பொறுப்புதுறப்பு:
* மாறுபட்ட கலாச்சார/மதச் சூழலில் ஓரினச்சேர்க்கை பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பையும், இஸ்லாமியர்கள் எவ்வாறு எதிவினையாற்ற வேண்டும் என்பது பற்றிய மாறுபட்ட பார்வை.
* இது கட்டுரையாளரின் சொந்த கருத்து, அதனால என்னிடம் வந்து யாரும் சண்டை போடாதீர்கள்
* உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கீழேயுள்ள கட்டுரையாளரின் பேஸ்புக் லிங்கில் விவாதிக்கலாம். ஏற்கனவே பலர் விவாதித்து கொண்டிருக்கின்றார்கள்.
-----
Lafees Shaheed
2018-09-10
ஓரினச்சேர்க்கை முஸ்லிம்களை பொறுத்தவரையில் தான் தடை. முஸ்லிம் அல்லாதவர்களை பொறுத்தவரையில் அவர்களின் கலாச்சார உரிமையில் நாம் தலையிட முடியாது / தேவையில்லை. இதில் இன்னொரு பிரச்சனை முஸ்லிம்கள் தமது மதம் சார்ந்து பாவம் என்று கருதும் ஒரு விடயத்தை பொதுவான சமூகத் தீமையாக முன் வைப்பது.
முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் ஒரே நம்பிக்கை அமைப்பை, சட்ட ரீதியான அமைப்பை பகிர்ந்து கொண்டிருப்பவர்கள் எனும் வகையில் மதம் சார்ந்த பாவம், புண்ணிய அணுகுமுறை, மொழி எமக்கு மத்தியில் தான் சரிப்பட்டு வரும். ஆனால் இதே ஆன்மீக 'மொழி' யை பயன்படுத்தி முஸ்லிம் அல்லாதவர்களை நோக்கி பேசி ஓரினச்சேர்க்கையை பாவம் என்று எப்படி முன் வைப்பது?
வட்டியை இஸ்லாம் கடுமையாக தடை செய்து இருக்கிறது. பாரிய குற்றமாக வரையறுத்திருக்கிறது. ஒரு ஆய்வாளன் பொருளாதார நடவடிக்கைகளை ஆராய்ந்து வட்டி எப்படியான சமூக சீர்கேடுகளை கொண்டு வருகிறது என்று பொது மன்றத்தில் நிறுவலாம். முஸ்லிம் அல்லாதவர்களையும் உரையாடல் மூலமாக அணுகி இஸ்லாத்தின் சமூகவியல் பரிமாணத்தை நோக்கி ஈர்க்கலாம்.
ஷெய்க் முஹம்மத் அப்துல்லாஹ் தர்ராஸ், அபுல் அஃலா மௌதூதி, ஆயத்துல்லாஹ் பாகிர் அல் ஸத்ர் போன்றவர்கள் வட்டி குறித்த நூல்கள் இப்படியான தர்க்கங்களின் வழி செயல்படுபவையே. ஆனால் இப்படியான கோணத்தில் - ஆன்மீக மதம் சார்ந்த மொழி தவிர்ந்து - ஓரினச்சேர்க்கை குறித்து ஆராயப் பட்டிருக்கிறதா? அது எவ்வகையான தீமை என்பதை முஸ்லிம் சமூகத்திற்கு வெளியே நிற்பவர்களுக்கு எம்மாம் தெளிவுற விளக்கிட முடியுமா?
மனிதர்களின் பாலியல் விழைவுகள், நடவடிக்கைகள் குறித்து மேலைத்தேய சமூகங்களில் இருக்கும் ஆய்வுகள் போன்று - உதாரணமாக மிஷைல் ஃபூக்கோவின் History of Sexuality - முஸ்லிம் அறிவு மரபில் ஆய்வுகள் ஏதும் இல்லை. இருப்பவை எல்லாம் சட்ட ரீதியான அணுகுமுறை கொண்ட ஆய்வுகளே. சமூகவியல், உளவியல் கோணங்களை அவற்றில் காண முடியாது.
இஜ்திஹாத் எனப்படும் ஆய்வறிப் பாரம்பரியத்தின் வாயில் மூடப்பட்டதன் விளைவிது. இந்நிலையில் ஓரினச்சேர்க்கையை பொது மன்றத்தில் அனுமதிக்கப்படும் கோணங்கள் குறித்தும் எமது பார்வை இன்னும் கூர்மைப்படாத நிலையில் நாம் உணர்ச்சிவசப்படுவதில் மட்டும் எந்த பிரயோசனமும் இல்லை.
ஓரினச்சேர்க்கை உலகளாவிய அளவில் சட்ட பூர்வமாக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு பெரிய அறிவு, தத்துவ மரபிருக்கிறது. மனித உரிமை கண்ணோட்டத்தில் அதற்கொரு வரலாறிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் தாம் குற்றம் என்று கருதும் ஒரு விடயத்தை பொதுவான சமூகத் தீமையாக முன் வைப்பது எனில் அதற்கான தெளிவான சமூகவியல், உளவியல், மானிடவியல், உயிரியல் ஆய்வுகள் தேவை ; பொது மன்றத்தில் உரையாடல் நிகழ்த்தும் வகையில் ஒரு 'மொழி' தேவை.
இவை இரண்டும் இல்லாமலே ஒரு முஸ்லிம் இறை நம்பிக்கையாளன் ஓரினச்சேர்க்கையை தடை என்று ஏற்றுக் கொள்வான். ஆனால் ஏனையோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. நிர்ப்பந்திக்கவும் முடியாது. இதுவெல்லாம் சாதாரணமாக பொது புத்தியே அறிந்த விடயங்கள் தாம்.
ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவி கூறுவது போல 'முஸ்லிம்கள் தமது மார்க்கத்தினை அறியாமல் இருப்பது அல்ல பிரச்சனை. மாறாக அவர்கள் தமது காலத்தை அறியாமல் இருப்பது தான் பிரச்சனை' என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நவீன உலகின் கண்ணோட்டங்கள், உலகப் பார்வை, மனித உரிமை சொல்லாடல்கள், மதம் சார்ந்த கருதுகோள்கள் குறித்த பகுத்தறிவு வயப்பட்ட அணுகுமுறைகள் எல்லாம் பண்டைய உலகினை விட்டு மாறுபட்டு இருக்கும் நிலையில் நாமும் எமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதன் அர்த்தம் இஸ்லாம் குற்றம் என்று தீர்க்கமாக வரையறுத்த விடயங்களை - உதாரணமாக விபச்சாரம், ஓரினச்சேர்க்கை - அனுமதிக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக நவீன உலகின் செல்நெறிகளை புரிந்து கொண்டு எமது மார்க்கம் குறித்த உண்மைகளை நாம் முன் வைக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
எமது தவறான அணுகுமுறைகள் காரணமாக நாம் மார்க்கத்திற்கு அநியாயம் இழைத்த விடக் கூடாது அல்லவா?!
#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்
https://m.facebook.com/story.php?story_fbid=1081303445381750&id=100005063134008
No comments:
Post a Comment