Wednesday, September 12, 2018

ஆளூர் ஷநவாஸ் - யாஸ்மினா கார்த்திகேயன் திருமண சர்ச்சை

பொறுப்புதுறப்பு:

* யாஸ்மினா கார்த்திகேயன் திருமண சர்ச்சை குறித்த தனது கருத்துக்காக எதிர்வினைக்கு விளக்கமளித்துள்ளார் ஆளூர் ஷநவாஸ்.

* இது கட்டுரையாளரின் சொந்த கருத்து, அதனால என்னிடம் வந்து யாரும் சண்டை போடாதீர்கள்

* உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கீழேயுள்ள கட்டுரையாளரின் பேஸ்புக் லிங்கில் விவாதிக்கலாம். ஏற்கனவே பலர் விவாதித்து கொண்டிருக்கின்றார்கள்.

-----

ஆளூர் ஷநவாஸ்
2018-09-12

யாஸ்மினா கார்த்திகேயன் திருமண சர்ச்சை குறித்த எனது கருத்துகளை முன்வைத்து, ''முஸ்லிம் பெண் ஒருவர் நரகத்தின் எரிபொருள் ஆவதை தடுக்கவே அந்த சுற்றறிக்கை விடப்பட்டது!'' என்று பலரும் எழுதியுள்ளனர். அதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனங்கள் சிலவும் மேற்கோள் காட்டப்படுகின்றன. திருக்குர்ஆன், பெண்ணை மட்டுமல்ல ஆணையும் நரகத்தின் எரிபொருள் ஆகாமல் தடுக்க வேண்டும் என்கிறது. ஆனால், இங்கே பெண்ணுக்கு தான் சுற்றறிக்கை வந்துள்ளதே தவிர, எந்த முஸ்லிம் ஆணுக்கும் இப்படியொரு அறிக்கை இதுவரை வந்ததே இல்லை.

யாஸ்மினா விவகாரம் வெளியே தெரிந்து பரபரப்பு ஆகியதால் தான் இப்படியொரு அறிக்கை விடப்பட்டது என்பது பலரின் வாதம். ஆனால், இதே தமிழ் முஸ்லிம் சமூகத்தில், அமைச்சர்கள்  மகன், நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் என பலரும் முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு மணமுடிக்க மறுத்ததாக அந்தப் பெண்களே ஜமாத்துகளின் கதவுகளை தட்டியதையும் ஊடகங்களில் கதறியதையும் பார்த்தோம். பரபரப்பான அந்த பிரச்சனைகளிலும் கூட, அந்த ஆண்களை நரக நெருப்பில் இருந்து மீட்கும் எந்த அறிக்கையும் எந்த ஜமாத்தும் வெளியிடவில்லை. அல்லது, 'அவர்களின் உறவுமுறை இஸ்லாமிய அடிப்படையில் விபச்சாரமாகும்!' என்று வெளிப்படையாக பெயர் குறிப்பிட்டு சொன்னதுமில்லை. இத்தனைக்கும் அந்த ஆண்கள் முஸ்லிம் கட்டமைப்புக்குள் தான் இன்றும் இயல்பாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள். ஆனால், யாஸ்மினா அப்படி அல்ல. இந்த கட்டமைப்பை விட்டு வெளியேறிய பெண். வெளியேறிய பிறகு இந்துவை இந்து முறைப்படி திருமணம் செய்த பெண். எனவே, வெளியேறிவிட்ட ஒரு பெண்ணுக்கு இஸ்லாமிய சட்டம் எப்படி பொருந்தும்?

