பொறுப்புதுறப்பு:
* இலங்கையில் தமிழ் சமூகத்தில், புத்தரும் ஒரு நபி என்ற கருத்தாக்கம் மேலேலுந்துள்ளது. தமிழ்நாட்டிலும் திருவள்ளுவர் ஒரு நபி என்ற உறையாடல் நீண்ட காலமாக உள்ளது.
* இது கட்டுரையாளரின் சொந்த கருத்து.
* உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கீழேயுள்ள கட்டுரையாளரின் பேஸ்புக் லிங்கில் விவாதிக்கலாம். ஏற்கனவே பலர் விவாதித்து கொண்டிருக்கின்றார்கள். நல்லதொரு உரையாடல்.
---
Lafees Shaheed
20180930
புத்தரை ஒரு நபி என்று கூறி இருக்கிறார், உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத். பொதுவாக நான் முபாரக் மெளலவி போன்றவர்களை பொருட்படுத்துவது இல்லை. ஏனெனில் ஒரு கருத்தை முன் வைப்பதில் உள்ள சமூகம் சார்ந்த பொறுப்புணர்ச்சியுடன் இவர்கள் செயலாற்றுவதில்லை. ஒரு கருத்தை முன் வைக்கும் பொழுது அனுமானம், பிரதியட்சம், தர்க்கம் எனும் ஒழுங்கில் அல்லது இவற்றில் ஒன்றில் தங்கி எழுதவும் முடியும். ஆனால் அதனை விட முக்கியமானது ஒரு கருத்தை முன் வைக்கும் சூழல், அது பெரும் அர்த்தம், உடைவு மற்றும் இன்னொரு சூழலில் அது பெரும் வித்தியாசமான அர்த்த தளங்கள் இன்னபிற போன்றவை.
மேற்போந்த வகையில் முபாரக் அப்துல் மஜீத்தின் புத்தர் குறித்த கருத்துக்களை பரிசீலித்தால் கருத்தாக்க அளவில் அதற்கு ஒரு அறிவியல் மதிப்பு இருப்பதாகவும் ஆனால் இலங்கை சூழமைவு - Context - சார்ந்து அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நாம் கணிக்கலாம்.
இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமூகங்கள் எதுவும் இல்லை எனும் பொதுவான அல் குர்ஆன் வசனத்தையும் அன்பியா அத்தியாயம் 85 ஆவது வசனத்தில் குறிப்பிடப்படும் துல்கிஃப்ல் (அலை) எனும் நபி குறித்த குறிப்பான கருத்தையும் தனது ஆய்வுக்கு ஆதாரமாக முன் வைத்திருக்கிறார், முபாரக் அப்துல் மஜீத்.
அதாவது பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பட்ட நபிமார்களை குறித்து மட்டுமே நாம் அறிவோம், ஆனால் உலகில் ஏனைய பிரதேசங்களுக்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள், துல்கிஃப்ல் அந்த வகையில் இந்திய உப கண்டத்திற்கு அனுப்பப்பட்ட நபி அவர் பெயரின் அர்த்தம் கபிலவஸ்துவை சேர்ந்தவர் என்பது தான், இது புத்தரை குறிக்கிறது ஆக புத்தர் ஒரு நபி என்பது தான் முபாரக் மெளலவியின் கருத்தின் சாரம்.
நல்லது, இவற்றை நாம் ஓரளவுக்கு திறனாய்வு ரீதியாக பரீசிலிக்கலாம். ஏனெனில் முபாரக் மெளலவியின் கருத்துக்கு ஒரு அறிவியல் மதிப்பு இருக்கிறது. ஏலவே பேராசிரியர் முஹம்மத் ஹமீதுல்லாஹ் எனும் ஆய்வாளர் துல்கிஃப்ல் (அலை) எனும் பெயரின் அர்த்தம் சார்ந்து அது புத்தரை குறிக்கலாம் என்று அனுமானம் செய்திருக்கிறார். இந்த வகையான மொழியியல் ஆய்வுகள் சர்வதேச புலமைத்துவ வட்டாரங்களில் கவனத்தில் கொள்ளப்படுபவையே.
ஆனால் கலாநிதி முஹம்மத் ஹமீதுல்லாஹ் தனது கருத்தை ஒரு அனுமானம் அளவில் மட்டுமே கூறி இருக்கிறார். முபாரக் அப்துல் மஜீதோ தனது கருத்தை ஒரு முற்றுண்மை என்பதாக முன் வைக்கிறார். அதாவது புத்தரும் ஒரு நபி என்று நாம் நம்ப வேண்டுமாம்.
