Prabhu RS
2018-09-09
இரண்டு நாட்களாக அத்தனை நாளேடுகளிலும் Zomato என்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் fssai உரிமம் பெறாத உணவகங்களை தங்களது தளத்தில் இருந்து அப்புறப்படுத்த இருப்பதாக முடிவுடுத்துள்ளது குறித்து, வாடிக்கையாளர் நலனில் மிகவும் அக்கறையான தொணியில் செய்தி வெளியிட்டன.
பார்ப்பதற்கு இது ஒரு முக்கியமான செய்தி போலத் தோன்றினாலும் இது ஒரு அல்பத்தனமான விளம்பரம். உணவகம் நடத்த கட்டாயம் fssai உரிமம் பெற வேண்டும். இது பான் கார்டு, ஆன்லைன் வில்லங்கம், மின்கட்டணம் செலுத்துதல், உத்யோக் ஆதார் (SSI), பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது போன்ற வேலைகளைச் செய்து தரும் ஈ-சேவை மையங்களில் செய்ய வேண்டிய சாதாரண வேலை. ஐநூறோ ஆயிரமோ இலஞ்சம் கொடுத்துவிட்டு வாங்கித்தரவும், ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்கவும் புரோக்கர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்.
வெளிநாட்டு முதலீடு பெற்று, மிகப்பெரிய தொகைகளை விளம்பரத்திற்காக செலவு செய்யும் ஜொமாட்டோ போன்ற நிறுவனம், அடிப்படை உரிமம் கூட இல்லாத கடைகளைத் தங்களது தளத்தில் பட்டியலிட்டு உணவுப்பொருட்களை வாங்கி டெலிவரி செய்வதும், பின்னர் அவற்றைத் தடை செய்வதை செய்தியாக்குவதும் மகா மட்டமான சம்பவம்.
இந்திய ஈ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஒன்றுகூட சொல்லிக்கொள்ளும்படியான பிசினஸ் மாடலையோ, இலாபத்தையோ காட்டாமல் வெறும் டர்ன் ஓவர் கணக்கைக் காட்டி ஒப்பேற்றி வரும் சூழலில் இந்த மாதிரி மிகவும் அடிப்படை compliance கூட தெரியாத கோமாளிகளை நம்பி பணத்தைப் போட்டுவிட்டு காத்திருக்கும் முதலீட்டாளர்களும் இந்திய சந்தை குறித்து என்னதான் நினைக்கிறார்கள் என்ற ஐயம் ஏற்படுகிறது.
ஏற்கனவே foodpanda நிறுவனத்தில் நடந்த உள்ளடி வேலைகள் இந்திய ஈ-காம் தொழில் வாய்ப்புகளின்மீது ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருந்த்து குறிப்பிடத்தக்கது.
வெறும் கரண்ட் அக்கவுன்ட்டை வைத்துக்கொண்டு பத்து இருபது செல் நம்பர்களில் ஆர்டர் போட்டு டெலிவரி செய்வதுபோல படம் காட்டி கணிசமான தொகையைத் தங்களது எடுப்பு தொடுப்புகளுக்கு கசிய விட்டுவிட்டு, முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் அதிகரிக்கும் ஆர்டர் எண்ணிக்கையைப் பவர்பாய்ன்ட்டில் படம் காட்டிவிட்டு, குமிழி உடையும் முன்னர் அந்த கடைகளை பிளாக்லிஸ்ட் செய்து ஒதுங்கிக் கொள்கிறார்களோ என்று எண்ணினால் நீங்களும் என் இனமே! தங்களது இலக்கை அடைய புரோமோட்டர்கள் என்றில்லை, ஊழியர்களே இவ்வாறு செய்ய வாய்ப்புண்டு என்பதை சந்தையில் இருப்பவர்கள் அறிவர்.
உணவை வேட்டையாடி உண்பது என்பது மனித குணங்களில் அடிப்படையான ஒன்று. அதன் நீட்சிதான் மக்கள் இன்னனமும் நல்ல உணவகங்களுக்குப் படையெடுத்துச் செல்வதுபோலச் சென்று சாப்பிட்டு வருவது. வெளியில் குழுவாகச் சென்று உணவருந்தி வருவது மகிழ்ச்சியளிப்பதற்கு காரணம் குகைகளில் வாழ்ந்த நம் முன்னோர்களின் மரபுப் பண்புகள் இன்னும் நம்முள் இருப்பதுதான்.
நடைபாதைகள், பூங்காக்கள், மைதானங்கள், மனமகிழ் மன்றங்கள் வாய்க்கப்பெறாத நம் நாட்டு மக்களுக்கு வெளியில் ஷாப்பிங் செல்வதும், உணவகங்களுக்குச் செல்வதுமே ஆகச்சிறந்த பொழுதுபோக்கு+மனமகிழ் அம்சங்கள். மளிகைச் சாமான்களை, உணவுப் பொருட்களை பொட்டலம் கட்டி வந்து வாசலில் போட்டுவிட்டுச் செல்லும் சேவைகள் நீண்டகால அடிப்படையில் நம்மூரில் எடுபடாது.
