ஆழி செந்தில்நாதன்
2018-09-07
அண்ணா முன்வைத்த நான்கு ஜீவநாடிகள்
அண்ணாவுக்கு அப்போது 28 வயது. திருச்சி அருகே துறையூரில் ஆகஸ்ட் 22, 1937 இல் சுயமரியாதை மாநாடு நடக்கிறது. அதன் தலைவராக அண்ணா நியமிக்கப்பட்டார், பெரியாரால். அண்ணாவைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் பெரிய நிகழ்ச்சி அதுதான். அங்கே அண்ணா ஆற்றிய தலைமை உரை மிகவும் புகழ்பெற்றது.
ராஜகோபாலாச்சரியின் ஆட்சி அப்போதுதான் அமைந்திருந்தது. பார்ப்பனீயம் ஆட்சிபீடமேறிவிட்டது என்று சுயமரியாதை இயக்கத்தினர் பெரும் பரப்புரையில் ஈடுபட்ட காலம்.
தலைமையுரையில் அண்ணா அந்த அச்சத்தை வெளிப்படுத்தினார். 1925 இலிருந்து பன்னிரெண்டு ஆண்டு காலம் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் செய்த செயல்பாடுகளை பாராட்டி பேசும் அண்ணா, ராஜாகோபாலாச்சரியின் பார்ப்பனீய ஆட்சி எத்தகைய ஆபத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார். அவரது ஆட்சி “பார்ப்பனப் பாதுகாப்புச் சபையாக” இருக்கிறது என்று கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியால் நேரடியாக வரக்கூடிய கேடுகளைவிட மறைமுகமாக வரக்கூடியக் கேடுகளை பட்டியலிடுகிறார்.
சுயமரியாதை இயக்கம் சமூகத்தளத்திலும் நீதிக்கட்சி ஆட்சித்தளத்திலும் செய்துவந்த முக்கிய சீர்திருத்தங்களால் உருவான மாற்றங்களை காங்கிரசின் புதிய ஆட்சியிடமிருந்துக் காப்பாற்றவேண்டும் என்று அறைகூவல் விடுத்த அண்ணா, காங்கிரஸில் உள்ள சமதர்மிகளின் ஏமாளித்தனத்தையும் விமர்சித்தார். போலி சமதர்மிகளை விமர்சிக்கும் அண்ணை அபேதவாதம் (socialism/communism) தொடர்பாகவும் பேசுகிறார்.
யூதர்களின் ஆதிக்கத்தால்தான் ஜெர்மனியில் ஹிட்லர் வந்தார் என்றும் அவரது ஹிட்லர் எவ்வாறு யூதர் ஆதிக்கத்தை ஒழித்தார் என்றும் சுட்டிக்காட்டினார் அண்ணா. என்ன ஆச்சரியம் தெரியுமா? அண்ணா ஹிட்லரை சுட்டிக்காட்டிப் பேசியது 1937 இல். அப்போது இரண்டாம் உலகப்போர்கூடத் தொடங்கவில்லை! ஆனால் நமது போர்முறை ஹிட்லரின் முறை அல்ல என்று கூறுவதற்காகவே அண்ணா ஹிட்லரைப் பற்றி பேசினார். “அடக்குமுறைகளைக் கொண்டு ஹிட்லர் யூதர் ஆதிக்கத்தை ஒழித்தார். நாம் அறிவு என்னும் ஆயுதம் கொண்டு அந்த ஆதிக்கத்தை ஒழிப்போம்” என்றார் அண்ணா. ஆனால் அசோகமித்திரன்களும் பக்ஷிராஜன் கிருஷ்ணன்களும் திராவிட இயக்கத்தை நாஜிகளோடு ஒப்பிட்டுப்பார்க்கவே விரும்பியிருக்கிறார்கள் என்பது ஒரு தனிக்கதை.
