Monday, March 12, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 10

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
Via facebook
2018-02-20

அறநிலையத் துறைச் சட்டத்திற்கு ஆதரவு திரட்டிய பெரியார்; எதிர்ப்புத் தெரிவித்த சத்யமூர்த்தி அய்யர் - பகுதி 10
-----------------------------------------------------------------------------
இந்து அறநிலையத் துறை குறித்த என்னுடைய முதல் பதிவில், நண்பர் ஒருவர் இந்தச் சட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன என்று கேட்டபோது, என்னுடைய அறியாமையால், ஏதும் இல்லை என்று பதிவிட்டுவிட்டேன். அதனைப் பார்த்த, ம.தி.தா. இந்துக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆ. திருநீலகண்டன், அந்தப் பதிவிலேயே அதனை மறுத்தார்.

"சொத்துடமைமிக்க பெருங்கோயில்களில் நிலவிய பார்ப்பன-உயர்சாதி ஆதிக்கத்தை,சுரண்டலை பெருமளவுக்குத் தடுத்த அறநிலையத்துறை சட்டம் நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கு சிலகாலம் முன்புதான் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கியிருந்தார். இந்த மசோதா சட்ட-மக்கள் மன்றங்களில் விவாதத்திற்கு வரும்போது, 'இது ஏதோ காங்கிரசுக்கு எதிரான இயக்கமான நீதிக்கட்சி கொண்டு வருகிறது என அலட்சியமாக இருந்துவிடாமல், இதன் சமூக முக்கியத்துவத்தை கருதி, இதனை எந்தவகையிலும் வெற்றி பெறச் செய்தாக வேண்டும்' எனத் தனது நெருங்கிய நண்பர்களும் அப்போது காங்கிரசின் பெருந்தலைவர் களாகவும் இருந்த வரதராஜுலு நாயுடு, திரு.வி.க ஆகியோரைத் தூண்டிவிட்டு, தனது ' குடிஅரசு' இதழின் வழி தக்க பரப்புரைகளைகளையும் மேற்கொண்டு, பார்ப்பனரின் கடும் எதிர்ப்பையும் மீறி அறநிலையத்துறை மசோதா வெற்றி பெற அடிப்படைக் காரணமாக விளங்கியவர் பெரியார்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பதிவைப் பார்த்த, 'பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு வரலாறு', 'சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்' நூல்களின் ஆசிரியரும் நண்பருமான டாக்டர் பழ. அதியமானும் இதனை விளக்கமாகச் சுட்டிக்காட்டினார்.

இந்து அறநிலையத் துறை மசோதா தாக்கல்செய்யப்பட்டபோது, காங்கிரசைச் சேர்ந்தவரும், எல்லா சமூக முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் எதிர்க்கக்கூடியவருமான தீரர் சத்தியமூர்த்தி அந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சட்டசபையில் நிறைவேறிய அந்த மசோதாவை இந்திய சட்டசபை, வைசிராய், இங்கிலாந்து அரசு என பல மட்டங்களுக்கு எடுத்துச் சென்று தடைசெய்ய பிராமணர்களின் ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். இதற்கென பல ஆயிரம் ரூபாய்கள் திரட்டப்பட்டன.

(இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வரதராஜுலு நாயுடு தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், பதிவு பெரியாரின் பங்களிப்பைப் பற்றியது என்பதால் அதனை விரிவாகக் குறிப்பிடவில்லை.)

பெரியார் குடியரசு இதழைத் துவங்கியிராத காலகட்டம். அப்போது இது சம்பந்தமாக பெரியார் விடுத்த அறிக்கையை எந்த இதழும் வெளியிடாத நிலையில்,  நவசக்தி அதனை வெளியிட்டது. இது தொடர்பான விவரங்கள், பழ. அதியமானின் பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு புத்தகத்தில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

20.2.1925 நவசக்தி இதழில் பெரியாருடைய அறிக்கை வெளியானது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியார் நினைவு கூர்ந்ததை அதியமான் பதிவுசெய்திருக்கிறார். "நான் காங்கிரசில் இருந்தபோது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள். யாரையும் கலந்துகொள்ளாமலும் கேட்காமலும் திடீரென்று காங்கிரஸ் பார்ப்பனர்களான சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார் முதலியவர்களே எதிர்த்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உடனே நான் பதறி, இந்தப் பார்ப்பனர்களின் செயலை எதிர்க்க வேண்டுமெனத் தீர்மானித்தேன். உடனே நானும் வரதராஜுலுவும் திரு.வி.கவும் இராமநாதனும் சேர்ந்து யோசித்து ஒரு அறிக்கை எழுதினோம். அப்போது அதை வெளியிட எங்களுக்குச் சாதகமாக எந்த பத்திரிகையும் கிடையாது. ஆகவே அப்போதிருந்த நவசக்தி என்ற பத்திரிகையில் மட்டும்தான் வெளியிட்டோம். அதைக் கண்டதும் ராஜகோபாலாச்சாரியார் ஓடிவந்து இந்த மாதிரி இந்த மாதிரி அறிக்கை விடுவது கூடாது என்றார். அதற்கு நான் சத்தியமூர்த்தி அய்யரும் சீனிவாசய்யங்காரும் செய்தது சரியா என்று கேட்டேன். பிறகு அவர் இருவருக்கும் அமைதி ஏற்படுகின்ற தன்மையில் சமாதானம் செய்து ஒரு அறிக்கை விட்டார்" என்று பெரியார் கூறினார்.

