Sunday, September 23, 2018

ரஃபேல் ஒப்பந்த ஊழல் 1 - Karl max

Karl Max Ganapathy
20180922

ரஃபேல் ஒப்பந்த ஊழலின் வழியாக 2Gயில் நடந்தது போன்றதொரு கார்ப்பரேட் யுத்தம் தொடங்குகிறது. காங்கிரஸ் வெளிப்படையாக இறங்கி வந்து அடிக்கிறது. மோடியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது.

சென்ற 2G விவகாரத்தில், “கூட்டணிக் கட்சிகள்தானே மாட்டுகின்றன” என்று கார்ப்பரேட்டுகள் இழுத்த இழுப்புக்குப் போய் மக்களிடம் அந்நியப்பட்டு காவிகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், இன்று அதே விளையாட்டின் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயல்கிறது.

எந்த சந்தேகமும் இல்லாமல் இதில் மோடி சிக்குகிறார் என்பதும், இந்த தேர்தலில் இது மிகப்பெரிய விவகாரமாக இது உருவெடுக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதில் மோடி செய்திருக்கும் ஊழல் என்ன?

எந்த முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸின் அனில் அம்பானி இந்த ஒப்பந்தத்தின் இந்திய ஒப்பந்தத்தை வெல்வதற்கு உதவினார் என்பதுதான் மோடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.

அது என்ன இந்திய ஒப்பந்தம்?

கிட்டத்தட்ட 1,50,000 கோடி ரூபாய் நிகர மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில், உத்தேசமாக 50,000 கோடி ரூபாய்களுக்கு மேலான  தளவாட உற்பத்தி மற்றும் அது சார்ந்த வேலைகளை இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செய்யவேண்டும் என்பது  இந்த ஒப்பந்தத்தின் ஒரு நிபந்தனை.

மேலும் தொழில் நுட்பத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவேண்டும் என்பதும் கூடுதல் நிபந்தனை. இவ்வளவு பணம் கொடுத்து 126 போர் விமானங்களை வாங்கப் போகிறோம் என்கிறபோது, எந்த நாடுமே இத்தகைய நிபந்தனைகளை விதிக்கவே செய்யும். இந்தியாவும் செய்தது. நமது Hindustan Aeronautics Limited நிறுவனம் ரஃபேலுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்குகிறது. அப்போதுதான் ஆட்சி மாற்றம் நடக்கிறது. (நான் குறிப்பிடும் ஒப்பந்த மதிப்புகள் இறுதியானவை அல்ல. இன்னும் கூடுதல்)

மோடியின் பிரான்ஸ் விஜயம் நடக்கிறது. அந்தப் பேச்சு வார்த்தையில்தான் மோடி நேரடியாகத் தலையிட்டு ரஃபேலின் இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் கம்பெனியை சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார். Hindustan Aeronautics Limited அதிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த இடத்தில் முக்கியமான ஒன்றைக் கவனிக்கவேண்டும்.

இந்த ஒப்பந்தத்தைப் பொருத்தவரை இந்திய அரசு, அதாவது மோடிதான் உரிமையாளர். Client. இந்தியாவின் நிபந்தனையை -அதாவது மோடியின் நிபந்தனையை- ஏற்றுக்கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வேறு காரணங்களைச் சொல்லி, மறு டெண்டருக்கு இந்தியா போகமுடியும். ரிலையன்சை ஒத்துக்கொள்ளும் வேறு கம்பெனிக்கு ஒப்பந்தத்தை வழங்க முடியும்.

மேலும் ஒரு ஒப்பந்தத்தின் உரிமையாளர் “இந்த கம்பெனியை உங்களது இந்திய பங்குதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னால், அதை ஃபிரான்ஸ் வரவேற்கவே செய்யும். ஏனெனில் இந்த ஒப்பந்த்தத்தை நிறைவேற்றுவதன் சுமையை வேறு விதமாக இந்தியாவும் பகிர்ந்துகொள்ளும் நிலை ஏற்படும் என்பதே அதற்குக் காரணம்.

