Wednesday, February 6, 2019

கேன்சருக்கு பயாப்சி - தேவையா இல்லையா?

ஷஜஹான்
2019-02-06

பயாப்சி - தேவையா இல்லையா?

எவ்வளவு தெளிவாக எழுதினாலும் “கேன்சர் ஒரு வியாபாரம்” என்று புதிது புதிதாக யாரேனும் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நம்பிக்கையைக் கற்பித்துக்கொண்டு, அதுவே உண்மை என்பதற்கான ஆதாரங்களைத் தேடி, ஆறுதல் அடைகிறவர்கள். அறியாமையால் செய்கிறார்களா அல்லது ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்பின் ஆற்றாமையால் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இத்தகைய கருத்துகள் திரும்பத்திரும்ப உயிர்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

மேற்கண்ட பத்தி என்னுடைய நூலின் ஓர் அத்தியாயத்தில் துவக்கத்திலேயே இடம்பெறுகிறது. காரணம், உண்மை ஒரு சுற்றுச் சுற்றி வருவதற்குள் பொய் நான்கு சுற்றுகள் வந்து விடுகிறது என்பது இந்த வாட்ஸ்அப்/பேஸ்புக் சமூக வலைதளக் காலத்தில் மிகவும் உண்மையாகி விட்டதுதான். எந்தவொரு விஷயத்தையும் ஆழமாகப் படிக்காமல், உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்க்காமல், படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளுக்கு மட்டுமே ஆட்பட்டு உடனே அதைப் பகிர்ந்து விடுகிற போக்கு அபாயகரமாக அதிகரித்து விட்டது. அப்படியொரு பகிர்வுதான் இந்தப் பதிவை எழுத வைத்தது.

புற்றுநோய்க்கு பயாப்சி செய்வது தேன்கூட்டில் கல்லெறிவது போன்றது. இதனால் புற்றுநோய் பரவி விடும். புற்றுநோய் அறிகுறி இருந்தால் அலோபதி சிகிச்சை செய்யாதீர்கள். மனதை நேர்மறை எண்ணத்தோடு ஆட்சி செய்ய விடுங்கள். மூலிகைகளை நம்புங்கள். காய்கறிகளை உண்ணுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.... என்கிற ரீதியில் ஒரு பதிவை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

படித்ததும் உடனே எழுந்தது ஆத்திரம். அப்புறம் வந்தது சலிப்பு. அறிவியல்ரீதியான ஆதாரங்கள் எத்தனை இருந்தாலும் மண்ணின் மருத்துவம் என்று நீட்டிமுழக்கும் ஆதாரமற்ற பதிவுகள் பெரும் சலிப்பையும் உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன.

அன்னதானம் செய்யுங்கள், மனதை ஆரோக்கியமாக வைத்திருங்கள், கீரை வகைகளை சாப்பிடுங்கள் எல்லாம் சரிதான். இது புற்றுநோயாளிகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே பொருந்தும். சமச்சீர் உணவு, காய்கறிகள் கீரை வகைகள் சேர்த்தல், உடற்பயிற்சி எல்லாமே பள்ளிப் பருவத்திலிருந்தே பாடங்களில் சொல்லப்படுகிற விஷயம்தானே? இதையெல்லாம் செய்தால் சிகிச்சையே இல்லாமல் புற்றுநோயிலிருந்து மீண்டு விடலாம் என்பது எவ்வளவு அபத்தம்! அதிலும் பயாப்சியால் புற்றுநோய் அதிகரிக்கும் என்பது அபத்தத்திலும் அபத்தம்.

