Monday, September 3, 2018

பணமதிப்பு நீக்கம்

புகழேந்தி

கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி நரேந்திர மோடி அரசு எவருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் எடுத்த அதிக மதிப்புச் செலாவணிகளை செல்லாததாக்கும் முடிவால் ஏதாவது பலன் ஏற்பட்டிருக்கும் என்கிற கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை பொய்யாக்கிவிட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, செல்லாததாக்கப்பட்ட ரூ.15.31 லட்சம் கோடி மதிப்பிலான செலாவணிகள் திரும்ப வந்திருக்கின்றன. அதாவது 99.3 சதவீதம் நோட்டுகள் வங்கிகளின் மூலம் ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என்பது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
செல்லாததாக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 செலாவணிகளின் மொத்த மதிப்பு ரூ.15,40,000 கோடி. இப்போது ரூ.15,31,073 கோடி வங்கி கஜானாவுக்கு திரும்பிவிட்டிருக்கிறது. கணக்கில் வராத பணம் வெறும் ரூ.10,720 கோடி மட்டுமே.
இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவில் கருப்புப் பணமே இருந்திருக்கவில்லை, அல்லது இந்தியாவிலிருந்த அனைத்துக் கருப்புப் பணமும் கணக்கில் காட்டப்பட்டு வங்கிகளுக்கு வந்துவிட்டிருக்கின்றன. முதலாவது கூற்றை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. இரண்டாவது கூற்று சாத்தியமேயில்லை. அத்தனை பணமும் கணக்கில் காட்டப்பட்டுவிட்டது என்பதை நிரூபிப்பதும் இயலாத ஒன்று.
கணக்கில் காட்டாமல் நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், அதை வங்கிக் கணக்கில் போட முடியாது என்பதால் அந்தப் பணம் செல்லாததாக்கப்பட்டு திரும்பி வராது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிக மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே அதுதான். ஆனால், அது முற்றிலுமாகப் பொய்த்திருக்கிறது. அந்த வகையில் அதிக மதிப்புச் செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவு கணக்கில் காட்டாமல் பணம் வைத்திருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகி அவர்களுக்கு உதவும் திட்டமாக மாறிவிட்டது.
அதிக மதிப்புச் செலாவணிகளில் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், இந்த முடிவின் மூலம் கள்ள நோட்டுகள் முற்றிலுமாக அகற்றப்படும் என்றும் அப்போது கூறப்பட்டது. 99.3 சதவீதம் பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்திருப்பதிலிருந்தும், வெறும் ரூ.10,720 கோடி மட்டுமே வராமல் இருப்பதிலிருந்தும் கள்ளப் பண ஒழிப்பிற்காக அரசின் செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவு எந்தவித பயனையும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.500, ரூ.2,000 நோட்டுகளிலும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்திருப்பது அதைவிட அதிர்ச்சி.
அதிக மதிப்புள்ள செலாவணிகளின் புழக்கமும், மக்கள் மத்தியில் இருக்கின்ற பணப்புழக்கமும் குறைய வேண்டும் என்பதும், ரொக்கப் பரிவர்த்தனை குறைந்து எண்மப் பரிமாற்றம் அதிகரிக்க வேண்டும் என்பதும் அரசின் அதிரடி முடிவுக்கு இன்னொரு காரணமாகக் கூறப்பட்டது. 2016 மார்ச் மாத அளவில் புழக்கத்தில் இருந்த ரூ.16.42 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் செல்லாததாக்கப்பட்ட அதிக மதிப்புச் செலாவணிகளான ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் 86.38 சதவீதம் இருந்தன. இப்போது இரண்டாண்டுகளுக்குப் பிறகு புழக்கத்தில் இருக்கும் மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.18.4 லட்சம் கோடி. அதாவது, முன்பிருந்ததை விட அதிகமான பணப் புழக்கம் காணப்படுகிறது. இதில் அதிக மதிப்புச் செலாவணிகளான ரூ.500-ம், ரூ.2,000-மும் 80.17 சதவீதம் காணப்படுகின்றன எனும்போது அரசின் முடிவால் எந்தவித மாற்றமோ பயனோ ஏற்பட்டுவிடவில்லை என்பது தெளிவு.
அதேபோல, ரொக்கப் பரிமாற்றமும் குறைந்ததாகத் தெரியவில்லை. தொடக்கத்தில் பணப் புழக்கம் இல்லாதிருந்தபோது வங்கி அட்டை உள்ளிட்ட ரொக்கமில்லாத பரிமாற்றங்கள் சற்று அதிகரித்தாலும் இப்போது மீண்டும் இந்தியா ரொக்கப் பரிமாற்றத்திற்கு திரும்பிவிட்டிருக்கிறது. இப்போதும் அதிக மதிப்புச் செலாவணிகளில் ரொக்கப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதிலிருந்து கணக்கில் காட்டாத கருப்புப் பணப் புழக்கம் குறைந்தபாடில்லை என்பதை நாம் உணரலாம்.
செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவுக்குப் பிறகான ஐந்தாவது வாரத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றைக் கூறினார். அரசிடமோ ரிசர்வ் வங்கியிடமோ இந்தியப் பொருளாதாரத்தில் புழக்கத்தில் உள்ள கருப்புப் பணப் புழக்கம் எவ்வளவு என்பது குறித்து, முடிவுக்கு முன்னாலோ பின்னாலோ சரியான புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்பதுதான் அது. இதிலிருந்து தேவையான எந்த முன்னேற்பாடுகளோ, பொறுப்புணர்வுடன் கூடிய திட்டமிடலோ எதுவுமே இல்லாமல் அவசரக் கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் நவம்பர் 8, 2016-இல் மத்திய அரசால் எடுக்கப்பட்ட அதிக மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட முடிவு என்பது தெரிகிறது.
பொருளாதாரத்திற்குத் தரப்படும் திடீர் அதிர்ச்சிகள் எதிர்பார்க்கும் கொள்கை இலக்கை ஒருபோதும் அடைவதில்லை. இரண்டாண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது அரசின் முடிவால் இந்தியாவின் வளர்ச்சி 1.5 சதவீதம் குறைந்திருக்கிறது என்பது தெரிகிறது. இதன் தோராய இழப்பு ரூ.2.25 லட்சம் கோடி. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததில் ஆன தோராயச் செலவு ரூ.16,298 கோடி.
அரசின் முடிவால், லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டன. தினக்கூலி பெறும் ஏழைகள் 15 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். மூன்று, நான்கு மாதத்திற்கு ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்தன. இது குறித்தெல்லாம் முன்யோசனையே இல்லாமல் ஏன் அப்படி ஒரு தவறான முடிவு எடுக்கப்பட்டது என்று வரலாறு கேள்வி எழுப்பும். அதற்கு விடை தந்தாக வேண்டும்!

https://www.facebook.com/100001092243766/posts/1933161586730231/

No comments:

Post a Comment