இந்த இடத்தில்தான் ஃபிரான்ஸ் அரசாங்கம், தந்திரமாக மற்ற எந்த அரசையும் போல, தனது இந்திய பார்ட்னரை தெரிவு செய்துகொள்வது ரஃபேலின் உரிமை என்றும் அந்த அடிப்படையில் தான் அது ரிலையன்ஸை தேர்ந்தெடுத்தது என்றும் சொல்கிறது. ஆனால் ஒப்பந்த ஷரத்துக்கள் முழுமையாக வெளிவரும் பட்சத்தில் – அதாவது கசியும் பட்சத்தில் – அவர்கள் மோடியின் கோரிக்கைக்குப் பணிந்தது தெரியவரும். அது எப்படி?

ரிலையன்ஸுக்கு இந்தத் துறையில் எந்த முன் அனுபவமும் கிடையாது. கட்டமைப்பும் கிடையாது என்பதெல்லாம் அந்த ஒப்பந்த ஷரத்துகளை ஒப்பிடும் போது தெரிந்துவிடும். பிஜேபி, இராணுவ ரகசியம், தேச பாதுகாப்பு என்று பம்மாத்து பண்ணுவது அதனால்தான். ஆனால் காங்கிரஸ் நினைத்தால் அதைக் கசியவைக்க முடியும். அதைச் செய்வார்கள் என்றும் நினைக்கிறேன்.

சொந்த ஆட்சியிலேயே தேவைப்பட்ட நேரத்தில் தகவல்களைக் கசியச் செய்பவர்கள் அவர்கள். நீரா ராடியா நினைவிருக்கிறதுதானே. அதனால்தான் நிர்மலா உள்ளிட்டவர்கள் கட்டுப்பாட்டுடன் பொய் சொல்கிறார்கள். அம்பலப்பட்டுவிடுவோம் என்கிற அச்சம்.

ஆக இப்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து விவாதமான பிறகு, “எங்களுக்கு மாற்று வாய்ப்புகள் இந்தியாவால் வழங்கப்படவில்லை”, “இந்த ஒப்பந்தத்தின் இந்தியப் பங்காளியாக ரிலையன்ஸ் தேர்வு என்பது இந்தியாவின் தேர்வு” என்று அதன் முன்னால் அதிபர் சொல்கிறார். தற்போது ஆட்சியில் இருக்கும் பிரான்ஸ் அரசாங்கமோ முன்னால் அதிபரைப் போல உடைத்து சொல்லாமல் இதே கருத்தை வேறு வேறு வடிவங்களில் மழுப்பலாக சொல்கிறது.

இதில் மோடி புரிந்திருக்கும் குற்றம் என்ன?

இந்த ஒப்பந்தம் Hindustan Aeronautics Limited க்கு கிடைத்திருந்தால், அதன் பலன் இந்திய பொதுத் துறை நிறுவனத்துக்கு வந்திருக்கும். அந்த நிறுவனம் தனது தொழில் நுட்பத்திறனை வளர்த்துக்கொள்ள இந்த ஒப்பந்தம் பெருவாய்ப்பாக அமைந்திருக்கும். வரும் காலங்களின் நாமே சொந்தமாக இத்தகைய விமானங்களைத் தயாரிக்கும் நிலைக்கு நாம் நகர சிறந்த வாய்ப்பு உருவாகியிருக்கும். அதைத் தடுத்த வகையில் மோடி இந்தியாவுக்கு செய்திருப்பது துரோகம். மிகப்பெரிய குற்றம்.

மேலும் எந்த கட்டமைப்பும் இல்லாத ரிலையன்ஸ், Hindustan Aeronautics Limited, BHEL போன்ற நிறுவங்களின் கட்டமைப்பைப் பயன்படுத்தியே இந்த விமானங்களைச் செய்து முடிக்க முடியும். அவர்கள் அப்படித்தான் தொலைத்தொடர்புத் துறையில் காலூன்றினார்கள். BSNL ன் எல்லா திறன்களும் அவர்களுக்கு திறந்து விடப்பட்டன. பிறகு அவர்கள் பெரிதாக வளர்ந்து மற்ற நிறுவனங்களை ஒடுக்கும் நிலைக்கு வந்தார்கள். இங்கு மோடி செய்ய விரும்புவது அதைத்தான்.

