Saturday, October 21, 2017

மெர்சல் - விமர்சகன் எப்போதும் வெகுஜனங்களால் புறக்கணிக்கப்பட்டவனா கைவிடப்பட்டவனா தனியனா இருக்கிறான

John Babu Raj
Via Facebook
2017-10-21

மெர்சலை மெர்சல்னும் சொல்லலாம் மேனா மினுக்கின்னும் சொல்லலாம்

"மெர்சல் உனக்குப் பிடிச்சிருக்கா?"

"தமிழ்ப் படத்தை விமர்சனம் பண்றதுல ஒரு சிக்கல் இருக்கு கவனிச்சிருக்கியா?"

"என்னது?"

"அரை கிரவுண்ட் நிலத்துல அஞ்சு லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு கட்டியிருக்கேன்னு ஒருத்தன் சொன்னா அதை எப்படி பார்க்கணும்? சின்ன பட்ஜெட், சின்ன இடம்... அதுல எப்படி கட்டியிருக்கான்னு பார்த்து நல்லாயிருக்கா இல்லையானு சொல்லணும். அதுதானே முறை?"

"ஆமா."

"அதேவீட்டை காட்டி, தாஜ்மஹால் ரேஞ்சுக்கு ஒரு வீட்டை கட்டியிருக்கேன்னு சொன்னா என்ன பண்ணுவ?"

"அட லூஸு ஏதோ ஒரு வீட்டை கட்டியிருக்க, உன் வசதிக்கு அது போதும். அதைவிட்டுட்டு தாஜ்மஹால் அது இதுன்னு உளர்றியேன்னு சொல்லத் தோணும்."

"கரெக்ட். இதுதான் தமிழ் சினிமால உள்ள பிரச்சனை. இப்போ மெர்சல் படத்தையே எடுத்துக்க. படம் நிறைய பேரை போய் சேரணும், கல்லா நிறையணுங்கிற ஒரே காரணத்தை முன்வச்சுதான் இந்தப் படத்தை எடுத்திருக்காங்க. அந்தவகையில அட்லி நல்லாவே படத்தை கொடுத்திருக்கார். என்ன மாதிரி சீன் வச்சா ரசிகர்கள் கைத்தட்டுவாங்கங்க, எந்த சீனுக்கு சென்டிமெண்டா மெல்ட் ஆவாங்கறதை யோசிச்சு படத்தை எடுத்திருக்கார். உதாரணமா, ஹாஸ்பிடல் போனா காசு நிறைய செலவாகுங்கிறது எல்லோருக்குமே தெரியும். இதைத்தான் அவர் மெயின் பிரச்சனையா சொல்றார். பிரச்சனையை தீவிரப்படுத்தி காட்டுறதுக்காக ஹீரோவை அஞ்சு ரூபா மட்டும் வாங்கிட்டு வைத்தியம் பார்க்கிறவரா காட்றார். ஜனங்க இந்த எதிரெதிர் துருவ ஸ்கிரீன் ப்ளேல கண்டிப்பா விழுந்திடுவாங்க. அதேமாதிரி ஜிஎஸ்டி மேல மக்களுக்கு கோபம் இருக்கு. அதைப் பத்தி ரெண்டுவரி பேசுனாலே கைத்தட்டுவாங்க."

"வாஸ்தவம்தான்."

"தமிழன்டான்னு பவர் ஸ்டார் சொன்னாலே விசில் பறக்கும், அதையே விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ சொன்னா?"

"தியேட்டர் கிழிஞ்சிடும்."

"அதேதான். ரசிகர்களை சுவாரஸியப்படுத்தி நிறைய வசூலிக்கணுங்கிறதுதான் மெர்சல் டீமோட எய்மே. அந்தவகையில மெர்சல் படத்தை மெர்சல்னே சொல்லலாம்."

புரியுது. நீ சொன்ன இரண்டாவது மேட்டர்...?"

"வசூல்தான் உங்க எய்ம். அதுக்கு சில சித்து வேலைகளை பண்ணியிருக்கீங்க. அதோட நிறுத்துனா ஓகே. ஆனா, சென்ட்ரலையும் ஸ்டேட்டையும் விஜய் மிரட்டிட்டாரு, சோஷியல் மெசேஜ் சொல்லி திணறடிச்சிட்டாருன்னு ரசிகர்களும், மீடியாவும் கொண்டாடுறப்போ அப்படி என்ன நீங்க பெரிய சோஷியல் மெசேஜ் சொல்லிட்டீங்கன்னு பேச வேண்டியிருக்கு."

"அதாவது அஞ்சு லட்ச ரூபா வீட்டை தாஜ்மஹால் கூட கம்பேர் பண்ணுன மாதிரி....?"

"கரெக்ட். மெர்சல்ல வர்ற எல்லா மெசேஜும் இணையத்துல வேணுங்கிற அளவுக்கு அடிச்சு துவைச்ச விஷயங்கள்தான். டாஸ்மாக் சரக்குக்கு எட்டு பர்சன்டேஜ் ஜிஎஸ்டி, மருந்துக்கு 12 சதவீதமான்னு கேட்கிறாங்க. ஃபேஸ்புக்ல இதேமாதிரி மொண்ணையா எத்தனை பேர் ஸ்டேட்டஸ் போட்டிருக்காங்க?"

