Saturday, February 9, 2019

முஸ்லீம்கள் எவ்வளவு காலம்தான் சிலுவை சுமப்பது

ஃபாரூக்மீரான்
2019-02-09

...
முஸ்லீம்களை எவ்வளவு காலம்தான் சிலுவை  சுமக்க சொல்வீர்கள்?
...

மறைந்த ஒசாமா பின் லேடனோ, தாவூத் இப்ராஹீமோ இந்திய முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளுமல்ல. நீங்கள் அன்றாட வாழ்வில் காணும் எந்த முஸ்லிமும் இவர்களைப் பிரதிபலிப்பவர்களுமல்ல. இன்றைய நிலையில் எந்த முஸ்லிம்களாலும் ஏதோவொரு சமூகஊறு நிகழ்ந்தாலும் நன்றாகப் பழகியவர்களே "இதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்றொரு கேள்வியின் மூலம் கோட்டிற்கு எதிர்புறமாய்க் கொண்டு நிறுத்துகிறார்கள்.

முதலில் நடுநிலை பேசுபவர்களோ அல்லது முற்போக்காளன் என தம்மை அடையாளப் படுத்திக் கொள்பவர்களுக்கோ தோன்றும்  இத்தகைய கேள்விகள் அவர்களின் குற்றவுணர்ச்சியிலிருந்தோ அல்லது இப்போது இஸ்லாமியர்களை விமர்சிதே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே தோன்றுகிறதேயன்றி அறம்சார்ந்தோ, அல்லது சமூகநீதி சார்ந்ததாகவோ இல்லை என்பதே பெரும்பாலும் உண்மை.

ஏனெனில் இந்துத்வத்தின் கோரச் செயல்களை விமர்சிக்கும் போது உடன்படும் சமூகம் அவர்கள் இந்துக்களின் சடங்குகளையோ அல்லது மூடநம்பிக்கைகளையோ விமர்சிக்கும் போது "இதே போன்று மற்ற மதத்தினரை உங்களால் விமர்சிக்க முடியுமா?"  என எதிர்கேள்வி கேட்கிறது. களத்தில் செயல்படுபவர் களானாலும் சரி, அல்லது முகநூலில் எழுதுபவர்களானாலும் சரி ஒவ்வொருவரின் தலையின் மீதும் இக்கேள்வி தொங்கியபடியே இருக்கிறது.

எனவே கிடைத்த வாய்ப்பில் அவர்கள் தங்களை நியாயப்படுத்தும் முயற்சியில் நீதி எதுவென வெளிவரும் முன்பே தீர்ப்பெழுதத்துவங்குகிறார்கள். ஃபாசிஸ்டுகளுடன் சமூகநீதி பேசுபவர்களும் கை கோர்க்கும் புள்ளி இதுதான். இதில் இந்து முஸ்லிமென எந்த பேதமுமில்லை.

---

சரி இதுதான் முதன்முறையா?

இதற்கு முன்  எத்தனையோ இந்துத்வ செயற்பாட்டார்கள் சொந்தக் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டபோதும், பழி ஏதோவொரு முஸ்லிமின் மீது விழவில்லையா?

இதே திருப்பூரில் மோடியின் படத்திற்கு பாஜக நிர்வாகியே செருப்பு மாலையணிவித்து ஒரு மதக்கலவரத்திற்கு முயற்சிக்கவில்லையா?

தமிழகத்தில் அல்லது இந்தியாவில் அல்லது உலகின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு முஸ்லிம் தவறிழைத்தாலும்கூட தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாவ மன்னிப்புக் கோரவேண்டுமா?

ஒரு ரத யாத்திரையானாலும் சரி, ஒரு விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானாலும் சரி முஸ்லிம்கள் தங்களின் உயிரைப் பிடித்தபடியேதான் வாழ வேண்டுமா?

ஒரு முஸ்லிம் தன்னுடைய நம்பிக்கையை சிதைத்துத்தான் இங்கு நல்லிணக்கத்தை பேச வேண்டுமா?