அந்த அறிக்கையில் பெரியார் என்ன கூறினார் என்பதை, நவசக்தி இதழில் இருந்து அப்படியே தருகிறேன்.
"ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் அவர்கள் கடிதம்

அன்புள்ள டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரு அவர்களுக்கும் ஸ்ரீமான் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கும் ஈரோடு ஈ.வெ. ராமசாமி அநேக வணக்கம்.

இந்த தேவஸ்தான சட்டம் சம்பந்தமாய் சமீபத்தில் சிலரால் நடத்தப்படும் கண்டனக் கிளர்ச்சிகளைக் கவனித்துப் பார்த்தவர்கள் இது மத சம்பந்தமான கிளர்ச்சி அல்ல என்றும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்பு சம்பந்தமான கட்சிவாதம் என்று இப்போதாவது உணர்ந்திருப்பார்கள். வகுப்பு சம்பந்தமான சுயநல்ன்களை மனதில் வைத்து மதசம்பந்தமான கிளர்ச்சி என்று போலிப்பெயரால் இந்துக்களின் பெரும்பான்மையோராய் இருக்கிற பல சமூகத்தினருக்கு இழிவும் நஷ்டமும் உண்டாகும்படி இந்துக்களில் ஒரு மிகச் சிறிய கூட்டத்தார் தங்களுடைய தந்திரத்தினாலேயும் கூடா ஒழுக்கமுள்ள மடாதிபதிகள், மகந்துகள், மதாச்சாரியார்கள் முதலானவர்களாலும் உதவப்பட்ட பணச்செருக்குகளினாலேயும் செய்துவரும் சூழ்ச்சிப் பிரச்சாரங்களினாலேயும் இந்துக்களின் மேற்கண்ட இழிவுகளுக்கும் கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் சம்பந்தப்பட்ட சமூகத்தாரில் தரித்திரத்தாலும் பேராசையினாலும் சுயநலத்திலும் அழுந்தக்கிடக்கும் ஒரு சிலரை விலைக்கு வாங்கிக்கொண்டு அவர்கள் மூலமாகவும் தங்கள் விஷமப் பிரச்சாரத்தை செய்து நம்மவர்களை ஏமாறச்செய்துகொண்டுவருவதை நாம் பார்த்துக்கொண்டு வருவது, பெரிய தேசத் துரோகமும் மதத் துரோகமும் சமூகத் துரோகமும் என்பதை நான் சொல்லாமலேயே தங்கள் போன்ற பெரியோர்களுக்கு விளங்கும்.   

உண்மையிலேயே இந்து தேவஸ்தானச் சட்டம் மதவிரோதமானது என்று நினைத்து தப்பபிப்ராயத்துடன் கிளர்ச்சி செய்பவர்கள் சிலர் இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்து தேவஸ்தானச் சட்டத்திற்கு விரோதமாகச் செய்யும் கிளர்ச்சிகளை, தேச, மத, சமூக, நன்மைகோரி நசுக்கப்படவேண்டியது அவசியம் என்பது வெகுஜன அபிப்பிராயம். அப்படிச்செய்வதினால் பிராமண துவேஷம் என்று சொல்லப்பட்டுவிடுமோ, பிராமணர்களின் புன்சிரிப்பு மறைந்துவிடுமோ, வைதிக உலகில் தமக்கு செல்வாக்கு குறைந்துவிடுமோ நம்மவர்களில் தக்கவர்களான அநேகருக்குக்கூட இருந்து மௌனம் சாதிக்கச் செய்துவருவது எனக்குத் தெரியும்" என்று அந்த நவசக்தி அறிக்கையில் குறிப்பிடுகிறார் பெரியார்.

இந்த அறிக்கை முழுவதையும் இது தொடர்பாக நவசக்தி இதழில் வெளிவந்த கடிதங்களையும் விரைவில் முழுமையாக இதே பதிவில் தொடர்கிறேன்.

குறிப்பிட்ட நவசக்தி இதழின் தேதியைச் சொன்ன பழ. அதியமான், பெரியாரின் அறிக்கை வெளிவந்து சரியாக 93 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இதழைப் பார்க்க அனுமதித்த சென்னை ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலகம் ஆகியவற்றுக்கு நன்றி. ஆ. நீலகண்டன் அவர்களுக்கும் நன்றி.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, இந்து தேவஸ்தானச் சட்டம் வந்தபோது தீரர் சத்தியமூர்த்தி அதைத் தீவிரமாக எதிர்த்தார் என்பதையும் பெரியார் இது தொடர்பாக ஆதரவைத் திரட்டினார் என்பதையும்தான். மேலும், தெரியாத விஷயங்களில்  யாராவது எதாவது கேட்டால், உடனடியாக 'ஆமாம், இல்லை" என்று பதில் சொல்லக்கூடாது என்பதையும் இந்த விவகாரத்தில் புரிந்துகொண்டேன்.

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1191755954289463&id=100003652096964

No comments:

Post a Comment