Wednesday, February 20, 2019

எட்டாம் வகுப்பு வரை All Pass என்பதால் தான் கல்வியின் தரம் பின்தங்கிவிட்டது - சிவசங்கரன்

Sivasankaran Saravanan
2019-02-20

"எட்டாம் வகுப்பு வரை All Pass என்பதால் தான் கல்வியின் தரம் பின்தங்கிவிட்டது, அதனால் தான் மோடி அரசு 5ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு முறையை கொண்டு வந்துள்ளது இனி  கடமைக்கு  பள்ளிக்கூடம் போய் நோகாம பாஸ் ஆக முடியாது..!"

நன்கு படித்த சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள துறை ரீதியாக நண்பர்களாக இருக்கக்கூடிய ஒரு வாட்சப் குழுவில் வந்த மெசேஜ் இது.  இதை பலரும் வரவேற்று கட்டை விரல் உயர்த்துகிற மற்றும் கை தட்டுகிற பொம்மைகளை பதிலாக தருகிறார்கள் .

இன்று நடுத்தர மற்றும் உயர் மட்ட வகுப்பினரை இரண்டு மூன்று வார்த்தைகள்  பிடித்து ஆட்டுகின்றன:

*தரம்*
*இலவசம்*
*Heavy competition*

போன்றவை அவைகளில் சில.

---

மேலோட்டமாக பார்த்தால் சிறார்களின் கல்வித்தரம் குறித்து வளர்ந்த பெரியவர்கள் அக்கறை காட்டுவதில் என்ன தவறு என்பது போலத்தானே தெரிகிறது?!

சரி, தரம் என்றால் என்ன? ஒரு மாணவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால் அவர் தரமானவர் என்று சொல்லலாமா? ஆம் சொல்லலாம். ஆனால் இவர்கள் அப்படி கூட சொல்வதில்லையே.. ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள். சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன?

ஒரு ஊரில் 100 குழந்தைகள் இருந்தால் அதில் 90 குழந்தைகள் படிக்க போகவேண்டும். அந்த 90 ல் பத்து பேர் மட்டும் தனி வகுப்பில் சேர்ந்து தனி பாடம் படிக்கவேண்டும். 90 பேரும் ஒரே பாடத்தை படித்தால் கூட அதில் 20 பேர் பெயிலாக வேண்டும், 40 பேர் Just pass ஆகவேண்டும், 10 பேர் நல்ல மதிப்பெண் பெறவேண்டும். 5 பேர் மட்டும் top rank வாங்கவேண்டும். அந்த 5 பேரில் தன் வீட்டு குழந்தையும் இருக்கவேண்டும். இப்படி நடந்தால் அது தரமான கல்வி. இதுதான் தரம் பற்றி இவர்களின் வரையறை.

---

தரம் என்பது இதுவல்ல. ஒரு ஊரில் உள்ள 5 குழந்தைகளை மட்டும் சீராட்டி வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்புவதல்ல ஒரு அரசாங்கத்தின் கடமை.  மக்களுக்கான அரசாங்கம் என்பது ஊரிலுள்ள அனைத்து பிள்ளைகளையும் படிக்கவைத்து அவர்களை மேம்படச்செய்ய வைப்பதை கடமையாக கொள்ளவேண்டியது.

தரம் என கொக்கரிக்க ஆரம்பித்துள்ள இதே இந்தியத் திருநாடு தான் ஐந்தாம் வகுப்பு கூட படித்திராத / தாண்டியிராத சிறுவர்களை அதிகமாக கொண்ட தேசங்களில் ஒன்று. இந்தியாவில் 6.5 சதவீத குழந்தைகள் தங்களது ஆரம்பக்கல்வியை கூட அதாவது ஐந்தாம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்ற துயரத்தை கொடுமையை இவர்கள் உணர்வார்களா?

இந்திய மாநிலங்களில் கேரளா 0.08% தமிழ்நாடு 0.98% தான் தங்களது சிறுவர்களை முழுமையாக ஆரம்பக்கல்வியை முடிக்க வழிவகை செய்துள்ளன. குஜராத்திலே 3% பிள்ளைகள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை. ஆந்திராவிலே 6%,  மத்திய பிரதேசம் 8% ராஜஸ்தான் 11% உத்தரபிரதேசம் 12% அதிகபட்சமாக மேகாலயா அருணாச்சல பிரதேசத்தில் 15% சிறுவர்கள் ஐந்தாம் வகுப்பைக் கூட படிக்காமல் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர்.