×|×|×|×|×|×|×|×|×|×|×|×|×|××|×|×|×|×|×|×|×|×|×|×|×|×
ஆர்கானிக் சர்டிஃபிகேட் எனப்படும் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெற்றவர்கள் fssai உடன் இணைத்துக்கொள்ள வேண்டும், ஆர்கானிக் என்று சொன்னால் அதற்கு traceability இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அதை சாதாரண விளைபொருளாக விற்றுக்கொள்ளலாம். ஆர்கானிக் என்றால் அதற்கு என்ன ஆதாரம் என்று வாடிக்கையாளர்கள் கேட்கும்போது "நான் ஆர்கானிக் விவசாயி, நான் சொல்லிவிட்டால் மறு கேள்வி கிடையாது, நான் விற்பதை நீங்கள் கேள்வி கேட்க முடியாது, அப்படி கேள்வி கேட்டால் நீங்கள் பன்னாட்டு கம்பெனி கைக்கூலி" என்றெல்லாம் மிரட்டல் தொணியில் பேசுவது அல்லது "நாங்கள் ஏழை விவசாயிகள், அப்பாவிகள், இந்த உலகத்திலுள்ள மக்களுக்காக எங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறோம், எங்களை ஏன் நம்ப மாட்டேங்கிறீர்கள்?" என்று நெஞ்சை நக்கும்படி பேசுவதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று சொன்ன APEDA, எல்லா ஆர்கானிக் சான்றிதழ்களையும் Zaivik Bharat என்ற இலச்சினையில் fssai உடன் இணைக்கச் சொல்லிவிட்டது.
மோடி அரசாங்கம் அபூர்வமாக செய்த நல்ல காரியங்களுள் ஒன்று கடுமையான லாபி சிக்கலில் சிக்கி எந்த முடிவுகளையும் எடுக்க முடியாமல் திணறிய fssai-ஐ விடுவித்து நல்ல சுதந்திரம் கொடுத்ததுதான். முந்தைய அரசின் நீட்சிதானே என்று சொல்லாமல், தனியாக பாஜக அரசைப் பாராட்ட வேண்டுமென்றால் அது fssai -க்காக மட்டும்தான். ஆர்கானிக் விவசாயம் என்பதை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பதற்காகவும், புற்றீசல் போல முளைக்கும் ஆர்கானிக் ஸ்டோர்களுக்கு தரக்கட்டுப்பாடு வேண்டும் என்பதற்காக ஜைவிக் பாரத் அடையாளம் உருவாக்கப்பட்டது.
எப்படி சாத்தியம் என்று சிந்திக்காமல் கோமாளித்தனமான முடிவுகளை அரசியல்வாதிகள் அவ்வப்போது எடுப்பர். அப்படி எடுத்த ஒன்றுதான் சிக்கிம் மாநிலத்தை முழுவதும் இயற்கை விவசாய மாநிலமாக அறிவித்தது. ஊட்டி மாவட்டத்தை ஆர்கானிக் விவசாய மாவட்டமாக மாற்ற ஆட்சியர் சொன்னதுபற்றி இங்கு யாரும் கேட்கக்கூடாது!
வேளாண் தொழில் தொடர்பான எல்லா ஃபிராடுகளும் ஈரோடு மாவட்டத்தில்தான் ஆரம்பமாகும் என்பது ஐதீகம். ஈமு கோழி போன்ற லோக்கல் லெவல் முதல் ஓடாத உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளை ஓடுவதாகக் காட்டி கமிஷன் போடும் ஹைடெக் லெவல் வரை உண்டு. ஆர்கானிக் விளைபொருட்களுக்கு ஏற்றுமதி சந்தை தாறுமாறாக இருக்கிறது என்பதற்காக ஈரோட்டில் லோக்கல் சந்தையில் வாங்கி சிக்கிம் மாநிலத்திற்கு லாரியில் எடுத்துச்சென்று அங்கே உற்பத்தி ஆனதாக Certificate of Origin போட்டு ஏற்றுமதி செய்வது லேட்டஸ்ட் ட்ரென்ட். மஞ்சள், கறிவேப்பிலை, முருங்கை, மரவள்ளி என பலவும் சிக்கிம் மாநிலத்தில் விளைகிறதாம்!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் அல்போன்சா மாம்பழம், முந்திரி, அரிசி, மசாலாப் பொருட்கள் என பலவற்றுக்கும் ஆர்கானிக் சான்று இருப்பின் பிரீமியம் விலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆர்கானிக் என்ற பிரிவுக்கும், conventional என்ற பிரிவில் உள்ள காய்கறிகளுக்கும் உள்ள விலை வித்தியாசத்தை அங்கு பார்த்தவர்கள் அறிவர். அதற்கான வாய்ப்புகளை நமது விவசாயிகளுக்கு உண்டாக்கித் தராமல் விட்டதால் சீன விவசாயிகள் காசு பார்க்கிறார்கள்.