உடலில் ஒரு கட்டி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அது கட்டியாக உருவாகி அப்படியே இருக்குமானால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது உடலின் ஏதேனுமொரு செயல்பாட்டை பாதிக்கும் என்றால் மட்டுமே கவலைப்பட வேண்டும். உதாரணமாக, முழங்கையின் உள்பகுதியில் ஒரு கட்டி வளர்கிறது. அது கையின் செயல்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரையில் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் கையை மடக்குவதில் தடை செய்யுமானால் கட்டியை நீக்கத்தான் வேண்டும். அத்துடன், அந்தக் கட்டி முழங்கையில் வளர்ந்த இடத்தோடு நின்று விடுமா அல்லது வேறு இடங்களுக்கும் பரவுமா என்று பார்க்க வேண்டும். எங்கே வளர்ந்ததோ அதே இடத்துடன் நின்று விட்டால் அது கேன்சர் இல்லை, அது வெறும் கட்டிதான். வளர்ந்த இடத்திலிருந்து உடலின் இதர பகுதிகளுக்கும் பரவினால்தான் அது கேன்சர் – புற்றுநோய்.

ஒரு கட்டி சாதாரணக் கட்டியா அல்லது கேன்சர் கட்டியா என்று எப்படி அறிய முடியும்? அதுவும், அந்தக் கட்டி முழங்கையைப் போல வெளியே தெரிகிற பகுதியில் இல்லாமல் உடலுக்குள் வேறெங்கேனும் வளர்ந்திருந்தால் அது பரவக்கூடிய கட்டியா என்று எப்படி அறிய முடியும்? இதற்கு உதவி செய்வதுதான் பயாப்சி.

பயாப்சியில் பல வகைகள் உண்டு. எதுவாக இருந்தாலும், கட்டியின் திசுக்களை பரிசோதனைக்காக எடுப்பதுதான் அதன் நோக்கமாகும். திசுக்களை எடுப்பது என்றால் தேன்கூட்டைக் கலைப்பதுபோல ஏதோ குத்திக்கிளறி எடுப்பதாகக் கற்பனை செய்து கொண்டார்கள் போலிருக்கிறது! பயாப்சிக்காக ஊசி மூலம் எடுக்கும்போது, சாதாரணமாக மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசிகளைவிட மெல்லிய ஊசியை கட்டியில் செலுத்தி, அதிலிருந்து திசுக்களை எடுத்து பரிசோதிப்பார்கள். இதற்கும் புற்றுநோய் பரவலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பயாப்சியில் பல வகைகள் உண்டு. உதாரணமாக, என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். (கீழே உள்ள கதைகளில் இரண்டினை இதுவரை நான் பேஸ்புக்கில் சொல்லவில்லை. மேலும் இரண்டு கதைகளும்கூட உண்டு, அவற்றையும் சொல்லவில்லை. இப்போதும்கூட எனக்கு ஆறுதல் கூற வேண்டும் என்பதற்காக அல்ல, உண்மை எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன்.)

1. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவுக்கு உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டது. கோவையில் ஒரு மருத்துவமனை பயாப்சி பரிசோதனை செய்யச் சொன்னது. உணவுக்குழாயில் ஒரு டியூபை செலுத்தி, அதிலிருந்து திசுவை எடுத்துப் பரிசோதித்தபோது, அது புற்றுநோய்க் கழலை என்று தெரிந்தது. ஏற்கெனவே அவருக்கு நோய் பரவியிருந்தது. சிகிச்சை செய்தோம் என்றாலும், தன் முடிவை ஊகித்த அவர், ஒரு கட்டத்தில் தனக்கு சிகிச்சை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வீட்டுக்கு அழைத்துச் சென்ற சில வாரங்களில் உயிரிழந்தார்.

