Lafees Shaheed
2019-02-22
சமூக சமத்துவ கண்ணோட்டத்தை உட்கொண்ட ஏகத்துவ வாதி ஒரு பெரும் விசை. அவன் தான் வாழும் காலத்திலும், சமூகத்திலும் எவ்விதமான அதிர்வுகளை ஏற்படுத்துவான் என்பதற்கு அமெரிக்க கருப்பு முஸ்லிம் தலைவர் மால்கம் எக்ஸ் மிகச்சிறந்த உதாரணம்.
ஒரு வகையில் பார்த்தால் நவீன உலகத்தின் மிகப் பிரபலமான முஸ்லிம் என்றால் அது மால்கம் எக்ஸ் ஆகவே இருப்பார். ஜமாலுத்தீன் ஆஃப்கானியினாலும், அபுல் கலாம் ஆஸாத்தினாலும், இமாம் ஷல்தூத்தினாலும், யூசுஃப் அல் கர்ளாவியினாலும் ஊடுருவ முடியாத வெகு மக்கள் பரப்பை அவர் - மால்கம் எக்ஸ் - தனது மகத்தான உயிர் தியாகத்தினால் ஊடறுத்து சென்றார். வெகு மக்கள் மால்கம் எக்ஸின் தத்துவார்த்த முக்கியத்துவத்தை முழுவதும் புரிந்து கொள்ளாமல் அவரை ஒரு Celebrity ஆகவே மாற்றி விட்டார்கள். ஒரு நிகழ்வின் (இந்த இடத்தில் Phenomenon என்று அர்த்தம் கொள்ளுங்கள்) அதீதமான பிரபல்யமே அவற்றில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள எமக்கு தடையாக இருக்கும். உதாரணமாக ஹிஜ்ரத் நிகழ்வு. ஹிஜ்ரத்தின் சமூக, அரசியல், ஆன்மீக முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள எமக்கு ஒரு அலி ஷரீஅத்தியும், அலி இஸ்ஸத் பெகோவிச்சும் தேவையாக இருக்கிறது. மால்கம் எக்ஸ் சமூக ஊடகங்களின் மூலமாக முஸ்லிம்களின் சமூக நனவிலி மனமாகவே மாறிப் போனவர். அவரை குறித்து அலெக்ஸ் ஹேலியில் தொடங்கி தமிழின் ரவிக்குமார் வரை நூல்களை எழுதி இருக்கிறார்கள். ஆனால் நாம் உண்மையில் மால்கம் எக்ஸின் போராட்டத்தின் உண்மை அர்த்தத்தை புரிந்து கொண்டோம் தானா?
மால்கம் எக்ஸின் போராட்ட வாழ்வின் முக்கியமான சில கூறுகளை குறித்து மட்டுமே பேசலாம். இது வாழ்க்கை பதிவல்ல. மால்கம் எக்ஸ் குறித்த சில கண்ணோட்டங்கள்.
இஸ்லாத்தை அல் குர்ஆனிய உலக கண்ணோட்டத்தை அடிப்படையாக வைத்து ஒரு 'விடுதலை இறையியல்' (Liberation Theology) ஆகவே பொருள் கோடல் செய்வார், பேராசிரியர் பரீத் இஷாக். விடுதலை இறையியல் கருத்தாக்கத்தை எளிமையாக அறிமுகம் செய்வது எனில் இஸ்லாம் என்பது ஏகத்துவம் பற்றிய நம்பிக்கையை மட்டுமே முன் வைக்கும் 'மதமல்ல' ; மாறாக அது சமூக சமத்துவத்தை பேசும் 'மார்க்கம்' உம் கூட என்று கூறலாம்.
இஸ்லாம் வெறுமனே ஆன்மீக விசாரங்களின் தொகுப்பல்ல ; மாறாக மண்ணில் நடைமுறைப்படுத்தக்க ஒரு சமூகவியல் திட்டமாக முன் வைப்பது தான் விடுதலை இறையியல்.
அல் குர்ஆன் கூறும் இறைதூதர்களின் வரலாறு இதற்கான சிறந்த உதாரணங்களாக கூறலாம். நபி மூஸா (அலை) இஸ்ரேவேலர்களின் அடிமை வாழ்வை அழிக்கப் போராடினார். இதன் காரணமாகவே பிர்அவ்னை அவர் பகைத்துக் கொள்ள நேரிட்டது. வெறுமனே ஏகத்துவம் எனும் கடவுள் கோட்பாட்டை முன் வைத்து அவர் பிர்அவ்னுடன் பேசிடவில்லை என்பதற்கு அல் குர்ஆன் சாட்சி.