"இதுல என்ன மொண்ணை இருக்கு?"

"லூஸு... நீ 200 ரூபாய்க்கு வாங்குற குவாட்டரோட கொள்முதல் ரேட் வெறும் 20 ரூபாய்தான். அதுக்கு 100 பர்சன்டுக்கு மேல வரியைப் போட்டு 200 ரூபாய்க்கு அரசு விக்குது. ஒரே நாடு ஒரே வரின்னு, இப்போ இருக்கிற வரியை நீக்கிட்டு சரக்குக்கு 28 பர்சன்டேஜ் ஜிஎஸ்டி போட்டா என்னாகும்?"

"ம்... கணக்குல நான் வீக்கு, நீயே சொல்லு."

"20 ரூபா குவாட்டரை ஜிஎஸ்டி சேர்த்து 26 ரூபாய்க்கு தர வேண்டியிருக்கும். அரசுக்கு குவாட்டருக்கு 172 ரூபாய் வரி இழப்பு வரும். இதே கதைதான் பெட்ரோல் டீசலுக்கும். இப்போ இருக்கிற வரியை எடுத்திட்டு ஜிஎஸ்டி மட்டும் போட்டா சரக்கு, பெட்ரோல், டீசல் மூணோட விலையும் ரொம்பவும் குறையும். அதனாலதான் இந்த மூணையும் ஜிஎஸ்டியில இருந்து விலக்கி வச்சிருக்காங்க. இது தெரியாம ஒருத்தன் டயலாக் வச்சா ஊர் கூடி விசிலடிக்குது."

"இது மட்டும்தானா இன்னும் இருக்கா?"

"வைத்தியம் பார்க்க அஞ்சு ரூபாய் வாங்குறவங்க இருக்காங்க. அது சேவை. அதேமாதிரி எல்லா டாக்டர்ஸும் இருக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது. படத்துல அஞ்சு ரூபா வாங்குற நீங்க ஒரு படத்தை டைரக்ட் பண்ண அஞ்சு ரூபா வாங்குவீங்களா? பத்து கோடி கேட்கிறீங்கயில்ல. அஞ்சு ரூபா வாங்கி ஒரு படத்துல நடிப்பீங்களா? முப்பது கோடி கேட்கிறீங்கயில்ல. மருத்துவத்துறையில நிறைய ஊழல் இருக்கு. நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கு. மருத்துவத்துறையை விமர்சிக்கணும். ஆனா, அது மெர்சல்ல வர்ற மாதிரியில்ல. டாஸ்மாக் டயலாக் மாதிரி இது ரொம்பவும் மேலோட்டமானது."

"நீ சொல்றதெல்லாம் சரிதான். இன்னைக்கு சினிமால சின்ன விஷயத்தைகூட யாரும் கண்டிச்சுப் பேசறதில்லை. ஆனா, மெர்சல்ல ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியான்னு நிறைய விஷயங்களை - நீ சொல்ற மாதிரி மேலோட்டமாகவே இருந்தாலும் பேசியிருக்காங்க. அது தில் இல்லையா?"

"அது தில்லா இல்லையாங்கிறதை அப்புறம் பார்ப்போம். நான் சொல்ல வர்றது வேற. தியேட்டர்ல விசிலடிங்க, கொண்டாடுங்க. ஆனா, வெளியில வந்து படத்துல நடிச்ச ஹீரோதான் சமூக மாற்றத்துக்கு அத்தாரிட்டின்னு பேசாதீங்க. இன்னைக்கு மீடியா அதைத்தான் செய்துகிட்டிருக்கு. பிரசன்னான்னு ஒருத்தர். கைவினைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலயிருந்து விலக்கு வேணும்னு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கார். அவரைப் பற்றி ; யாருக்காவது தெரியுமா? இதேபோல ஒவ்வொரு சமூகப் பிரச்சனைக்கும் நூத்துக்கணக்கான பேர் போராடிகிட்டிருக்காங்க. அதையெல்லாம் ஒரு பொருட்டா நினைக்காத ஒரு கூட்டம், சினிமால நாலுவரி டயலாக் பேசுன ஆளை சூப்பர் ஹீரோன்னு தூக்கி வச்சு கொண்டாடுறது சரியான்னுதான் கேட்கிறேன்."

"கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு. ஆனா, மத்த யாரும் பேசாத விஷயத்தை மெர்சல்ல பேசியிருக்கிறது தில் தானே?"

"முன்னாடி ஒரு நடிகை, பஸ்ல பொம்பளைங்களுக்கு செக்ஸ் தொல்லை தர்றவங்களை தைரியமா பெண்கள் எதிர்க்கணும்னு பேட்டி தந்தாங்க."

"நல்ல விஷயம்தானே?"