2. என் மூத்த அக்காவின் மகனுக்கு திடீரென்று கடும் தலைவலி வந்தது. ஆரம்பகட்ட மாத்திரைகளால் பயன் கிடைக்கவில்லை என்பதால் ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையில் ஒரு கட்டி இருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட 6 கனசெமீ அளவு. அறுவை சிகிச்சை செய்து கட்டி நீக்கப்பட்டது. ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு, நல்ல முன்னேற்றமும் இருந்தது. ஆனால் ஒரு பக்கம் இந்த முன்னேற்றம் நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் புற்றுநோய் செல்கள் உடலின் இதர பகுதிகளுக்கும் பரவி விட்டிருந்தன. எனவே உயிரிழந்தார். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் – அவருக்கு முன்னரும் அவ்வப்போது தலைவலி இருந்து கொண்டுதான் இருந்தது. திருப்பூரில் ஒரு மருத்துவரிடம் பார்த்தபோதும் அவர் புற்றுநோய் சந்தேகத்தை தெரிவிக்கவில்லை. தலைவலி வரும்போது அனாசின் போன்றதொரு மாத்திரையைப்போட்டு தற்காலிக நிவாரணம் பெறுவது வழக்கமாகிப் போனதால், தலைவலியைப் பொருட்படுத்தவில்லை. ஒருவேளை முன்னரே சந்தேகத்தின் பேரில் ஸ்கேன் செய்து பார்த்து, பயாப்சியும் செய்து பார்த்திருந்தால், அது பரவக்கூடிய கட்டியா என்று கண்டறிந்திருக்க முடியும். ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

3. 2017 செப்டம்பர் மாதம் நான் தமிழகம் வந்திருந்தபோது திடீரென்று எனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் கொலோனோஸ்கோபி செய்யப்பட்டது. அதாவது, ஆசனவாயின் வழியாக ஒரு குழாயை செலுத்தி, அதில் இணைத்திருக்கும் கேமராவின் மூலமாக குடலுக்குள் என்ன பிரச்சினை என்று கண்டறிவது. எனக்கான சோதனையில் பெருங்குடலில் புண்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சரி, புண்ணுக்கான மருந்து கொடுத்து அத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்தானே? அதுதான் இல்லை. பெருங்குடலில் புண்கள் மட்டுமல்ல; புண்கள், வீக்கம் அல்லது பாலிப்ஸ் எனப்படும் மொட்டுகளும் இருக்கலாம். இந்த மொட்டுகள் புற்றுக் கட்டிகளாக மாறும சாத்தியம் உண்டா என்று பரிசோதிக்க வேண்டும். எனவே, கொலோனோஸ்கோபி செய்யும்போதே, குடலில் இருக்கும் மொட்டினையும் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள். (இந்தப் பரிசோதனையில் எனக்குப் புற்றுநோய் இல்லை என்று தெரிய வந்தது.) ஊரிலிருந்து தில்லிக்குத் திரும்பி வந்து விட்டேன். வந்த பிறகும் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை என்பதால் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. ஸ்டான்லியில் பரிசோதனை மட்டுமே செய்தோம். இங்கே அட்மிட் ஆக வேண்டியிருந்தது. இங்கேயும் பரிசோதனை செய்யப்பட்டது, இங்கேயும் குடலுக்குள்ளிருந்து எடுத்த மொட்டினை பயாப்சி செய்து பார்த்தார்கள், புற்றுநோய் இல்லை என்று உறுதி செய்தார்கள். குடலில் புண்கள் உள்ளதா என்பதை மட்டுமே பார்த்துவிட்டு பயாப்சி செய்யாமல் நிறுத்திக் கொண்டிருந்தால், ஒருவேளை புற்றுநோய் செல்கள் இருந்திருந்தால் அது தெரிய வந்திருக்காது. இதுதான் பயாப்சியின் பயன்.

மருத்துவமனை காசு பிடுங்குகிறதே என்றால், அது வேறு விஷயம். காசு பிடுங்காமல் பார்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. மேலே சொன்ன பிரச்சினைக்காக நான் சென்னை ஸ்டான்லியில் பார்த்தேன். ஒரு பைசா செலவு இல்லை. அதையே இங்கே ஒரு தனியார் மருத்துவமனையில் பார்த்தேன். ஒரு லட்சம் ரூபாய் செலவானது. ஸ்டான்லியில் நான் வெளி நோயாளியாகச் சென்று பரிசோதனை செய்து கொண்டு மாத்திரைகளா வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். இங்கே தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கியிருந்து கொடுக்கிற காசுக்கு தனி கவனிப்பு கிடைத்தது. தவறு என்னுடையதுதானே? ஸ்டான்லியிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்திருந்தால் செலவே இருந்திருக்காது. விஷயம் என்னவென்றால், ஸ்டான்லியில் என்ன மருந்து கொடுத்தார்களோ அதே மருந்தைத்தான் இங்கேயும் கொடுத்தார்கள். :) 