அடிமைகளினதும், பெண்களினதும் விடுதலையை, சமூக சமத்துவத்தை பேசியதால் தான் நபிகளார் மக்கா சமூக அமைப்பில் இருந்து அந்நியப் பட்டுப் போனார். வெறுமனே ஏகத்துவத்தை பேசும் ஓர் இறையியல் வாதியாக இறைதூதர் முஹம்மத் (ஸல்) இருந்திருப்பின் அவரை குறைஷி அதிகார வர்க்கம் தமக்கு எதிரான சவாலாக கண்டிருக்கப் போவதில்லை. ஏனெனில் ஏலவே ஏகத்துவத்தையும், நபி இப்ராஹீம் (அலை) யின் 'தூய மார்க்கத்திற்கான' அழைப்பையும் கொண்டிருந்த ஹனீப்களை மக்கா குறைஷிகள் ஒடுக்கவில்லை. காரணம், ஹனீப்களின் ஏகத்துவம் சமூகவியல் திட்டத்திற்கான அழைப்பற்ற, உள்ளீடற்ற ஏகத்துவம். அதனால் குறைஷி அதிகார வர்க்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
குர்ஆனில் தீன் எனும் வார்த்தை மூன்று வகைப் பொருள்களில் வந்திருப்பதாக இமாம் அபுல் அஃலா மௌதூதி கூறுகிறார்.
1)கண்ணியம், அதிகாரம், ஆட்சி, கட்டளை இடுதல்.
2)அடிபணிவது,அடிமைப்படுத்துவது,பின்பற்றுவது.
3)விசாரணை செய்தல்,தீர்ப்பு வழங்குதல்,செயல்களுக்கு நற்கூலியும் தண்டனையும் கொடுப்பது.
உஸ்தாத் மெளதூதி 'தீன்' என்பதை 'விடுதலை இறையியல்' எனும் பிரயோகத்தை பயன்படுத்தி விளக்கிடவில்லை. ஆனால் நாம் இப்போது பேசி வரும் கருத்தாக்கத்தை தான் அவரும் அந்த சொல்லாட்சியை பயன்படுத்தாமல் முன் வைத்து இருக்கிறார் என்பது தெளிவு.
மால்கம் எக்ஸ் விடுதலை இறையியல் போராளி. கோட்பாட்டு ரீதியாக இந்த சொல்லாடலை அவர் பொருள் கோடல் செய்திடவில்லை. காரணம், மால்கம் எக்ஸ் தத்துவ வாதியல்ல. இஸ்லாமியக் கற்றறிவாளரும் அல்லர். மாறாக செயல்வாதி, அழைப்பாளர், போராளி.
அமெரிக்க கருப்பு முஸ்லிம்கள் அக ரீதியாகவும், புற ரீதியாகவும் அடிமை நுகத்தடியை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதுவே அவர் போராட்டத்தின் சாரம். இன்னொரு வகையில் கூறுவது எனில் கருப்பர்களின் விடுதலை தான் அவர் (மால்கம் எக்ஸ்) வாழ்வு சொல்லும் செய்தி.
எலிஜா முஹம்மத்தின் Nation of Islam அமைப்பு மூலமாகவே முஸ்லிமானார் மால்கம் எக்ஸ். பின்னர் அந்த அமைப்பின் முன்னணிப் போராளியாக மாறினார். தனது ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த மால்கம் எக்ஸ் இஸ்லாத்தின் இறுதி இறைதூதர் முஹம்மத் நபி தான் என்பதை அறிந்து கொண்டு போலி நபியான எலிஜாவை எதிர்க்கத் தொடங்குகிறார். ஆனால் பலரும் கருதிக் கொண்டு இருப்பது போல இது வெறுமனே அகீதா (நம்பிக்கை கோட்பாடுகள்) சார்ந்த எதிர்ப்பு மட்டுமே அல்ல. மாறாக, நபி என்பதன் மூலமாக உருவாகும் ஒற்றை அதிகாரமும், சிந்தனை எதேச்சதிகாரமும் அமெரிக்க கருப்பு முஸ்லிம்களின் சிந்தனையை அழித்து மீண்டும் ஒரு அடிமைத் தளைக்குள் அவர்களை நுழைவித்து விடும் என்பதற்காகவே அவர் நேஷன் ஒப் இஸ்லாம் அமைப்பினை எதிர்த்தார்.
எலிஜா முஹம்மத் கட்டியெழுப்பியது பலமிக்க ஒரு ஆன்மீக அதிகார வலைப்பின்னல். அரூவ அடிமைத்தனம். இவற்றை உடைத்து எறிந்து விமர்சன சிந்தனையுடன் கூடிய ஒரு சமூக அமைப்பை கட்டுவதே மால்கம் எக்ஸின் நோக்கம்.
இன்றைய நிலையில் மால்கம் எக்ஸின் வாழ்க்கை தத்துவார்த்த ரீதியாக எம்மை மத குருத்துவத்தை அழிக்கும் பன்மைத்துவ அணுகுமுறையை நோக்கியே அழைத்து செல்ல வேண்டும். உண்மையான அர்த்தத்தில் மால்கம் எக்ஸ் தான் விடுதலை இறையியல் வாதி ; காலனிய நீக்க செயல்வாதி.
ரஹிமஹுமுல்லாஹ்..!
https://www.facebook.com/100005063134008/posts/1192893937556033/
No comments:
Post a Comment