Thursday, September 6, 2018

ஓரின சேர்க்கையும், இஸ்லாமும்

Lafees Shaheed
2018-09-06

மதசார்பற்ற நாடுகளில், சமூகங்களில் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டின் பொது சட்ட, நீதி நெறிமுறைகள் குறித்து உணர்ச்சி வசப்படாமல் அணுகும் போக்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை வழங்கப்பட்ட சட்டபூர்வ அனுமதியை எமது ஷரீஆ சார்ந்த சொல்லாடல்கள் மூலமாக எதிர் கொள்வது சரியல்ல. இஸ்லாத்தின் பார்வையில் ஓரினச்சேர்க்கைக்கு கடும் தடை உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அதனை பொது மன்றத்தில் விவாதிக்கும் பொழுது எமக்கு நிதானம் தேவை. மதம் சார்ந்த அணுகுமுறை என்பதை தவிர்த்து உரையாடல் கலாச்சாரம் மூலமாகவே பொது மன்றத்தை அணுகி ஓரினச்சேர்க்கை குறித்து பேச வேண்டும்.

மதுவை இஸ்லாம் தடை செய்து இருக்கிறது. ஷரீஆவில் மதுப் பாவனைக்கு தண்டனையும் நியமம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் மது அருந்தும் பழக்கம் கொண்ட அனைவரையும் நாம் எல்லா இடங்களிலும், நேரங்களிலும் அருவருப்பாக பார்ப்பது இல்லை. மாறாக அவர்களிடம் நட்பு பேணுவோம். வேலைத் தளங்களில் இணைந்து பணியாற்றுவோம். அது போலவே ஓரினச் சேர்க்கையும். ஒரு கலாச்சாரம் தன்னுடைய வாழ்முறையில் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கிறது எனில் அது அவர்களின் தனிப்பட்ட ஒரு விடயம். அதனை அருவருக்கத்தக்க ஒரு நடவடிக்கை என்று கருதிக் கொண்டு தீர்ப்புகளை வழங்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

இஸ்லாம் ஒரு விடயத்தை தடை செய்து இருந்தால் நிச்சயமாக அது மனிதனுக்கு தீங்கானது என்பது எமது நம்பிக்கை. ஓரினச்சேர்க்கையும் மனிதனுக் தீங்கு விளைவிக்கும் ஒரு அம்சமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த தீங்கு எவ்வகையானது என்பதை எம்மால் உறுதியாக கூறிட முடியாது. அது சில வேளைகளில் உடலுக்கு தீங்கானதாக இருக்கலாம் ; சில நேரம் அறிவுக்கு ஏதாவது தீங்கை வரவழைக்க கூடியதாக இருக்கலாம் ; ஒரு வேளை சமூக வாழ்வுக்கு ஏதாவது பங்கம் விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அல்லது இப்படி ஏதும் இல்லாமல் ஆன்மீக முன்னேற்றம் அதனால் பாதிக்கும் எனும் வகையில் இடப்பட்ட தடையுத்தரவாக அது இருக்கலாம். இவற்றில் ஏதாவது காரணம் அறிந்தாலும் அல்லது அறியாவிட்டாலும் கூட ஒரு முஸ்லிம் ஓரினச்சேர்க்கையை தடை என்று தான் கருதுவான். ஏனெனில் இஸ்லாமிய ஷரீஆ அதனை திட்டவட்டமான முறையில் தடை செய்து இருக்கிறது. அதில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையும் நியமம் செய்து இருக்கிறது. ஆனால் இஸ்லாமிய சமூகங்களுக்கு வெளியே நிற்கும் பொது மன்றம் இப்படியான நம்பிக் சார்ந்த தர்க்கங்களை ஒத்துக் கொள்ளுமா? எமது உணர்ச்சி வசப்பட்ட போக்கில் நின்று அவர்களும் இவற்றை எதிர் கொள்வார்கள் என்று எதிர்பார்த்திட முடியுமா?

இஸ்லாம் என்பது நம்பிக்கை மற்றும் சமூக வாழ்வு குறித்த சட்ட திட்டங்கள் எனும் வகையில் ஓரினச்சேர்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஒருவர் இஸ்லாமிய வட்டத்திற்குள் இருக்க முடியாது. ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களின் பண்பாடுகளை பொறுத்தவரையில் அவர்கள் ஓரினச்சேர்க்கையை அனுமதிப்பதை நாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகவும் முடியாது. மிகுந்த பொறுமையாகத்தான் எமது தரப்பு தர்க்க நியாயங்களுடன் நாம் அவர்களுடன் உரையாட வேண்டும் / முடியும்.

முஸ்லிம்கள் தம் காலத்தை உணர்ந்து தமது மார்கத்தின் விழுமியங்களை பொது மன்றத்தில் உரையாடல் நிகழ்த்தும் வகையில் தம்மை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்..!

#இங்கிருந்து அறிவோம்

#பாதையை_செப்பனிடல்

No comments:

Post a Comment