இவை அனைத்தையும் விட பேச்சின் இறுதிப்பகுதியில் அவர் கூறிய சில விஷயங்கள் பிற்காலத்தில் தமிழர்களின் போராட்ட வியூகமாகவே மாறியது. அந்தக் கருத்துகள் இப்போதும் கிட்டத்தட்ட அப்படியே பொருந்துகின்றன. அந்தக் கருத்தை அப்படியே இதோ உங்கள் முன்பு வைக்கிறேன்:
“எந்த ஆட்சி வந்தாலும்சரி, தமிழர்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டியவை சில உள்ளன. அவர்களுக்கு எந்தக் கட்சி மீது அபிமானம் இருப்பினும் தமிழரின் ஜீவநாடி தளரவிடலாமா? அந்த ஜீவநாடிகளுக்கு ஆபத்து வரக்கூடுமா? காலம் மாறுகிறதல்லவா? புதிய புதிய ஆபத்துகள் வரலாம். ஆகவே கீழ்க்கண்டவைகளைத் தமிழ்நாட்டவர் எப்பாடு பட்டாகிலும் காப்பாற்றியே தீரவேண்டும்.
அந்த ஜீவ நாடிகள்:
1. தமிழ் மொழி – இதுவே நாம் தமிழர் என்பதைக் காட்டுவது. இதற்கு ஆபத்துவந்துவிட்டால் நமது ஒற்றுமை, தலை, நாகரிகம், யாவும் நாசம்! ஆகவே தமிழைக் காப்பாற்றுங்கள்.
2. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் – இது சமூகத்திலே ஒரே வகுப்பார் ஏகபோக மிராசு செலுத்தும் ஆபத்தைப் போக்குவது; சகல வகுப்பாரின் பிள்ளைகுட்டிகளுக்கும் இது உரிமை தருவது. இது அழிந்தால் எங்கும் ஒரே வகுப்புதான் அதிகாரம் செலுத்தும். மற்ற வகுப்புகள் தாசர்களாகத்தான் வாழவேண்டும். அது நியாயமா? ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றியே தீரவேண்டும்.
3. இந்துமத தர்ம பரிபாலனச் சட்டம் – நமது தமிழ்நாட்டிலே கோடிக்கணக்கில் பணம் தர்மத்துக்காக, கோயில்களிடம் ஒப்படைத்து வைக்கப்பட்டிருக்கிறது. தர்மம் தழைக்கவேண்டும் என்று நமது பெரியவர்கள் அதைச் செய்தனர். அந்த தர்மச் சொத்து நியாயமாக்க் கொடுக்கப்படவேண்டும் அல்லவா? வேறு யாரும் சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் நாம் பார்த்துக்கொள்ள மேற்படி சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு ஆபத்து வந்தால், தர்மச் சொத்தில் கண்டவர் கைவைத்துவிடுவார்கள். ஆகவே, அந்தச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்.
4. இனாம் சட்டம் – உலகத்திலேயே எங்குப் பார்த்தாலும் சமதர்மம் பேசப்பட்டுவருகிறது! அந்தச் சமதர்மத்தின் அடிப்படையிலான கொள்கைதான் இந்தச் சட்டம் லட்சக்கணக்கான குடியானவர்களுக்கு! இந்தச் சட்டத்தால் நிலபாத்தியதை உரிமை ஏற்படாது, பரம்பரையாகப் பாவம் இந்தக் குடியானவர்கள் உழுது உழுது ஒரு குழி நிலம்கூடத் தங்களுக்கு என்று இல்லாமல் வாடினார்கள், அப்படிப்பட்ட குடியானவர்களில் இலட்சக்கணக்கானவர்களுக்கு இந்தச் சட்டம் நன்மை தந்தது. இதை ஒழிக்கக் கங்கணங்கட்டிக்கொண்டு பலருமிருக்கிறார்கள். தமிழர்களே, சமதர்மிகளே, வாலிபர்களே! இனாம் சட்டத்தைக் காப்பாற்றத் தயாராக இருங்கள்.