"இல்லை, ராமலிங்கம் கொலை தொடர்பாக முஸ்லிம்கள்தானே கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்" - எனில் அனைத்து சம்பவங்களிலும், இதற்கு முன் வந்த இனி வரப்போகும் காவல்துறையின் அறிக்கையே இறுதியானது என நாம் ஏற்றுக் கொண்டு விடுவோமா?

கோத்ரா ரயில் எரிப்பு நடைபெற்ற இரண்டுமணி நேரத்திலேயே "இஸ்லாமியர்கள்தான் இதற்கு காரணம்" என்ற மோடியின் கூற்றையும் நாம் ஏற்றுக் கொள்வோமா, ?

பார்பன தீவிரவாதி கோட்சே காந்தியை கொன்றுவிட்டு அப்பழியை முஸ்லீம்களின் போட்ட வரலாற்று உண்மையை எப்படி பார்க்கின்றீர்கள்?

"இந்தியாவில் நிகழ்ந்த அத்தனை குண்டு வெடிப்புகளையும் இஸ்லாமியர்கள்தான் செய்தார்கள்" - என்ற புரட்டையும் நாம் ஏற்றுக் கொள்வோமா?

தீஸ்தா செதல்வாட், மற்றும் ஹேமந்த் கார்கரேகியோரின் அறிக்கைகளை என்ன செய்வது, குப்பையில் வீசி புறக்கணிப்போமா?

---

சுவாதி கொலையில் பிலால் மாலிக், ஆடிட்டர் ரமேஷ் கொலையில் பன்னா இஸ்மாயில், இப்போது ராமலிங்கம் கொலையில் ஐந்து முஸ்லிம்கள். ஒவ்வொரு பொய்யும் உடைபட உடைபட இந்துத்துவ செயற்பாட்டாளர்களுக்கு இணையாக புதிய புதிய அநீதிகளை கொண்டு எம்முகத்தில் அடிப்பது எந்த அடிப்படையிலான சமூகநீதி.

இங்கு எவனும் குற்றம் செய்துவிட்டு தப்பிக்க உங்களின் ஒத்துழைப்பைக் கோரவில்லையே. முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எனது சகோதரத்துவத்தை, எனது தேசபக்தியை, என நல்லிணக்கத்தை சமூகத்தின் முன் நான் நிரூபித்தே ஆக வேண்டுமென்ற உங்களின் உளவியலே இச்சிறுபான்மை மனநிலையின்  சமநிலையைக் கூறுபோடுகிறது.

இப்படியாக கூறுபோடப்படும் மனநிலையானது நாளடைவில் தன்னைத்தானே இரண்டாம் தரக் குடிமகனாக உணரச் செய்கிறது. இப்படியான தனிமனித உளவியலே ஒன்று சேர்ந்து தேச முஸ்லிம் மாந்தரின் பொது உளவியலாக கட்டமைக்கப்படுகிறது.

பாபர் மஸ்ஜிதோ, தாஜ்மஹாலோ என்ன எழவோ எப்படியேனும் போகட்டும் நாம் உயிர்பிழைத்தால் போதும், கர்ப்பிணி மனைவியின் கரு பிய்த்தெறியப் படாமலிருந்தால் போதும் என நிம்மதியடைய வைக்கிறது.

---

தவிர இங்கு முற்போக்காளரென உணரும் பலருக்கும்  இஸ்லாமிய சமூகம் பலவீனமானது, அவர்கள் வென்றெடுக்கப்பட வேண்டிய மக்கள் என்பதைக் கடந்து தங்களுக்கு இணையாக வைத்துப்பார்ப்பதில் இருக்கும் ஒவ்வாமையானது நாளடைவில் விரிவடைந்து கொண்டேதானிருக்கிறது.

ஏனைய பிற சமூகங்களைப் போலவே குறை நிறைகளோடிருக்கும் ஒரு சமூகத்தை இப்படியான மனநிலையில் அனுகுவதன் மூலம் சிறு தவறும் மத அடிப்படையில் காணப்படுகிறதேயன்றி பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அல்ல. அதுவே இயல்பாக ஒரு சமூகத்தை கோட்டிற்கு அந்தப்பக்கமாக நிறுத்திவைத்து விமர்சிக்கச் செய்கிறது.