ஷரீஆ ரீதியில் இது ஏற்புடைய வாதம் அல்ல என்பது ஒரு புறமிருக்க இலங்கை Context இல் இது தரும் அர்த்தம் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். இதனையும் கொஞ்சம் பரிசீலிக்கலாம்.
இலங்கையின் தற்போதைய சமூக சூழலை பெரிய அளவுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். பேரினவாதம் சிறுபான்மை மக்களை - குறிப்பாக முஸ்லிம்களை - அச்சுறுத்தி வருகிறது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் பேரினவாதத்தின் வெறுப்பரசியல் இரண்டு வகையான அடித்தளத்தில் தான் பிரதானமாக நிலை கொண்டிருக்கிறது.
1. முஸ்லிம்கள் வந்தேறி குடிகள். அவர்களை இலங்கையின் பூர்வ குடிகளாக கருத முடியாது.
2. சிறுபான்மை முஸ்லிம் சமூகம் பெருன்பான்மை சிங்கள சமூகத்தினை விடவும் அதிக நலன்களையும், சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவித்து வருகிறது.
இந்த வாதங்களை வைத்து தான் பேரினவாதம் தன்னுடைய ஆள் திரட்டலை செய்து வருகிறது.
இத்தகைய விரோதமான சூழலில் பெருன்பான்மையினரின் மதமான பெளத்தத்தின் நிறுவனரை நாம் நபி என்று கூறுவது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தும்?
ஏலவே பெருன்பான்மை இன மக்களின் உரிமைகளை நாம் பறித்து வருவதாக பேரினவாதம் பிரசாரம் செய்து வரும் நிலையில் முஸ்லிம்கள் அவர்களுடைய மத நிறுவனரை கூட உரிமை கொண்டாடுகிறோம் என்று தவறான அர்த்தம் இதன் மூலம் உருவாகாதா?
வந்தேறி குடிகளான முஸ்லிம்கள் உரிமைகளை, சலுகைகளை மட்டுமின்றி எமது மதத்தையும் ஆக்கிரமிக்கிறார்கள் என்று பாசிஸ்டுகள் பேசிட இது வழி வகுக்காதா?
ஒரு அனுமானத்தினை பொது மன்றத்தில் முன் வைத்து வெறுப்பை வளர்ப்பது தான் சரியான அரசியல் நிலைப்பாடா?
இதனால் தான் நாம் முபாரக் மெளலவியை பொறுப்பற்று கருத்துதிர்ப்பு செய்பவர் என்கிறோம். ஒரு கருத்து உருவாக்கும் சமூகப் பதிவு முக்கியமானது. புத்தர் விவகாரத்தில் முபாரக் மெளலவியின் கருத்துக்கள் உருவாக்கும் சமூகப் பதிவுகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே மாறிவிடும். இதனை நாம் கட்டாயமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமூகங்கள் எதுவும் இல்லை எனும் அல் குர்ஆனிய கண்ணோட்டத்தை பொறுத்தவரையில் ஷெய்க் முஹம்மத் அப்துல்லாஹ் தர்ராஸ் முன் வைக்கும் அவதானம் தான் சரியானது. தர்ராஸ் கூறுவார் :
'இந்த வசனம் ஏனைய மதங்கள், தத்துவங்கள் தொடர்பில் ஒரு அணுகுமுறை சார்ந்த வழிகாட்டலை முஸ்லிம்களுக்கு அளிக்கிறது. அதாவது ஏனைய மதங்களின், தத்துவங்களின் கருத்துக்களை சில வேளைகளில் அது முன் சென்ற நபிமார்களின் தூதுத்துவத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கண்ணியமாக நோக்கிட இது வழிவகுக்கிறது. தஃவா கண்ணோட்டத்தில் இது முஸ்லீம்களை நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாக மாற்றுகிறது '
புத்தரின் கருத்துக்களில் இருந்து நாம் பயன் பெற மேற்போந்த ஷெய்க் தர்ராஸின் கண்ணோட்டத்தை சுவீகரித்துக் கொள்வது போதுமானது. இதனை தாண்டி புத்தரை நபி என்று கூறும் அனுமானத்தினை முன் வைத்து எமது சூழலின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை நாம் அதிகரித்து விட வேண்டாம்.
முபாரக் அப்துல் மஜீத் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற கருத்து முன் வைப்புகளின் பிரதிபலிப்பை அனுபவிப்பது அவர் மட்டுமே அல்ல. மாறாக சமூக அதற்கு கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்....!
#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்
https://m.facebook.com/story.php?story_fbid=1092859674226127&id=100005063134008