தமிழா, நீ எங்கு இருந்தாலும் சற்று ஜாக்கிரதையாகவே இரு! உஷார்!”
- இது அண்ணாவின் பேச்சு.
தமிழ் மொழி, இனம், நாகரிகம் காப்பாற்றப்படவேண்டும் என்கிற தமிழ்த்தேசிய அரசியலும் வகுப்புவாரி பிரதிநிதிக்குவத்தைக் காக்கும் சமூக நீதி அரசியலும் இந்து தர்ம பரிபாலனச் சட்டத்தைக் காப்பாற்றவேண்டும் என்கிற பார்ப்பனீய ஆதிக்க எதிர்ப்பு அரசியலும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பதை முன்னிறுத்தும் பொதுவுடமை அரசியலுமே அண்ணாவின் வார்த்தைகளில் தமிழர்கள் காப்பாற்றவேண்டிய ஜீவநாடிகளாக இருந்தன.
அன்று ராஜோகோபாலாச்சாரியார் ஆட்சி. இன்று குருமூர்த்திகளின் ஆட்சி. நூறாண்டு கழித்து தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறோம்.
“காலம் மாறுகிறதல்லவா? புதிய புதிய ஆபத்துகள் வரலாம்” என்றார் அண்ணா. இன்று காலம் வெகுவாக மாறிவிட்டது. புதிய ஆபத்துகள் வந்தே விட்டன. கடந்த சில ஆண்டுகளாகவே, குறிப்பாக மோடி ஆட்சிக்காலத்தில், நாம் மீண்டும் மொழியுரிமைக்குத் தள்ளப்பட்டோம். இட ஒதுக்கீடு உரிமைக்காகப் போராடுகிறோம். சமூக நீதியின் அடிப்படைகள் ஒழிக்கப்படுவதால் அனிதாக்கள் தூக்கிலேறுவது குறித்து போராடுகிறார். விவசாயிகளிடமிருக்கும் நிலம் வலுக்கட்டாயமாக அவர்களிடமிருந்து பிரிக்கப்படுவதைக் கண்டு போராடுகிறோம்.
இந்த நான்கு ஜீவநாடிகளில் இரண்டு ஜீவநாடிகள் இன்று மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளன.
இந்து தர்ம பரிபாலனச் சட்டம்தான் இன்றைய இந்து அறநிலையத்துறைக்கு அடிப்படை. கோயில்களை தன் சொந்த உடைமைகளை மாற்றிவைத்திருந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழித்து அதை மக்களின் சொத்தாக மாற்றியது நீதிக்கட்சிக் காலத்தில்தான். இன்று என்ன நிலைமை?. பாஜக தலைவர் எச்.ராஜாவும் இந்து முன்னணியும் ஆர் எஸ் எஸ் வழிகாட்டலில் தமிழ்நாட்டில் இன்று செய்துகொண்டிருக்கக்கூடிய வேலையை நாம் அறிவோம். இந்து அறநிலையத்துறையை ஒழித்துக்கட்டிவிட்டு அந்த மிகப்பெரிய சொத்துகளையும் இடங்களையும் மீண்டும் பார்ப்பனர்களின் சொந்தச் சொத்தாக மாற்றுவதற்கு அவர்கள் துடிக்கிறார்கள். வெளங்காத பல பார்ப்பனரல்லாத அடிவருடிகளும் அதற்குப் பின்னால் செல்கிறார்கள். திராவிட / தமிழ்த்தேசிய இயக்கத்தினர் பலருக்கும்கூட எச்.ராஜாவின் உத்தி புரியவில்லை. அறநிலையத்துறையில் உள்ள ஊழல்கள் என்று பேசியும் சிலைக்கடத்தல் என்கிற பூச்சாண்டியைக் காட்டியும் எச்.ராஜாக்கள் நடத்தும் மிகப்பெரிய சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளக்கூட திராணியற்றவர்களாக நாம் ஆக்கப்பட்டிருக்கிறோம். அண்ணா சொல்கிறார்: “வேறு யாரும் சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் நாம் பார்த்துக்கொள்ள மேற்படி சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு ஆபத்து வந்தால், தர்மச் சொத்தில் கண்டவர் கைவைத்துவிடுவார்கள். ஆகவே, அந்தச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்.” - அண்ணா 1937 இல் சொன்னது, 2018 இலும் பொருந்துகிறது.