பயாப்சியில் பல வகைகள் உண்டு.
• வாய் அல்லது ஆசனவாய் அல்லது சிறுநீரக்க் குழாய் போன்ற வழிகளில் குழாயை உள்ளே செலுத்தி, ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்று பார்த்து, திசுக்களையும் எடுத்துப் பரிசோதனை செய்வது எண்டாஸ்கோபிக் பயாப்சி.
• இரத்தப் புற்றுநோய், எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய் ஆகியவற்றைப் பரிசோதிக்க எலும்புக்குள் ஊசியைச் செலுத்தி மஜ்ஜையின் அணுக்களை எடுத்துப் பரிசோதிப்பது எலும்பு மஜ்ஜை பயாப்சி
• மார்பகம் போன்ற உறுப்புகளில் கட்டி இருப்பதாகத் தெரிந்தால் ஊசியை உள்ளே செலுத்தி திசுக்களை எடுத்துப் பரிசோதிப்பது நீடில் பயாப்சி.
• தோல் மற்றும் தோலடிப் பகுதிகளைப் பரிசோதிப்பது ஸ்கின் பயாப்சி.
• ஊசி அல்லது எண்டாஸ்கோபிக் குழாய்களை செலுத்த முடியாத இடங்களில் அறுவை சிகிச்சை செய்து திசுக்களை எடுத்துச் செய்வது சர்ஜிகல் பயாப்சி.

மேலும், பயாப்சி என்பது புற்றுநோய்க்கு மட்டுமல்ல. அல்சர் முதல் ஹெபடிடிஸ் வரை பல நோய்களுக்கும் பயாப்சி தேவைப்படலாம். திசுக்களை எடுப்பது மட்டுமல்ல, இப்போது லிக்விட் பயாப்சி என்ற முறையும் வந்திருக்கிறது. ஆனால் திசு பயாப்சி அளவுக்கு இது பயன் தருவதில்லை.

ஆக, பயாப்சி எதுவாக இருந்தாலும் அதன் நோக்கம் ஒன்றுதான் – உடலில் தோன்றிய கட்டி பரவக்கூடியதா இல்லையா என்று மைக்ராஸ்கோப் மூலம் பரிசோதனை செய்வதற்காக கட்டியின் திசுவை எடுப்பது. பயாப்சியின் மூலம்தான் புற்றுநோய் எந்த அளவில் இருக்கிறது என்று கண்டறிய முடியும், அது எங்கிருந்து துவங்கியிருக்கும் என்பதையும் கண்டறிய முடியும்.

புற்றுநோய் இருக்குமா என்று சந்தேகம் வந்த பிறகும் பயாப்சி தேவையில்லை என்பவர்கள் இரண்டே வகைதான் இருக்க முடியும்.

முதல் வகை — எக்ஸ்-ரே அல்லது சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ போன்ற சோதனைகளில் கட்டி இருப்பது உறுதியாகிவிட்டது, எதற்காக பயாப்சி எல்லாம் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டும், நேரடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதுதானே என்பவர்கள். (எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன்களில் கட்டி இருக்கிறது என்றுதான் தெரியுமே தவிர, அது பரவக்கூடிய கட்டியா என்று தெரியாது. பரவக்கூடிய கேன்சர் கட்டியாக இருந்தால் மட்டுமே அறுவை / ரேடியேஷன் / கீமோ ஆகிய சிகிச்சைகள் தேவைப்படும்.)

இரண்டாம் வகை — கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்று நம்புகிறவர்கள்.

https://www.facebook.com/100000383483109/posts/2124996844189744/

No comments:

Post a Comment