"ஆனா, அந்த நடிகை ஒருபோதும் பஸ்ல போனதேயில்லை. அதேநேரம் அவங்க இருக்கிற சினிமா தொழில்ல பஸ்ஸைவிட பல மடங்கு அதிக பாலியல் தொல்லை இருக்கு. அந்த நடிகை தன்னோட துறையில இருக்கிற பாலியல் தொல்லை பத்தி பேசணுமா இல்லை தான் ஒருபோதும் போகாத பஸ்ல நடக்கிற பாலியல் தொல்லை பத்தி பேசணுமா?"

"திரும்பவும் குழப்பறியே?"

"ஊழலை ஒழிப்பேன்னு சொல்ற விஜயகாந்த் என்னிக்காச்சும் தன்னோட சினிமாதுறையில இருக்கிற ஊழல், கறுப்புப் பணம் பத்தி பேசியிருக்கிறாரா?"

"ஆமா, இல்லியே."

"ஆமாவா இல்லியா?"

"இல்லை."

"ஏன்னா மத்தவங்ககிட்ட உள்ள தப்பை சுட்டிக்காட்டுறது சுலபம். சொந்தத்துறையில அதை செயல்படுத்துறதுதான் கஷ்டம். ஜிஎஸ்டி பத்தி பேசுறது விஷயமே இல்லை. அதை நண்டும் நரியும் இணையத்துல செய்துகிட்டிருக்கு. இன்னைக்கு மெர்சல் படத்துக்கு 90 சதவீத தியேட்டர்ஸ் அதிகபடி கட்டணம் வசூலிக்கிறாங்க. அது தப்புன்னு மெர்சல் ஹீரோவால சொல்ல முடியுமா? சொன்னா அதுக்கு பேருதான் தில்லு. அந்த தில் இன்னைக்கு வரைக்கும் எம்.ஆர்.ராதாங்கிற ஒரேயொரு சினிமாக்காரனுக்கு மட்டும்தான் இருந்திருக்கு."

"நீ பேசுறதெல்லாம் சரி. எனக்கு ஒரு சின்ன சந்தேகம், உலகமே ஒண்ணை கொண்டாடுறப்போ அதை எதிர்க்கிறதும், உலகமே ஒண்ணை எதிர்க்கிறப்போ அதை கொண்டாடுறதும்தான் விமர்சனமா? அவங்கதான் விமர்சகர்களா? இது உனக்கே தப்பா தெரியலை?"

"இந்த உலகத்துல நூறு சதவீத நல்லதோ நூறு சதவீத கெட்டதோ கிடையாது. இங்க பிளாக்கோ வொயிட்டோ கிடையாது. எல்லாமே க்ரேதான். இதை நிலைநாட்றதுதான் ஒரு விமர்சகனோட முதல் கடமை. வெகுஜனம் ஒரு விஷயத்தை வெள்ளைன்னு கொண்டாடுறப்போ, பாரு... முழுசா அது வெள்ளையில்லை, அதுலயும் கறுப்பு இருக்குன்னு சுட்டிக் காட்டணும். முழுசா ஒண்ணை வெறுக்கிறப்போ, பாரு... அதுலயும் விரும்பக் கூடியது சிலது இருக்குன்னு புரிய வைக்கணும். அந்தவகையில் விமர்சகன் எப்போதும் வெகுஜன ரசனைக்கு எதிராகத்தான் தெரிவான். ஒரு விஷயத்தை முரட்டுத்தனமா ஆதரிக்கிற போதும், அதே முரட்டுத்தனத்துடன் எதிர்க்கிற போதும்தான் கும்பல் மனோபாவம் உருவாகுது. கும்பல் மனோபாவத்தின் செல்லக்குழந்தைதான் தனிநபர் வழிபாடு. விமர்சகன் இதை கட்டுடைச்சுகிட்டே இருக்கிறான். கும்பல் மனோபாவத்தின் உணர்ச்சி வெறியில் தண்ணி தெளிக்கிற வேலையைத்தான் அவன் தொடர்ந்து செய்துகிட்டிருக்கிறான். அதனால எப்போதும் அவன் வெகுஜன ரசனைக்கு எதிர்நிலையில் இருக்க வேண்டியதாகுது. அது அவங்களை புறக்கணிக்கிறதோ, அவங்களை மட்டம் தட்டுறதோ இல்லை. அவங்க பார்க்காத பக்கத்தை புரிய வைக்கிறது. அந்தவகையில் அவன் எப்போதும் வெகுஜனங்களால் புறக்கணிக்கப்பட்டவனா கைவிடப்பட்டவனா தனியனா இருக்கிறான்."

"உன்னை மாதிரி...? சரி, மெர்சலைப் பத்தி உன்னோட கடைசி விமர்சனத்தை ரெண்டே வரியில சொல்லு."

"மெர்சலைப் பொறுத்தவரை கலெக்ஷனுக்காக எடுக்கப்பட்ட படம். அதில் வர்ற கதையும், காட்சியும், வசனமும் அதுக்காகவே வைக்கப்பட்டது. அது பிடிச்சிருந்தா விசிலடிச்சு கொண்டாடுங்க. ஆனா, வெளியே வந்து அதுதான் மானுட மீட்புக்கான சாதனம்னு பேசாதீங்க."

https://m.facebook.com/story.php?story_fbid=996255670514429&id=100003900162527

No comments:

Post a Comment