அடுத்த்தாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்பானது. அதாவது இன்றைய இட ஒதுக்கீடு தொடர்பானது. நீதிக்கட்சி ஆட்சிக் காலம் முதல் ஜெயலலிதா ஆட்சிக் காலம் வரை காப்பாற்றப்பட்டுவந்த இட ஒதுக்கீடு இப்போது பெரிய ஆபத்தில் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஒன்றால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் இருக்கிறது. அந்த இட ஒதுக்கீட்டின் அரசியல் சாசன செல்லுபடியாக்கத்தை எதிரிகள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். அடிமை அமைச்சர்கள் சென்னையில், நமது இட ஒதுக்கீட்டின் எதிரிகள் தில்லியில்.
இந்த நிலையில் நமது நூற்றாண்டுகால உரிமைப்போராட்டத்தைப் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாத கும்பல்கள் இங்கே களமாடிக்கொண்டிருக்கின்றன. பாஜகவின் தமிழ்நாட்டு ஆதரவாளர்கள் 99 சதவீதம் பார்ப்பனரல்லாதோர்தான் .அவர்கள் அத்தனை பேரும் இன்று இட ஒதுக்கீட்டு எதிராக பேசுகிறார்கள். போதாக்குறைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள். இன்னொரு பக்கம் சமூக நீதியின் அடிப்படையை உணராத சில பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள். தமிழ்த்தேசிய அரங்கை அடைத்துக்கொண்டிருக்கிற அந்தப் பிற்போக்குவாதிகள் கடந்த பத்தாண்டு காலமாக சமூக நீதி உரிமைகளுக்கு எதிராக விஷக்கருத்துகளை நுணுக்கமாகப் பரப்பிவைத்திருக்கிறார்கள்.
1937 இல் அண்ணா முன்வைத்த ஜீவநாடிகளில் இதுவும் ஒன்று: “(வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்) சமூகத்திலே ஒரே வகுப்பார் ஏகபோக மிராசு செலுத்தும் ஆபத்தைப் போக்குவது; சகல வகுப்பாரின் பிள்ளைகுட்டிகளுக்கும் இது உரிமை தருவது. இது அழிந்தால் எங்கும் ஒரே வகுப்புதான் அதிகாரம் செலுத்தும். மற்ற வகுப்புகள் தாசர்களாகத்தான் வாழவேண்டும். அது நியாயமா? ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றியே தீரவேண்டும்.”
தமிழ் அரசியல், சமூக நீதி அரசியல், சமதர்ம அரசியல் ஆகியவற்றின் அடிப்படையில் அண்ணா முன்மொழிந்த தமிழின உரிமை அரசியலை அறிந்துகொள்வதென்பது தில்லி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரில் மிக முக்கியமானதாகும். அதனால்தான். தன்னாட்சித் தமிழகம் அண்ணாவின் பங்களிப்புக்கு உரிய வெளிச்சத்தை அளிக்க விரும்புகிறது.
அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 இல் காஞ்சிபுரத்திலும் செப்டம்பர் 16 இல் மதுரையிலும் இரு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியலை முற்போக்கான திசைவழியில், சமூக நீதி உள்ளடக்கத்தோடும் சமதர்ம உருவத்தோடும் முன்னெடுக்க விரும்புவோரை அழைக்கிறோம். வாருங்கள். உரையாடுவோம். விமர்சிப்போம். உண்மையை ஏற்றுக்கொள்வோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=10157703291044046&id=612219045
No comments:
Post a Comment