இதுவே ஒரு நிலத்தகறாரோ, கொடுங்கல் வாங்கல் பிரச்சனையோ ஒருவேளை ஒரு முஸ்லிமினால் ஒரு இந்து பாதிக்கப்பட்டு விட்டால்  அங்கு தனிமனித தவறைவிடவும் மத அடிப்படையில் ஒருவன்மீது தீர்ப்புச் செய்யக் காரணமாகிறது. அப்படியானதொரு தனிமனித தவறும் மதக்கலவரமாகிவிடுமோ, இதற்கும் தாங்கள் விளக்கமளிக்க வேண்டுமா என்ற நிலையில் ஒரு சமூகம் பதற்றத்தோடிருப்படு கொடுமையிலும் கொடுமை.

இந்துத்வ கட்சி மற்றும் அமைப்பு சார்ந்தவர்கள்  இப்படியொரு இக்கட்டை முஸ்லிம்களுக்கு தோற்றுவிப்பதன் காரணத்தை ஆதியும் அந்தமுமாய் நாம் புரிந்துகொள்ளவியலும். *ஆனால் களத்தில் உடனிருப்பவர்களின் விரல்கள் நம்மை நோக்கி நீளும் அரசியல்தான் மிக அபாயமானது*

---

இந்தியச்சிறைகளில் தங்களது மக்கள்தொகை விகிதாச்சாரத்தை விடவும் அதிகளவில் இருப்பது இஸ்லாமியர்கள்தானே.

சந்தேகத்தின் அடிப்படையில் ஆயுள் முழுவதும் விசாரணைக் கைதிகளாக இருப்பவார்கள் தங்களின் தவறுகளுக்காக மட்டும்தான் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்களா?

வேறு காரணங்கள் இருக்கிறதா இல்லையா என உண்மையாகவே உங்களின் மனசாட்சிக்குத் தெரியாதா?

அல்லது எல்லாமறிந்தும் உஙகளின் சமூகச் சமநிலையை நீங்கள் நிரூபிக்க நாங்கள் சிலுவை சுமந்தேதான் தீர வேண்டுமா?

இது என்ன அடிப்படையிலான அறம்?

சிறுமி ஆசிஃபாவை வல்லுறவு புரிந்தவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக பாஜகவின் எம். பி முதலானோர் ஊர்வலமாகவே சென்றார்கள்.

இந்தியாவில் எந்த முஸ்லிம்களோ, அல்லது அமைப்போ அநீதிக்கு ஆதரவாக அப்படிச் செய்திருக்கின்றார்களா? எந்த தவறு நடந்தாலும் "நான் இதைக் கண்டிக்கிறேன்,  குற்றவாளிகளைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள், நடுரோட்டில் தூக்கிலிடுங்கள்" என பேயாய் அலரும் ஒரு சமூகத்தை பேரினவாத அடிப்படை வாதிகளுடன் ஒப்பிடுதல் என்னவகையான நீதி?

என் பெயர் ஒரு முஸ்லிமுடையதாக இருக்கிறதென்பதற்காக - ரஹ்மான் மகள் மேடையில் புர்காவுடன் தோன்றினாலும், ராமலிங்கம் கொலை குறித்தும் எனக்குச் சம்பந்தமே இல்லையென்ற போதிலும் நான் பாவமன்னிப்புக் கோரவேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பபீர்களானால் பிரச்சினை  என்னிடமல்ல உங்களிடம்தான்.

"நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்றார் தோழர் மாவோ. நூறல்ல பல்லாயிரக்கணக்கான கருத்துகளால் நாம் மோதிக் கொண்டிருக்கும் போது பேரின அடிப்படைவாதமோ நூறு நச்சுப் பூக்களால் நம் சிந்தனையில் விஷக்காற்றை செலுத்திக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment