Sunday, September 9, 2018

நான் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் விட்டால், எனக்குக் கீழே உள்ளவர்கள் மேலே வருவார்கள் அல்லவா?

Ravishankar Ayyakkannu
2018-09-09

வாசகர் கேள்வி:

எனக்கு ஒரு ஐயம். நான் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் விட்டால், எனக்குக் கீழே உள்ளவர்கள் மேலே வருவார்கள் அல்லவா?

நான் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்று, நல்ல படிப்பு, வேலை பெற்றுள்ளேன். என் மனைவியும் நல்ல வேலை, சம்பளம் பெறுகிறார். என்னால் என் குழந்தைகளுக்கு தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் பணம் கட்டிப் படிக்க வைக்க முடியும்.

ஆனால், எனக்கு ஒரு நண்பர் உள்ளார். அவர் இட ஒதுக்கீட்டின் பயன்களைப் பெற முடியவில்லை. அவருடைய பையனுக்குக் காசு கட்டி படிக்க வைக்க முடியாது. அவரால் அரசு கல்லூரியில் தான் படிக்க வைக்க முடியும்.

அரசு கல்லூரியில் ஒரே ஒரு இடம் தான் இருக்கிறது. அவரது மகனும் இட ஒதுக்கீட்டின் மூலம் இப்போது இடம் பிடிக்க முடியும்.

என் மகனும் அவர் மகனும் அந்த இடத்துக்குப் போட்டி போடுகின்றனர்.

சமூக நீதி தான் முக்கியம் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

என் மகனிடம் சொல்லி புரிய வைத்து அந்த அரசு கல்லூரி இடத்தை அவருக்குக் கொடுக்கலாம் தானே? அல்லது, அரசிடம் சொல்லி இன்னும் கூடுதல் இடங்களை ஒதுக்கச் சொல்லலாமா?

பதில்:

உங்கள் மகனை அரசு கல்லூரியில் சேருங்கள்.

உங்கள் நண்பர் மகனை தனியார் கல்லூரியில் சேர்த்து அவரின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா!

"ஏன்டா தகப்பா இப்படி செஞ்சேன்னு" கவுண்டமணி செந்திலைத் தூக்கிப் போட்டு மிதிப்பது போல் உங்கள் வீட்டில் மிதிப்பார்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஒரு கற்பனை நிலை (hypothetical case).

உண்மையில், இன்னொரு ஏழைக்குப் பயன்படும் என்று நினைத்து சாதிச் சான்றிதழ் பெறாமல் நீங்கள் விட்டுக் கொடுக்கும் இடம் என்பது உங்களை விடப் பணக்காரரான இன்னொருவருக்கும் செல்லலாம். அதை உங்களால் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது.

அரசு எதிர் தனியார் என்பதை வெறும் காசுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அரசு கல்லூரிகள் பல பத்தாண்டுகள் முன்பே தொடங்கி நல்ல கட்டமைப்பையும் தரமான ஆசிரியர்களையும் உலகளவில் நல்ல பெயரையும் பெற்றவை. சென்னை மருத்துவக் கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி எல்லாம் இரு நூற்றாண்டுப் பழமை வாய்ந்தவை.

அதனால் தான் நீட் பயிற்சிக்குக் இலட்சக் கணக்கில் காசு செலவழித்து, கல்லூரி அனுமதிக்கு கையில் ஐபோனுடன் காரில் வந்திறங்கும் மாணவர்கள் அரசு கல்லூரிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களிடம் காசு இருக்கிறது என்று தனியார் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில்லை.

ஏன் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்கள்?

ஏதாவது ஒரு ஐயரோ ஐயங்காரோ என்னை விட ஏழையான இன்னொரு ஐயரோ ஐயங்காரோ படிக்கட்டும், வேலை பெறட்டும் என்று தன்னுடைய வாய்ப்பை விட்டுச் சென்ற வரலாறு உண்டா?

உங்களுக்கு மட்டும் ஏன் அப்படித் தோன்றுகிறது?

ஏன் என்றால், இட ஒதுக்கீட்டின் மூலம் நீங்கள் படிப்பதே தகுதிக் குறைவு என்ற தாழ்வு மனப்பான்மையைத் திட்டமிட்டு ஊட்டி இருக்கிறார்கள். அதனால் இப்படி விட்டுக் கொடுத்தாவது "நான் ரொம்ப நல்லவன்" என்ற நிறுவிக் கொள்ள விரும்புகிறீர்கள்.

ஒருவர் மட்டும் தான் தங்கப் பதக்கம் வாங்கும் தகுதி உடையவர் என்று சொல்வதற்கு, படிப்பு என்பது ஓட்டப் பந்தயம் அல்ல.

இட ஒதுக்கீடு என்பது ஒன்றுக்கு இன்னொன்று சமம் (Equality) என்ற அடிப்படையில் அமைவது அல்ல. அது ஒன்றுக்கு இன்னொன்று சம பங்கு (Equity) உடையது என்ற அடிப்படையில் அமைவது.

இந்தக் கால B.Sc அந்தக் கால பத்தாம் வகுப்புக்குச் சமம் என்று அந்தக் கால ஆட்கள் சொல்வார்கள் அல்லவா? அது போல்.

சமூகத்தில், கல்வியில், பொருளாதராத்தில் உள்ள ஆயிரம் தடைகளைத் தாண்டி ஒவ்வொரு SC, ST, BC, MBC மாணவர் எடுக்கும் மதிப்பெண்ணும் மற்றொரு பிரிவில் இன்னொரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்ணுக்குச் சமம். இதில் தகுதிக் குறைவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

உங்கள் மகன் சிரமப்பட்டு படித்து அரசு கல்லூரியில் படிப்பதற்கான போட்டித் தகுதியைப் பெற்றிருந்தால் அவர் அங்கு தான் படிக்க வேண்டும்.

சாதியின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது என்பதால் தான் சாதியின் அடிப்படையில் இடம் ஒதுக்குகிறார்கள்.

காசு இல்லை என்று கல்வி மறுக்கப்படக்கூடாது என்பதற்காகத் தான் கல்வி உதவித் தொகை, கல்விக் கடன் அனைத்தும் வழங்குகிறார்கள்.

இடத்துக்கு இடம். பணத்துக்குப் பணம். இது தான் சமூக நீதி. #இடஒதுக்கீடு #reservation

https://m.facebook.com/story.php?story_fbid=10157881334253569&id=576438568

No comments:

Post a Comment