அரசாங்க முகவாண்மையிடமோ அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் முகமைகளிடமோ தோட்டங்களுக்கு ஆர்கானிக் சான்று பெற ஏக்கருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் செலவாகும். என்ன இடுபொருட்களை எப்போது இட்டோம், வாங்கிய இரசீதுகள், அறுவடை விவரங்கள், மகசூல் அளவு, பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற சாதாரண தகவல்களை ஒரு பதிவேட்டில் எழுதி வர வேண்டும்.
விவசாயம் நடைமுறை தெரிந்தவர்களுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஆர்கானிக் சர்டிபிகேட் பெறுவது, சாதாரண பண்ணை நடவடிக்கைகளை ஒரு நோட்டில் முறையாக எழுதி வருவது ஒன்றும் பெரிய விசயமில்லை. எந்த சான்றளிப்பு முகமையும் ERP மென்பொருளில் ஏற்றி வைக்க வேண்டும் என்று சொல்வதில்லை. TraceNet-இல் ஏற்றி Transaction Certificate போட்டு விற்பனை செய்வதெல்லாம் கட்டாயமும் இல்லை.
ஏற்றுமதி செய்ய வாங்குபவர்கள் மட்டுமே TC எதிர்பார்ப்பார்கள். அதைப் பெரும்பாலும் அவர்களே விவசாயி உடன் அமர்ந்து செய்துகொள்வர்.
நாங்கள் செய்யும் இயற்கை விவசாயத்திற்கு எதற்கு Third party certification என்று கேட்பது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதே ஆட்கள்:
1) இரண்டு பேர் மனம் ஒத்து இணைந்து வாழ்வதை எதற்கு திருமணம் என்று பதிவு செய்ய வேண்டும் என்று கேட்பதில்லை.
2) தனது நிலத்தை சொந்த மகன்/மகளுக்கு தர எதற்கு அரசாங்கத்திடம் பத்திரம் பதிவு செய்யவேண்டும் என்று கேட்பதில்லை.
3) தங்களது குடும்ப உறுப்பினர் இறந்தால் எதற்கு அரசாங்கத்திடம் இறப்புச் சான்றிதழ் பெற்றுத்தான், தான் அவரது வாரிசுதான் என்று நிரூபிக்க வேண்டும் என்று கேட்பதில்லை.
ஈரோடு, கரூர் மாவட்டங்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட பாதி இயற்கை விவசாயிகள் கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து ஆட்கள் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். இலக்கமிடாத பிராமிசரி நோட்டு வாங்குகையில், சேல் அக்ரிமென்ட் போடுகையில் 'நான் கொடுக்கிறேன், அவர் வாங்குகிறார் இதற்கு எதற்கு ஒப்பந்தம்?' என்ற கேள்வி அவர்களுக்கு வராது!
ஏக்கருக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஆர்கானிக் சான்றிதழ் பெற வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் ஆர்கானிக் என்று சொல்கையில் அதற்கு ஆதாரம் என்ன என்பதே கேள்வி. நிலக்கிழார், மிராசுதார் என்றாலும் ஒன்றைக் காசு வாங்கிக்கொண்டு விற்பனை செய்கையில் நுகர்வோருக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
இன்று தமிழகத்தில் ஓணான் முட்டையிடாத பொட்டல் காடு கூட ஏக்கர் நான்கு இலட்சம் ரூபாய்க்குத்தான் ஆரம்ப விலைக்கு வருகிறது. ஏக்கருக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் ஆர்கானிக் சான்றிதழுக்காக செலவு செய்ய முடியாதவர்கள், ஒரு நோட்டுப் போட்டு என்னென்ன காரியம் செய்து பயிரிட்டோம் என்று குறித்து வர முடியாத அப்பாவி, ஏழை விவசாயிகள் ஏன் கஷ்டப்பட்டு, அடம்பிடித்து இயற்கை விவசாயமே செய்து இந்த பாழாய்போன ஜனங்களுக்கு உணவிட வேண்டும்? கம்முனு வித்துப் போடலாம். அப்படி விற்றாலும் அரசாங்கம் பணம் என்று சொல்லி வழங்கும் ரூபாய் சர்டிபிகேட் தாளை வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். நிலத்தை விற்பதற்கு முதலில் நம்மிடம் பத்திரம் வேண்டும். வாங்குபவருக்கு சாட்சிகளின் முன்னிலையில் பதிவு செய்து தர வேண்டும்.
ஊர்ச் சாவடி, கல்லுக்கட்டுகளில் உட்கார்ந்து பன்னாட்டு சதிகளைப் பேசும் சித்தர்களுக்குத்தான் எத்தனை சோதனை!!
https://m.facebook.com/story.php?story_fbid=10156084914273773&id=595298772
No comments:
Post a Comment