தில் ஒரு சதவீத பாதிப்பு உண்டு என்றால் கூட ஏற்று கொள்ளாத கூட்டத்திடம் சிசேரியன் அதிகரிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

  சிசேரியன் அதிகரிக்க மருத்துவரின் பயமோ,பணத்தாசையோ நூறில் ஒரு பங்குக்கும் குறைவு தான்.ஆனால் அதற்கு முழு காரணமும் மருத்துவர்கள் மட்டுமே என்று பேசுவது முட்டாள்த்தனத்தின் உச்சம்.

மருத்துவர் என்றால் குற்றமே  செய்யாதவர் என்று சொல்லவில்லை?மருத்துவத்தையே குற்றமாக பார்ப்பது நியாயமா என்று தான் கேட்கிறேன்.எனக்கு சிசேரியன் தான் வேண்டும் என்று சொல்லும் நோயாளிகளும் உண்டு.சிசேரியன் தான் செய்வேன் என்று இருக்கும் மருத்துவர்களும் உண்டு. தாய்,சேய் இருவருக்கும் ஏதாவது ஒரு பாதிப்பு வரும் வாய்ப்பு லட்சத்தில் ஒன்றாக இருந்தாலும் உடனே சிசேரியன் செய்து விட வேண்டும் என்று என்னும் மருத்துவர்களும் உண்டு,கர்ப்பிணிகளும் ,அவர்களின் உறவுகளும் உண்டு .

சிசேரியன் கண்டிப்பாக குற்றம் கிடையாது.மாபெரும் மருத்துவ முன்னேற்றம்.யாருக்கு சிசேரியன் தேவை என்பதை முடிவெடுக்கும் முழு உரிமை மருத்துவம் படித்தவர்களுக்கு தான் உண்டு.தேவை இலலாமல் சிசேரியன் செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களில் 100 இல் தொன்னூறு சதவீதம் அறியாமையால் வருவது தான்.

No comments:

Post a Comment