அவர்கள் வழியாக ஒரு நிழல் அரசை நிறுவுவது. Defence Deal என்பது பொன்முட்டையிடும் வாத்து. மேலும் கட்டற்ற அதிகாரம். எது குறித்து கேட்டாலும், இராணுவ ரகசியம், தேச பாதுகாப்பு என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். 2G யில் நடந்தது போன்ற விசாரணைகள் சாத்தியமே இல்லை.

நேரடியாக இந்தியப் பொதுத்துறை நிறுவனத்துக்கு கொடுக்காவிட்டாலும் கூட, ரிலையன்ஸ் மற்றும் Hindustan Aeronautics Limited உள்ளடக்கிய ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கி அதை ரஃபேலது இந்தியக் கூட்டாளியாக்கியிருந்தால் மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்று ஒத்துக்கொள்ளலாம். ஏனெனில் லகான் பொதுத்துறை நிறுவனங்களின் வாயிலாக நம்மிடம் இருக்கும். அதாவது இந்திய அரசிடம். இப்போது நடந்திருப்பது வேறு.

ரஃபேலும் ரிலையன்ஸும் கைகோர்த்துக்கொண்டு, நமது பொதுத் துறை நிறுவனங்களுடன் துணை ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டு பணிகளைச் செய்வார்கள். அதாவது ஆர்டர்களைக் கொடுத்து வாங்குவார்கள். பங்குதாரராக இருந்திருக்கவேண்டிய நமது பொதுத்துறை நிறுவனம் வெறும் சப்ளையராக சுருங்கிப் போகும். சுருக்கமாகச் சொன்னால், நமது பணத்துக்கு அம்பானி முதலாளி. அதுவும் எந்த பணம்? இந்த ஒப்பந்தப் பேப்பரை மட்டும் வைத்துக்கொண்டு நமது பொதுத் துறை நிறுவனமான வங்கிகளிடம் ரிலையன்ஸ் கடன் வாங்கும். இந்த சுழல் பாதை புரிகிறதா இப்போது?

இதன் வழியாக பிஜேபி அடையும் பலன்கள் என்ன?

ரிலையன்ஸ் + பிஜேபி கூட்டு. அவர்களது நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதி இது. பண மதிப்பிழப்பு காலத்தில் ரிலையன்ஸின் வழியாக பிஜேபி பலனடைந்தது என்பது போன்ற விவாதங்கள் அமித்ஷாவை தொடர்புபடுத்தி கிசுகிசுக்கப்படுகின்றன. தேர்தல் என்பது பணம் என்று ஆகியிருக்கும் காலத்தில், இந்தியா முழுமைக்கும் தனது நிறுவனக் கட்டமைப்பை வைத்திருக்கும் ரிலையன்ஸ், நமது கற்பனைக்கு எட்டாத வகையில் பிஜேபிக்கு உதவ முடியும். அதுவும், திவாலாகும் நிலையில் இருக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுத் தந்திருப்பதன் வழியாக, என்ன பிஜேபிக்கும் அனிலுக்கும் என்ன உள் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று அனுமானிக்கமுடியவில்லை.

ஆனால் காங்கிரஸ் தனது முழு ஆயுதங்களுடன் வெளி வந்திருப்பத்தைக் காண்கையில் இது எளிதில் ஓயப்போவதில்லை என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் என்றால் ஊழல், பிஜேபி என்றால் மதவாதம் என்று உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் பிம்பம் முழுதாக உடைபடுவதற்கும், பிஜேபி என்றால் மதவாதம் பிளஸ் ஊழல் என்று நிறுவவும் இதுவொரு வாய்ப்பு. காங்கிரஸ் அதைப் பயன்படுத்தும் என்றே நினைக்கிறேன். இது வெறும் போர் விமான ஒப்பந்த விவகாரம் மாத்திரம் அல்ல. அதையும் தாண்டி பிரம்மாண்டமானது. அரசியலில் முக்கியமானது!

No comments:

Post a Comment