Wednesday, September 12, 2018

இன்ஸ்டன்ட் பொங்கல்களால் மாறப்போவது எதுவுமில்லை

Muhi Bullah S
2018-07-17
Via Facebook

*இவர்களை அடித்தே கொல்லவேண்டும். நடுரோட்டில் நிறுத்தி சுடவேண்டும், அறுத்து வீசவேண்டும்* - இப்படியான இன்ஸ்டன்ட் பொங்கல்களால் மாறப்போவது எதுவுமில்லை.

இதே வாரத்தில் இதே குற்றத்திற்க்காக ஒருவனுக்கு தூக்கு தண்டனையும் அறிவித்தாயிற்று. இப்போது இந்த செய்தி இன்னும் செய்திகள் வரலாம்.

இப்போது கைது செய்யப்பட்ட 17 பேர் உள்ளிட்ட 24 பேரையும் ஒரு கிளினிக்கல் சைக்கியாட்ரிஸ்ட் சோதனை செய்தால் அவர்கள் எந்த மனநோய் அறிகுறிகளும் இல்லாத இயல்பான மனிதர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களையே பெறுவர்.

அப்போ இந்திய ஆண்களுடைய பெண்கள் குறித்த பொதுவான மனநிலை இதுதானா என்றால் பெரும்பாலும் இதுதான்.

இயல்பாகவே இருக்கும் அறவுணர்ச்சி, வாசிப்பு, அரசியல், சமூகப் பார்வை போன்றவற்றால் கொஞ்சம் சிந்திக்கக்கூடிய அல்லது கடவுள் எனும் கருத்தாக்கத்தால் பாவம், நரகம் என்று சொல்லி வளர்க்கப்பட்ட அவற்றை முழுமையாக நம்பி வளர்ந்த சிலரைத் தவிர மற்ற எல்லோருடைய பார்வையிலும் "வாய்பேச முடியாத தனக்கு நிகழ்வதை யாரிடமும் சொல்ல முடியாத 12 வயது சிறுமியானவள் ஒரு பாதுகாப்பான இரை. அவ்வளவே"

இதில் வயது பேதமெல்லாம் இல்லை 60, 58, 53, 50, 48, 23, 32 இப்படியாக போகிறது கைது செய்யப் பட்டுள்ளவர்களின் வயது. இதில் சிலருக்கு பேரக்குழந்தைகளாகவும், அவர்களுடைய குழந்தைகளாகவும் இந்த வயதில் பெண்குழந்தைகளோ ஆண்குழந்தைகளோ இருக்கலாம்.

ஆண் பெண் குழந்தைகளை பள்ளி மாணவப் பருவத்திலிருந்தே எதிரும் புதிருமாக அமர்த்தி பழக்கப்பட்ட அவர்களை ஒருவருக்கொருவர் விநோதமானவர்களாகவே பார்க்க பயிற்றுவிக்கப்பட்ட சமூகத்திலிருந்து இப்படிப்பட்டவர்களையன்றி வேறுயாரை எதிர்பார்ப்பது.

பிள்ளைகளிடம் குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அதைப்பற்றி முழுமையாக தெரிந்த பெற்றோர் எத்தனை பேர் உள்ளோம்? தெரிந்தாலும் அவர்களிடம் பேசுவதற்க்கான நேரத்தை அவர்களுக்கு ஒதுக்குகிறோமா?

இன்று சித்திரவதை செய்யப்பட்டுள்ள இந்த குழந்தை ஏழு மாதங்களுக்குப் பிறகு டெல்லியிலிருந்து திரும்பிய தன் அக்காவிடம் சொல்லி அவர் புரிந்து கொண்டதால்தான் இந்த செய்தி வெளி உலகிற்க்கு தெரிய வந்திருக்கிறது என்றால் சிறப்பு கவனம் தேவைப்படும் ஒரு குறைபாடுடைய குழந்தைக்கும் அதன் பெற்றோருக்குமான இடைவெளிதான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது.

அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும், தங்கள் மூத்த மகளை கல்விக்காக தொலைதூரத்திற்கு அனுப்பிவைக்கும், பொருளாதார தன்னிறைவும், கல்வியும் பெற்ற பெற்றோர்களுடைய நிலையே இதுதான் என்றால் அன்றாட வாழ்க்கை போராட்டத்திற்காக ஓடிக்கொண்டே இருக்கும் சாமான்யர்களின் நிலை என்ன?

இன்னும் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி குறித்த உரையாடல்கள் விவாத அளவை தாண்டவில்லை, ஆண்/பெண் உலகங்கள் குறித்த பரஸ்பர புரிதல்கள் இரண்டு தரப்பிலுமே இல்லை.

இப்படி மிக நீண்ட வெளிப்படையான விவாதத்தை கோரக்கூடிய இது போன்ற சம்பவங்களை நாம் வெறும் உணர்ச்சி வயப்பட்ட கருத்து வெளியிடுவதால் மட்டுமே கடந்துவிட முடியுமா?

No comments:

Post a Comment