---

ஏன் இந்த சிறுவர்கள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை? அப்படியென்றால் பத்தாம் வகுப்பு கூட படித்திராத இந்திய சிறுவர்கள் எத்தனை பேர்?  என்ன காரணம்?

பள்ளிக்கூடம் கூட அனுப்பமுடியாத அளவுக்கு வறுமை, பள்ளிகள் இல்லாமை, தேர்வில் தோல்வியடைந்தால் நிறுத்திவிட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலைக்கு அனுப்புதல், தேர்வில் தோல்வியடைவதால் தன்னை விட வயதில் குறைந்த பிள்ளைகளுடன் படிப்பதால் ஏற்படுகிற தாழ்வு மனப்பான்மை, இதுபோக இளவயது திருமணம் இவைகளால் இந்த சிறார்கள் கல்வியறிவற்றவர்களாக உருவாகின்றனர்.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி தான் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களை பள்ளிப்படிப்பை முடிக்கவைக்கின்றன.  பத்தாவது பாஸ் அல்லது பெயில் என்ற தகுதியுடன் அதன்பிறகு அவன் ஏதோ ஒரு வேலையை தேடிக்கொள்கிறான். அதன்பிறகு அவர்கள் கல்லூரி மற்றும் உயர்கல்வி படிக்கவேண்டும் தான் ஆனால் குறைந்தபட்சம் பள்ளிப்படிப்பையாவது நம் சிறார்கள் தாண்ட வேண்டாமா?!

கலாச்சாரத்தில் சிறந்த நாடு என்று சொல்லப்படுகிற இந்தியா தான் உலகிலேயே வயது குறைந்த திருமணங்களை நடத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு . நல்லவேளை இளவயது திருமணங்களை கட்டுப்படுத்துவதில் வழக்கம்போல தமிழ்நாடு கேரளா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.  மக்கட்தொகையில் 7வது பெரிய மாநிலமான தமிழ்நாடு இளவயது திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் 17வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் சராசரியாக 19.12 வயதில் திருமணங்கள் நடக்கின்றன . கேரளாவில் சராசரி திருமண வயது 21.5 ஆக உள்ளது. அதுவே ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரி திருமண வயது 16 தான்.  ராஜஸ்தான், உபி மபி போன்ற மாநிலங்களில் மிக இள வயதிலேயே திருமணம் நடத்திவைக்கப்படுகின்றன .

---

தேர்வுகளில் தோற்றுப்போனால் பெண் குழந்தைகள் திருமணத்திற்கும் ஆண் குழந்தைகள் வேலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதுதான் நம்முடைய இந்தியா. அதனால் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கல்வி உரிமை பெறும் சட்டத்தை தந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு இந்திய சிறாரும் குறைந்தது 14 வயது வரை கல்வி கற்றே ஆகவேண்டும். மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ள ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையினால் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர் குலைப்பதாக அமையும்.

தரம் வளர்ச்சி என்பன ஊரிலுள்ள ஒன்றிரண்டு பேர் மட்டும் நல்ல வசதியான ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிக்கொண்டு விருந்துண்டு மகிழ வாய்ப்பு இல்லாத சிறுவர்கள் இருக்க இடமின்றி பசியும் பட்டினியுமாக இருப்பதல்ல. எல்லாருக்கும் உணவு கிடைக்கவேண்டும், எல்லாரும் கல்வி கற்க வேண்டும் இதுதான் தரம் இதுதான் வளர்ச்சி.

தங்கள் வீட்டுப்பிள்ளை ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால் புத்திசாலிப்பிள்ளை என்று மகிழ்கிறவர்கள் ஊரிலுள்ள நிறைய பிள்ளைகள் அதிக மதிப்பெண்களை குவிக்கும்போது மட்டும், "ஐய்யய்யோ என்ன இப்படி ஆளாளுக்கு மதிப்பெண்களை அள்ளி வீசுகிறார்கள் கல்வி யில் தரமே இல்லை,  யாரைக்கேட்டாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என்கிறார்கள் இது என்ன தரம்? " என்று புலம்புவது ஏன்?

குறிப்பு:
மேற்கண்ட புள்ளிவிபரங்கள் இந்திய அரசின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

---

https://m.facebook.com/story.php?story_fbid=2508715385824109&id=100000570177032

No comments:

Post a Comment