யாஸ்மினா எனும் பெயரை மாற்றி இந்து பெயரை அவர் வைத்திருந்தால் இப்படி ஒரு அறிக்கை வந்திருக்காது என்பதும் பலரின் வாதம். இஸ்லாமிய வரையறை தாண்டிய ஒருவர் யாஸ்மினா இருந்தால் என்ன ஜாஸ்மினா இருந்தால் என்ன. பெயரில் இஸ்லாம் உள்ளதா? எந்தப் பெயரை வேண்டுமானாலும் முஸ்லிம்கள் சூட்டிக் கொள்ளலாம் என்பதும், அந்தப் பெயர் அழகிய பொருள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தானே இஸ்லாத்தின் வரையறை. எனவே பெயரை ஒருவர் மாற்றிக் கொண்டுதான் தன்னை முஸ்லிமாகவோ அல்லது முஸ்லிம் அல்லாதவராகவோ அடையாளப்படுத்த வேண்டுமா?

அரசியல் அமைப்புச் சட்டப்படி அந்தப் பெண்ணுக்கு எவரையும் மணமுடிக்கும் உரிமை உண்டு என்றாலும், அதே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிச் சட்ட உரிமையின் அடிப்படையிலேயே அந்த அறிக்கையில் இஸ்லாமிய திருமண முறை விவரிக்கப்பட்டு, 'யாஸ்மினா திருமணம் விபச்சாரமாகும்!' என்று சொல்லப்பட்டது என்பதும் பலரின் வாதம். இங்கே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'தனிச்சட்டம்' என்பது முஸ்லிம்களுக்கு உள்ளே நடக்கும் திருமணம், மணமுறிவு, சொத்துரிமை தொடர்பானதாகும். ஆனால், யாஸ்மினாவுக்கு நடந்தது இந்து முறைப்படியான திருமணம். இந்து முறைப்படி நடந்த திருமணத்திற்கு இஸ்லாமிய முறைப்படி பத்வா வழங்குவது சரியா?

அந்த அறிக்கையில் எந்த ஒரு தனிமனிதரின் பெயரையோ குடும்பத்தின் பெயரையோ குறிப்பிடாமல் பொதுவாக இஸ்லாமிய திருமண முறை குறித்து விளக்கப்பட்டிருந்தால் அதை யாரும் இங்கே கேள்வி எழுப்பமாட்டார்கள். இஸ்லாமிய வழிகாட்டுதலை முஸ்லிம்களுக்கு வழங்கும் எல்லா உரிமையும் மார்க்க அறிஞர்களுக்கு உண்டு எனும்போது அதை எவரும் சர்ச்சை ஆக்க மாட்டார்கள். ஆனால், இங்கே குறிப்பிட்ட ஒரு திருமணத்தை அடையாளப்படுத்தி அந்தத் திருமணம் விபச்சாரமாகும் என்று சொன்னதுதான் பிரச்சனையே. எனவே பிரச்சனைக்கு காரணமானவர்களை விட்டுவிட்டு, அதை கேள்வி எழுப்புபவர்களை விமர்சிப்பதும், இழிவு படுத்துவதும், கண்டிப்பதும் முறையல்ல.

மேலும், அப்படியொரு அறிக்கை எழுதியவரை தொடர்பு கொண்டு பா.ஜ.க.வின் கல்யாணராமன் மிரட்டும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் அந்த ஆலிம் தவிப்பதையும், இன்னொரு முஸ்லிம், கல்யாணராமனை தொடர்பு கொண்டு கல்யாணராமனின் மொழியிலேயே பேசுவதையும் காண்கிறோம். ஒன்று அந்த எல்லை; அல்லது இந்த எல்லை. இதுதானே இந்தச் சமூகத்தின் அசல் சிக்கல். அதே கல்யாணராமனை எத்தனையோ முறை நேருக்கு நேராக எதிர்கொண்டு நாகரிக எல்லை மீறாமல் கேள்விகளால் அம்பலப்படுத்தியுள்ளோம். ஆனால், இன்று அதே கல்யாணராமனும் நானும் ஒன்றுதானாம். மிக்க நன்றி!

https://m.facebook.com/story.php?story_fbid=2648233042067969&id=1767279916829957

No comments:

Post a Comment